Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

துரோகம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாறாத கொள்கை!!!

தமிழ்நிலம் எங்கும் இலங்கை அரசுகளால் கொல்லப்பட்ட தமிழ்மக்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன. குளங்களில், ஏரிகளில் எமது மக்களின் குருதி உறைந்து போயிருக்கிறது. கூதல் காற்றில் இலைகள் உதிர்ந்து விழுவது போல எமது வாழ்வு வீழ்ந்து கிடக்கிறது. இத்தனைக்கும் காரணமான இலங்கையின் இனவெறி அரசுகளுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கூடிக் குலாவும்.

இனப்படுகொலையாளிகளான இலங்கை இராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து வன்னிப்படுகொலையை நடத்தி முடித்த சரத் பொன்சேகாவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எந்த விதக்குற்ற உணர்வும் இன்றி தேர்தலில் ஆதரித்தது. இனப்படுகொலையாளி மகிந்தாவின் அமைச்சரவையில் அமைச்சராகவும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த மைத்திரி சிறிசேனாவுடன் அது எந்த விதக் கூச்சமும் இன்றி கூட்டு வைத்தது.

ஆனால் முன்னாள் போராளிகளை கட்சியில் சேர்த்தால் அதன் புனிதம் கெட்டு விடுமாம். தமிழ் மக்களிற்கு ஒரு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காகவே உயிர் வாழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இலட்சியப் பயணத்திற்கு முன்னாள் போராளிகள் பெரும் தடையாக இருப்பார்களாம். “முன்னாள் போராளிகளை கூட்டமைப்புக்குள் இணைத்துக் கொள்வதால் கட்சிக்கு பாரிய சிக்கல் நிலை உருவாகும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் ராஜதந்திர மட்டத்தில் பேசிவரும் இச்சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை கூட்டமைப்புக்குள் இணைந்துக்கொள்வது உசிதமானதல்ல. ஆகையினால் இந்த முடிவினை கூட்டமைப்பு ஒருபோதும் எடுக்காது என சம்பந்தனின் திருவாசகங்கள் தெரிவிக்கின்றன.

வலதுசாரித் தலைமைகள் ஒரே வர்க்கம் என்ற அடிப்படையில் எப்பொழுதுமே மக்களின் எதிரிகளுடன் கூட்டுச் சேருவார்கள். ஆனால் போராளிகளுடன், புரட்சியாளர்களுடன் என்றைக்குமே தமது பிற்போக்குத்தனத்தின் காரணமாக பகைமை கொள்வார்கள். பிரித்தானிய காலனியக் கொடுங்கோலர்களை எதிர்த்ததினால் தமது வாழ்வின் பெரும்பகுதியை மூடிய சிறைகளின் இருள்வெளிகளிற்குள் வாழ்ந்த இந்திய சுதந்திரப் போராளியும், பொதுவுடமைவாதியுமான மன்மதநாத் குப்தா தமது "அவர்கள் அபாயத்தில் வாழ்கிறார்கள்" என்ற தமது போராட்ட வரலாற்றுப்பதிவில் காந்தியும், காங்கிரசும் எவ்வாறு பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுடன் சேர்ந்திருந்தார்கள், எவ்வாறு போராட்டங்களை காட்டிக் கொடுத்தார்கள், எவ்வாறு போராளிகளை புறம் தள்ளினார்கள் என்பதை வலியுடனும், வேதனையுடனும் பதிவு செய்கிறார்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற புரட்சியாளர்களுடன் லாகூர் சிறை வைக்கப்பட்டிருந்த ஜதீன் தாஸ் என்ற போராளி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வீரமரணம் அடைந்தார். மிகவும் எளிதாக அவர் விடுதலை அடைந்திருக்க முடியும். அவருக்கு பிணை நிற்க முன் வருபவரிடம் அவரது மறுப்பை தெரிவிக்காமல் இருந்திருந்தால் போதும். ஆனால் அவ்வாறு செய்ய மறுத்து விட்டு தனது மரணத்தை தழுவினார். அவரது மரணம் நாடு முழுவதும் வருத்தத்தையும், மனக்கொதிப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது. ஆறு இலட்சம் மக்கள் அவரது இறுதிப்பயணத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

நாடு முழுவதும் மிகப் பெரும் அளவில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் காந்தியும், காங்கிரசும் மூன்று குரங்குகளைப் போல வாய் பொத்தியிருந்தார்கள். கண்களை மூடியிருந்தார்கள். காதுகளை மூடியிருந்தார்கள். இது தொடர்பாக சுபாஷ் சந்திரபோஸ் பின்வருமாறு எழுதினார். "நாட்டின் இதயத்தையே அசைத்து விட்ட ஜதீன் தாசின் தியாகம் காந்தியிடம் எத்தகைய மனப்பதிவையும் ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. தான் வேண்டுமென்றே தான் கருத்துக் கூறாமல் இருந்து விட்டதாக காந்தி கூறினார். ஏனென்றால் அவ்வாறு தான் கருத்து கூறியிருந்தால் அது சாதகமற்ற முறையில் தான் இருந்திருக்கும் என்று கூறினார்".

ஆனால் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாக இருந்த வைஸ்ராய் இர்வின் பிரபுவைக் கொல்ல புரட்சியாளர்கள் தொடுத்த தாக்குதலைக் கண்டு காந்தி மனம் பதைபதைத்துப் போனார். காந்தியின் காங்கிஸ் கட்சி பின்வருமாறு தீர்மானம் நிறைவேற்றியது. "வைஸ்ராய் பயணம் செய்த வண்டியின் மீது தொடுக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் தேசிய குறிக்கோள்களிற்கு ஊறு விளைவிக்கும் என்ற உறுதியான கருத்தை காங்கிரஸ் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது. வைஸ்ராய் மயிரிழையில் தப்பியது குறித்து காங்கிஸ் கட்சி தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது.

போராளியின் உயிர்த்தியாகத்தை புறக்கணித்த காந்தி தேசிய குறிக்கோளைக் காட்டி பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் ராஜதந்திர மட்டத்தில் பேசிவரும் இச்சூழலில் முன்னாள் போராளிகளை கூட்டமைப்புக்குள் இணைந்துக்கொள்வது உசிதமானதல்ல. ஆகையினால் இந்த முடிவினை கூட்டமைப்பு ஒருபோதும் எடுக்காது என சம்பந்தன் சொல்கிறார். மகிந்த ராஜபக்சாவுடன் சேர்ந்து கொன்ற இந்தியாவும், அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் தான் இந்த சர்வதேசம். இத்தனை ஆயிரம் மக்களை துடிக்க துடிக்க கொன்ற போது வராத சர்வதேசம் இனி வந்து தமிழ்மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்குமாம். போராட்டங்களை காட்டிக் கொடுப்பவர்கள் எப்போதும் ஒரே மாதிரித் தான் பொய் சொல்கிறார்கள்.