Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கோத்தபாய முன்வைக்கும் "சமவுரிமையும்", கண்கட்டு வித்தைகளும்

எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான ஒடுக்குவோரை அனுசரித்து, எண்ணிக்கையில் சிறுபான்மையினரான ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வதே "சமவுரிமை" என்கின்றார்.

இப்படி எண்ணிக்கையைக் கொண்டு ஜனாதிபதியான கோத்தபாய, இனவொடுக்குமுறையை நியாயப்படுத்தியிருக்கின்றார். இனவொடுக்குமுறையை இல்லாதாக்குவதை பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறும் கோத்தபாய, ஒடுக்கப்பட்ட இனங்கள் வாழும் பகுதியை அபிவிருத்தி செய்வதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கின்றார்.

அதாவது ஒடுக்கப்படும் இனங்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட வேண்டும் என்று சிங்கள மக்கள் கோருகின்றனர் என்று கூறி ஒடுக்குவதும், அதேநேரம் சிங்கள மக்கள் அபிவிருத்தி மூலம் மகிழ்ச்சியாக வாழ்வதாக கூறி, அதை ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு தரப்போவதாக கூறுவது பித்தலாட்டம். இதுதான் எதார்த்தம் என்று கொண்டாடுகின்றது, கோத்தபாயவுக்கு ஆதரவான ஒடுக்கப்பட்ட இனத்தின் எடுபிடிகள்.

அபிவிருத்தி என்ற பெயரில் அரங்கேறும் நவதாராளவாதத் திட்டங்கள், சிங்கள மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வியலில் மகிழ்ச்சியை வித்திட்டு இருக்கின்றதா!, எனின் இல்லை. மாறாக வறுமையையும், சூழல் சிதைவுகளையும், நுகர்வு வெறிப் பண்பாட்டையும், மகிழ்ச்சியற்ற உளவியல் சிதைவையும் கொடுத்திருக்கின்றது. இதைத்தான் ஒடுக்கப்பட்ட இனங்கள் கோருவதாகவும், அதை கொடுக்கப்போவதாகவும் கூறுகின்றார்.

இதைத்தான் கோத்தபாய "சமவுரிமை" என்கின்றார். ஒடுக்கும் பெரும்பான்மையின் கருத்தியலுக்கும் - அதன் நடைமுறைகளுக்கும், அடங்கியொடுங்கிய சிறுபான்மையின் சுய நடத்தையே "சமவுரிமை" என்கின்றார். அதாவது தங்கள் அரசு அதிகார சமூகப் பொருளாதார வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு, அதற்கு தாமாக இணங்கி வாழ்வதே சமவுரிமை என்கின்றார்.

கோத்தபாய முன்வைத்ததாக கூறப்படும், பல் கலாச்சாரம் கொண்ட தேசமான சிங்கப்பூர், கனடா இதற்கு முரணானது. அந்த நாடுகள் எந்த இனத்துக்குரியதோ, மதத்துக்குரியதோ ஆன நாடுகளல்ல. இப்படி இருக்க இதையும் கோத்தபாய கூறியதாக கூறுவதும், அதே இலங்கையில் பெரும்பான்மைக்கு அடங்கிப் போகக் கோருவதும், ஒடுக்கும் கருத்தியல் பித்தலாட்டமாகும்.

இலங்கை மக்கள் அனைவரும் தங்களை இலங்கையராக உணர்வதற்கு, ஜனநாயகமே அடிப்படையானது. அதற்கான ஜனநாயகமே நாட்டில் இனி இருக்குமா என்ற பொது அச்சம் எழுந்திருக்கின்ற பொதுச் சூழலில், முரணற்ற ஜனநாயகம் மட்டுமே நாங்கள் இலங்கையர்கள் என்பதை எதார்த்தத்தில் உணரவைக்கும். இந்த வகையில்

1.இலங்கையில் குறைந்தபட்சம் நான்கு தேசிய இனங்களும், இரண்டு தேசங்களையும் கொண்ட ஒரு நாட்டில், அவை தமக்குள் சமவுரிமைகளைக் கொண்டவையாக இல்லை. ஒடுக்குகின்ற அதேநேரம், பிரிவினையையும் - பிளவுகளையும் ஏற்படுத்துகின்றனவாகவே இருக்கின்றது. இதை கோத்தபாய முன்வைக்கும் அபிவிருத்தி மூலம் இல்லாதாக்க முடியாது.

2.அரசில் இருந்து மதங்கள் நீக்கப்பட்டு, மதம் என்பது தனிப்பட்ட நபரின் நம்பிக்கை சார்ந்ததாக ஏற்றுக்கொண்ட அரசுக் கட்டமைப்பை உருவாக்காத வரை, மதம் கூட மக்களை ஒடுக்கும் கருவி தான். இது பிரிவினையையும், பிளவுவாதத்தையும் விதைக்கின்றனவாகவே எதார்த்தத்தில் இருப்பதுடன், தனிமனித நம்பிக்கைக்கு பதில் ஒடுக்கும் அதிகாரத்தையே மதமாக அரசே முன்னிறுத்துகின்றது.

இங்கு ஆட்சி அதிகாரமே மதம், இனம் சார்ந்து, மக்களை ஒடுக்கும் கருவியாக இருக்கின்றது. இலங்கையை "சிறிலங்கா" என்ற பெயருக்குள் குறுக்கி அடையாளப்படுத்தி இருப்பதே, பிற இனங்களை ஒடுக்குகின்ற தங்கள் அதிகாரத்தை பறைசாற்றும் அரசியல் பின்னணியில் தான். இலங்கைக் கொடியோ சமவுரிமையை மறுக்கின்ற, பொதுப் பின்னணியைக் கொண்டு தான் பறக்கவிடப்பட்டு இருக்கின்றது. ஜனாதிபதி தன்னை அடையாளப்படுத்தும் கொடி முதல் பதவி ஏற்பு வரை, ஒடுக்கும் இன-மத அடிப்படையையே பிரதிபலிக்கின்றது. இதில் எங்கு சமவுரிமை இருக்கின்றது?.

நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்கள் அனைத்தும், ஒடுக்கும் இனமத அதிகாரத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஒடுக்கப்பட்ட இனங்கள் வாழ்கின்ற பிரதேசத்தில், ஒடுக்கும் இனத்தின் அடையாளங்கள் அதிகாரத்தைக் கொண்டு திணிக்கப்படுகின்றது. இதை எல்லாம் கொண்டாடிக் கொண்டு, கனடா நாட்டை கோத்தபாய உதாரணமாக காட்டுவதாக பொய்ப்பிரச்சாரம் செய்வது எந்த வகையில் பொருந்தும்.

கனடா நாட்டில் தேசிய இனங்கள், தேசங்கள் தனக்கான தனி ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு, ஒன்னிணைந்து நிற்கின்றன. பரஸ்பரம் ஒடுக்குமுறையற்ற இடத்தில் பிரிவினைக்கு இடமில்லை. மக்கள் கலந்து வாழ்வதும், தங்கள் தனி அடையாளங்களை இழந்து, முன்னேறிய புதிய பண்பாட்டை நோக்கி பயணிப்பதே முரணற்ற ஜனநாயகத்தின் இயற்கை விதி. இதை இன, தேச முரண்பாடற்ற கனடாவில் காணமுடியும். மதத்தை அரசில் இருந்து பிரித்துள்ளதுடன், மதத்தை தனிப்பட்ட வழிபாட்டுச் சுதந்திரத்துக்குட்பட்டதாக்கி இருக்கின்றது.

இதேபோல் சிங்கப்பூர் மொழிச் சமவுரிமையையும், தனிப்பட்ட மதச் சுதந்திரத்தையும் அங்கீகரித்துள்ளதுடன், இன-மத ஒடுக்குமுறைக்கு இடமற்ற முரணற்ற ஜனநாயகத்தை பேணுகின்றது.

இலங்கை இதற்கு எதிர்மறையாக இருக்கின்றது. அரசு இனம், மதம் சார்ந்ததாக இருக்கின்றது. இதில் இருந்தே ஒடுக்குகின்றது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமே, ஒடுக்கப்பட்ட பிற இனங்களின் போராட்டமாகும். அரசு முதலில் தன்னை இன-மத சார்பு அற்ற அரசாக முன்னிறுத்தி, அதை நடைமுறைப்படுத்தினாலேயே ஒடுக்குமுறையில் கணிசமானது குறைந்துவிடும்.

மாறாக அதிகாரங்களுக்கும், அடக்குமுறைக்கும் மக்கள் அடங்கியொடுங்கி வாழ்வதற்கும், அதுதான் மனிதனின் சுயநடத்தையாக கருதுகின்றவர்கள், ஜனநாயகத்தின் அடிப்படைகளை எள்ளி நகையாடும் வார்த்தையே இங்கு "சமவுரிமையாக" முன்வைக்கப்படுகின்றது. இங்கு அபிவிருத்தியாக முன்வைப்பது, உலகமயமாக்கம் முன்வைக்கும் நவதாராளவாதத்தைத் தான்.

நவதாராளவாதம் ஒரு இனத்தையோ, ஒரு மதத்தையோ கொள்ளை அடிப்பதில்லை. எல்லா இனத்தையும் மதத்தையும் கடந்து, கொள்ளை அடிக்கும் பொருளாதாரக் கொள்கை. இதுதான் நவதாராளவாத பொருளாதாரத்தின் பொதுச் சாரம். இதை அபிவிருத்தியின் பெயரில் ஒடுக்கப்பட்ட இனங்களையும் கொள்ளையடிக்கும் அறிவிப்பை, சிங்கள மக்களின் பெயரில் கோத்தபாய முன்வைத்திருக்கின்றார். நவதாராளவாத அபிவிருத்தியானது ஒடுக்கும் இனத்தின் அதிகாரம் சார்ந்து, ஒடுக்கப்பட்ட இனங்களை மேலும் ஒடுக்கும்.