Sun01232022

Last updateSun, 19 Apr 2020 8am

இலவசக் கல்வியின் அவல நிலை - மாணவர்கள் ஏன் போராடுகின்றார்கள்?

இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "மாலபே SAITM"ஐ மூடசொல்லி சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் காலையிலிருந்து கொழும்பின் வீதிகள் வழியே நடந்து கொண்ருக்கிறார்கள். "சைற்றம்" இலங்கையின் அரச பல்கலைக்கழகங்கள் வழங்கும் அனேக கற்கை நெறிகளை விலைக்கு விற்கும் ஒரு கல்வி நிறுவனம். அதாவது பணம் கட்டி பட்டப்படிப்பை படித்துக்கொள்ளலாம்.

ஏன் ? பணம் கட்டிப் படிக்கக்கூடாதா? உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறாத ஒருவன் விரல் சூப்பிக்கொண்டு வீட்டில் இருக்க வேண்டுமா? என்று பொங்குகிறீர்களா? தாராளமாக பணம் கட்டிப்படிக்கலாம். ஆனால் உண்மையில் இங்கே என்ன நடக்கிறது? அந்த அடிப்படையை கொஞ்சம் புரிந்துகொண்டால் ஈவிரக்கம் இல்லாத இந்த கேள்வி மனதில் எழாது.

இலங்கை கல்வி முறையைப் பற்றி இங்கே அனைவருக்கும் தெரியும். முதலாம் தரத்திலிருந்து ஆரம்பித்து, ஏகப்பட்ட சுமைகள், பெற்றோர், சுற்றாரின் கனவுகள், எதிர்பர்ப்புகள் என்ற பெயரில் நடக்கும் திணிப்புக்கள் அத்தனையும் சகித்துக்கொண்டு, முக்கிமுனகி சாதாரண தரம் சித்தியடைந்து, தன்னையும், சுற்றியுள்ளவர்களைம் எப்படியோ திருப்திப்படுத்தும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து இரண்டு வருடம் நாய் பேயாய் அலைந்து படித்து, சராசரியாக வருடமொன்றுக்கு ஐந்து லட்சம் பேர் எழுதும் பரீட்சையில் தேறும் பத்தாயிரம் பேருள் ஒருவராக வந்து நான்கு தொடக்கம் ஆறு வருடங்கள் பல்கலைக்கழகத்தில் முட்டி மோதி வாங்கும் பட்டத்தை, லட்சக்கணக்கில் பணம் இருந்தால் - இப்போது கோடிகள் என்று கேள்வி - சாதாரண தரம் முடித்த கையோடு "சைற்றத்தில்" கட்டி, அதே பட்டப்படிப்பை சாதாரணமாக ஒரு பல்கலைக்கழக மாணவன் முதல் வருடம் படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் முடித்துக்கொண்டு வெளியே வந்து வேலைக்கு போய்விட முடியும். அத்தனை வருடமும் மூச்சுத்திணற ஐந்து லட்சம் பேரோடு போட்டி போட்டு மோதி, திறமையானவன் என்று தேறியிருந்தாலும் சாதாரண ஒரு பல்கலைக்கழக பட்டதாரி வெளியே வேலைக்கு என்று வேறைய அலைய வேண்டியிருக்கும். இந்த "சைற்றம்" என்ற கடை நிர்ணயிக்கும் விலையை யாரால் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது? கோடிகளில் புரளுகின்ற கூட்டத்தால் மட்டும்.

பணத்துக்கு கல்வி கொடுக்கலாம் தப்பில்லை, ஆனால் கல்வி முறை அனைத்து சாராருக்கும் சமமானதாய் இருக்க வேண்டும். அரச பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று தேறும் மாணவன் ஒருவன் பட்டமெடுத்து வரும் போது, பணம் கட்டி படித்த மாணவன் மூன்று வருட வேலை அனுபவத்தோடு இருப்பது எந்தவகையிலும் நியாயமாகாது. இந்த இரண்டு முரணான கல்வி முறைகளை அனுமதித்த அரசே இங்கே பிரதான குற்றவாளி.

ஏன் மேற்குலக நாடுகளில் பணம் கட்டித்தானே பட்டம் படிக்கிறார்கள் என்ற மொண்ணைத்தனமான கேள்வி கேட்பவர்கள் கவனத்திற்கு! அங்கே நீங்கள் பட்டப்படிப்பை மேற்கொள்ள வேண்டுமானல் அரசாங்கத்திலிருந்து கடனாக பணம் பெறலாம், அனேகமாக வேலையையும் அரசாங்கமே உறுதி செய்கிறது. வேலை கிடைத்த பிறகு உங்கள் சம்பளத்திலிருந்து நீங்கள் கடனாக பெற்ற தொகையை அரசு கழித்துக்கொள்ளும். டென்மார்க்கில் இருக்கும் எனது மச்சினன் ஒருவனுக்கு அவனது பட்டப்படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரை, அந்த தகமைக்கு தகுதியான சம்பளத்தை மாதா மாதம் அரசாங்கமே வழங்கிக்கொண்டிருந்தது. அப்படி ஒரு நடைமுறையை, அனைவருக்கும் பொதுவான ஒரு கல்வியை, பணக்காரர்களுக்கே மட்டும் சாத்தியமாகும். இந்த "கடைகள்" இல்லாத கல்வியை உருவாக்கும் வரை, இப்படியான "கடைகளுக்கு" அனுமதி கொடுத்து சாதாரணமான மாணவர்களின் வயிற்றில் அடிப்பது எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம்.

கோடிகள் கட்டி படிக்கும் ஒருவன் வெளியே வந்தது என்ன செய்வான்? தான் போட்ட கோடிகளை பிடுங்குவதைத் தான் முதல் வேலையாகப் பார்ப்பான். சில வருடங்களுக்கு முன்னர் வைத்தியர் ஒருவரின் "சனலிங்" கட்டணம் சராசரியாக ஐநூறு ரூபா. இப்போது இரண்டாயிரத்து ஐநூறிலிருந்து மூவாயிரம் வரை போகிறது. ஆழ விசாரித்து பார்த்தால் பணம் கட்டி படிக்க கூட்டம் நூற்றுக்கு எண்பது விழுக்காடாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த கூட்டம் கண் திருடும், கிட்னி திருடும். பணம்! போட்ட பணத்தை எடுக்க வேண்டும். நோய் காவி வரும் அத்தனை பேரும் அவனுக்கு மூலதனம். இந்த தூர நோக்கோடு இவர்கள் தெருவில் நடக்கிறார்கள். ஆனால் பலருக்கு புரிவதில்லை.

வீதியில் நிற்கும் போது கவனித்தேன் ஐயா! பாவப்பட்ட ஜென்மங்கள்! வாடி வதங்கி, சாப்பாடு தண்ணீர் இல்லாமல், பாலித்தீன் பைகளில் தண்ணீர் நிரப்பி ஆளுக்கு ஒரு வாய் குடித்துக்கொண்டு, இப்போதோ அப்போதோ என்று மயங்கி விழத் தயாராக இருக்கும் பெண்கள் என்று பரிதாபமாய் இருக்கிறார்கள். தெருவில் நிற்கும் அனேகர் சர்கக்கஸ் குரங்குகளை பார்ப்பத்து போல் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். பேசாமல் வீட்டில் கிடந்து விட்டு பட்டமெடுத்து வெளியேறி, இன்னும் கொஞ்சம் முட்டி மோதி வேலை எடுக்க இவர்களுக்கு தெரியாமலா? - இன்னும் சில வருடங்களுக்கு வேலை வேலை வாய்ப்பு பிரச்சினை இல்லை. ஆனால் பேசாமல் இருக்கப்போய் இப்படியான கடைகள் இன்னமும் திறந்தால், வீதி ஓரத்தில் கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டத்தின் பிள்ளைகள் தான் பாவம் - ஆனாலும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வந்து ஏதோ ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு மாற்றம் வந்துவிடாதா என்ற ஏக்கத்தோடு இதையெல்லாம் செய்கிறார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் என்றாலே ஏதோ குழப்பவாதிகள், அவர்கள் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள் என்றால் காட்டுமிராண்டிகளின் மாநாடு என்ற தோரணையில் பார்க்கும் அடிப்படை அறிவில்லாத கூட்டம் தான் இங்கே அதிகம்.

மாணவர்களின் பேரணி காலி வீதியை கடந்து கொண்டிருந்த போது, வாகங்கள் சிறிது நேரம் தரித்து நிற்க வேண்டியதாகப்போனது. நானும் முன்வரிசையில் நின்றுகொண்டிருந்தேன், பக்கத்தில் காரில் இருந்த ஒரு பெண் ஹாரன் அடித்து வழி விடும்படி சொல்லிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் பொறுத்துக்கொண்டிருந்த ஒரு மாணவன் குனிந்து அவள் கார் டயரின் அருகில் தரையைத் தொட்டு கும்பிட்டு "தயவு செய்து எங்களை மன்னியுங்கள், சிறிது நேரம் பொறுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம்" என்றான். அந்த எருமை திரும்ப ஹாரன் அடித்தது அவன் பேசாமல் நின்றான். பக்க கண்ணாடியை இறக்கிவிட்டு திரும்ப ஹாரன் அடித்தது, அவ்வளவு நேரம் பாவமான அந்த மாணவர்களை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அந்த ஈனப்பிறவியின் செய்கை கோவத்தை உண்டாக்கியது. " *****... அவன் சொல்வது உனக்கு கேட்கவில்லையா?" என்றேன் சிங்களத்தில். " ஃபக் யூ ஃபக்கர்" என்று சொல்லிவிட்டு கண்ணாடியை ஏற்றிகொண்டாள். நான் நல்ல வேலையில் இருக்கிறேன். இப்போது நன்றாக சம்பாதிக்கிறேன். ஆனால் இந்த எருமையைப் போல சும்மாயிருக்க தோணவில்லை. அந்த ஆதங்கத்தில் தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

இதோ இப்போது கூட இதை எழுதிக் கொண்டிருக்கும் போது செய்தி வருகிறது. "கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து மாணவர்களி மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு"

எதற்காக இவர்கள் அடிவாங்க வேண்டும்? வலிக்கிறது ஐயா!

- கிஷோகர் ஸ்டானிஸ்லாஸ்