Sun01232022

Last updateSun, 19 Apr 2020 8am

"மலையினும் மாணப் பெரிது" - வெள்ளி விழா கண்ட லண்டன் நாடக விழா! - கெளரீஸ்வரன்

தமிழ் அவைக்காற்று கலைக்கழகம் 1983 இலிருந்து பல வருடங்களாக புலம்பெயர் நாடுகளிலே தமிழில் நவீன நாடகங்களை தரத்துடனும், தம் நாடகங்கள் சொல்லும் சேதிகள் எல்லோரையும் சென்றடைய வேண்டும், விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கையும் கொண்டு நிகழ்த்தி வருகிறது. இவர்கள் லண்டனில் தங்கள் பாதங்களை பதித்துக் கொண்டு உலகின் பல நாடுகளிலும் நாடக விழாக்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்கள். கனடா, அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து, பிரான்சு, நோர்வே, ஜெர்மனி ஆகிய நாடுகளில் முன்னோடி முதல் தமிழ் நாடக விழாக்களை தமிழ் அவைக்காற்று கலைக்கழகமே நடத்தியது.

லண்டனில் இருபத்தைந்து வருடங்களாக, தொடர்ந்து வருடாந்த நாடக விழாக்களை நடத்தி வருகின்றனர். 22.06.1991 அன்று லண்டனில் முதலாவது தமிழ் நாடக விழா வால்தம் போரொஸ்ட் அரங்கில் இவர்களால் மேடையேறியது. பாலேந்திரா - ஆனந்தராணி தம்பதியினரின் முன்முயற்சியில் பலரினதும் கூட்டு உழைப்பில் அன்றில் இருந்து இன்று வரை ஆண்டு தோறும் நாடகவிழாக்களை தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் நடத்தி வருகிறது.

முதலாவது ஆண்டில், பாலேந்திரா நெறிப்படுத்திய நான்கு நாடகங்களுடன் தமிழ் நாடக அரங்கின் மற்றொரு முக்கிய இயக்குனரான தாசிசியஸ் அவர்களின் "அபசுரம்" நாடகம் மேடையேற்றப்பட்டது. தொண்ணூற்று ஒன்றில் முதலாவது நாடக விழாவில் பாலேந்திரா அவர்களின் நெறியாள்கையில் "எரிகின்ற எங்கள் தேசம்" என்று எம் தேசத்தின் வாழ்வியல் கவிதா நாடகமாக அரங்கேறியது. மகாகவி, நீலாவணன், முருகையன், சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம், நுஹ்மான் சேரன் போன்ற கவிஞர்களின் வரிகள் கண்ணனின் இசையுடன் கலந்து எம்தேசத்தின் வலிகளை, வேதனைகளை காற்றுவெளியில் சொன்னபோது கலங்கின கண்கள். முப்பதுக்கும் மேற்பட்ட முறைகள் மேடையேறியுள்ள "எரிகின்ற எங்கள் தேசம்", கவிதைகளை மேடை வெளிப்பாடாக புகைப்படங்கள், ஓவியங்கள், ஒளி, ஒலி, நடனம் போன்றவற்றின் உதவியுடன் ஆற்றுகைப்படுத்தியமை புதிய முயற்சியாக இருந்தது.

தமிழ் அவைக்காற்று கலைக்கழகம் தன் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக 2003 ஆம் ஆண்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் முதலாவது நாடகப் பள்ளியினை லண்டனில் ஆரம்பித்து நடத்தி வருகிறது. "பதினான்கு வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள்", இளையோர்கள் என்ற இரு பிரிவிலே, தமிழ் சமுதாயத்தின் பிள்ளைகளிற்கு நாடகம் பயற்றுவிக்கப்படுகிறது. இசை, நடனம் என்ற பெயரிலே கர்நாடக சங்கீதத்தின் தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தனைகளை தமிழ்க் குழந்தைகளிற்கு திணிக்கும் பொதுப்படையாக நிலவும் புலம்பெயர் சூழலில் தமிழிலே தன் நாடகப்பயிற்சிகளை நடத்துகிறது தமிழ் அவைக்காற்று கலைக்கழகம்.

நடிப்புப் பயிற்சி; தமிழ் மொழியை பேசவே சிரமப்பட்டவர்கள் கவிதைகளை பேசி நடிக்கும் அளவிற்கு மொழி ஆளுமை கொண்டவர்களாக உருவாக்கியமை; பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத்தேர்வுகளை எதிர்கொள்ள மேடைப்பயிற்சி அளித்த தன்னம்பிக்கை; தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தில் நடிப்புப்பயிற்சிக்கு சென்றபோது அறிமுகமானவர்கள் நெருங்கிய நண்பர்களாக, தோழர்களாக கிடைத்தது என்று தங்களது வாழ்வில் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் அளித்த கொடைகளை விதந்து அங்கு பயிலும் இளையோர்கள் சென்ற ஆண்டு லண்டனில் "சிறுவர், இளையோர் நாடகங்கள் குறித்த கருத்தரங்கும், வெள்ளி விழா பற்றிய பார்வைகளும்" என்ற கருத்தரங்கில் பதிவு செய்தார்கள்.

"பாஞ்சாலி சபதம்" என்னும் பாரதியின் கன்னல் தமிழ்க்கவிதைகளின் தொகுப்பை "நெட்டை மரங்கள்" என்னும் பெயரில் மேலை நாடுகளில் பிறந்து வளரும் தமிழ் இளைஞர்கள் அழுத்தம் திருத்தமான உச்சரிப்புடன் பொருத்தமான முகபாவனைகளுடன் சென்ற 2015 இல் நிகழ்த்தியது தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் பயிற்சிகளின் பெறுபேறுகளை துலக்கமாக எடுத்துக் காட்டியது. பாலேந்திரா, ஆனந்தராணி ஆகியோரால் இருபது வருடங்களுக்கு மேலாக பயிற்சி பெற்று இவர்களுடன் தொடர்ந்து இயங்கி வரும் இளையோர்கள் இணைந்து "புதிய பயணம்" என்னும் நாடகத்தை தாமே எழுதி, இயக்கி இந்த வருட நாடகவிழாவில் அரங்கேற்றி இருந்தனர் என்பது தமிழ் அவைக்காற்று கலைக்கழக நாடகப் பயணத்தின் அடுத்த அத்தியாயமாக அமைந்தது.

உலகமே ஒரு நாடகமேடை

அதில் எல்லா ஆண்களும், பெண்களும் வெறுமனே நடிகர்கள்

அவர்கள் போகிறார்கள், வருகிறார்கள்

ஒரு மனிதன் அவனது காலத்தில் பல பாத்திரங்களாய் இருக்கிறான்

என்று வாழ்க்கையையே நாடகமாக உருவகித்த சேக்ஸ்பியரால் எழுதப்பட்ட கடைசி நாடகம் என்று கருதப்படும் "The Tempest" நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திரா பார்த்தசாரதி அவர்களால் எழுதப்பட்ட "சூறாவளி", "மழை"; மாவை நித்தியானந்தனின் "அரசனின் புத்தாடை"; சேரனின் "அவன், அவள்"; சிவசேகரத்தின் "சமுக விரோதி" மற்றும் சீன நாடோடிக் கதையை தழுவி அவர் எழுதிய "மலைகளை அகற்றிய மூடக்கிழவன்"; செழியனின் மூன்று நாடகங்கள்; நிர்மலா நித்தியானந்தன், மல்லிகா ராஜரட்னம் ஆகியோரின் மொழிபெயர்ப்பில் அமைந்த ரெனன்சி வில்லியம்சின் "கண்ணாடி வார்ப்புக்கள்"; "மரணத்துள் வாழ்வோம்" போன்ற நாடகங்கள் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் நீண்ட பயணத்தில் அரங்கேறிய நாடகங்களின் பட்டியலில் சில மாதிரிகள்.

தொண்ணூற்று ஒன்றில் முதலாவது நாடக விழாவில் பாலேந்திரா அவர்களின் நெறியாள்கையில் "எரிகின்ற எங்கள் தேசம்" என்று எம் தேசத்தின் வாழ்வியல் கவிதா நாடகமாக அரங்கேறியது. மகாகவி உருத்திரமூர்த்தி, நீலாவணன், முருகையன், சண்முகம் சிவலிங்கம் என்னும் கவிஞர்களின் வரிகள் கண்ணனின் இசையுடன் கலந்து எம்தேசத்தின் வலிகளை, வேதனைகளை காற்றுவெளியில் சொன்னபோது கலங்கின கண்கள். இன்று முப்பதற்கும் மேற்பட்ட முறைகள் மேடையேறியுள்ளது "எரிகின்ற எங்கள் தேசம்".

இலங்கையில் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தினரால் நாடக விழா 2013 இல் நடத்தப்பட்டது. பின்பு 2015 இல் பேராசிரியர் மெளனகுரு அவர்கள் தனது அரங்க ஆய்வுகூட மாணவர்களிற்கு பயிற்சிப் பட்டறை ஒன்றை அளிக்க பாலேந்திரா அவர்களை மட்டக்களப்பிற்கு அழைத்திருந்தார். ஒரு வாரப் பயிற்சியின் பின் பாலேந்திரா அவர்களின் நெறியாள்கையில் மட்டக்களப்பு விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவனத்தில் "நெட்டை மரங்கள்" நாடகம் அரங்காடப்பட்டது. தொடர்ந்து, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நாடகம் பயிலும் எழுபது மாணவர்களுக்கு ஒரு ஞாயிறு தினத்தில் நாடகப் பயிற்சி வழங்கப்பட்டது. தெல்லிப்பளை மகாஜன கல்லூரி மாணவர்களுடனும், அரியாலை சரஸ்வதி மத்திய நூல் நிலையத்திலும் நாடக கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அயராது உழைக்கும் அங்கத்தவர்களினதும், தொண்டுள்ளம் கொண்ட ஆர்வலர்களினதும், மக்களினதும் ஆதரவிலேயே தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் இவ்வளவு காலமாக இவ்வளவு நிகழ்வுகளையும் நடத்தி வந்திருக்கிறது. அரசுகளின் உதவியையோ, அமைப்புக்களின் உதவியையோ தமிழ் அவைக்காற்றுக் கழகம் என்றைக்குமே பெற்றுக் கொண்டதில்லை. முதலில் இலங்கையிலும், பின்பு பிரித்தானியாவிலும் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் என்று நாடக விழாக்களையும், நாடகப்பள்ளியையும் பாலேந்திரா அவர்களும், ஆனந்தராணி பாலேந்திரா அவர்களும் தொடர்ச்சியாக நடத்தி வரும் இந்த நாடக இயக்கமே தமிழ் நாடக உலகின் மிக நீண்ட வரலாறு கொண்ட நாடக இயக்கம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வருடம் ஆடி இருபத்துமூன்று அன்று லண்டன் வின்ஸ்டன் சர்ச்சில் அரங்கில் நடந்த தமிழ் அவைக்காற்று கலைக்கழக நாடக விழாவில் லண்டன் வாழ் சிறுவர்களும், இளையோரும் பங்கு பற்றும் நான்கு நாடகங்கள் மேடையில் அரங்கேறின. அவையாவன:

1. புதிய பயணம்: தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் இளைய மாணவர்களின் எழுத்து, இயக்கத்தில்

2. மலைகளை அகற்றிய மூடக்கிழவன்: பேராசிரியர் சிவசேகரத்தின் பிரதியாக்கம்

3. பாடம்: எழுத்து பென்னேஸ்வரன், க.பாலேந்திரா

4. சூறாவளி: வில்லியம் சேக்ஸ்பியரின் "The Tempest" தமிழில் இந்திரா பார்த்தசாரதி

அரங்கு நிறைந்திருந்தது. அங்கு வந்த அனவரும் சிரிப்புடனும், கைதட்டல்களினுடனும் நாடகங்கள் குறித்த தம் கருத்தை வெளிப்படுத்தினர். மூத்த நாடகர்களும், இசைக்கலைஞர்களும், அரங்க அமைப்பாளர்களும் பின்னணியில் நின்று கொண்டு சிறுவர்களையும், இளைய கலைஞர்களையும் முன்னரங்கிற்கு கொண்டு வந்த இந்த வருட நாடக விழாவை இடைவேளையிலும், விழா முடிந்த பின்பும் பாராட்டிப் பேசியதை பார்க்கக் கூடியதாக இருந்தது. "இளையவர்களே எமது எதிர்காலம்" என்ற கழகத்தின் குறிக்கோளை சிறுவர்களும், இளையவர்களும் இந்த நாடகவிழாவின் மூலம் உறுதி செய்திருக்கிறார்கள்.

சிரசில் முண்டாசு கட்டிச் சிறந்த திருக் கவசம் பூட்டி

திரண்மிகு மாலையோடு தெரிவுறு பதக்கம் பூண்டு

வர மிகு வசந்தராசன் உளம் மெதுவாகப் பேசும்

உரமுறு கட்டியக்காரன் உல்லாசமாய் வுருகிறானே

என்று வசந்தன் கூத்தில் பாடுவது போல தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் தன் மார்பில் பல பதக்கங்களை சூடியிருந்தாலும் மக்களின் பங்களிப்பும், ஒத்துழைப்புமே தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உதவும். "இளையவர்களே எமது எதிர்காலம்", "தொடர்ந்த மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும்" என்னும் முழக்கங்களை முன் வைத்து முத்தமிழின் மூன்றாம் தமிழாம் நாடகத்திற்கு வளம் சேர்க்கும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் தமிழ்ப்பணி வள்ளுவன் சொல்லுவது போல "மலையினும் மாணப் பெரிது".

-மகாலிங்கம் கெளரீஸ்வரன்