Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினை நாடாளுமன்றமா? நீதிமன்றமா?

இன்றைய முதலாளித்துவ அரசாங்கத்தின் இருப்பிற்கு பிரச்சினைகள் வரும்போது நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக புதிய புதிய உத்திகளை அரசாங்கம் கையாண்டு வருகிறது. 2013க்கான வரவு செலவு திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதுஇ நாட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் நீதி விசாரணைக்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

வரவு செலவு திட்ட அறிக்கையின் வாயிலாக நாட்டு மக்களுக்கு கிடைக்கவிருக்கும் நண்மை தீமைகளைப் பற்றி கதைக்காமல் நீதி மன்றத்திற்கும் சட்டவாக்கச் சபைக்குமிடையிலான மோதலை மக்கள் கதைக்கும் படியான சூழ்நிலையை அரசாங்கத்தின் ஊது குழல்கள் உருவாக்கிவிட்டிருந்தன. மக்கள் தமக்கிருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் ஒதுக்கிவிட்டு முதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கும் முதலாளித்துவ நீதிமன்றத்திற்கும் மத்தியில் ஏற்படப்போகும் மோதலைப் பற்றியே கதைக்கத் துவங்கினார்கள். நீதியரசர் வெளியேற்றப்படுவாரா? அரசாங்கம் தோற்றுவிடுமா? ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறதா? நாடாளுமன்றம் கலைக்கப்படுமா? என்றெல்லாம் மக்கள் கதைக்கத் தொடங்கினார்கள். சாதாரண கூலித் தொழிலாளியிலிருந்து உயர் அதிகாரி வரை இதுதான் பேசுபடு பொருளாக இருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்றமும் நீதிமன்றமும் விடுமுறைக்காக ஒத்தி வைக்கப்பட்டதோடு மக்கள் மத்தியில் அது வரையில் நிலவிய பேசுபடுபொருளும் பின் போடப்பட்டது. மக்கள் அன்றாட நிலைமைகளைப் பற்றி பேசத் தொடங்கினார்கள். புது வருட கொண்டாட்டங்களுக்காகவும், பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கும் தயாரானபோதுதான் தங்களது வருமானம் விலையேற்றத்தால் கொள்ளையிடப்பட்டிருப்பதையும் தங்களுக்குத் தெரியாமலேயே தங்கள் வாழ்க்கை சூரையாடப்பட்டுக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார்கள்.

வரவு செலவு திட்ட அறிக்கையில் கூறப்பட்டிராத எரிவாயு விலையேற்றம், பஸ் கட்டண அதிகரிப்பு பாவனைப் பொருட்களின் ரொக்கட்வே அதிகரிப்பு போன்றவை தமக்கு முன்னால் அணிவகுத்து நிற்பதைக் கண்ட மக்கள் செய்வதறியாது நிர்க்கதிக்கு ஆளாகியுளளார்கள்.

இப்போது மீண்டும் அதே நீதி மன்றம். நாடாளுமன்றம் அதே மோதல். மக்கள் கவனம் மீண்டும் அந்தப் பக்கம். , தெரிவிக் குழுவின் விசாரணைகள் முறையாக நடக்கவில்லையென கூறி நாடாளுமன்ற தெரிவிக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இடை நடுவில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக தனது வழக்குரைஞர்களோடு வெளி நடப்பு செய்தார். மட்டுமல்லாது, நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து விட்டார்.

2013 ஜனவரி 03ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவுக் குழுவிற்கு அழைப்பானை விடுக்கப்பட்டது. 3ம் திகதி மேன் முறையீட்டு நிதிமன்றம் கூடியது. விசாரணைகள் ஆரம்பமாயின. தெரிவுக் குழுவில் அங்கம் வகித்த இருவர் மாத்திரமே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட எந்த உறுப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயகவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றவியல் நீதி விசாரணையை விசாரிக்க நாடாளுமன்றத்திற்கு எந்தவித தகுதியோ அதிகாரமோ கிடையாதென மேன்முறையீட்டு நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோடு ஜனவரி 15ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரதிவாதிகளான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு மீண்டும் அழைப்பானை விடுக்கப்பட்டது.

மீண்டும் மக்கள் பேசத்துவங்கிவிட்டார்கள் இரண்டு அதிகாரங்களுக்கு மிடையிலான மோதலைப் பற்றி. தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பொருளாதார அழுத்தம் அவர்களுக்குத் தெரியவில்லை. ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் இனவாத ரீதியில் தூண்டி விடப்படுவது அவர்களுக்குத் தெரியவில்லை. இன்னொரு இனவாத அழிவிற்குள் நாட்டு மக்களை தள்ளி விட்டு நாட்டை இரத்தக் களரியாக்கி அதில் குளிர்காய தயாராக இருக்கும் முதலாளித்துவ நாடாளுமன்றத்தின் அரசியல் வாதிகளினது இரட்டை வேடம் மக்களுக்கு புரியவில்லை. காலா காலமாக மக்களை மாக்களாக எண்ணி ஏமாற்று அரசியலின் நாயகர்களாக மக்கள் மத்தியில் உலாவரும் அரசியல்வாதிகளின் கபட நாடகம் மக்களுக்கு தெரியவில்லை.

முதலாளித்துவ நாடாளுமன்றத்தையும் முதலாளித்துவ நீதிமன்றத்தையும் பற்றி பேசுகிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 80 ருபாவுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கு மேலதிகமாக தேன்பானி, பேகன், கோன் பிளேக் மற்றும் கோல்டன் சிரப் வழங்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவரால் கொண்டு வரப்பட்ட மேற்படி பிரேரணையை கட்சி பேதம் இன பேதம் மத பேதம் எதுவுமின்றி எல்லா உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகரித்துக் கொண்டார்கள். மக்கள் இவற்றைப் பற்றி பேசுவதில்லை. முதலாளித்துவ நீதி மன்றத்தையும், முதலாளித்துவ சட்டவாக்க சபையையும், அவற்றுக்கு மத்தியிலான மோதலைக் குறித்துமே பேசுகிறார்கள். பேச வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவையெல்லாம் முதலாளித்துவ அதிகார வர்க்கத்தின் நிலைத்தலுத்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தந்திரோபாயங்கள் என்பதை மக்கள் உணர வேண்டும். மக்களுக்காக மக்கள் பேச வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படுவதைப் பற்றி மக்கள் பேச வேண்டும். வாழ்க்கைச் செலவைப் பற்றி பேச வேண்டும். பிள்ளைகளின் படிப்பைப் பற்றி பேச வேண்டும். கல்வி விலை பேசப்படுவதைப் பற்றி பேச வேண்டும். அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும். அணிதிரள வேண்டும். தங்கள் மீது சவாரி செய்யும் அரசியல் வாதிகளை தூக்கி வீசுவதற்கு தயாராக வேண்டும். அப்படியல்லாமல், முதலாளித்துவ நிறுவனங்களின் மோதலைப் பற்றி பேசுவதால் ஓடுக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்த விடியலும் கிடைக்கப்போவதில்லை.

-நன்றி: லங்கா வியூஸ்