Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

13வது திருத்தச்சட்டம்: பேரினவாத ஆட்சியின் ஜனநாயக விரோத சர்வாதிகார நடவடிக்கை

இலங்கையில் அரசியலமைப்பில் இருந்து வரும் 13வது திருத்தத்ததைப் பறிப்பதற்கும் மாற்றங்களைச் செய்வதற்கும் ஜனாதிபதியும் ஜக்கிய மக்கள் சுதந்திர மக்கள் முன்னனி அரசாங்கமும் முன்வந்திருப்பதானது, பேரினவாத ஆட்சியின் அப்பட்டமான ஜனநாயக விரோத சர்வாதிகார நடவடிக்கையாகும். இவ்வாறு செய்வதன் மூலம் பௌத்தமத அடிப்படைவாதிகளையும், சிங்கள பௌத்த பேரினவாதிகளையும் திருப்திபடுத்தியவாறு உழைக்கும் சிங்கள மக்களை திசைதிருப்பி தமது பேரினவாத முதலாளித்துவ பாசிச சர்வாதிகாரத்தையும், ஊழல் நிறைந்த ஆட்சி அதிகாரத்தையும் நீடித்து நிலைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையிலேயே ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சி செயல்பட்டு வருகிறது.

அதே வேளை 13வது திருத்தத்திற்குள் இந்நாட்டின் பிரதான பிரச்சனையாக வளர்ந்து நிற்கும் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு எதிவும் காணப்படாத நிலையிலும் கூட அதனைப்பறிப்பதற்கும் மாற்றுவதற்கும் ஜனாதிபதியும் சகோதரர்களும் மும்மரமாக நிற்பதற்கு காரணம் பேரினவாத ஒடுக்குமுறையை தமிழ், முஸ்லீம், மலையகத்தமிழ் மக்கள் மீது தொடர்ந்து முன்னெடுப்பதற்கேயாகும் நாட்டையும் மக்களையும் தொடர்ந்தும் அழிவுப்பாதையில் இட்டு செல்வதற்கு முயலும் 13வது திருத்தத்தை பறிப்பதற்கு அல்லது மாற்றி அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஜனநாயக விரோத செயற்பாட்டை எமது புதிய ஜனநாயாக மாக்சிச லெனினிசக்கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது. நாட்டில் இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் தமது உறுதியான எதிர்ப்பை தெரிவித்து மக்கள் இயக்கங்களை முன்னெடுத்த முன்வரவேண்டும்.

தேசிய இனப்பிரச்சனையின் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான அரசியல் தீர்வு இப் 13வது திருத்த்திற்குள்ளும் மாகாண சபை முறையின் கீழும் இருப்பதாக கூறியே அரசியல் அமைப்பின் 1987ல் அது இடம்பெற வைக்கப்பட்டது. ஆனால் தேசிய இனப்பிரச்சனையோ அன்றி வடக்கு கிழக்கு மக்களின் அபிலாசைகளோ எதுவும் தீர்க்கப்படவில்லை. கடந்த 66 வருடகால பாராளுமன்ற நிறைவேற்று அதிகார ஆட்சிஅ திகாரங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு காலகட்ட முயற்சிகளும் சிங்கள பௌத்த பேரினவாத தரப்புகளால் முறியடிக்கப்பட்டன. அதேவேளை இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழான தீர்வு முயற்சி மடடுமே 13வது திருத்தமாக அரசியல் அமைப்பில் இடம்பெற்ற ஒன்றாகும். ஆனால் இப் 13வது திருத்தமும் அதன் கீழான மகாணசபை முறைமையும் தமிழ் மக்களினதும் முஸ்லீம், மலையகத் தமிழர்களினதும் அபிலாசைகளுக்குரிய தீர்வை உள்ளடக்கி நிற்கவில்லை. இதனை எமது கட்சி இத்திருத்தம் கொண்டுவரப்பட்ட காலத்தில் இருந்தே சுட்டிக்காட்டி வந்தது இருப்பினும், வரலாற்றுச் சூழலாலும் நிர்ப்பந்தத்தாலும் அரசியல் அமைப்பில் இடம்பெற்ற மேற்படி 13வது திருத்தத்தை மேன்மேலும் வளர்த்தெடுத்து அதிகாரப்பகிர்வையும் அதிகார பரவலாக்கத்தையும் விரிவுபடுத்தி சென்றிருக்க முடியும். ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் எதிர்நோக்கி நிற்கும் பேரினவாத ஒடுக்குமுறைக்குரிய மிகஉயர்ந்த மட்டத்தீர்வு என்பது சுயநிர்ணயஉரிமை அடிப்படையிலன சுயாட்சியாகவே அமையமுடியும். வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் முஸ்லீம் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தின் ஜக்கியப்பட்ட இலங்கையில் சுயாட்சியும், சுயாட்சி உள்அமைப்புகளும் கொண்ட தீர்வே நிரந்தர தீர்வாக அமைய முடியும். அவ்வாறே மலையக மக்களது நீண்டகால வாழ்விட சூழலுக்கேற்றவாறான சுயாடசி முறமையே அம்மக்கள் மீதான இனஒடுக்குமுறைக்கு தீர்வாகும்.

இத்தகைய தீர்வு நீண்டகாலத்திற்குரியதாக இருப்பினும், உடனடித்தீர்விற்கும் இனப்பிளவைத்தடுத்து உழைக்கும் வர்க்க சக்திகளை ஜக்கியப்படுத்துவதற்கும் உயர்ந்த பட்ச அதிகாரப்பகிர்வானது அவசியமானதாகும். அதன் மூலமே இலங்கை மக்கள் அனைவரும் உள்நாட்டு வெளிநாட்டு ஆளும் அதிகார வர்க்க மேலாதிக்க சக்திகளிடம் இருந்து தம்மையும் நாட்டையும் மீட்டெடுத்து ஜனநாயம் ஜக்கியம் சுபீட்சம் கொண்ட பாதையில் பயணிக்க முடியும். எனவே 13வது திருத்தத்தை அகற்றுவது அல்லது திருத்துவது என்பதை சிங்கள பௌத்த பேரினவாத அகங்கார ஒடுக்குமுறை என்ற அடிப்படையில். எமது கட்சி அதனை வன்மையாக கண்டித்து எதிர்க்கின்றது.

புதிய ஜனநாயாக மாக்சிச லெனினிசக்கட்சி

ஊடகங்களுக்கான அறிக்கை. 01.07.2013