Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

புலம்பெயர் தேசபக்த வேடக்காரர்களின் இலங்கை அரச சந்திப்பு

புலம்பெயர் தமிழ் மக்கள் இடையே ஒரு கூட்டம் ஒன்று இருக்கிறது. அதில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையில் இருந்த போது தாமும் தம் படிப்பும், தமது வேலைகளும், தமது சுயநலங்களுமாக இருந்தார்கள். இலங்கை அரசின் கொலைகளும், இன ஒடுக்குமுறைகளும் தமிழ்ச் சமுகத்தை மிகக் கொடூரமாக சின்னாபின்னமாக ஆக்கிய போது இளையவர்கள், பொதுமக்கள் என்று பலரும் தம் தனிப்பட்ட வாழ்வு துறந்து மக்களிற்காக இலங்கை அரசை எதிர்த்துப் போராடினார்கள். ஆனால் இந்தக் கூட்டம் ஆமை போல் அவயங்கள் எல்லாம் அடங்க அசைவின்றி இருந்தது. வலி சுமந்த எம்மக்களின் வாழ்வு இவர்களிற்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

பின்பு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிற்கு வந்த பின்பு இந்தக் கூட்டம் திடீர் சாம்பார், திடீர் இடியப்பம் போல திடீர் தேசபக்தர்கள் ஆகி அமைப்புக்களில் இணைந்து கொண்டனர். இலங்கையில் இருக்கும் போது கட்சிகள், இயக்கங்கள் என்று எந்த அரசியல் அமைப்புக்களிலும் கேள்விப்படாத இவர்கள் வெளிநாடுகளில் தமிழ் மக்களிற்காக உயிரையும் விட முன் வந்தார்கள். உதாரணமாக தயா இடைக்காடர் என்ற கரோ நகரசபை உறுப்பினர் சாகும் வரை உண்ணாவிரதம் என்று திடுக்கிட வைத்தார். பயப்படாதீர்கள், மூன்று நாட்களில் அவரது சாகும் வரை உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

தேசபக்தர்கள் வேடம் போட்டதற்கான முதலாவதும், முதன்மையானதுமான காரணம் தேசபக்த வீரவசனம் வெளிநாடுகளில் பேசும் போது இலங்கையைப் போல் பொலிஸ்காரர்கள் அடிக்கப் போவதில்லை; சிறைக்கூடங்களில் சித்திரவதைக் கொடுமைகளை அனுபவிக்கத் தேவையில்லை; இராணுவத்தினர் சுடப்போவதில்லை. அதனால் தான் சகுந்தலை படத்தில் என்.எஸ் கிருஸ்ணனிடம் அடி வாங்கிக் கண்ணீர் வழிந்தோடினாலும் சற்றும் தளராது நடிகர் டி.ஏஸ் துரைராஜா "அப்பன் மவனே சிங்கம்டா" என்று வசனம் பேசியது போல இந்தப் பிழைப்புவாதிகளும் வீரவசனங்களை அள்ளி விட்டார்கள்.   தேசபக்தர்கள் வேடம் போட்டதற்கான பிற காரணங்கள் பின்வருமாறு:

  • புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் விடுதலைக்கென மக்கள் கொடுத்த பெரும் பணம்.
  • புலம்பெயர் நாடுகளின் அரசுகள், புலனாய்வு அமைப்புக்கள் இவர்களில் சிலரை தமது உளவாளிகள் ஆக்கினர். அதன் மூலம் கிடைத்த வசதிகள், வாய்ப்புக்கள்
  • தாம் வாழும் நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளைப் பயன்படுத்தி உள்ளூராட்சி சபைகள் போன்றவற்றில் பதவிகள் பெறுதல்
  • புலம்பெயர் தமிழ் மக்களிடையே உள்ள சங்கங்களில் பதவிகள் பெற்று பிரமுகர்களாக வலம் வரும் வாய்ப்புக்கள்

இப்படி திடீர் தேசபக்தர்கள் ஆனவர்கள் பின்பு செய்த திருப்பணிகள்:

  • தமிழ் மக்களின் போராட்டங்களில் தொடக்க காலங்களில் இருந்து போராடியவர்களிற்கே போராட்ட வரலாறு பற்றி வகுப்பெடுத்தார்கள்
  • இவர்களின் வல்லரசுகளை நம்பச் சொல்லும் அரசியலை எதிர்த்தவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தினார்கள்
  • போராட்ட வழிமுறைகளை, புலிகளின் அரசியலை விமர்சித்தவர்களிற்கு துரோகிப் பட்டங்கள்  கொடுத்தார்கள்

தமிழ் மக்களிற்கும், புலிகளிற்கும் இவர்கள் செய்த அழிவுகள், துரோகங்கள், சதிகள்:

  • இவர்களும் இவர்களைப் போன்று இலங்கையில் இருந்தவர்களும் சேர்ந்து தமிழ் மக்களையும், மக்களின் போராட்டங்களையும் இலங்கை அரசுடன் சேர்ந்து அழித்தார்கள்
  • இந்தியாவுடனும், மேற்கு நாடுகளுடனும் பேசிக் கொண்டிருக்கிறோம் அவர்கள் இலங்கை அரசை போர்நிறுத்தம் செய்ய வைப்பார்கள் என்று புலிகளை நம்ப வைத்து அழித்தது
  • முள்ளிவாய்க்காலில் எமது மக்களை இலங்கை, இந்தியா, மேற்கு நாடுகள் என்பன சேர்ந்து துடிக்க, துடிக்க கொன்ற பின்பும் இந்தியா தமிழ் மக்களின் மறுவாழ்விற்கு உதவி செய்யும்; இந்தியா அரசியல் தீர்வு பெற்றுத் தரும் என்று கூசாமல் ஏமாற்றுதல்
  • உலகம் முழுக்கக் கொல்லும் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் சேர்ந்து இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தமிழ் மக்களிற்கு நீதி பெற்றுத் தருவார்கள் என்று பச்சைப் பொய்களை இன்று வரைக்கும் விடாமல் சொல்லுதல்
  • எமது குழந்தைகள் மீது மகிந்த ராஜபக்சவின் கொலைகாரர்கள் குண்டு போட்டுக் கொன்ற போது வராத ஐக்கிய நாடுகள் சபை இனி வந்து இலங்கை அரசின் மயிர் புடுங்கும் என்று ஜெனிவாவிற்கு காவடி எடுத்தல்

தமிழ் மக்களின் இனப்படுகொலையின் பின்பு, புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டதன் பின்பு சிலர் இலங்கை அரச ஆதரவாளர்கள் ஆகினர். சிலர் தம்மிடம் புலிகள் அமைப்பிற்கும், தமிழ் மக்களின் போராட்டத்திற்கும் என் கொடுக்கப்பட்ட பெரும் பணத்தை தம் வசம் வைத்திருப்பதற்காக தேச பக்தர் வேடத்தை தொடர்ந்து போட்டனர். இலங்கையில் இருக்கும் போராளிகள் வறுமையில் வாடுகிறார்கள். இவர்களோ அப்பணத்தில் வசதியாக வாழ்ந்து கொண்டு "புலிகள் மறுபடி வரும் போது பணத்தையும், கணக்கையும் கொடுப்போம்" என்று ஏமாற்றுகிறார்கள்.

தமிழ் ஈழத்திற்கான நோர்வே அமைப்பு (Norway Council of Eelam Tamils, NCET) என்னும் அமைப்பின் தலைவராக இருந்த "திடீர் தேச பக்தர்" பஞ்சகுலசிங்கம் கந்தையா Aftenposten என்ற நோர்வே  ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து கேட்டார்கள். அந்த ஊடகம் தொடர்ந்து புலிகள் செய்ததாக சொல்லப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாகக் கேட்ட போது "புலிகளும் அதே குற்றத்தை (அதாவது   மனித குலத்திற்கெதிரான குற்றங்கள்) புரிந்தவர்கள், ஆனால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடியாது. காரணம் புலிகளின் தலைமை இறந்து விட்டது", எனக் கூறி தேசபக்த வேடத்தை கலைத்தார்.

இந்தப் பிழைப்புவாதிகள் கூட்டம் இன்று இலங்கை போய் இலங்கை அரசைச் சந்திக்கிறது. மனோ கணேசனுடன் சேர்ந்து கூடிக் குலாவி புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். "திடீர் தேச பக்தர்" பஞ்சகுலசிங்கம் கந்தையாவும் இந்தப் புகைப்படத்தில் இருக்கிறார். மலையக மக்களை நாடற்றவர்கள் ஆக்கிய, மலையக மக்களை இன்று வரை வறுமையில் வாழ வைத்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும், சிறி லங்கா சுதந்திரக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து இருக்கும் பிழைப்புவாதியான மனோ கணேசனும், ஈழப்பிழைப்புவாதிகளும் சேர்ந்து எடுத்திருக்கும் இந்தப் புகைப்படம் பிழைப்புவாதிகள், சந்தர்ப்பவாதிகள் யாரென்று கேட்டால் காட்டுவதற்கு ஒரு கல்வெட்டாக இருக்கும்.

தொடர்புடைய முன்னைய பதிவு:

“புலிகளின் தலைமை இறந்து விட்டது ” நோர்வே புலிகளின் NCET தலைவர் கந்தையா"