Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரேமானந்தாவும் இயேசுவை மாதிரி ஒரு தீர்க்கதரிசி தான் - அய்யா விக்கினேஸ்வரன்

தினப்புயல் என்ற ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் வடமாகாண சபையின் முதல் அமைச்சரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான விக்கினேஸ்வரன் அவர்களிடம் "கொலை மற்றும் பாலியல் வன்முறை செய்ததற்காக நீதிமன்றத்தால் குற்றவாளியாக தண்டனை வழங்கப்பட்ட பிரேமானந்தாவின் சீடராக இருக்கிறீர்களே" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அய்யா அசராமல் மறுமொழி சொன்னார். "இரண்டாயிரம் வருடங்களிற்கு முன் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இயேசுநாதரை இப்போது மக்கள் கடவுளாக பார்க்கிறார்கள்". "அவர் ஒரு குற்றவாளி". "அவர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்". "ஏன் இன்று அவரை கிறீஸ்தவர்கள் இறைவனாகப் பார்க்கிறார்கள்".  "அது மாதிரி பிரேமானந்தா மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை தெரிந்த பின்பு பிரேமானந்தாவும் ஒரு ஆன்மீகத் தலைவராக வணங்கப்படுவார்" என்று அய்யா விக்கினேஸ்வரன் அருள்வாக்கு சொல்கிறார்.

நாங்கள் மதநம்பிக்கை அற்றவர்கள். "மதம் மக்களின் அபின்"; அதாவது மனிதர்களின் பிரச்சனைகளிற்கு தீர்வை கடவுள் தருவார் என்ற பொய்யை, போதையை கொடுப்பது தான் மதம் என்ற தாடிக்கிழவன் மார்க்சின் வழி நிற்பவர்கள். மதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள். மதங்கள் ஆதாரங்கள் எதுவும் இல்லாத புராணங்கள். இந்த அடிப்படையிலேயே இயேசு கிறிஸ்து என்று சொல்லப்படுகிற ஒரு மனிதனின் கதையைப் பார்க்கிறோம். இந்தக் கதைகளின் படி இயேசு கிறிஸ்து அன்பைப் போதித்த ஒரு மனிதன். "உன்னைப் போல் பிறரையும் நேசி" என்று சொன்ன மனிதாபிமானி. பாலியல் தொழில் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மரியா மக்தலேனாவை இயேசுவிடம் கொண்டுவந்து ‘இவளுக்கு நீர் என்ன தீர்ப்பளிக்கிறீர்?’ என்று கேட்டபோது, இயேசு கிறிஸ்து அவர்களிடம், “உங்களில் பாவம் செய்யாதவர் எவரோ அவர் முதலில் இப்பெண்ணின் மீது கல் எறியட்டும்” என்ற மிகச் சிறந்த தீர்ப்பைச் சொன்ன நியாயவாதி. (யோவான் எட்டாம் அதிகாரம்)

இயேசு கிறிஸ்து தன்னை "தேவ குமாரன்", யூதர்களின் மீட்பர் (மெசயா) என்று கூறிக் கொண்டதற்காகவும்; ஜெருசலம் பெரிய கோவிலின் நிர்வாகிகளை விமர்சித்ததற்காகவும்; யூதாயாவின் ரோமா ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்ததற்காகவும் ரோம ஆட்சியின் ஆளுனர் பொன்டியஸ் பிலாத்து முன் நிறுத்தப்பட்டு விசாரணையின் பின் மரண தண்டனை அளிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார் என கொஸ்பல்கள் எனப்படும் ஆகமங்கள் கதைகள் சொல்கின்றன.

இயேசு கொலைகள் செய்தார் என்று அவரது எதிரிகள் சொன்னதாக கதைகள் எதுவும் இல்லை. இயேசு பாலியல் வன்முறை செய்த குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டார் என்று கதைகள் எதுவும் இல்லை. அவர் அரசியல்வாதிகள், பணக்காரர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு; அடியாட்களை கூட வைத்துக் கொண்டு ஆசிரமம் அமைத்து அளவில்லா சொத்துக்கள் சேர்த்ததாக கதைகள் எதுவும் இல்லை. கலிலி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பீற்றர் (இராயப்பர் அல்லது பேதுரு), அன்ட்ரூ ( அந்திரேயா) என்னும் இரு சகோதரர்களான கடல் தொழிலாளர்கள் தான் அவரது முதல் சீடர்களாக இருந்ததாகவே கதைகள் சொல்கின்றன. 

இயேசுவைப் பற்றிய கதைகள் இப்படி இருக்க கொலைகள், பாலியல் வன்முறை, கணக்கு காட்ட முடியாத சொத்துக்கள் வைத்திருந்தது போன்ற குற்றங்களிற்காக இரட்டை ஆயுள்தண்டனை பெற்ற பிரேமானந்தாவைப் போன்றதொரு குற்றவாளி தான் இயேசு கிறிஸ்துவும் என்று ஒரு முதலமைச்சர், ஓய்வு பெற்ற நீதிபதி சொல்கிறார் என்றால் எந்தச் சுவரில் போய் முட்டுவது? நல்ல காலம்,  பிரேமானந்தாவும் உயிர்த்தெழுந்து வருவார் என்று அய்யா விக்கினேஸ்வரன் சொல்லாமல் விட்ட அளவில் தப்பித்தோம்.

விக்கினேஸ்வரன் வடமாகாண சபையின் முதலமைச்சர். அவர் வட மாகாணத்தில் இருக்கும் எல்லா மதத்தினரிற்கும், மதமற்றவர்களிற்குமான முதலமைச்சர். எல்லோருக்குமான பொது நிர்வாகி ஆனால் அவர் எப்படிக் காட்சி தருகிறார்? திருநீறும், குங்குமமும் அள்ளிப் பூசிக் கொண்டு திரிகிறார். சைவ சமயப் பிரச்சாரம் செய்கிறார். மதத்தையும், மதச் சின்னங்களையும் விக்கினேஸ்வரன் என்ற தனி மனிதர் தன்னுடைய தனிப்பட்ட நேரங்களில் கடைப்பிடிக்கலாமே தவிர வடமாகாண சபையின் முதலமைச்சர் தன்னுடைய அலுவலக நேரங்களில் பதவிப்பொறுப்பில் இருக்கும் போது ஒரு மதத்தைச் சேர்ந்தவராக அடையாளம் காட்டுவதும் பேசுவதும் மிகத் தவறானது.

காணாமல் போனவர்களின் குடும்பங்களிற்கு நியாயங்கள் கிடைக்கவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. இலங்கை அரசினால் களவெடுக்கப்பட்ட தமிழ்மக்களின் நிலங்கள் மக்களிற்கு திருப்பிக் கொடுக்கப்படவில்லை. வடக்கிலும், கிழக்கிலும் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் ஐம்பது நாட்களிற்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். வடமாகாண சபையின் நிர்வாகப் பொறுப்பை வைத்திருக்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் அவர் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது நிர்வாகத்தைப் பயன்படுத்தி எம் மக்களிற்கு செய்யக் கூடிய தீர்வுகளைச் செய்வதும் இல்லை. அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து உரிமைகளிற்காக போராடுவதும் இல்லை என்பது மட்டுமல்லாது மக்கள் போராடும் இடங்களை எட்டிப் பார்ப்பது கூடக் கிடையாது என்பது தான் கசப்பான உண்மை.

பாடப்படிப்பு படித்தவர்கள் அறிஞர்கள், ஆல் இன் அழகுராசாக்கள் என்னும் முட்டாள்தனங்கள் தமிழ்ச் சமுகத்தில் இருக்கும் வரை விக்கினேஸ்வரன் போன்றவர்கள் தலைவர்களாக, ஐடியா மணிகளாக வலம் வரும் கொடுமை தொடரத் தான் போகிறது. தமிழ்ச் சமுகத்திற்காக போராடியவர்கள்; சமுகத் தொண்டு செய்தவர்கள்; அரசியல், சமுக விஞ்ஞானிகள் என்று எத்தனையோ பேர் இருக்கும் போது தானும், தன் நீதிபதி பதவியாகவும் இருந்து விட்டு வேலையில் ஓய்வு பெற்றவுடன் அரசியல் செய்ய வெளிக்கிட்ட இவரைப் போன்றவர்களை நமது தலைவர்களாக தேர்ந்தெடுக்கும் அறிவீனங்களை இனியாவது நிறுத்துவோம். மக்களிற்காக தன்னலம் மறந்து போராடுபவர்களை முன் நிறுத்துவோம்.