Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

கத்தி முனையில் சிவப்பு இரத்தம்!!!

தமிழ் மக்களைக் கொன்ற இனவாதக் கட்சிகளுடன் கூட்டு வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் கொஞ்சமும் கூச்சமில்லாமல் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுகிறார்கள். ஏகாதிபத்தியங்களுடன் கொஞ்சிக் குலாவும் புலம்பெயர் தேசத்து தமிழ் மாபியாக் கும்பல்களும் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள். நடைமுறையிலே எந்த வேலையையும் செய்ய முடியாத திண்ணைப் பேச்சு வீரர்களோ சுயநிர்ணயத்திற்கு காணி உறுதி போல கட்சி உறுதி ஏதாவது வைத்திருக்கிறதா என்று தேடுகிறார்கள். பொருத்தம் கருதி இந்தக் கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறோம்.

எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும், அதன் மீள் உருவாக்கத்தையும் முளையிலேயே கிள்ளிவிடுவது மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கூடுதலான எச்சரிக்கையுடன் இருப்பது அரசாங்கத்தின் அதிமுக்கியமான கடமையாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் என்ற செய்தியைப் படித்தான் வாழ்விழந்தோர் சங்கத் தலைவர் கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாள். வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர், பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித்திரிந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அடுத்த செய்தி தெரிவித்தது.

கவனமாக இருக்கிறோம் என்கிறான்கள், காவலில் இருந்தவர் தப்பி பெண்வேடத்தில் திரிந்தார் என்கிறான்கள். இவங்கடை கதைகள் தமிழ்ப்பட கதைகளை விட பயங்கரமா இருக்கே என்று சிரித்தவனிற்கு இந்த பாதுகாப்பு பிரச்சனையால் தான் தன்ரை வாழ்க்கையும் சிரிப்பாகிப் போச்சு என்றது மண்டையிலே நிழலாடியது. தமிழ் படத்தில் கமராவை சுத்தோ சுத்து என்று சுத்தி விட்டு பழைய நினைவுகளை காட்டுவது போல அவனுக்கும் பழைய நினைவுகள் சுத்திக் கொண்டு வந்தன. கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாளும் நளினியும் தேன்நிலவிற்கு இலங்கையின் ஒரு காட்டுப்பிரதேச விடுதிக்கு சென்றிருந்தனர்.

போகும் வழி முழுக்க "வாழ்க்கையை அனுபவிக்க வேணும் என்றும் அதனால் இப்போதைக்கு குழந்தைகள் பெறக்கூடாது என்றும் புலம்பிக் கொண்டு வந்தான் கந்தையா. காதலின் உச்சத்திற்கு கந்தையா போன போது குழந்தைகள் இப்போதைக்கு வேண்டாம் என்று அவன் சொன்னது நளினிக்கு ஞாபகம் வந்தது. "பாதுகாப்புக்கு எதாவது இருக்கிறதா" என்று கேட்டாள். "ஏன் சிங்கம், புலி எதாவது வரும் என்று பயப்படுறீரோ" என்று கந்தையா இளிச்சான். அப்ப தலையில் அடிச்சுக் கொண்டு சிரிச்ச நளினியின் நக்கல் சிரிப்பு பிறகு ஒரு நாளும் நிக்கவேயில்லை.

பழைய நினைவில் கந்தையா இருந்த போது அறுவைதாசனும், அய்யாமுத்துவும் வந்தார்கள். "எங்கையடா கனநாளாக காணேல்லை" என்று அறுவையை கேட்டான். "நாங்கள் ஒரு பத்திரிகை கொண்டு வரப்போகிறோம். அதுதான் ஓடித் திரியிறேன் என்றான் அறுவை. "பேர் வைச்சிட்டியளோ" என்று கந்தையா முடிக்க முதலே "கத்தி முனையில் சிவப்பு இரத்தம்" என்றான் அறுவை. அய்யாமுத்துவும், கந்தையாவும் அதிர்ந்து போய் நின்றார்கள். சனங்கள் வாய் திறக்கவே பயப்படுற இலங்கையிலே கத்தி, இரத்தம் எண்டு பத்திரிகைக்கு இந்த மண்டை கழண்டவன் பேர் வைக்கிறானே யார் துணிந்து வாங்குவார்கள் என்று அய்யாமுத்து யோசித்தான்.

"உன்ரை கட்சி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று இணையத்தளங்களிலே கேள்வி மேலே கேள்வி கேக்குறானுகளே, நீ என்ன சொல்லுறாய்" என்று கந்தையா கேட்டான். இலங்கையிலே தமிழ்த்தேசம், சிங்களத்தேசம் என்று இரு தேசங்கள் இருக்கின்றன. இலங்கையின் ஒடுக்கப்படும் எல்லா இனமக்களும் சேர்ந்து போராடுவதன் மூலமே இலங்கையின் ஒடுக்கும் அரசை தூக்கி எறிய முடியும். இனங்களை பிரித்து ஒன்றோடு ஒன்று மோத விட்டுவிட்டு தாம் தமது கொள்ளைகளை நடத்திக் கொண்டு இருக்கும் இலங்கை அரசுகளை தூக்கி எறிந்து விட்டு ஒரு புரட்சிகர அரசை நிறுவுவதன் மூலமே இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பது தான் இவர்களிற்கான மறுமொழி. பெரும்பான்மையான ஏழைச்சிங்கள மக்கள் இந்த மேல்மட்ட சிங்களவர்களின் அரசினால் சுரண்டப்படுகிறார்கள். அவர்களின் உழைப்பை கொள்ளை அடிக்கிறார்கள். தமிழ் மக்களின் மேல் இந்த ஒடுக்குமுறைகளோடு இன ஒடுக்குமுறையும் சேர்ந்து அழுத்துகிறது. இதை சிங்கள ஏழை மக்கள் உணர்ந்து கொள்ளாதபடி இனவாதம் பேரினவாத அரசினால் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. இதை உடைக்க வேண்டுமாயின் எல்லா இனமக்களிற்குமான ஒரு பொதுமேடை அவசியமாகின்றது. அது தான் சமவுரிமை இயக்கம்.

அண்மையில் மறைந்த தோழர் தவராஜா, எழுபது வயதான ஒரு கடல் தொழிலாளி. இலங்கை கம்யுனிஸ்டு கட்சியின் மிக நீண்ட கால உறுப்பினர். அறுபதுகளின் சாதி ஒழிப்பு போராட்டம் உட்பட பல போராட்டங்களில் முன்னின்று போராடியவர். இந்த முதுமையிலும் கடற்தொழிலிற்கு சென்று விட்டு வந்து போராட்டம் பத்திரிகையை அரச உளவாளிகள் நிறைந்திருக்கும் சூழலிலும் மக்களிடம் கொண்டு செல்ல உழைத்தவர். இந்த வயதிலும், வறுமையின் மத்தியிலும் அரச பயங்கவாதத்திற்கு முகம் கொடுத்து அவர் போராடினார். அவரின் வாழ்க்கை இவர்களின் கேள்விகளிற்கு ஒரு வரியில் மறுமொழி சொல்கிறது.

இன்றைக்கு இலங்கையிலே இருக்கிற பயங்கரச் சூழலிலே நடைமுறையிலே கட்சி எப்படி போராடுகிறது என்பதை இவர்கள் மறைத்து விட்டு கேள்வி கேட்கிறார்கள். இவர்களாலே இலங்கையிலே ஒரே ஒரு வேலைத்திட்டத்தையேனும் நடைமுறையில் செய்ய முடியுமா இல்லை செய்ய வேண்டும் என்ற எண்ணமாவது இருக்கிறதா?. விக்கிரமபாகு கருணாரட்னாவின் நவசமாஜசமாசக் கட்சி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்ற கட்சிகளில் ஒன்று. இவர்கள் ஏன் அக்கட்சியோடு வேலை செய்வதில்லை. புதிய ஜனநாயக கட்சி பெரும்பான்மையாக தமிழ் பேசும் இடதுசாரிகளைக் கொண்ட கட்சி. அக்கட்சியோடு இவர்கள் வேலை செய்வதில்லை. இலங்கையின் சர்வாதிகார அரசிற்கு முகம் கொடுத்து போராடுபவர்களை கேள்வி கேட்கும் இவர்கள் ஏகாதிபத்தியங்களின் ஏஜெண்டுகளான சில புலம்பெயர் வலதுசாரி தமிழ் அமைப்புகளுடன் எந்தக் கேள்வியும் இன்றி சேர்ந்து கொள்ளுவார்கள்.

அறுவைக்கு அந்த நேரம் ஒரு பகிடி ஞாபகம் வந்தது. அறுவையின் கூட்டாளி ஒருவர் தான் அந்த பகிடியை அவனிற்கு சொல்லியிருந்தார். அதை அறுவை தன்ரை பகிடி மாதிரியே கந்தையாவிற்கும், அய்யாமுத்துவிற்கும் எடுத்து விட்டான். எண்பத்துமூன்றில் இருபதுக்கும் மேலே இயக்கங்கள் இருந்தன. அதில் ஒன்று நாலைந்து பேர் மட்டுமே இருந்த இயக்கம். அவர்களின் கூட்டம் ஒன்று ஒரு விடுதியறையிலே நடந்தது. அறைக்கதவு திறந்திருந்ததைப் பார்த்த தலைவர் "கதவை சாத்தி விடு, இராணுவ ரகசியம் வெளியே போய் விடும்" என்றார். "எங்களிடம் ராணுவ பிரிவு இல்லையே" என்ற மற்றவர்களிற்கு தலைவர் நிதானமாக பதிலளித்தார். "ராணுவமே கிடையாது என்ற ராணுவ ரகசியம் தான் வெளியே போய் விடும்".

இவங்களும் அப்படித்தான் இவர்களாலே நடைமுறையிலே எந்த வேலையையும் செய்ய முடியாது என்பதால் தான் கதவை பூட்டிக் கொண்டு பதுங்குகிறார்கள். மக்களிற்காக போராடுபவர்களாக, மக்களைப் பற்றி சிந்திப்பவர்களாக இருந்தால் நடைமுறையில் வேலை செய்பவர்களுடன் இனியாவது இணைந்து கொள்ளட்டும். கதவை திறவுங்கள். நடைமுறை வரட்டும்.

நித்தியானந்தா மாதிரியே கதவைத் திற, கதவைத் திற என்கிறானே இந்த வீணாப் போனவன் என்று அய்யாமுத்துவின் மனதில் அலையடித்தது.