Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

எங்கள் பெண்களை மற்றவர்கள் எப்படி காதலிக்கலாம்!!

இலங்கை ராணுவத்தால் பாலியல் வன்முறை செய்யப்பட்ட தமிழ்பெண்களின் கதறல்கள் வன்னியில் கொட்டப்பட்ட வெடியோசைகளை மேவி ஒலித்தன. மட்டக்களப்பின் வயல்வெளிகளில், மன்னாரின் கடற்கரைகளில், செம்மணியின் வெளிகளில் என்று எங்கும் தமிழ்ப்பெண்களின் மீதான பாலியல்  வன்முறை அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது.  பகல்களிலும், இரவுகளிலும் அந்தக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. அவமானம் தாங்க முடியாமல், வலி பொறுக்க முடியாமல் ஒலித்துக் கொண்டிருந்தன. ஆதரவு தேடி, அபயம் கேட்டு, அந்தக் கயவர்களை சபித்தபடி அந்தக் குரல்கள் எழுந்து கொண்டிருந்தன. அழுதும், ஆற்றாமல் முனகியும் அவை அடங்கிப் போயின.

எங்களது பெண்களின் மீதான வன்முறை குறித்து தமிழ்ப் பகுதிகளில் ஒரு ஒற்றைக்குரல் கூட எழுந்து இலங்கை அரசிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசபடைகளின் ஆக்கிரமிப்பிலே அடிமைப்பட்டு கிடக்கிறது என்றாலும் ஒரு சுவர் எழுத்து, ஒற்றைக் கடதாசியில் ஒரு எதிர்ப்பு எழுத்து கூடவா எழுத முடியாமல் போய் விட்டது. ஆனால் ஒரு பெண் தன் மனதிற்கு பிடித்தமானவனை காதலித்தால் சிலருக்கு மானமும், வீரமும் பொங்கி எழுகின்றன. வேறு சாதிக்காரனை காதலித்தால் கொலை செய்கிறார்கள். வேறு ஊர்க்காரனை காதலித்தால் வன்முறை செய்கிறார்கள். காதலிக்கப்படுபவன் ஏழையாக இருந்தால் குடும்பத்தை மிரட்டுகிறார்கள்.

வவுனியா தரணிக்குளத்தில் ஒரு பெண் வேறு சாதியைச் சேர்ந்தவரைக் காதலித்ததை அறிந்த அப்பெண்ணின் பெற்றோர் அவரை வெளிநாட்டிற்கு அனுப்ப முயற்சி செய்திருக்கிறார்கள். அப்பெண் அதை மறுத்து தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். ஆனால் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்த பெண்ணின் பெற்றோர் பெண்ணை மிரட்டி மீண்டும் தங்களுடன் அழைத்து சென்றிருக்கிறார்கள். அந்தப் பெண் மீண்டும் அவர்களிடம் இருந்து தப்பி தன் காதலனுடன் சென்று பொலிசில் பாதுகாப்பு கேட்டிருக்கிறார். 

அவர்கள் இருவரும் காதலனின் வீட்டிற்கு சென்று தங்கியிருந்த போது அங்கு வந்த பெண்ணின் பெற்றோர் அடங்கிய கும்பல் ஒன்று இளைஞனின் வீட்டுக்காரர்களை வாளால் வெட்டி பெண்ணை கடத்திச் சென்றிருக்கிறார்கள்.

2014 இல் ஒரு கோண்டாவில் பெண்ணை, உரும்பிராய் ஆண் ஒருவர் காதலிக்கிறார் என்றவுடன் கோண்டாவில் வீரர்கள் கொதித்தெழுந்து கொலை செய்திருக்கிறார்கள். ஒரே தமிழ்மொழி பேசுபவர்கள், ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் பற்று பகுதியைச் சேர்ந்தவர்கள், அதிமுக்கிய விடயமாக இருவரும் இரு மரபும் துய்ய வந்த  ஒரே சாதி அப்படி இருந்தும் கோண்டாவில் வீரர்கள் ஏன் கொலை செய்தார்கள்? 

எனெனில் இந்த ஆணாதிக்கப் பன்றிகளைப் பொறுத்த வரை பெண்கள் ஆண்களிற்கு அடிமையானவர்கள். அவர்கள் ஆண்களின் சொற்படி நடக்க வேண்டும். ஆண்கள் சொல்பவரை தான் மணம் செய்ய வேண்டும். இந்த கோண்டாவில் பெண்ணுக்கும் அந்த கொலைகாரர்களிற்கும் எந்த சொந்த பந்தமும் இருக்காவிட்டாலும் அவள் இன்னோரு ஊர் ஆணை காதலிப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இன்னொரு ஊர்க்காரனை அல்ல, ஒரே ஊரின் வேறு தெருக்காரனை காதலித்தாலும் இவர்களிற்கு பிடிக்கவில்லை என்றால் கொலை செய்வார்கள். பெண் மற்றவனை காதலித்தால் உயிர் வாழ விடா கவரிமான்கள் இவர்கள்.

 தருமபுரி இளவரசன் வன்னிய சாதிவெறியர்களினால் கொலை செய்யப்பட்டான் அவன் ஒரு தமிழன் இன்னொரு தமிழ்ப்பெண்ணான திவ்வியாவை காதலித்ததால் மரணமடைந்தான்.  தமிழ் இடிதாங்கி ராமதாசு "வன்னிய பெண்களை தாழ்த்தப்பட்டவர்கள் காதலிப்பதாக சொல்லி ஏமாற்றுகிறார்கள்" என்று சாதிவெறி கக்கியது. வன்னியசாதிப் பெண்கள் வன்னியசாதி ஆண்களின் உடமை. அவர்கள் ராமதாசின் வன்னிய சாதிச்சங்கம் சொல்கிறபடி தான் காதலிக்க வேண்டும்,கல்யாணம் செய்ய வேண்டும். தமிழ், தமிழன் என்று சொல்லிக் கொண்டு சாதி கொண்டு பிரிக்கும் காட்டுமிராண்டித்தனம் தான் ராமதாசின் தமிழ்த்தேசியம். இந்த வன்னியத் தமிழ்த்தேசியத்தில் தாழ்த்தப்பட்டவர்களிற்கு இடமில்லை. அவர்கள் சக தமிழர்கள் இல்லை.

பிரசன்ன விதானகே என்னும் கலைஞனின்  "பிறகு" (With you, Without you)  சிங்கள மொழிப்படத்தை யாழ்ப்பாணத்தில் வெளியிட இருந்த நேரத்தில் "இத்திரைப்படத்தில்  தமிழ் யுவதியை சிங்கள இராணுவ வீரர் திருமணம் செய்வது போல கதை எழுதியிருக்கிறார்கள்?  

தமிழ் யுவதியை இராணுவ வீரர் திருமணம் செய்வதா?" என்று யாழ்ப்பாணத்து உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. ஒரு தமிழ்ப்பெண் சிங்களவரை எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அதன் பத்திரிகை தர்மம் பதைபதைக்கிறது. ஆனால் ஒரு தமிழ் ஆண் சிங்களப் பெண்ணை மணம் செய்வதாக காட்டி இருந்தால் இவர்களிற்கு பிரச்சனை இல்லை. சாதி, மதம், இனம் என்பனவற்றை பெண்கள் மீறக்கூடாது என்பது தான் இந்த பிற்போக்குவாதிகளின் பெருங்கவலை.

ஆனால் இன ஒற்றுமையை வலியுறுத்தி எடுத்த ஒரு திரைப்படத்தை எதிர்த்த அதே "உதயன்" பத்திரிகை முதலாளி சரவணபவான் தனது மகளின் பிறந்த நாளிற்கு மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்திருந்து தமிழ் மக்களைக் கொன்ற மைத்திரி சிறிசேனாவை வணங்கி அழைத்து மகிழ்ந்தார் என்னும் கொடுமையை எங்கு போய்ச் சொல்வது?

மணி ரத்தினத்தின் "பம்பாய்" படம் பம்பாய் கலவரத்திற்கு சிவசேனையும், முஸ்லீம் மக்களும் சம பொறுப்பு என்று பொய் பேசியது. பாதிக்கப்பட்டவர்களை எப்படி கலவரத்திற்கு பொறுப்பாக்கலாம்  என்று முற்போக்கு, ஜனநாயக சக்திகள் அப்படத்தை எதிர்த்தார்கள்.  முஸ்லீம் அடிப்படைவாதிகளும் அப்படத்தை எதிர்த்தார்கள். ஆனால் மணி ரத்தினத்தின் மோசடிக்காக அவர்கள் எதிர்க்கவில்லை. ஒரு இந்து ஆணை முஸ்லீம் பெண் காதலிப்பதாக எப்படி படம் எடுக்கலாம் என்றே அவர்களிற்கு கோபம் வந்தது.

சில வருடங்களிற்கு முன்பு யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜிலிஸ் என்ற அமைப்பு தமிழ் மாணவர்களோடு முஸ்லீம் மாணவிகள் பேசக் கூடாது என்று தடை விதித்திருந்தது. "தமிழ் மாணவர்களோடு பேசவேண்டாம்" என்ற இவர்களது கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டதாக சில முஸ்லிம் மாணவிகள்மீது நடத்தைக் கேடானவர்கள் என குற்றஞ்சாட்டி கடிதமொன்றை இந்த மஜிலிஸ்ஸை சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரியிடம் கையளித்துள்ளனர். 

இவர்களது தொடர்ச்சியான அழுத்தங்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவிகள் "பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தப்போவதாக கண்ணீரும் கம்பலையுமாக விம்முகின்றனர்" என்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்துள்ள அறிக்கை ஒன்று தெரிவித்தது.

இனம், மதம், மொழி, சாதி என்று மக்களைப் பிரிக்கின்ற எந்த பிற்போக்குவாதிகளும் பெண்களை அடக்குவதில் ஒரே மாதிரியே இருக்கிறார்கள். 

இனம், மதம், மொழி, சாதி என்று மக்களைப் பிரிக்காது சமத்துவத்திற்காக போராடும் பொதுவுடமைச் சமுதாயத்திலேயே பெண்களது அடிமை விலங்குகள் உடைந்து நொறுங்கும். அங்கு பெண்களும், ஆண்களும் சரிநிகர் சமத்துவ வாழ்வு வாழ்வார்கள்.