Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

சின்னப் பெடியன்கள் சொன்ன பிறகு தான் தமிழ் தலைமைகளைப் பற்றித் தெரியுதோ!!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் "சொல்லாடல்" நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனை வைத்துக் கொண்டே தமிழ்த் தலைமைகளை போட்டுத் தாக்கியதை பார்த்து பலரும் பரவசம் அடைந்திருக்கிறார்கள். "இவங்களை இப்படித் தான் கிழிக்க வேண்டும்" என்று முகப்புத்தகத்தில் பதிவுகள் போட்டு புல்லரிச்சுப் போய் புளகாங்கிதம் அடைகிறார்கள். தமிழ் மக்களிற்கான கட்சிகள், தலைமைகள் என்று சொல்லிக் கொண்டு தமிழ் மக்களின் எதிரிகளுடன் கட்டித் தழுவும் இந்தப் பிழைப்புவாதிகளை எதிர்க்கிறீகள். நல்லது; ஆனால் எங்கேயோ இடிக்குதே.

அன்றைய பொன்.இராமநாதன், பொன் அருணாசலம், ஜீ.ஜீ பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம், சிவசிதம்பரத்தில் இருந்து இன்றைய சம்பந்தர், விக்கினேஸ்வரன், சுமந்திரன் வரையான இந்தப் பிழைப்புவாதத் தமிழ்த்தலைமைகளை தலையில் வைத்து திரிந்தது நாம் அல்லவா. பிரித்தானியா ஆக்கிரமிப்பாளர்கள் கொடுத்த "சேர்" பட்டத்தை வாழ்வின் பெரும்பேறு என்று மகிழ்ந்து தம் பெயருக்கு முன் போட்டுக் கொண்டு திரிந்த இராமநாதனும், அருணாசலமும் தான் பிரித்தானிய காலனித்துவவாதிகளிற்கு எதிரான இலங்கையின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை கொடுத்தார்கள் என்று நாம் தானே வரலாற்றில் பதிவு செய்து வைத்திருக்கிறோம்.

இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்பாக பிரித்தானியர்களால் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் செய்வதற்காக அமைக்கப்பட்ட சோல்பரி ஆணைகுழுவின் முன்பு தமிழ் மக்களிற்கும், சிங்கள மக்களிற்கும் சமமான பிரதித்துவம் வேண்டும் எனக் கேட்ட ஜீ.ஜீ பொன்னம்பலத்தை ஐம்பதுக்கு ஐம்பது கேட்கிறார் என்று சிங்கள மக்களிடையே இனவாத விசத்தை விதைத்து பரப்புரை செய்து இனவாதிகள் எதிர்த்தனர். இந்த இனவாதிகளின் தலைவராக டி.எஸ் சேனநாயக்கா இருந்தார். இலங்கை சுதந்திரம் அடைந்த போது நடந்த தேர்தலில் இனவாதி டி.எஸ் சேனநாயக்காவின் ஐக்கிய தேசியக் கட்சி வென்று ஆட்சி அமைத்தது. டி.எஸ் சேனநாயக்கா பிரதம மந்திரி ஆனார். ஜீ.ஜீ பொன்னம்பலத்திற்கு தொழில் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைச்சு அளிக்கப்பட்டது. அமைச்சர் பதவிக்கு முன்பு சம பிரதித்துவம் காணாமல் போனது.

நாற்பத்தேழாம் ஆண்டுத் தேர்தலில் இனவாத, மக்கள் விரோதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது அண்ணளவாக நாற்பது வீத வாக்குகளைப் பெற்று மொத்த பாராளுமன்ற ஆசனங்கள் தொண்ணூற்றைந்தில் அரைவாசிக்கும் குறைவாக நாற்பத்திரண்டு ஆசனங்களையே பெற்றிருந்தது. பொதுவுடமைக்கட்சிகள் பத்தொன்பது ஆசனங்களைப் பெற்றிருந்தார்கள். பொதுவுடமைக்கட்சிகள் போட்டியிட்ட மலையகத் தொகுதிகளில் எல்லாம் மலையகத் தமிழ் மக்கள் அவர்களிற்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். இலங்கை இந்தியக் காங்கிரஸ் ஆறு தொகுதிகளில் வென்றிருந்தது. ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் தலைமையில் இருந்த இலங்கை தமிழ்க் காங்கிரசின் ஏழு ஆசனங்களுடம் கூட்டு வைத்திருந்து ஆட்சி செய்த குள்ளநரி டி.எஸ் சேனநாயக்கா நிலைமையை உணர்ந்து கொண்டு மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமையை பறித்து நாடற்றவர்கள் ஆக்கினார்.

தமிழ் மக்களிற்கும், சிங்கள மக்களிற்கும் சம பிரதிநிதித்துவம் கேட்ட ஜீ.ஜீ பொன்னம்பலம் தம் சக தமிழர்களான இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமையை பறிக்கும் இனவாதச் சட்டமான "இலங்கை பிரஜா உரிமைச் சட்டத்தை" ஆதரித்து வாக்களித்தார். அமைச்சர் பதவிக்காக ஏழைத் தமிழ் மக்களை இனவாதிகளுடன் சேர்ந்து நாடற்றவர்கள் ஆக்கினார். இனவாதிகள் மலையகத் தமிழ் மக்களிற்கு செய்த கொடுமைகளைத் தான் அடுத்ததாக இலங்கைத் தமிழர்களிற்கு செய்யப் போகிறார்கள் என்பதைக் கூட சிந்திக்காத பதவி வெறியரைத் தான் தமிழரின் பலம் பொன்னம்பலம் என்று பாக்கள் பாடி பாதம் பணிந்தோம்.

ஐம்பத்தெட்டாம் ஆண்டு தமிழ் மக்களின் மேல் நடத்தப்பட்ட இனக் கலவரத்தின் பின்னும் செல்வநாயகமும் அவரின் தலைமையில் இருந்த தமிழரசுக் கட்சியும் இலங்கையின் இனவாதக் கட்சிகளுடன் கூட்டு வைத்தாலும் செல்வநாயகத்தை தமிழ் மக்களின் தந்தை என்று நாம் பாசமழை பொழிந்தோம். "தமிழீழத்திற்கான ஆணை" வாங்கிப் போன அண்ணன்கள் அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் எழுபத்தேழில் தமிழ் மக்களின் மேல் கொடியவன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஏவி விட்ட இனக்கலவரங்களின் பின்னும் அவனோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒரு நகரசபைக்கு இருக்கும் அதிகாரம் கூட இல்லாத மாவட்டசபையை தமிழ்மக்களின் பிரச்சனைக்கான தீர்வு என்று ஜெயவர்த்தனாவுடன் சேர்ந்து ஏமாற்றினார்கள்.

அய்யா சம்பந்தன், மாவை சேனாதிராசா, விக்கினேஸ்வரன், சுமந்திரன் போன்றவர்களைப் பற்றி தனியாக வேறு எழுதத் தான் வேண்டுமா? இலங்கை, இந்தியா, அமெரிக்கா என்று மக்களின் எதிரிகளை எல்லாம் மீட்பர்கள் என்று மொள்ளமாரித்தனம் பண்ணுகிறார்கள். தமிழ் மக்களைக் கொன்றவர்களுடன் கொஞ்சமும் தயங்காமல் கூட்டுச் சேர்கிறார்கள். தம் உறவுகளைப் பறி கொடுத்து நிர்க்கதியாய் நிற்கும் தமிழ் மக்களை கொலைகாரர்களிற்கு வாக்குப் போடச் சொல்லி  கொஞ்சமும் உறுத்தல் இன்றி கேட்கிறார்கள். இந்தப் பிழைப்புவாதிகளிற்கும் வாக்குப் போட்டு எமது தலைவர்கள் என்று தேர்தல்களில் தெரிந்து எடுத்தவர்கள் அல்லவா நாங்கள்.

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் கேட்ட கேள்விகளிற்கு ஒரு காணொளியில் சுமந்திரன் "எதற்கும் அவசரப்பட முடியாது; பேசித் தான் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் மறுமொழி சொல்கிறார். காலம் காலமாக சொல்லி வரும் அதே மாறாத பொய்கள்; பித்தலாட்டங்கள். மக்களின் எதிரிகளுடன், கொலைகாரர்களுடன் பேசி இவர்கள் தீர்வு பெற்றுத் தருவார்களாம். நாங்கள் நம்பி பொறுத்திருக்க வேண்டுமாம். பொன்.இராமநாதனில் இருந்து இரா.சம்பந்தன் வரையான இவ்வளவு நீண்ட நெடிய காலங்களாக தமிழ் மக்கள் இவர்களின் பொய்களைக் கேட்டு பொறுமையாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் சொல்லும் தீர்வுகள் தான் வந்த பாடில்லை.

கேப்பாப்புலவுவில் மக்கள் உறுதியுடன் போராடினார்கள். அம்பாறையில், மட்டக்களப்பில், யாழ்ப்பாணத்தில் வேலையில்லாப் பட்டதாரிகள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் இலங்கையின் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர்களுடனும் இணைந்து தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகப் போராடுகிறார்கள். போராடுவது ஒன்றே தீர்வுகளைத் தரும். இந்தப் புல்லுருவிகள் தம் பிழைப்பிற்காக சொல்லும் பொய்களைத் தோலுரிப்போம். நீண்ட வழிதான் எனினும் மங்கிய இரவின் பின் விடியல் வந்து தான் தீரும்.