Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

கேப்பாபுலவுவில் மக்கள் போராடுகிறார்கள்; எம் மக்களே இறுதி வரை நாம் போராடுவோம்!!!

கேப்பாபுலவு மக்கள் போராடும் காட்சிகளைப் பார்க்கும் போது கண்களில் இரத்தம் வருகிறது. இலங்கை அரசு களவெடுத்த தமது காணிகளைத் திருப்பித் தரச் சொல்லி அந்த ஏழை மக்கள் வயிறு எரிந்து அழுகிறார்கள். அவர்களினுடைய வீடுகளை, வளவுகளை, தோட்டங்களை, வயல்களை இழந்து கேப்பாபுலவு மக்கள் கூலித் தொழிலாளிகளாக வறுமையில் வாழ்கிறார்கள். அவர்களினுடைய பிள்ளைகள் பாடசாலைகளில் இடம் இல்லாது தாழ்வாரங்களில் இருந்து படிக்கிறார்கள்.  "எங்களுடைய குழந்தைகளிற்கு புத்தகங்கள் வாங்கித் தரக் கூட வழியில்லாத ஏழ்மையில் வாழ்கிறோம்"; அப்படிப்பட்ட ஏழைகளின் வீடுகளைக் கூட போர் முடிந்து இவ்வளவு காலமாகியும் திருப்பித் தராமல் ஏமாற்றுகிறார்கள்" என்று கோபமும், கவலையும் சேர கண்ணீர் விடுகிறார்கள்.

தன்னுடைய குடும்பத்தின் ஒரே ஆதாரமான தனது காணியை இலங்கை அரச கள்ளர்களிடம் இழந்த மனிதர் ஒருவர் விமானப் படையினருக்கும், அவர்களின் ஆயுதங்களிற்கும் அஞ்சாது அவரது காணியில் விமானப்படையினர் போட்டிருக்கும் வேலியை பிய்த்து எறிய ஆவேசத்துடன் முயலுகிறார். அதிகாரங்களும், அராஜகங்களும் கிழித்தெறிந்த வாழ்வின் அவலம் தாங்காது தெருப்புழுதியில் புரண்டு "ஏழை நான் என்ன செய்வேன்" என்று கதறிக் கதறி அழுகிறார்.

இந்த மக்களின் காணிகள் மீளக் கையளிக்கப்படும் என்று இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டதை அடுத்து கேப்பாபுலவு மக்கள் அங்கு சென்றிருந்த போது அங்கு அவர்களிற்கான பத்திரங்களை வழங்குவதற்கு எந்த ஒரு அரச அதிகாரியும் அங்கு இருக்கவில்லை. தமது நிலங்களை திருப்பித் தராமல் தாம் அந்த இடத்தை விட்டு விலகுவதில்லை என ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் போராடுகின்றனர்.

விமானப்படையின் அதிகாரி காணிகள் விடுவிக்கப்படதாகவும் ஆனால் வனத்துறை அதிகாரி ஒப்புதல் வழங்கிய பிறகே அதற்கான பத்திரங்கள் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். மக்கள் வனத்துறை அதிகாரியை தொடர்பு கொண்ட போது உதவி அரசாங்க அதிபரும், சரவணன் என்ற அலுவலரும் அங்கே வந்தால் தான் முடிவு செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். மக்கள் உதவி அரசாங்க அதிபரையும், அந்த சரவணன் என்ற அலுவலரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது உலகத்தின் மொத்தப் பிரச்சனைகளையும் தம் தலைக்கு மேல் வைத்திருக்கும் அந்த இரு அதிகாரிகளும் தமக்கு வர நேரமில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கை அரசினாலும், ஆயுதப் படைகளினாலும், மாவட்ட நிர்வாகத்தினராலும் பொறுப்பற்ற முறையில் அலைக்கழிக்கப்படும் மக்கள் "சாகும் வரை போராடுவோம்" என்று போர்முழக்கம் செய்கிறார்கள். தம்மை அச்சுறுத்த முகாமை விட்டு வெளியே வர எத்தனித்த விமானப்படையினன் ஒருவனை "கல்லெடுத்து அடிப்போம், திரும்பிப் போ" என்று தம் அஞ்சா நெஞ்சைக் காட்டி திரும்பிப் போக வைத்தார்கள். தமக்கு பயம் காட்டுவதற்காக துப்பாக்கிகளுடனும், முகங்களில் கேலிச் சிரிப்புகளினுடமும் முகாமின் முன் வந்த விமானப் படையினரைப் பார்த்து "சுடப் போகிறீர்களா, சுடுங்கள். ஆனால் நாங்கள் இந்த இடத்தை விட்டு போகப் போவதில்லை" என்று உழைக்கும் ஏழை மக்களிற்கே உரிய மன உறுதியையும், போர்க்குணத்தையும் காட்டினார்கள்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்காக தாம் முன் வந்து போராட வேண்டிய தமிழ்த் தலைமைகளோ மக்களை அணி திரட்டி  எந்த விதமான போராட்டங்களையும்  முன் எடுப்பதில்லை. மக்கள் மனதில் உருக்கு போன்ற உறுதியுடன் போராடும் போதும் அந்தப் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை. மாறாக வந்தாலும் வவுனியாவில் "கானாமல் போனவர்களிற்கு நியாயம் வழங்கு", "சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்"; "பயங்கரவாதச் சட்டங்களை திரும்பப் பெறு" என்று மக்கள் போராடிய போது பொய் வாக்குறுதி கொடுத்து போராட்டத்தை நிறுத்தியது போல இலங்கை அரசிற்கு சார்பாகவே நடந்து கொள்ளுவார்கள்.

தமிழ் மக்களைக் கொன்ற, தமிழ் மக்களின் வாழ்வை மண்ணோடு மண்ணாக்கிய இலங்கை அரசுகளை நம்பச் சொல்கிறவர்கள் எப்படி தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்காக போராடுவார்கள்? மகிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்கா, மைத்திரி சிறிபாலா போன்ற மக்களின் பகைவர்களுடன் கூடிக் குலாபுவர்கள் ஏழை மக்களை ஏன் திரும்பிப் பார்க்கப் போகிறார்கள்.

பொது மக்களையும், பொது மக்களின் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டிய அரசு பொது மக்களின் வாழ்விடங்களை களவெடுக்கிறது. களவுகளை கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டிய பாதுகாப்புப் படைகள் களவெடுத்த இடத்தில் இருந்து கொண்டு தம் வாழ்வை இழந்த மக்களை மிரட்டுகின்றன. இந்த மக்கள் விரோத இலங்கை அரசையும், அதன் கொலைகார படைகளையும் நம்பச் சொல்லி நம் தலைமைகள் சொல்லுகின்றன. உயிரோடு இருக்கும் மக்களிற்கே எதுவிதமான தீர்வையும் பெற்றுத் தராத இவர்கள் உயிரிழந்த எம் மக்களிற்கு நியாயம் பெற்றுத் தருவார்களாம். சொல்கிறார்கள்.

கேப்பாப்புலவு மக்கள் உறுதியுடன் போராடுகிறார்கள். நமக்காக நாமே இறுதி வரை போராடுவோம் என்று கட்டாந்தரையில், கடுங்குளிரில் படுத்திருந்து போராடுகிறார்கள். தாய், தந்தையருடன் சிறு குழந்தைகளும் பசியுடனும், பரிதவிப்புடனும் போராடுகிறார்கள். எம் மக்களே இறுதி வரை நாம் போராடுவோம். அஞ்சி, அஞ்சிச் சாவதை விட போராடி வாழ்வோம்.

கேப்பாப்புலவு மக்களைப் போல தமிழ் மண் எங்கும் இலங்கை அரசிற்கு தம் நிலங்களை பறி கொடுத்த மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டிப் போராடுவோம். காணாமல் போனவர்களின் குடும்பங்களிற்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம். அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் வரை போராடுவோம். கல்வி, இயற்கை, மக்களின் உழைப்பு என்பவற்றை முதலாளிகளிற்கும், வெளிநாட்டுக் கொள்ளையரிற்கும் விற்கும் இலங்கை அரசு என்னும் மக்கள் விரோதிகளிற்கு எதிராக இலங்கையின் உழைக்கும் ஏழை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.