Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழர்கள் ஒல்லாந்தர்களால் புகையிலை பயிரிட கொண்டு வரப்பட்டவர்களாம் - ஒரு கண்டுபிடிப்பு

"போத்துக்கேசியர்கள் இலங்கை வந்த போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிங்களவர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள். அங்கு சில தமிழ்ச் சாதிகளும் இருந்தன. கேரளாவில் இருந்து இங்கு வந்த சில மலையாள மக்களும் இருந்தார்கள். சிங்கள அரசர்களால் அவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டிருந்தார்கள். டச்சுக்காரர்கள் வந்ததின் பின்னர், அவர்கள் தங்கள் புகையிலை பயிர்ச்  செய்கையை யாழ்ப்பாணத்தில் செய்வதற்காக இந்தியாவில் இருந்து தமிழர்களைக் கொண்டு வந்தார்கள். சொல்லப்  போனால் உண்மையில் இந்தியாவில் கூட தமிழ் அடையாளம் என்ற ஒன்று இருக்கவில்லை".

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், "ஜாதிக சிந்தனைய" (தேசிய சிந்தனை) என்னும் சிங்கள பெளத்த இனவெறிச் சிந்தனையை விதைத்தவருமான கலாநிதி நளின் டி சில்வா என்பவரின் கண்டுபிடிப்புத் தான் மேலே சொல்லப்பட்ட "தமிழர்கள் புகையிலை பயிர்ச் செய்கைக்காக ஒல்லாந்தர்களால் தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு கொண்டு வரப்பட்டவர்கள் என்னும் பிதற்றல்.

வரலாறு படிக்கும் பத்து வயதுச் சிறுவர்களிற்குக் கூட நளின் டி சில்வா சொல்வது அப்பட்டமான பொய், ஆதாரம் இல்லாத அலம்பல் என்பது விளங்கி விடும். ஆனால் இனவெறி, மதவெறிக் கும்பல்களிற்கு உண்மைகளோ, ஆதாரங்களோ, நேர்மையோ தேவையில்லை. பொய்களை வைத்து, புனைவுகளை வைத்து மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி விடுவது தானே அவர்களின் அடிப்படை அரசியல்.

இலங்கைத் தமிழ் மக்களின் மிக நீண்ட வரலாற்றை தொல்லியல், இலக்கிய ஆதாரங்கள் கூறுகின்றன. பெரும் கற்காலப் பண்பாட்டிற்குரிய புதைகுழி ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்  கழகத்தினரால் 1980 ஆம் ஆண்டு ஆனைகோட்டையில் அகழ்வாய்வு செய்யப்பட்ட போது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு கண்டு பிடிக்கப்பட்ட ஒரு முத்திரையை ஆய்வு செய்த பேராசிரியர் இந்திரபாலா அது தமிழ்ப் பிராமி என்றும் கோ + வேந்த அல்லது கோ + வேதன் எனவும் வாசிக்கிறார்.பேராசிரியர் ரகுபதி அதை "கோ + வேதனுடைய என்று வாசிக்கிறார்.  இருவரும் சிறு மாற்றங்களுடன் வாசித்த போதும் அது தமிழ்ப் பிராமி எழுத்து முத்திரை என்பதாயும், கோ, வேந்து என்று இன்றுமுள தமிழாகவும் இருக்கிறது.

ஈழத்துப் பூதன் தேவனார் என்பவரின் ஒரு பாடல் நற்றிணையிலும், ஈழத்து பூதன் தேவன் என்பவரின் ஒரு பாடல் குறுந்தொகையும் தொகுக்கப்பட்டு உள்ளன. பிற்காலத்தில் பதினைந்து அல்லது பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த யாழ்ப்பாண அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசகேசரியால் காளிதாசனின் ரகுவம்சம் தமிழில் காவியமாகப் பாடப்பட்டது.

பரராசசேகரன், செகராசசேகரன் என்னும் அரியணைப் பெயர்களுடன் மன்னர்கள் ஆண்ட தமிழ் அரசு போத்துக்கீசர்கள் 1619 இல் ஆக்கிரமிக்கும் வரை இருந்தது. தமிழ் மக்களின் வரலாறு இவ்வாறு தெளிவாக இருக்கும் போது 1640 ஆம் ஆண்டிலிருந்து 1796 ஆம் ஆண்டு வரை இலங்கையை அக்கிரமித்த ஒல்லாந்தர்களால் தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு புகையிலைப் பயிர்ச்செய்கைக்காக கூட்டி வரப்பட்ட தமிழ்த் தொழிலாளிகளின் வருகையை தமிழ் மக்களின் வரலாற்றின் தொடக்கமாக காட்டும் வரலாற்று மோசடியை நளின் டி சில்வா செய்கிறார்.

"எழுபத்தைந்து சத வீதமான மக்களை, சனத்தொகையில் வெறும் பத்து சத வீதமுள்ளவர்களுடன் சமப்படுத்துவதா, இரண்டாயிரம் வருடங்கள் வரலாற்றை முன்னூற்றைம்பது வருடங்கள் மட்டும் வரலாறு உள்ளவர்களுடன் சமப்படுத்துவதா, அதில் என்ன ஜனநாயகம் உள்ளது? சிங்கள மக்களின் மனித உரிமைகள் ஆங்கிலேயர்களால் மதிக்கப்படவில்லை. அங்குதான் பிரச்சினையின் ஆரம்பம் அங்கு தான் உள்ளது". என்று இலங்கை மக்களின் பிரச்சனைகளின் காரணியை நளின் டி சில்வா தனது அறிவுக்கண் கொண்டு ஆராய்ந்து கண்டு பிடித்திருக்கிறார்.

சரி, அவர் சொல்வதை வைத்தே ஆராய்வோம். இரண்டாயிரம் வருட வரலாற்றில் காலனியவாதிகள் வருவதற்கு முன்னர் சிங்கள மக்கள் சிங்கள மன்னர்களால் தானே ஆளப்பட்டார்கள். அப்போது சிங்கள மக்கள் பசி பட்டினி இன்றி வாழ்ந்தார்களா? மகாவலி கங்கையின் கரைகளில் பாலும், தேனும் தான் பாய்ந்து ஓடியதா? நளின் டி சில்வா என்ற பெயரில் டி சில்வா என்ற பெயர் போத்துக்கேசியப் பெயர். இவரின் குடும்பம் போத்துக்கேசியர்களின் காலத்தில் புத்த சமயத்தில் இருந்து கத்தோலிக்கக் கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறிய குடும்பம். எதற்காக சிங்கள பெளத்த பொற்காலத்தில் எண்ணற்ற ஏழைச் சிங்கள மக்கள் மதம் மாறினார்கள்? எதற்காக தங்கள் குடும்பப் பெயரைக் கூட வாழ்நாளில் ஒரு போதும் கேட்டிராத ஒரு மொழியின் பெயரிற்கு மாற்றினார்கள். எதற்காக வாழ்நாளில் ஒரு போதும் கேட்டிராத கடவுளை தங்களின் கடவுளாக ஏற்றுக் கொண்டார்கள்? எதற்காக தம் நாட்டையையும், தம் மொழியையும், தம் மதத்தையும் அழித்தவர்களை பின் தொடர்ந்தார்கள்?

காலனியவாதிகள் இலங்கையை விட்டுப் போன பின்பு டொன் ஸ்டீபன் சேனநாயக்கா தொடங்கி பேர்சி மகிந்த ராஜபக்ச போன்ற தூய சிங்கள பெளத்த குலக்கொழுந்துகள் தானே இலங்கையை ஆள்கிறார்கள். ஆங்கிலம் படித்த தமிழர்களின் ஆதிக்கம் இப்போது இல்ல்லயே? ஏன் இப்போதும் பெரும்பான்மையான சிங்கள மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள்? பசியில்லா வாழ்வு வேண்டும் என்று போராடியதற்காகத் தானே இலட்சக்கணக்கான ஏழைச் சிங்கள மக்களை கொன்று குவித்தார்கள் இலங்கையின் பெளத்த சிங்கள ஆட்சியாளர்கள்.

அநகாரிக தர்மபாலாவில் இருந்து நளின் டி சில்வா வரையான சிங்கள பெளத்த வெறியர்களின் சிந்தனைகளும் அப்பொய்களைப் பரப்பி ஆட்சிக்கு வரும் கொள்ளையர்களும் தமது கொள்ளைகளை, கொலைகளை தொடர வேண்டும் என்பதற்காக மறுபடியும், மறுபடியும் சொல்லும் பொய்கள் தான் இவை. பெரும்பான்மையான பெளத்த சிங்கள மக்கள் வறுமையிலேயே வாழும் போது எல்லா அரசியல்வாதிகளும் செல்வத்திலே செழிக்கிறார்களே அதன் மர்மம் என்ன என்று விளக்குவார்களா இந்த ஆய்வாளர்கள்.

உலகம் முழுக்கப் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாகத் தான் இருக்கிறார்கள். எந்த மதமும், எந்த மொழியும் ஆட்சியில் இருந்தாலும் அவை பசித்த வயிற்றிற்கு உணவிடப் போவதில்லை. உழவர்களும், உழைப்பாளிகளும் சேர்ந்து அமைக்கும் சமத்துவ உலகு ஒன்று மட்டுமே பசியைப் போக்கும். பொய்களையும், புனைவுகளையும் வைத்து மக்களைப் பிரிக்கும் புல்லர்களை விரட்டி அன்பையும், சமத்துவத்தையும் அதன் கொள்கைகளாக வைக்கும்.