Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

காந்திக்கு சிலை வைத்து கசிய விடப்படும் கள்ள அரசியல்

காந்தி என்பவர் யார்? பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று மக்களை பிறப்பின் அடைப்படையில் பிரித்து உயர்வு, தாழ்வு கற்பிக்கும் நால் வருணம் என்னும் குப்பையை தம் வாழ்நாள் முழுவதும் சரியென்று சொல்லி வாதிட்ட ஒரு பிற்போக்குவாதி. எளிமையான வாழ்க்கையை பொது மக்களிற்கு போதித்த அதேவேளை பிர்லா போன்றவர்களின் பெரும் செல்வம் எவ்வாறு குவிந்தது என்பதைப் பற்றி எந்தவொரு விமர்சனமும் இன்றி அவர்களின் மாளிகைகளில் தங்கியிருந்தவர். முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் தனது ஆதரவாளர்களாக வைத்துக் கொண்டிருந்த அதேவேளையில் இந்தியாவிற்கு கிராமியப் பொருளாதாரமே உகந்தது என்று வெட்கமின்றி சொல்லக் கூடிய அரசியல் தான் காந்தியின் அரசியல்.

புரட்சி என்ற சொல் காந்திக்கு என்றுமே வெறுப்பைக் கொடுத்தது. பிரித்தானியர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்று தம் உயிரைக் கொடுத்துப் போராடிய புரட்சியாளர்களை காந்தி பகைவர்கள் போல வெறுப்புக் காட்டினார். பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற போராளிகளிற்கு பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைக்கு எதிராக  காந்தியோ, காங்கிரசோ எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. அது மட்டுமல்ல அவர்களின் மரண தண்டனையை பிரித்தானிய அரசு நிறுத்திக் கொள்ளாவிட்டால் காந்திக்கும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் அரசுப் பிரதிநிதியாக (வைஸ்ராய்) இருந்த இர்வினிற்கும் இடையில் கைச்சாத்திடப் பட்டிருந்த காந்தி - இர்வின் ஒப்பந்தத்தை கிழித்தெறிய வேண்டும் என்று சுபாஸ் சந்திரபோஸ் கூறியதையும் காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை.

புரட்சியாளர்களை கொலை செய்வதில் வெறியாக இருந்த வைஸ்ராய் இர்வின் காங்கிரஸ்காரர்கள் கராச்சி நகரத்தில் நடத்த இருந்த மகாநாடு முடிவடையும் வரை வேண்டுமானால் அவர்களை தூக்கிலே போடாமல் விடுவதாக ஒரு சலுகைகையை காங்கிரஸ்காரர்களிற்கு கொடுத்தார். ஆனால் கருணைக்கடல், அகிம்சாமூர்த்தி காந்தி "அவர்களை தூக்கிலே போடுவதென்ற நிலை இருந்தால் காங்கிரஸ் மகாநாட்டிற்கு முன்னரே தூக்கிலே போட்டு விடுங்கள்" என்று கடிதம் எழுதினார். பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் என்னும் போராளிகள் காங்கிரஸ் கயவர்களின் மகாநாட்டிற்கு முன்னமே பிரித்தானிய காலனியவாதிகளால் கொல்லப்பட்டனர்.

லாகூர் சிறையில் இருந்த புரட்சியாளர்கள் தங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். அப்போராட்டத்தில் ஜதீன் தாஸ் என்ற புரட்சியாளர் மரணம் அடைந்தார். "ஆட்டுப் பால் குடித்தால் அதிக ஆயுள் பெறலாம்" போன்ற அரும் பெரும் தத்துவங்களை எல்லாம் தனது "யங் இந்தியா" பத்திரிகையில் எழுதி வந்த காந்தி, ஜதின் தாசின் மரணம் குறித்து எதுவுமே எழுதவில்லை. அது குறித்து ஒருவர் கேள்வி எழுப்பிய போது "வேண்டுமென்றே நான் கருத்து எதனையும் கூறவில்லை, அவ்வாறு நான் கருத்து கூறியிருந்தால் அது ஜதீன் தாசின் மரணத்திற்கு சாதகமற்ற முறையில் தான் இருந்திருக்கும்" என்று மறுமொழி எழுதினார்.

"அவர் எனது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல. எனவே அவரது உன்னத தியாகத்திற்கு விளம்பரம் கொடுக்கக் கூடாது என்பதைத் தவிர ஜதின் தாஸ் மரணம் குறித்து காந்தியால் என்ன கூறியிருக்க முடியும்" என்று அப்போராளிகளின் சம காலத்தவரும், இந்திய சுதந்திரத்திற்காக போராடியதற்காக தம் வாழ்நாட்களின் பெரும் பகுதியை கொடுஞ்சிறைகளில் இழந்த புரட்சியாளருமான மன்மதநாத் குப்தா "அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள்" என்னும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

இந்திய மக்கள் விடுதலைக்காக போராடிய ஒவ்வொரு முறையும் அப்போராட்டங்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு நெருக்குதலைக் கொடுக்கும் போது காந்தி அப்போராட்டங்களை ஒவ்வொரு காரணங்களைச் சொல்லி கை விடுவார். 1942 இல் ஒத்துழையாமை இயக்கம் (Quit India Movement) மக்கள் போராட்டமாக வெடித்தெழுந்தது. பல இடங்களில் மக்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கலகம் செய்தனர். வழக்கம் போல் காந்தி தனக்கும் மக்களின் போராட்ட முறைக்கும் தொடர்பு இல்லை என்று அறிவித்து போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தார். தாம் முற்றிலும் அம்பலப்பட்டுப் போகும் இப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் செய்வது போன்று இருபத்தொரு நாட்களிற்கு "சாகும் வரை உண்ணாவிரதம்" இருந்தார்.

இப்படியாக மக்களின் போராட்டங்களை தனி மனிதர்கள் சார்ந்த உண்ணாவிரதம், அகிம்சை என்று முடக்கி போராட்ட உணர்வுகளை மழுங்கடிப்பதன் மூலம் காந்தியும், காங்கிரஸ் தலைவர்களும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் இந்தியாவில் நிலைத்திருந்து, இந்திய மக்களைச் சுரண்ட வழி வகுத்துக் கொடுத்தனர். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சந்திரசேகர ஆசாத், ராஜன் லாகிரி, மாஸ்டர் அமீர் சந்த், அவத் பிகாரி, பால் முகுந்த், பசந்த் குமார் பிஸ்வாஸ் போன்ற எண்ணற்ற புரட்சியாளர்களை கொன்ற பிரித்தானிய ஏகாதிபத்தியம்; ஜதின் தாஸ் என்னும் மகத்தான போராளி சிறையில் வைத்து சாகும்வரை  உண்ணாவிரதம் இருந்த போது மரணிக்க விட்ட பிரித்தானிய ஏகாதிபத்தியம் காந்தியையும், காங்கிரஸ் தலைவர்களையும் எப்போதும் காப்பாற்றி வந்தது இவர்களின் அடிமைச் சேவகத்தை அம்பலப்படுத்திக் காட்டுகிறது.

காந்தியம் அதிகாரத்தில் இருப்பவர்களை காப்பாற்றும் சிந்தனை என்பதனால் தான் தமிழ் மக்களைக் கொன்ற இலங்கை அரசும், இந்திய அரசும் சேர்ந்து காந்திக்கு தமிழ் மண்ணில் சிலை வைக்கிறார்கள். அமைதி காக்கும் படை என்ற பெயரில் வந்து எமது மக்களைக் கொன்று குவித்த இந்தியப் பேய்கள் அக்கொலைகள், கொள்ளைகள் குறித்து இது வரை மன்னிப்புக் கேட்டதில்லை. அதன் பிறகு மகிந்த ராஜபக்ச என்னும் இனப்படுகொலையாளியின் அரசிற்கு ஆலோசனைகளும், ஆயுதங்களும் கொடுத்து வன்னி மண்ணை பிணக்காடாக்கியது குறித்து மூச்சு விடுவதில்லை.

டாட்டா, பஜாஜ், மகிந்திரா, அசோக் லேலன்ட், குஜராத் கிளாஸ், குஜராத் அம்புஜா, எயார்டெல், இந்திய அரசு வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்றவை இலங்கையில் கடை விரித்துள்ளன. இவர்களின் வியாபாரக் கொள்ளைகளிற்கு எதிராக மக்கள் போராடக் கூடாது என்பதற்காக "இந்தியா உங்கள் நண்பன்" என்று படம் காட்ட வேண்டிய தேவை உள்ளது. அதனால் தான் யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரகத்தின் கிளையைத் திறந்தார்கள். அரசியல் கட்சிகளிற்கு பணப்பெட்டியைக் கொடுத்து "அடிக்கிற கை தான் அணைக்கும்" என்பது போல "கொன்றாலும் இந்தியா தான் தமிழ் மக்களிற்கு தீர்வு பெற்றுத் தரும்" என்று பஜனை பாட வைக்கிறார்கள்.

கொலைகாரர்கள் எங்களிற்கு அகிம்சையைப் போதிக்கிறார்கள்; அகிம்சாமூர்த்தி காந்திக்கு சிலை எழுப்புகிறோம்; வந்து "ரகுபதி ராகவ ராஜாராம்" என்று பஜனை பாடுங்கள் என்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் காங்கிரஸ், மலையகத்து எடுபிடிகள், புலம்பெயர் தேசத்து "நாடு கடந்த தமிழீழம்" போன்ற புல்லுருவிக் கூட்டங்கள் இந்த அயோக்கியர்களிற்கு தாளம் போடலாம். ஆனால் மக்கள் இந்த இந்தியப் பேய்கள் செய்த கொலைகளை, அயோக்கியத்தனங்களை என்றும் மறக்கப் போவதில்லை; மன்னிக்கப் போவதில்லை. உடைக்கப்பட்ட காந்தியின் சிலை மக்களின் கோபத்தின் சாட்சியமாக விழுந்து கிடக்கிறது. விலகி நில்லுங்கள் வீணர்களே!!

குறிப்புகளிற்கு நன்றி:

"அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள்" - மன்மதநாத் குப்தா

"காந்தியும், காங்கிரசும் - ஒரு துரோக வரலாறு" - ம.க.இ.க

"இந்தியா: காலத்தை எதிர்நோக்கி" -  யேன் மிர்தால்

http://www.open.ac.uk/researchprojects/makingbritain/content/1942-quit-india-movement