Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

புரட்சி கியூபாவை விடுதலை செய்தது

தென்னமெரிக்கா முழுவதும் சர்வதேச நிறுவனங்களின் சுரண்டல். குறிப்பாக அமெரிக்காவின் சுரண்டலும் அமெரிக்கா கை காட்டுபவர்களும் தான் ஆட்சியில் இருக்க முடியும் என்ற அராஜகமும் தான் மாற்ற முடியாத விதியா இருந்தது. இராணுவ சர்வாதிகாரிகள் தம் பங்கிற்கு சதி செய்து ஆட்சியைப் பிடித்து அராஜகம் செய்வார்கள். 1952 இல் இராணுவச் சதி மூலம் கியூபாவில் பட்டிஸ்டாவின் ஆட்சி. அமெரிக்காவிற்கு அடி பணிந்து நாட்டை விற்றல், ராணுவ ஆட்சி, எதிர்ப்பவர்களைக் கொலை செய்தல், ஊழல் என்று எல்லா சர்வாதிகாரிகளையும் போல அவன் காட்டாட்சி நடத்துகிறான்.

ஸ்பானிய காலனித்துவவாதிகளிற்கு எதிராக அமைப்பின் இயங்கு சக்தியாகவும், தேச பக்த கவிஞராகவும் விளங்கிய ஜோசே மார்த்தியின் கியுபத் தேசியத்தையும்; கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்சின் வழி வந்த மார்க்கசியத்தையும் தன் இரு வழிகளாகக் கொண்ட பிடல் காஸ்ரோவும் அவனையொத்த தோழர்களும் பாடிஸ்டாவின் அராஜகத்திற்கு எதிராகவும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா நடத்தும் கொள்ளைகளிற்கு எதிராகவும் ஒன்று சேருகிறார்கள்.

26.07.1953 இல் பிடல் காஸ்ரோவும் தோழர்களும் பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிவதற்கான முதல் முயற்சியாக மொன்கடா (Moncada) இராணுவக் குடியிருப்புகளின் மேல் தாக்குதல் நடத்துகிறார்கள். தாக்குதல் தோல்வி அடைகிறது. புரட்சியாளர்களில் பலர் கொல்லப்பட்டனர். பிடல் காஸ்ரோ உட்படச் சிலர் சிறை பிடிக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணையின் போது தோழன் பிடல் காஸ்ரோ பாடிஸ்டாவின் நீதிமன்றத்தில் சூளுரைக்கிறான்; "நீங்கள் எங்களை சிறை வைக்கலாம், ஆனால் வரலாறு எம்மை விடுதலை செய்யும்". காற்று அவனின் செய்தியை கண்டம் எங்கும் சுமந்து விடுதலையை, சமத்துவத்தை நேசிக்கும் ஒவ்வொரு நெஞ்சிலும் கல்வெட்டாகப் பொறிக்கிறது. "உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்" என்று தாடிக் கிழவர்கள் பிரடெரிக் ஏங்கெல்சும், கார்ல் மார்க்சும் சொன்னதிற்கு ஒப்பான ஒரு புரட்சி முழக்கமாக அது ஒவ்வொரு நெஞ்சிலும் தடம் பதிக்கிறது.

இரண்டு வருடங்களின் பின்பு விடுதலை செய்யப்படுகிறார். மெக்சிக்கோவிற்கு தப்பிச் செல்கிறார். உலக புரட்சிகர வரலாற்றில் ஆழப் பதிந்த இரு போராளிகள் அங்கு இணைந்து கொள்கின்றனர். ஆர்ஜென்டினாவில் பிறந்த சர்வதேசப் போராளி சே குவாரா கியூபப் புரட்சியாளர்களுடன் இணைந்து கொள்கிறார். 1956 மார்கழி மாதத்தில் எண்பத்திரண்டு போராளிகள் கிராண்மா என்ற கப்பலில் கியூபாவின் புரட்சியை நோக்கி பாய் வலிக்கிறார்கள். சியரா மாஸ்ரா மலைகளில் தளம் அமைக்கிறார்கள்.

அவர்களது தொடர்ச்சியான, உறுதியான போராட்டம் சியாரா மாஸ்ரா மலைகளைக் கடந்து மக்களை சென்றடைகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் போராளிகளுடன் இணைந்து கொள்கிறார்கள். சாகசக்காரர்கள், சீர்திருத்தவாதிகள் என்று போராளிகளை விமர்சித்த கியூப கம்யுனிஸ்ட்டுக் கட்சியினரும் போராளிகளின் தீரத்தையும், பொதுவுடமைக் கொள்கைகளின் மேல் அவர்கள் கொண்டிருந்த திடமான நம்பிக்கையையும் கண்டு அவர்களுடன் இணைந்து கொள்ளுகிறார்கள்.

கியூபா என்னும் தீவின் கரைகள் எங்கும் கடல் அலைகள் எழுந்த போது கியூப மக்களின் மனதில் புரட்சி அலைகள் எழுந்தன. "கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் சக்தியாய் உருவெடுக்கும்" என்பதை பாடிஸ்டாவிற்கு கியூப மக்கள் தெரிய வைத்தார்கள். 1958 மார்கழி முப்பத்தொன்றாம் நாள்    இரவில் அந்த வருடம் மட்டும் முடியவில்லை. பாடிஸ்டா என்ற சர்வாதிகாரியின் கதையும் முடிந்தது. புரட்சி பற்றி எரிந்த கியூபாவை விட்டு அவன் தப்பி ஓடினான்.

1959 தை இரண்டாம் நாள் புரட்சி கியூபாவை விடுதலை செய்தது. கியூப மக்களின் சோசலிச அரசு தோழன் பிடல் காஸ்ரோவின் தலைமையில் அமைந்தது. கியூப மக்கள் சர்வாதிகாரத்திற்கான  போரை முடிந்து சமத்துவத்திற்கான புரட்சியை தொடங்கினார்கள். பெரும் நிலப்பிரபுக்களிடம் இருந்து நிலம் பறிக்கப்பட்டு கியூப மக்களிற்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. சர்வதேசக் கொள்ளையர்களின் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. பாடசாலைகள் நாடெங்கும் திறக்கப்பட்டன. மருத்துவமனைகள் எழுப்பப்பட்டன.

உலகெங்கும் கொத்தித் தின்னும் அமெரிக்க கழுகுகள் "ஜனநாயகத்திற்கு ஆபத்து" என்று கத்தின. புரட்சிக்குப் பிறகு கியூபாவில் இருந்து சென்று அமெரிக்காவில் வாழ்ந்து வந்த கியூப மக்கள் அரசின் எதிர்ப்பாளர்களிற்கு படையணி 2506 பெயரிட்டு  பணமும், பயிற்சியும் கொடுத்து 13.04.1961 அன்று  கியூபாவின் பன்றி வளைகுடா (Bay of pig) கரைக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் தரையிறங்கிய இரண்டு நாட்களில் "ஜனநாயகக் காவலன்" அமெரிக்காவின் - 26 குண்டு வீச்சு விமானங்கள் தங்களுடன் எந்த விதமான பகையும் இல்லாத கியூப நாட்டு மக்களின் மீது குண்டுகளை வீசின. ஆனால் கியூப புரட்சிகர இராணுவம் எதிப்பாளர்களை மூன்று நாட்களில் முறியடித்தது.

ஆனால் தமிழ்த் தேசிய கோமாளிகளின் எஜமானர்களான அமெரிக்கா தன் கொலை முயற்சிகளையும், கியுப புரட்சிக்கு எதிரான தன் மொள்ளமாரித்தனங்களையும் என்றுமே கை விட்டதில்லை. சிலியின் சோசலிச அரசின் சல்வத்தோர் அலண்டேயை தன் கைக்கூலியான பினச்செட்டை கொண்டு கொன்று சிலியின் புரட்சியை அழித்தது போல; நிக்கரகுவாவின் சான்டினிஸ்தா புரட்சி அமைப்பின் சோசலிச அரசை அழித்தது போலவோ பிடல் காஸ்ரோவையும், கியுபப் புரட்சியையும் அமெரிக்கப் பிசாசுகளால் அழிக்க முடியவில்லை. ஒரு சிறிய தீவு, பென்னம் பெரிய ஏகாதிபத்தியத்தின் சதி முயற்சிகளையும், பொருளாதாரத் தடைகளையும் எதிர்த்து வென்றது தான் கியூபப் புரட்சியின் வீரமிகு வரலாறு.

அதனால் தான் அமெரிக்காவின் கொள்ளைகளை எதிர்த்த வெனிசுலாவின் கியூகோ சேவாஸ், பொலிவியாவின் ஈவோ மொரால் போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களிற்கும் உலகெங்கும் உள்ள இலட்சக்கணக்கான புரட்சிகர முற்போக்கு சக்திகளிற்கும் முன்னுதாரணமாக கியூபப் புரட்சி விளங்குகிறது. அதன் உள்ளார்ந்த உயிராக தோழன் பிடல் காஸ்ரோ திகழ்கிறான். தன் தொண்ணூறாம் ஆண்டு பிறந்த நாள் செய்தியிலும் "ஏகாதிபத்தியங்கள் தரும் எதுவும் எங்களிற்கு தேவையில்லை" என்று முழங்கினான். இது தான் அவனின் வாழ்வு எமக்கு விட்டு செல்லும் செய்தி. புரட்சி ஒன்றே மக்களை விடுதலை செய்யும் என்ற அவனின் வாழ்வை செங்கொடிகளை ஏந்தி கொண்டாடுவோம்.

சென்று வா தோழனே

உழைக்கும் மக்கள் உன் வழி போர் புரிவர்

ஏகாதிபத்தியங்களின் முதுகை முறித்து

விடுதலையின் பாடலை உரத்துப் பாடுவர்

போய் துயில்வாய் எம் தோழனே

உனக்கு எம் செவ்வணக்கம்!!!