Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

அயோக்கியர்களின் அரசியலில் அடிமைத்தனம் சகஜமப்பா!!!

டொனால்ட் டிரம்ப்பை வில்லன், இனவெறியன், நிதானம் இல்லாதவர் என்றவர்கள் அந்தாளு தேர்தலில் வென்றதும் மேன்மை தங்கிய அடுத்த ஜனாதிபதியே, வணக்கத்திற்குரிய அதிபரே என்கிறார்கள். அதிகாரத்திற்கு யார் வந்தாலும் அடிமைகள் விழுந்து கும்பிடுவது தான் அயோக்கியர்களின் அரசியல். அன்று வீர வசனங்களும், இன்று சமாளிப்புகளும் என்னும் கேலிக்கூத்துக்கள் சிலவற்றை கீழே காண்போம்.

பராக் ஒபாமா :

அன்று : 7-11 என்னும் அமெரிக்காவின் சில்லறை பலசரக்கு கடையில் கூட டொனால்ட் ரம்பை வேலைக்கு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

இன்று : வாழ்த்துக்கள், அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவோம்.

போப் பிரான்சிஸ் :

அன்று : மனிதர்களிற்கிடையில் பாலங்களைக் கட்டாமல் தடைச் சுவர்களை கட்டப் போவதாகச் சொல்லும் ஒரு மனிதர் கிறிஸ்தவராக இருக்க முடியாது.

இன்று : புதிய ஜனாதிபதியை வாழ்த்துகிறேன். அவர் பயனுள்ள ஒரு அரசை அமைக்க பிரார்த்திப்போம்.

பிரான்சுவா ஒல்லாந்த் - பிரெஞ்சு ஜனாதிபதி

அன்று : டொனால்ட் ரம்பை நினைக்கும் போது குமட்டல் எடுத்து வாந்தி வருகிறது.

இன்று : உலகின் மாபெரும் ஜனநாயக நாடான பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான நான் மற்றொரு மாபெரும் ஜனநாயக நாடான அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்கவிருக்கும் டொனால்ட் ரம்ப் அவர்களை வாழ்த்துகிறேன்.

ஈழம் மாமி கிலாரி கிளிண்டன் :

அன்று : உலக சமாதானத்திற்கும், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியவர். மிக மோசமான இனவெறியர்.

இன்று : டொனால்ட் ரம்ப் புதிய அரசை அமைக்க திறந்த மனதுடன் ஆதரவை வழங்குவோம்.

தேங்காய் சிவாஜிலிங்கம்:

அன்று : ஈழம் மாமி கிலாரி கிளிண்டன் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று எம்பெருமான் நல்லூர் கந்தசாமியை வேண்டி ஆயிரத்தெட்டு தேங்காய்கள் உடைப்போம்.

இன்று : ஈழம் அம்மான் டொனால்ட் டிரம்ப் அதிபராக வந்ததிற்காக மொட்டை அடித்து, அலகு குத்தி, தேங்காய் உடைத்து பறவைக் காவடி எடுப்போம். (தேங்காய் விலை ஏறி விட்டதாலும், கிலாரிக்காக 1008 தேங்காய் உடைத்தும் கந்தன் கவனிக்காமல் கை விட்டதாலும் இந்த முறை ஒரே ஒரு தேங்காய் மட்டும் உடைக்கப்படும்).  நல்லூர் கந்தசாமி கோவில் வட்டாரத்தில் இருந்து காற்றுவெளியில் கசிந்து வந்தது இந்த தகவல்.

டொனால்ட் டிரம்ப் :

அன்றும், இன்றும் : போதைப்பொருட்களைக் கடத்துபவர்களும், பாலியல் வல்லுறவு செய்பவர்களுமான மெக்சிக்கர்கள் வருவதை தடுப்பதற்காக அமெரிக்கா - மெக்சிக்கோ எல்லையில் மதில் கட்டப்படும். (ஒரு நாட்டு மக்களை இவ்வளவு கேவலமாக சொன்னால் மற்ற நாடுகளில் வழக்குப் போடுவார்கள்; அமெரிக்காவில் ஜனாதிபதி ஆக்குவார்கள்). முஸ்லீம்கள் அமெரிக்கா வருவது தடை செய்யப்படும். சுற்றுச் சூழல் அழிவை தடுப்பதற்காக உலக நாடுகள் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும்.

அமெரிக்கா அன்றும், இன்றும், என்றும் : 

அமெரிக்க அதிபராக எவர் வந்தாலும் அவர் அமெரிக்க முதலாளிகளின் நலன்களிற்காக மட்டுமே வேலை பார்ப்பார். கொள்ளை இலாபம் அடிப்பதற்காக மற்ற நாடுகளை மிரட்டி ஒப்பந்தம் போடுவார். வழிக்கு வராதவர்களை வம்புச் சண்டைக்கு இழுத்து போர் தொடுப்பார். அந்த நாடுகளின் மக்களைக் கொலை செய்து விட்டு இது ஜனநாயகத்திற்காக நடக்கும் போர் என்று சொல்லுவோம். என்றுமே இது தான் அமெரிக்காவின் கொள்கை. அமெரிக்க ஜனாதிபதிகளின் முகங்கள் தான் மாறுமே தவிர அமெரிக்க அரசின் கொலை முகம் என்றுமே மாறாது என்பதை அமெரிக்காவின் அடுத்த போர் உங்களிற்கு உறுதி செய்யும்.