Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

கல்வியை நாளைய நம்பிக்கையாக இறுகப் பிடித்திருக்கும் நம் குழந்தைகளிற்காக குரல் கொடுப்போம்!

காசு கல்வி கற்பதை பாதிக்குமா?. குறைந்தளவு வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகள் பணக்காரக் குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளை விட கல்வியில் பின்தங்கி இருப்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆம், அந்தக் குழந்தைகள் கல்வியில் பின் தங்கி இருக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் ஏழைகள். தாய் தந்தையரின் கல்விநிலை அவர்களின் பிள்ளைகளின் கல்வியை பாதிக்கும் மற்றொரு பிரதான காரணியாக அமைகிறது. எனவே கல்விமட்டத்தில் அடிநிலையில் இருக்கும் ஏழைமக்களின் குழந்தைகளிற்கு கல்வி என்பது கடக்கமுடியாத பெருங்கடலாகவே இன்று வரைக்கும் இருந்து வருகிறது. இவை மேலை நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகள். ஒப்பீட்டளவில் வசதி படைத்த நாடுகளான மேலை நாடுகளிலேயே இந்த நிலை என்னும் போது இலங்கை போன்ற நாடுகளின் ஏழைக்குழந்தைகளின் நிலை எண்ணிப் பார்க்க முடியாதது.

பொருளாதார ஏற்றத்தாழ்வு; இன,மத,மொழி வேறுபாடுகள், சாதிப்பிரிவினைகள் என்று சமுதாயத்தை பின்னோக்கி தள்ளும் காரணிகளைக் கொண்டுள்ள இலங்கை போன்ற நாட்டில் ஏழைக்குழந்தைகளிற்கு எட்டித் தொட முடியாத்தூரத்தில் தான் இன்னும் கல்வி இருக்கிறது. எல்லோருக்கும் இலவசக்கல்வி என்பது இருந்தாலும் எழுத எடுத்த வெண்கட்டியை ஏழைக்குழந்தைகளிடம் இருந்து யாழ்ப்பாணத்து பாடசாலைகள் பறித்து எறிகின்றன. சில  ஆரம்ப பாடசாலைகள் முதலாம் வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்கே ஆயிரக் கணக்கில் பணம் வாங்குகின்றன. முன்பு அரிவரி என்று சொல்லப்படும் ஆரம்ப வகுப்புகளிற்கு தாய்மாரின் சேலைத்தலைப்பைப் பிடித்தபடி அந்த ஊர்க்குழந்தைகள் போய் வரும். இன்று அய்ந்தாம் வகுப்பு புலமைப்பரிட்சையில் கூடியளவு குழந்தைகளை சித்தியடைய வைக்கும் ஆரம்பபாடசாலைகளிற்கு அந்த ஊர் ஏழைக்குழந்தைகள் கால் வைக்க முடியாது. எங்கோ தொலை தூரங்களில் இருந்து எல்லாம் தூங்கி வழியும் கண்களுடன் வசதியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தான் வாகனங்களில் வந்து இறங்குகிறார்கள்.

பின்பு ஆறாம் வகுப்பில் அடுத்த கட்டமாக அத்தனை பாடசாலைகளும் ஆயிரக்கணக்கில் பணம் வாங்குகின்றன. அரசாங்கம் ஆசிரியர்களின் சம்பளத்தை மட்டுமே கொடுக்கிறது, மற்றச் செலவுகளிற்காக, கட்டிட வேலைகளிற்காக பணம் தேவைப்படுகிறது என்று இந்தக் கொள்ளைக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். சில பாடசாலைகளில் அதிபர்களே நேரடியாக பணம் கேட்கிறார்கள். சில பாடசாலைகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தை சேர்ந்தவர்கள் மூலம் பெற்றோர்களிடமிருந்து பணம் வாங்கப்படுகிறது. இலங்கையில் நீண்ட காலமாக போராடிப் பெற்ற கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகளை முதலாளித்துவ அரசாங்கங்கள் படிப்படியாக தனியார்மயமாக்க முயன்று வரும் வேளையில் யாழ்ப்பாணத்து முன்னணி பாடசாலைகள் தமது பங்கிற்கு ஏழைக்குழந்தைகளை ஏறி மிதிக்கின்றன.

இந்த கல்விக் கொள்ளையைப் பற்றி அரசகட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள் எவருமே பேசுவதில்லை. இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை கொலை செய்பவர்கள், கொள்ளை அடிப்பவர்கள், கப்பம் வாங்குபவர்கள் தமிழ்மக்களின் கல்வியைப் பற்றி என்றைக்குமே எண்ணிப் பார்க்கப் போவதில்லை. ரெளடித்தனம் பண்ணாத மிச்ச நேரங்களில் மகிந்த ராஜபக்சவுடனும், மைத்திரி சிரிசேனாவுடனும் கட்டிப் பிடித்து படங்கள் எடுத்து சூழலையும், யாழ்ப்பாணத்து மதில்களையும் நாசமாக்குகிறார்கள். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ இந்தியாவிற்கும், மேற்கு நாடுகளிற்கும் புனிதப்பயணங்கள் மேற்கொண்டு நரேந்திர மோடி, பராக் ஒபாமா, டேவிட் கமரோன் போன்ற மீட்பர்களின் காலில் விழுந்து ஆசிகளும், ஆலோசனைகளும் வாங்கி வருவதற்கே நேரம் போதாமல் இருக்கிறது.வட மாகாணசபைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு உபயோகிக்கப்படாமலே திரும்பிப் போகிறது. தங்களிற்கு கொடுக்கப்படும் வாகனங்களை காலம் தவறாமல் கடமை உணர்ச்சியுடன் பெற்றுக் கொள்வதில் காட்டும் அக்கறையில் ஒரு சத வீதத்தை என்றாலும் ஏழைமாணவர்களின் கல்வியில் இவர்கள் காட்டுவதில்லை.

தமிழ்ப் பிரதேசங்களில், கொல்லப்பட்டவர்களின் மரணவாதை மூச்சுக்கள் பனைமரக் காடுகளை அசைத்துச் சென்ற மண்ணில், கதறி அழைத்த போது வராத கடவுள்களிற்கு புதிது, புதிதாக கோயில்கள், தேவாலயங்கள் எழுகின்றன. ஆனால் மண் மூடிப்போன எத்தனை பாடசாலைகள் மறுபடி கட்டப்பட்டன?. நட்ட கல்லை சுற்றி வந்து பணத்தையும், பகுத்தறிவையும் பாழாக்குபவர்கள் ஏழைக்குழந்தைகளின் கல்வியை எண்ணி ஏன் பார்ப்பதில்லை?. தமது ஊர்ப்பாடசாலைகளில் லஞ்சமும், ஊழலும் புகுந்து ஏழைக்குழந்தைகளிற்கு கல்வியை எட்டாத தூரத்தில் வைத்திருப்பதை எண்ணி ஏன் பார்ப்பதில்லை?.

இந்த கல்விக்கொள்ளை தமிழ்ச்சமுதாயத்தின் சாபக்கேடான சாதியமைப்பின் மூலம் தாழ்த்தப்படும், ஒதுக்கப்படும் சாதிகளைச் சேர்ந்த மாணவர்களை மிக மோசமாக தாக்குகிறது. ஏனெனில் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களே தமிழ்ச்சமுதாயத்தில் பொருளாதாரப்படி முறையில் வறுமையில் வாடும் பிரிவினராக பெரும்பாலும் இருக்கிறார்கள். அவர்கள் தொழிலாளர்கள், கூலிவிவசாயிகள், கள் இறக்குபவர்கள், கடல் தொழிலாளர்கள் என்று உடல் உழைப்பின் மூலம் அன்றாடம் உழைத்து உண்பவர்கள். ஒரு நாள் வேலை இல்லா விட்டால் அடுத்த வேளை உண்ண உணவு இல்லாதவர்கள். அவர்களிற்கு அருகாமையில் முன்னணிப் பாடசாலைகள் இருந்தாலும் அங்கே கல்வி கற்க முடியாமல் இந்த கல்விக் கொள்ளை அந்தக் குழந்தைகளை முள்வேலியிட்டு தடுக்கிறது.

இலங்கை மண்ணையும், மக்களையும், அவர்களின் அடிப்படை உரிமைகளையும் முதலாளிகளிற்கும், அன்னிய பெருநிறுவனங்களிற்கும் அடகு வைக்கும் இலங்கையின் ஆட்சியாளர்கள் தனியார் மருத்துவக் கல்லூரி, தனியார் பல்கலைக்கழகம் என்ற திட்டங்களின் கீழ் கல்வியை விற்பனைப் பொருளாக மாற்றுகிறார்கள். "கல்வி விற்பனைக்கு அல்ல, அது அடிப்படை உரிமை" என்ற கோசத்தை முன் வைத்து இலங்கையின் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராடும் போது வடக்கு, கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் கல்வியை தனியார் மயமாக்குவது தங்களினுடைய பிரச்சனை அல்ல என்பது போல அமைதி காக்குகிறார்கள். தமிழ் கல்விச் சமுகம் கல்வியை தனியார்மயமாக்குவது பற்றியோ, பாடசாலைகளில் நன்கொடை என்ற பெயரில் நடக்கும் அநியாயங்களைப் பற்றியோ வாயே திறப்பதில்லை. கண்களையும், காதுகளையும் இறுக மூடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்திய ஆட்சியாளர்களினாலும், கல்விக் கொள்ளை முதலாளிகளினாலும் இந்தியாவின் அரச கல்வி நிறுவனங்கள் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. தனியார் பள்ளிகள், அரச பள்ளிகள் என்ற இரு எதிர்நிலை கல்விமுறைகள் நிலவுகின்றன. ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறைகள், கூரைகள் இல்லாத இடிந்து விழும் கட்டிடங்கள் என்று அரச பள்ளிகள் ஏழைக்குழந்தைகளின் எதிர்காலத்தில் மண் அள்ளிப் போடுகின்றன. இலங்கை ஆட்சியாளர்களின் புதிய பொருளாதாரக் கொள்ளைகளும் இலங்கையில் இலவசக்கல்வி என்ற அடிப்படை உரிமையை இல்லாமல் செய்வதை நோக்கியே நகருகின்றன. அந்த நிலை வராமல் தடுக்க தமிழ்க்கல்விச்சமுகம் முன் வர வேண்டும். போராடும் முற்போக்கு சக்திகளுடனும், மாணவர் அமைப்புகளுடனும் இணைந்து நம் குழந்தைகளின் கல்வியை, எதிர்காலத்தை  பாதுகாக்க எழ வேண்டும்.

வறுமை தின்னும் வாழ்வில், இன்மை என்னும் இருட்டில், தம் மெல்லிய கை கொண்டு கல்வி என்னும்  விளக்கை நாளைய நம்பிக்கையாய் இறுகப் பிடித்திருக்கும் நம் குழந்தைகளிற்காக குரல் கொடுப்போம்.