Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

மனிதர்கள் எழுவார்கள்

ராஜபக்ச ஆட்சியில் வன்னி யுத்தத்தில் காணாமல் போனவர்களிற்காக குரல் எழுப்பியவர்களையும், தொழிலாளர்களின் சேமலாப நிதியத்தை கொள்ளையிட்டதற்காக போராடியவர்களையும், குடிக்க சுத்தமான தண்ணீர் கேட்டு போராடியவர்களையும், மாற்று அரசியல்வாதிகளையும் ராணுவத்தை ஏவி சுட்டும், வெள்ளைவானில் கடத்தியும் அச்சுறுத்தி பாசிசம் கோரத்தாண்டவமாடியது. ஆட்சி மாறியது. முகங்கள் மாறின. இனிக்க இனிக்க கதைகள் கூறி அதே அடக்குமுறைகள் தொடர்கின்றன. அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை. மாற்று அரசியல்வாதிகள் மீது அடக்குமுறை.... ஆனாலும் மக்கள் அடங்கி கிடக்கவில்லை. குமாரின் விடுதலைக்கான நீண்ட மக்கள் போராட்டம் ஒரு புதிய அத்தியாயத்தை, நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்துள்ளது. 2012 ஆண்டு பிரசுரித்த இந்த கவிதையினை காலப்பொருத்தம் கருதி மீண்டும் பிரசுரிக்கின்றோம்.

ராஜபக்சேக்களும், கிட்லர்களும் சந்தித்ததில்லை

சொந்தக்காரர்களாகவும் இருக்க முடியாது

அவர்கள் வெள்ளை ஆரிய ஜெர்மானியர்கள்

இவர்கள் மண்ணிறக்காரர்கள்

ஆனால் ஒரே மாதிரி கொல்கிறார்கள்

அப்பாவைக் காணாத குட்டிமகளின் கண்ணீர் காயவில்லை

மறுபடியும் கடத்தல்கள்

கோரப்பல் காட்டி பாய்கிறது பாசிசம்

 

சிலர் சொற்களை கல்லிலே பொறித்து வைப்பார்கள்

சிலர் காகிதத்திலே குறித்து வைப்பார்கள்

நான் என் கோபத்தை காற்றிலே பரவ விடுகிறேன்

காகங்களும், கிளிகளும், குயில்களும் கூவித்திரியட்டும்

கத்துங்கடலோசை காவிச்செல்லட்டும்

மனிதர்கள் எழுவார்கள்

மானுடம் வெல்லும்

-08/04/2012