Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

வித்தியாவைக் குதறியது ஆணாதிக்கம் - மக்களை குதறியது யாழ் மேலாதிக்கம்

வன்முறை - சூறையாடல் வித்தியாவை மட்டும் சூறையாடவில்லை, வித்தியாவின் பெயரால் மக்களின் போராட்டத்தையும் - பெண்களின் குரலையும் கூட சூறையாடி இருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் பேரினவாதம் எதை மக்களுக்கு எதிராக அரங்கேற்றியதோ, அதைப் போன்ற ஒன்றையே சிலரால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதன் மூலம் சமூகத்தை உறைநிலைக்கு தள்ளி இருக்கின்றது. மீண்டும் பாதுகாப்பு படைகளை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது.

லும்பன்தனமான தனிமனித வன்முறைகள் மூலம் அராஜகமான சூழலை உருவாக்கியதன் மூலம், அசாதாரணமான நிலைமையைப் பயன்படுத்தி காட்டுத் தர்பாரை நடத்தி இருக்கின்றனர். இந்த வன்முறைக்கான பின்னணியானது குற்றத்துக்குச் சார்பானதும் - மக்களுக்கு எதிரானதுமாகும். அந்த வகையில் இந்த வன்முறை

1. இந்த நிகழ்வு மூலம் மக்கள் பகுத்தறிவு பூர்வமாக சிந்திப்பதை தடுப்பதும், அதன்பால் மக்கள் செயற்படுவதை முளையிலேயே கருக்குவதையும் அடிப்படை நோக்கமாகக் கொண்டு இருந்தது.

2. ஆண்களின் இந்த ஆணாதிக்க வன்முறை மூலம், பெண்ணினதும் - சமூகம் சார்ந்த பெண்ணியக் குரல்களையும் அடக்கியாள முனைந்திருக்கின்றது.

3.தனிப்பட்ட நபர்களை குற்றவாளிகளாக்கி, அவர்கள் கொண்டிருந்த ஆணாதிக்கத்தைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதை தடுத்ததன் மூலம், தங்கள் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்க முனைந்து இருக்கிறது.

4.சமூக விரோத - சட்டவிரோத குற்றங்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுக்கும் போதை - மதுபாவனைக்கு - ஆபாச காட்சிகள் விளம்பரங்கஞக்கு எதிராக சமூகம் விழிப்புணர்வாவதையும் - கிளர்ந்தெழுவதையும் தடுத்து நிறுத்த முனைந்திருக்கின்றது.

5. பெண்ணைப் பாலியல் நோக்கில் அணுகும் ஆணாதிக்க அமைப்பு மீதான பொதுக் கேள்விகளை கேட்பதையே, தடுத்து நிறுத்த முனைந்திருக்கின்றது.

6.யாழ் மேலாதிக்ககட்டைப் பஞ்சாயத்தையும், அதன் ஆணாதிக்க தன்மையிலான மனித விரோத தீர்ப்பையும் வழங்க, தமக்கு அதிகாரத்தை தரக் கோரியதன் மூலம், சட்டம் - நீதி - ஜனநாயகத்தை மொத்த சமூகத்துக்கும் மறுதளித்திருக்கின்றது.

7.அரசியல் ரீதியாக மக்களை அணிதிரட்டவோ - வாக்கு அரசியல் மூலம் வாக்குகளைப் பெறவோ முடியாத கும்பல்கள், வன்முறை - அவதூறுகள் மூலம் மக்களை ஒடுக்கும் அரசியலை முன்வைத்திருக்கின்றது.

8.சட்டம் - நீதிக்கு முரணான செயல்கள் மூலம், அரசை இன்று புனிதப்படுத்தி இருக்கின்றது.

9.நடந்தது என்ன என்ற பொது அக்கறையுடன் கூடிய தலையீடுகளை, குற்றவாளிக்கு சாதகமானதாக, எந்த ஆதாரமுமின்றி சிலரின் அரசியல் நோக்குக்கு ஏற்ப முன்வைக்கப்பட்டது மட்டுமின்றி, அவர்கள் மீதான வன்முறையும் - குற்றச்சாட்டுகள் மூலம் சமூக அக்கறையுடன் கூடிய பொதுத் தலையீடுகளை காயடிக்க முனைந்து இருக்கின்றது.

இப்படி சமூகத்தின் உயிர் பெற்ற இயல்பான உயிரோட்டமான போராட்டத்தை வன்முறை மூலம், முளையிலேயே கருக்கி இருக்கின்றனர்.

இது 2009 முன் சமாதான காலத்தில் மக்கள் அமைதியையும் - யுத்தமற்ற சூழலையும் விரும்பிய போதும், மக்களின் பெயரில் யுத்தம் வேண்டும் என்று கூறி நடத்திய வன்முறைகளும் - யுத்தப் பிரகடன அறிக்கைகள் மூலம் யுத்தத்தை தொடங்கி அழித்ததைப் போன்ற, மக்களின் பெயரில் தான் இவை எல்லாம் அரங்கேறியது.

ஆக இந்த வன்முறையில் ஈடுபட்டது மக்களல்ல. மக்களின் பெயரில், மக்களுக்கு எதிரான சமூக விரோத கும்பலால் வன்முறை முன்னெடுக்கப்பட்டது. வித்தியாவை குதறியவர்கள் மட்டும் இங்கு குற்றவாளிகள் அல்ல, வித்தியாவின் பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்களும் கூட, அதற்கு நிகரான குற்றத்தைச் செய்துள்ளனர்.

வாழ்வதற்காக போராடும் சமூகத்தின் பொது அனுமதி இன்றி, சமூகம் தானாக போராடுவதைத் தடுத்து சமூகத்தின் பெயரால் குற்றங்களை நடத்தி இருக்கின்றது. குற்றங்கள் என்பது, சமூகத்துக்கு எதிரானதாக இருந்தால் குற்றங்களே. ஒரு குற்றத்துக்கு எதிராக இன்னுமொரு குற்றத்தை நியாயப்படுத்த முடியாது.

இங்கு இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவும், ஆணாதிக்க அமைப்பை பாதுகாக்கின்றவர்கள் மட்டுமல்ல, சமூகத்தில் இருந்து விலகிய லும்பன்கள் கூட. இதுவொரு அரசியலாக, தானே தண்டிப்பது பற்றியும், தண்டனை மூலமான தீர்வுகள் பற்றியும் பேசுகின்றது.

பெண் ஒழுக்கம் பற்றியும், கலாச்சாரம் பற்றியும் பேசுகின்ற இவர்கள் - மறுபக்கத்தில் ஆணாதிக்கவாதியாகவும் - போதைக்கு அடிமையானவர்கள் என்பதும் வெளிப்படையான உண்மையாகும். குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பலர் போதையில் இருந்த செய்திகள் வெளிவருகின்றது. இந்தப் போதைக்குப் பின்னால் யாரோ இருக்கின்றனர் - அந்த அரசியல் நோக்கம் என்ன என்பது அரசியல் ரீதியாக காண வேண்டும்.

ஆண் என்ற ஆணாதிக்கத்துடன் வெளிப்படுத்திய இந்த வன்முறையானது, பெண்ணின் குரலை இல்லாதாக்கி இருக்கின்றது. எப்படி வித்தியா குரல் நசுக்கப்பட்டதோ, அதேபோல் பெண்களினதும் - மக்களினதும் குரல்கள் காணாமல் போய் இருக்கின்றது. பதிலாக தன்னார்வ அமைப்புகள், பெண்களை மந்தைகளாக, சடங்குக்காக வரிசையில் நிறுத்திவிடுகின்ற காட்சிகளும் - அரசியல் செயலற்ற வெற்றுக் கோபங்களும் - வெற்று அறிக்கைகளுமாக எஞ்சிவிடுகின்றது. நடந்தவைகளை இந்தப் பின்னணியிலே வைத்தே பார்க்க முடியும்.

சமூகமும் ஆணாதிக்க அமைப்பாக இருக்கும் போது - ஆண்கள் அதை கையில் எடுக்கும் போது - பெண் மீதான பாலியல் அதிகாரமாகி விடுகின்றது. இங்கு இந்த ஆணாதிக்க அமைப்பில் ஒரு பெண் என்ற அடையாளமும் - பாலியல் உறுப்புகளும் இருந்தால் போதும், பார்வையில் தொடங்கி வன்புணர்ச்சி செய்வது என்பது ஆணாதிக்க அமைப்பில் எங்கும் எதிலும் இனம் காணமுடியும். ஆனால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை என்பதே, ஆணாதிக்க அமைப்பு முறையின் சாரம். இங்கு அதுதான் நடந்து இருக்கின்றது. தனிப்பட்ட நபர்களை குற்றவாளியாக்கியவர்கள்ää அவர்களின் ஆணாதிக்கத்தைக் குற்றக்கூண்டில் நிறுத்துவதை தடுத்து நிறுத்தி இருக்கின்றது.

இங்கு வித்தியா குதறப்பட்டதானது - மற்றவரால் பேசப்படுகின்றளவில் - தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்றளவில் உள்ள அக்கறை, இதற்கு தீர்வு காண்பதை மறுதளித்து இருக்கின்றது. இதை தான் சமூகவிரோத கும்பல் தன் வன்முறைகள் மூலம், நிலைநாட்டி இருக்கின்றது.

தண்டனை பற்றியும் - தண்டனை வழங்க முற்படுவதும்

கடந்த 30 வருடமாக தண்டனை பற்றியும், தண்டனை கொடுத்த சமூகம் இறுதியில் எதை சாதித்தது? முள்ளிவாயக்காலில் மக்களைப் பிணமாக்கி, இறுதியில் பிணத்தின் சாம்பல் கூட இன்றி நாதியற்ற சமூகமாக மாற்றிய வழியில், மீண்டும் அதேவழியில் நடத்த முற்படுபவர்கள் யார்?

பிணத்தைக் காட்டி, உணர்ச்சியையூட்டி வன்முறையில் ஈடுபடத் தூண்டும் கயவர்களும் - இது முன்னெடுக்கும் அரசியலும் இனம் காணப்படவேண்டும். மக்களின் பெயரில் இவர்கள் நடத்துகின்ற தனிநபர் - கும்பல் வன்முறைகளை, குற்றவாளிகளை பாதுகாக்கின்றதும் மக்களுக்கு எதிரானதுமாகும். யாழ் மேலாதிக்கம் சார்ந்த ஆணாதிக்க தன்மை கொண்டதுமாகும்.

மரண தண்டைனை கொடு அதாவது புலிகளின் வழியில் தண்டனை - முஸ்லிம்களின் சரித சட்டத்தை அமுல்படுத்து.. போன்ற கோசங்களைக் கொண்டு சமூகத்தை அச்சமூட்டி குற்றத்தை தடுக்க முடியும் சமூகத்தை அடிமைகொள்ள முனைந்த கோசங்கள் - கூச்சல்கள் - பாராளுமன்றத்தில் தமிழனின் பெயரால் கக்கிய வக்கிரங்கள்.. அனைத்தும், மக்களை மந்தைகளாக மேய்கின்ற மக்கள் விரோதச் செயல்களாகும்.

வன்முறைக்கூடான அரசியல்

இந்த வன்முறை மூலம் சிலரை அரசியலில் அகற்றுகின்ற, அவர்களை குற்றவாளியாக மாற்றி காட்டுகின்ற பிரச்சாரத்தின் நோக்கமானது, வித்தியாவை குதறிய பன்றிகளுக்கு நிகரானது. இந்தப் பிரச்சாரமானது கடந்த 2009 முந்தையதுக்கு ஒத்ததாகும், அன்று புலிகளை நியாயப்படுத்திய அதே அரசியல் பின்புலத்தில் இருந்து, இது திட்டமிட்ட வகையில் குறிவைத்து முன்னெடுக்கப்பட்டது.

வதந்தியாக - ஊடகங்கள் ஊடாக குற்றவாளிகளாக சித்தரித்து விடுக்கின்ற, ஊடக வக்கிரம் மூலம், வன்முறைகளும் - அவதூறுகளும் கட்டியமைக்கப்பட்டு தூண்டிவிடப்பட்டதைக் பொதுவில் காண முடியும்.

குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர்களின் உறவினர்கள் - நண்பர்கள் - அயலவர் என அனைவரையும் குற்வாளியாக்குகின்ற, அவர்களின் வாழ்விடங்களை அழிக்கின்ற பகுத்தறிவற்ற காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விடுகின்ற - அதை நியாயப்படுத்துகின்ற அசிங்கங்கள் எல்லாம் இந்த வன்முறைக்கூடான அரசியலை முன்னனெடுத்தவர்களின் கேடுகெட்ட அரசியல்ரீதியான குற்றப் பின்னணியைக் கொண்டது.

குற்றவாளிகளுக்கு சாட்சிகள் மூலம் தண்டனை வழங்க முடியுமே ஒழிய யாழ் மேலாதிக்க கட்டைப் பஞ்சாயத்து மூலமல்ல. பொலிஸ் கைதும் - தொடர் கைதுகளும் கூட, எந்த வகையான சித்திரவதைகள் மூலம் என்பது இதன் பின்னுள்ள மற்றொரு கேள்வியாகும்.

குற்றமிழைத்தவர்கள் மேலான மரபுரீதியான குற்ற ஆதாரங்கள் தொடங்கி, இது வரை எந்த ஆதாரமுமற்ற ஒரு சூழலில் குற்றவாளியாக்கப்பட்டவர்களில் அப்பாவிகள் கூட இருக்கின்ற வாய்ப்பை மறுக்க முடியாது.

கடந்த முப்பது வருடத்தில் இயக்கங்களும் - அரசும் குற்றவாளியாக்கி கொன்றவர்களில் எத்தனை பேர் குற்றவாளிகள் என்பது எம் அனைவருக்கும் தெரியும். குற்றவாளியை தண்டிப்பது எமது நோக்கமாக இருந்தால், அதை ஆதாரங்கள் மூலம் தண்டிப்பதை கோரி அதற்காகவும் போராட வேண்டும். அரசியல் சுயநலத்துக்காக தண்டிப்பது அனுமதிக்க முடியாதது.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்துவதையும், ஆதாரங்கள் மூலம் தண்டிப்பதை தடுத்து நிறுத்து வண்ணமும் முன்னெடுக்கும் வன்முறையானது, ஜனநாயகத்துக்கு எதிரானது.

முடிவாக

மக்கள் நீண்ட அடக்குமுறைகளில் இருந்து விடுபட்டு சுயாதீனமான போராட்டத்தை முன்னெடுக்க முற்பட்டபோது, வன்முறை மூலம் அதை ஒடுக்கியவர்களின் அரசியல் வழிமுறையை அங்கீகரிப்பதற்கும் - நியாயப்படுத்துவதற்கும் எதிரான போராட்டம் மூலம், உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி போராட வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, சமூக நடைமுறைகள் மூலம் தீர்வு காண வேண்டும்.