Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்தாவை தோற்கடிக்கும் வாக்குகளை, பிரித்துவிடக் கூடாதாம்!?

எமது இடதுசாரிய முன்னணியை நோக்கி மகிந்தாவை தோற்கடிக்கும் வாக்குகளை பிரித்து விடுவதாக விவாதம், தர்க்கம், கேள்வி முன்வைக்கப்படுகின்றது. மக்கள் மீண்டும் ஒருமுறை இந்த சமூக அமைப்பு முறையிடம் தோற்பதல்ல பிரச்சனை, மகிந்த என்ற தனிநபர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்கின்றனர்.

இந்த அடிப்படையில் மகிந்த - மைத்திரிபால சிரிசேன இரண்டும் ஒன்றாக இருந்தாலும், மகிந்தா தோற்கடிக்கப்பட வேண்டும் என்கின்றனர். மகிந்தா தான் இன்று பிரதான எதிரி, மைத்திரிபால சிரிசேன அல்ல என்கின்றனர். வாக்கு சிதையாத வண்ணம், மைத்திரிபால சிரிசேனயை வெல்ல வைக்க வேண்டும் என்ற அனைத்துவிதமான வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இதே அடிப்படையில் மூடிமறைத்து இதை செய்ய முனையும் மற்றொரு தர்க்கமே "இனக்கொலையாளிக்கு ஆதரவில்லை எனக் கூறுவதற்குத் தயக்கம் காட்டும் கூட்டமைப்பு" என்ற தர்க்கம் முன்வைக்கப்படுகின்றது. இப்படி பற்பல.

மகிந்தாவை தோற்றுவித்தது எது?

ஆளும் தரப்பாக மகிந்த இருப்பதால், அவர் மக்களுக்கு எதிரான குற்றங்களை இழைத்தார் என்பது வெளிப்படையான உண்மை. இதை அவர் ஏன் செய்தார் என்பதை விட்டுவிட்டு, அதை அவரின் தனிப்பட்ட இயல்பாக பார்க்கின்றவர்கள் தான், அவரை தோற்கடித்து மைத்திரிபால சிரிசேன கொண்டு வருவது பற்றி இன்று பேசுகின்றனர். இதே போல் மகிந்தாவை இனக்கொலையாளியாக காட்டி இனவாத அரசியல், இனகொலையாளியல்லாத ஒருவரை தேர்ந்தெடுக்கக் கோருகின்றது.

ஆளும் தரப்பாக இருககும் மகிந்தாவின் செயற்பாடுகள் என்பது, இந்த முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்க முனைவதால் ஏற்படும் குற்றங்களே. மாறாக இது தனிப்பட்ட நபரின் இயல்பு சார்ந்து உருவானதல்ல. இந்த இடத்தில் யார் இருந்தாலும், இதைத்தான் அவர்கள் செய்வார்கள் - செய்திருப்பார்கள்.

உதாரணமாக புலிகளின் குற்றங்களுக்கு பிரபாகரனையும், புலியையும் காரணமாக காட்டி விடுவதன் மூலம், குற்றங்களுக்கு காரணமான தமிழ் குறுந்தேசியவாத அரசியலை பாதுகாத்துக் கொண்டு தொடர்ந்தும் முன்னெடுக்கும் அரசியல்தான், இன்று மகிந்தா விடையத்திலும் காண முடிகின்றது.

இன்று மகிந்தா மீது போர் குற்றங்களை சுமந்துகின்ற தரப்புகள், மகிந்தாவை மையப்படுத்தி அவரை குற்றவாளியாக்கி குற்றம் சாட்டுகின்றரே ஒழிய, அதற்கு காரணமான இனவாத சமூக கட்டமைப்பை குற்றவாளியாக்கவில்லை. குற்றங்கள் என்பது இனவாத சமூக கட்டமைப்பில் வெளிப்பாடே ஒழிய, தனிப்பட்ட நபர்களின் வெளிப்பாடு அல்ல. இனவாதத்தின் ஆளும் தரப்பாக மகிந்தாவுக்கு பதில் மைத்திரிபால சிரிசேன இருந்து இருந்தாலும், இதைத்தான் அவர் செய்து இருப்பார். அதாவது பிரபாகரனுக்கு பதில் புலிக்கு யார் தலைமை தாங்கி இருந்தாலும், பிரபாகரன் தலைமையில் நடந்து தான் நடந்து இருக்கும்.

இங்கு தனிநபர்கள் பாத்திரம் என்பது, குறித்த அந்த அமைப்பு வடிவத்தின் மேலானதே ஓழிய, தனிநபர்களின் இயல்புகள் இதை தோற்றுவிப்பதில்லை.

இந்த வகையில் இலங்கையில் இந்த சமூக பொருளாதார அமைப்புக்கு யார் தலைமை தாங்கினாலும், அவர்கள் எவராக இருந்தாலும் மகிந்தா செய்ததைத்தான் செய்ய முடியும். இங்கு நபர்கள் அல்ல இந்த சமூக கட்டமைப்பு முறை தான், மக்கள் மீதான குற்றங்களை தோற்றுவிக்கின்றது.

நாங்கள் தோற்கடிக்க வேண்டியது நபர்களையல்ல, இந்த சமூக அமைப்பு முறையை தான் என்பதை தீர்மானித்தாக வேண்டும். எமது வாக்கு இந்த சமூக அமைப்புக்கு எதிரானதா? அல்லது தனிநபரை தோற்கடித்து புதிய குற்றவாளியை தோற்றுவிப்பதற்கானதா? என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.

மகிந்தாவுக்கு பதில் மைத்திரிபால சிரிசேனவை இந்த சமூக பொருளாதார அமைப்புக்கு தலைமை தாங்க வைப்பதன் மூலம், இந்த முறையில் மாற்றம் வரும் என்று கூறுவது மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் மோசடியாகும்.

மக்களை இன்னுமொரு ஜந்து வருடத்துக்கு தோற்கடிக்கின்ற தொடர் செயற்பாடாகும். மக்களின் இந்த முதலாளித்துவ நவதாராளவாத அரசுக்கு எதிரான போராட்டங்களையும், அரசியல் விழிப்புணர்வையும் மளுங்கடிக்கின்ற மாற்றத்தைத்தான், மத்திரிபால சிரிசேனயை கொண்டு வருவதன் மூலம் செய்ய முனைகின்றனர்.

உதாரணமாக எகிப்திய சர்வாதிகாரியை தூக்கி எறிந்த மக்கள் எழுச்சி, மற்றொரு சர்வாதிகரியை கொண்டு வந்ததே ஒழிய, அரச அமைப்பு முறையை மாற்ற முனையவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பழைய கைக்கூலிக்கு பதில் புதிய கைக்கூலியை மட்டுமே உருவாக்கியது.

இன்று மகிந்தாவுக்கு பதில் மைத்திரிபால சிரிசேனயை கொண்டு வந்து, இந்த மக்கள் விரோத சமூக பொருளாதார அமைப்புக்கு தலைமை தாங்கக் கோருவதன் மூலம், மகிந்தா என்னும் தனிநபரை தோற்கடிக்கலாமே ஒழிய, மக்களின் துன்ப, துயரங்களிற்கு காரணமாக இருக்கின்ற அரசகட்டுமான முறையை மாற்றது. இதன் மூலம் மக்கள் மீண்டுமொரு முறை தோற்கடிக்கப்படுவாகள்.

இந்த முதலாளித்துவ முறையை தோற்கடிக்க விரும்பும் மக்களின் வாக்கை பிரிப்பதே மகிந்தாவை தோற்கடிக்கும் அரசியல்

தனிநபர்கள் தான் எல்லாம் என்ற தனிச்சொத்துடமை கண்ணோட்டம் சார்ந்ததே, மகிந்த என்ற தனிநபர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற இந்த அரசியல். தனிநபர்களே மனித வரலாற்றை தீர்மானிப்பவராகவும், அழிப்பவராகவும் புரிந்து கொள்கின்ற முதலாளித்துவ பார்வை. இந்த சமூக அமைப்பில் தனிமனிதனை கதாநாயகனாக முன்னிறுத்துவது தொடங்கி குற்றவாளியாக மாற்றுவது வரை, புரையோடிக் கிடக்கின்ற முதலாளித்துவ சிந்தனை முறையே இந்த அரசியல். சினிமாவில் மட்டுமான காட்சியல்ல, இது தான் அரசியலில் முன்தள்ளப்படுகின்றது. மனித வாழ்க்கை இப்படி குறுக்கு நெடுக்க பிரித்து போட்டு விட முனைகின்ற, வக்கிரமே முதலாளித்துவ அரசியலாக மிதக்கின்றது.

மகிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்றால், அவரை உருவாக்கிய முதலாளித்துவ முறையையும் தோற்கடிக்க வேண்டும். இல்லாது போனால் அதே இடத்தில் மற்றொருவரை கொண்டு வருவதன் மூலம், மீண்டுமொரு புதிய மக்கள் விரோதியை தோற்றுவிப்பதாகவே எங்கள் அரசியல் செயற்பாடுகளை குறுகிவிடுவதே நடந்தேறும். குறிப்பான மகிந்தாவை தோற்கடிக்க இணங்கும் அரசியல், முதலாளித்துவத்தைத் தோற்கடிப்பதற்கு இணங்குவதில்லை. அதாவது முதலாளித்துவத்தை பாதுக்காக்கவும் அல்லது அதை தோற்கடிப்பது சாத்தியமில்லை என்ற புரட்சிகரமல்லாத முதலாளித்துவ அரசியலானது.

மகிந்தவை மட்டுமல்ல அவரை உருவாக்கிய முதலாளித்துவத்தை தோற்கடிக்க மறுக்கும் அரசியல் தான், இன்று மக்களின் வாக்கை மைத்திரிக்கா? மகிந்தாவுக்கா? என பிரிக்கின்றது. இன்றைய முதலாளித்துவ நவதாராளவாத பொருளாதார முறைக்கும், தொடர்ச்சியாக ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியாளர்களின் முகமாற்றத்திற்கும் எதிராகத் தான் எமது இடதுசாரிய முன்னணி தனது வேட்பாளரை முன்னிறுத்தி நிற்கின்றது.

முதலாளித்துவ முறைக்கு எதிரான மக்களின் பொது விருப்பையும், அது சார்ந்த வாக்கைப் பிரிப்பதானது, இந்த முதலாளித்துவ முறையை பாதுகாக்க விரும்புகின்ற சிந்தனையும் அரசியலுமாக இருக்கின்றது. இந்த மக்கள் விரோத முதலாளித்துவத்தை இனம் கண்டு போராடுவது தான், இன்று மக்களை நேசிக்கின்ற அனைவரதும் அரசியல் பணியாக இருக்க முடியும்.