Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பயங்கரவாதத்தை "தீவிரவாதமாக்கும்" இடதுசாரிய அரசியல் குறித்து

இலங்கையின் இன – மத முரண்பாட்டுக்கு எதிராக எந்த அரசியல் - நடைமுறை வேலைத்திட்டமும், இலங்கையின் இருக்கும் எந்த இடதுசாரியக் கட்சியிடமும் கிடையாது. இது தான் எதார்த்தம், இது தான் உண்மை. இப்படி செயலற்ற இடதுசாரியக் கட்சிகளின் கொள்கைக்கும் நடத்தைக்கும் ஏற்பவே, இன-மத ஓடுக்குமுறைகளை பூசிமெழுகுகின்றனர். இன-மதம் சார்ந்த பயங்கரவாத அரசியல் கூறுகளை அரசியல் நீக்கம் செய்து, அதை வெறும் தீவிரவாதமாக இட்டுக் கட்டுகின்றனர்.

இஸ்லாமிய மதத்தின் பெயரில் நடத்திய தற்கொலைத் தாக்குதலை "தீவிரவாதமாகவும்", இஸ்லாமிய அடையாளங்கள் மீது பேரினவாத மற்றும் பௌத்த அடிப்படைவாத ஒடுக்குமுறைகளையும் "தீவிரவாதமாக"வும், இலங்கை இடதுசாரிகளால் மட்டுமே இட்டுக்கட்டி காட்டமுடிகின்றது. இதற்கு பின்னால் இருப்பது, அரசியல் சந்தர்ப்பவாதமே.

தீவிரவாதம் என்றால் என்ன? தீவிரவாதமென்பது ஒரு விடையத்தை அடைவதற்கான கொள்கையைக் கொண்டு, தீவிர நிலைப்பாட்டுடன் தீவிரமாகச் செயற்படுதல். இதைக் கடந்து பிறரை ஒடுக்குகின்ற வன்முறையாகவும், பிற மனிதர்களைக் கொல்லுகின்ற போதும் அது பயங்கரவாதமாகி விடுகின்றது.

இந்த வகையில் இனவெறி, நிறவெறி, மதவெறி, கொண்ட அதி தீவிர வலதுசாரி பயங்கரவாதங்கள் இருப்பது போன்று, மக்கள் திரள் போராட்டத்தில் நம்பிக்கையற்ற அதிதீவிரவாத இடதுசாரிய பயங்கரவாதங்களும் உண்டு. அது உழைக்கும் வர்க்கத்துக்கு கேடு விளைவிப்பதுடன், சுரண்டும் வர்க்கத்தை பலப்படுத்துகின்றது.

உழைக்கும் மக்களுக்கு எதிரான சுரண்டும் வர்க்கம் சார்ந்து வலதுசாரிய சித்தாந்தங்களைக் கொண்டு, மக்களைக் கொல்லுகின்ற வன்முறை என்பது எந்த வகையில் தீவிரவாதமாக இருக்க முடியும்!? இஸ்லாமிய அடையாளங்களை தாக்கி ஒடுக்குவது எந்த வகையில் தீவிரவாதச் செயலாக இருக்க முடியும்!?

அண்மையில் நடந்தவை அனைத்தும் ஒடுக்குமுறைகளுடன் கூடிய பயங்கரவாதம். வன்முறை கொண்டு மக்களை ஒடுக்கியதுடன், மனிதர்களைக் கொன்று குவித்திருக்கின்றது.

தனியுடமை சிந்தனைமுறையில் இருந்து எழுகின்ற தனிநபர் பயங்கரவாதமாகும். இதன் மூலம் தன் இலக்கை அடைய நினைக்கும் வன்முறையானது, பிறரை ஓடுக்கும் பயங்கரவாதமாக வெளிப்படுகின்றது. மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொல்வது என்பது தீவிரவாதமல்ல, பயங்கரவாதமே.

மறுபக்கத்தில் இதுவே ஒடுக்கும் அரசு அதிகாரம் சார்ந்து, தான் அல்லாத அடையாளங்கள் மீதான வன்முறையை கையாள்வது கூட பயங்கரவாதமாகும். இவை அரசு பயங்கரவாதத்தின் அரசியல் கூறாக, அக்கம் பக்கமாகவே இயங்குகின்றது.

பயங்கரவாதம் என்ற சொல் அரச பயங்கரவாதத்தை குறிப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. பிறரை ஒடுக்குகின்ற, கொல்லுகின்ற அனைத்து சித்தாந்த வழிமுறைகளுக்கும் பொருந்தும்.

இலங்கையில் நடந்த வன்முறைகளின்; பின்னால் இருப்பது, ஒடுக்குமுறையுடன் கூடிய பயங்கரவாதமேயாகும். இதைத் தீவிரவாதமென்று இடதுசாரியத்தால் கூற முடிகின்றது என்றால், மதங்களுடனும், ஒடுக்கும் பெரும்பான்மை இன-மத சமூகத்துடனும் கொண்டுள்ள அரசியல் சமரசத்தையே அரசியல்ரீதியாக எடுத்துக் காட்டுகின்றது.

இதன் மூலம் பயங்கரவாத ஒடுக்குமுறையிலுள்ள அரசியல் கூறையும் மூடிமறைப்பதே, இலங்கை இடதுசாரிய அரசியலாக இருக்கின்றது. இதன் மூலம் அரசியல்ரீதியாக இந்த விடையங்கள் மீதான, இடதுசாரிய வர்க்க நடைமுறையை இல்லாதாக்குகின்றது அல்லது அவசியமற்றதாக்கின்றது. இன – மத முரண்பாட்டைக் கொண்ட இலங்கையில், முரண்பாட்டைக் களையும் எந்த அரசியல் - நடைமுறை வேலைத்திட்டமும் இடதுசாரிகளிடத்தில் கிடையாது. அதாவது தேர்தல் கட்சிகள் முன்வைக்கும் இன-மத வாத அரசியலை முறியடிக்கும் வேலைத்திட்டம் கிடையாது. சில கட்சிகள் (ஒரு சில கட்சிகள் நடைமுறையில் இயங்கும் வர்க்கக் கட்சிகளேயல்ல – அவை தனிப்பட்ட இருப்புக்கான கொள்கை வழிக் கட்சிகள்) நடைமுறையில் வர்க்க ஓற்றுமையை கட்டுவதன் மூலம், இன-மத முரண்பாட்டை தீர்க்க முடியும் என்ற வரட்டுத்தனமான ஓற்றைப் பரிணாமக் கண்ணோட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக கோரிக்கைக்காக போராடுவதை மறுதளித்து விடுகின்றது. இந்த அரசியல் பின்னணியில் பயங்கரவாதத்தை தீவிரவாதமாக திரித்துக் காட்டுகின்றனர்.

தேர்தல் அரசியலை முன்வைக்காத இடதுசாரிய வர்க்கக் கட்சிகளின் இத்தகைய நிலைப்பாடும், இன – மத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மென்மையான இணங்கிப்போகும் அணுகுமுறையாகி விடுகின்றது. வர்க்க அரசியலை மறுதளிக்கும் சந்தர்ப்பவாதமாகவும், வரட்டுதனமாகியும் விடுகின்றது. இதனாலேயே நவதாராளவாத தேர்தல் கட்சிகள் இன-மத வாதங்களை எதிர்த்து, ஓரு ஜனநாயக அமைப்பைக் கோரவும் - முன்வைக்கவும் முடியாது போகின்றது.

நடக்கும் இன – மத வன்முறைகளுக்கு எதிரான செயலற்ற இடதுசாரிய சந்தர்ப்பவாதத்தின் துணையுடனேயே, இலங்கையில் இன-மத பயங்கரவாதங்கள் அரங்கேறுகின்றது என்பதே உண்மை.