Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மனிதப் பேரழிவு 2009 மே 16 - 17 - 18

மே 16-17-18.2009 என்ற நாட்கள் இலங்கைத் தமிழர் வாழ்வில் மட்டுமல்ல, மனிதப் பேரழிவின் உலக வரலாற்று  நாளாகும். அதில் முள்ளிவாய்க்கால் என்ற சிறுபகுதி, உலகத் தகவுகளில் அதிமுக்கியமான இடமாகும்.

அந்த இடப் பகுதிகளை முன்பு புலிகள் வெளியாரை நெருங்க விடாது காவல் புரிந்தனர். அந்த இடங்களை இன்று சிறிலங்கா இராணுவம் எவரையும் நெருங்கவிடாது காவல் செய்கின்றது. அப்படியாயின் அந்தப் பகுதிகளில் ஏதேதோ இரகசியங்கள் புதைந்து கிடக்கின்றது என்பதுதானே அர்த்தம். இதற்குள்ளேதான் இந்த மே 16-17-18.2009 என்ற நாட்களில் நடந்த மனிதப் பேரவலத்தின் சுவடுகள் பதிந்து கிடக்கின்றன.

இதற்கு அருகேதான் வட்டவாகல் என்ற பகுதியும் இருக்கின்றது. இங்கு நூற்றுக் கணக்கான கைதிகளை நிர்வாணமாக்கி, சங்கிலியாற் பூட்டி, கிடங்குகளுக்குள் அடைத்து, கொடுமைகள் செய்த சித்திரவதைக் கூடங்கள் பல இருந்தன. 2004இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் அத்தனை கைதிகளும் நீருக்குள் மூழ்கி அமுங்கிப்போயினர். அதற்கான பதிவுகளை பாசிச புலிகள் வெளியிடவேயில்லை.

இதேபோல மே 16-17-18.2009 என்ற நாட்களில் நடந்த மனிதப் பேரவலத்தின் சுவடுகளை வெளியே தெரியாமல் மறைப்பதிலும், அவற்றின் சுவடுகளை அழிப்பதிலும் சிறிலங்கா அரசு பல பிரயத்தனங்களுடன் ஈடுபட்டுள்ளது.

ஒரு சிறிய இலங்கைக்குள், தமிழர் - சிங்களர் சார்ந்த மன்னர்கள் தமக்கான பிரதேசங்களை நிர்ணயித்து, சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆண்டனர். அந்த ஆட்சிகளை அழித்த வெளிநாட்டினருக்கும், அவர்களை அடியொற்றி வந்த பௌத்த மதவாதச் சிங்கள பாசிச அரசுகளும், அதன் ஒட்டுண்ணிகளான சில அறிவாளித் தமிழர்களாலும் சிதைக்கப்பட்ட தமிழினம், அறிவியல் நவீனங்கள் உச்சமாக வளர்ந்திருக்கும் இந்த 20ஆம் நூற்றாண்டில், அதே பாசிசத்தால் பெருந் தொகையாக அழிபட்ட நினைவு நாளில் நின்று, இதற்குள்ளே முடங்கியிருக்கும் சில விடயங்களை மீட்டிப் பார்ப்போமாக.

•    இது தமிழீழம் என்ற குறுந்தேசிய ஆயுதப்போருக்குள் அகப்பட்ட பல்லாயிரம் மக்களை, உலக வக்கிர அரசுகளின் சதிப் பின்னணியில், சிறிலங்கா அரசுக்கும் - தமிழீழப் புலிகளுக்குமான போரில், தமிழினப் பேரழிவைச் செய்த வரலாற்று நாள்.

•    இது சிறிலங்கா இராணுவக் காடையர்கள், அகதிப் பெண்களை கைதியாக்கி வன்புணர்வால் சிதைத்து - அழித்து ஏக்காளமிட்ட நாள்.

•    இது அனைத்துலக அதிகாரத்தையும் தனது கையில் எடுத்திருக்கும் அமெரிக்க - ஐரோப்பாவின் 'சர்வதேசப் பயங்கரவாதிகள்" என்ற பட்டியலில் சேர்க்கப்பட்ட புலிகளை, இறுதிக் கட்டப் போரிலிருந்து உடனே மீட்க, புலிகளும் தமிழரும் ஒன்றென - இதுவே மக்கள் போராட்டமென, வர்க்க மமதை கொண்ட தமிழர்கள், பயங்கரவாதப் புலிக் கொடிகளை புலம்பெயர்ந்த நாடுகளில் திரள் திரளாகத் தூக்கித் தூக்கி, தமது பிழைப்பை நடாத்திய நாள்.

•    இது பயங்கரவாதப் புலிகளை அடியோடு அழிப்பதற்கு வேண்டிய யுத்திகளையும் - ஆயுதங்களையும், பாசிச சிறிலங்காவிற்கு வழங்கிக் கொண்டிருந்த உலகச் சதிகார அரசுகளிடம், புலம் பெயர்ந்த தமிழரில் அதிகமானோர் பயங்கரவாதப் புலிகளை மீட்டுத் தருமாறு மன்றாடித் திண்டாடிய நாள்.

•    இது உள்நாட்டிலும் - வெளிநாடுகளிலும், த.ஈ.வி.புலிகளின் பொறுப்புகளை தமது கைகளில் வைத்திருந்த - பினாமியாக இருந்த பலர், அந்தச் சொத்துகளை சொந்தச் சொத்தாக முடக்கிய நாள்.

•    இது பயங்கரவாதப் புலிகளின் தடைகளை உடைத்து, சிறிலங்காப் பாசிஸ முள்வேலி முகாங்களுக்குள் அதிகமானோர் அகப்பட்ட நாள்.

•    இது மக்களை மந்தைகளாக்கிய தமிழ்க் குறுந் தேசியவாதிகளின் முகமுடைந்த நாள்.

•    மே 16-17-18.2009 வரை, பாசிச தமிழீழ விடுதலைக்கு எதிராக, பாசிச தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட, இலங்கை - இந்திய சதித் திட்டங்களுக்கு துணைபோன, பாசிசப் புலிகளின் தளபதிகளாக இருந்து எத்தனையோ மனித அவலங்களை செய்தபின்பு, தாங்கள் ஏதோ மனிதத்தை மீட்கவந்த மீட்பர்களென புலிகளை உடைத்துச் சென்றோர் முதல் EPDP - EPRLF - PடOTE - TELO - EROS..,  இப்படியான குழுக்காலிகள், தாமே சுட்டு அழித்தவரின் சிறிலங்காவின் நாடாளுமன்றச் சிம்மாசனங்களில் ஏறி இருந்தவாறு, ஏதேதோ எழுதிக் கிழித்த - கத்திக் குலைத்த - காட்டிக் கொடுத்த சுகபோக வாழ்விற்கு வைக்கப்பட்ட உலை நாள்.

•    இது சிறிலங்காவின் பௌத்த சிங்களப் பேரினவாத இராணுவப் பாசிஸ்டுகள் செய்த யுத்த மீறல்களை - தமிழின அழிப்பின் பதிவுகளை - போர்க் குற்றங்களை, அதே இராணுவத்துக்குள் கடமையாற்றிய குறிப்பிட்ட சிலர் மட்டும், மனித நேயத்துடன் அல்லது மாற்று அரசியல் பின்னணியுடன், பயங்கரங்களுக்கு மத்தியில் பதிவுசெய்து, அவற்றை நீதிகோரும் ஆவணங்களாகப் பத்திரப்படுத்திய நாள்.

•    இது போதைக்காரரும் - பாலியல் வன்புணர்வாளரும் - கொள்ளையரும் - கொலைகாரரும் - பொறிக்கிகளும் - சண்டியரும் - சாதி மத வெறியரும் - போரினால் நொந்தோரை மீண்டும் மீண்டும் ஒடுக்கி அடக்கும் அத்தனை சமூகச் சீரழிகவையும் செய்கின்றவர்கள் தமது பாசிசத் திட்டங்களை முடுக்கிவிட்ட நாள்.

•    இது அனைத்து வகையாலும் ஒடுக்கி அடக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அடுத்த கட்ட வர்க்கப் போராட்ட நகர்விற்கு உரமிட்ட நாள்.

•    இது.., இது.., இது.., என இப்படியே இன்னும் தொடரும். ஆனால் இவை அனைத்தும் எமது மனங்களில் வடுவாகப் பதிந்திருக்கும் அனுபவங்களாகும். இவற்றை நாம் திரும்பத் திரும்ப மீட்டிப் பார்க்க வேண்டிய நாளாகின்றது இது.

எமக்காக ஒரு தலைமை தானாக வருமென, இலவம் பழத்தை தின்ன விரும்பும் கிளியாக நாம் இருக்கக் கூடாது. பல வழிகளால் ஒடுக்கி அடக்கப்பட்ட மனித சமூகத்தின் சுமைகள், எங்கள் ஒவ்வொருவரிலும் ஏறி நிற்கின்றது. அச் சுமைகளை ஆற்றுப்படுத்தும் புதிய சிந்தனைக்குள் எமது எண்ணங்கள் செல்ல வேண்டும். மீண்டும் அதே பழைய குருடி கதவைத் திறடி என்பதான பழைய குருட்டுத்தனப் போராட்டங்களுக்குள் எவருமே இனி மாளக் கூடாது.

புலிகளைப் பயங்கரவாதிகளாக உயர்த்திக் காட்ட, புலிகளால் செய்யப்படாத எத்தனையோ குற்றச் செயல்களை, தாக்குதல்களை, உயர் மட்டத்திலான அரசியற் கொலைகளை, பள்ளிப் பிள்ளைகளைக் கொன்ற பயங்கர நிகழ்வுகளை எதிராளிகள் திட்டமிட்டுச் செய்திருக்கின்றார்கள். அதற்கு ஈடாக, சர்வதேசத் தீர்வு எனப் பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கும்போது, எத்தனையோ பாரிய தாக்குதல்களைப் புலிகள் செய்து, அந்தப் பேச்சுகளை முறியடித்த அரசியலற்ற புலிகளின் பாசிசத் தன்மையால், எதிராளிகள் திட்டமிட்டுச் செய்த பழிசுமத்தல்கள், புலிகள் செய்த பயங்கரங்களாக உலகில் வடிவம் பெற்றது. அப்படியே தமது எல்லைக்குள் மக்களை யுத்தக் கைதிகளாக - வெளியேற விடாமல் ஆயுதமுனையில் தடுத்தமையும், பாசிசப் புலிகள் மக்களுக்குத் தெரியாமல் மக்கள் மீது செய்த மாற்றுத் தாக்குதல்கள் யாவும் மக்களில் பலருக்குத் தெரிந்தபோது, அந்த மக்கள் திரண்டு புலிகளுக்கு அடித்தமையும் நடந்தவைதானே. இப்படி புலிகள் எதனைச் சொன்னாலும், இந்தச் சர்வதேசம் புலிகளை ஒருபோதும் காப்பாற்ற விரும்பியதே இல்லை. அத்துடன் புலிகளுடன் சேர்ந்து ஒத்துழைத்த வெளிநாட்டுப் பணியாளர்களில் பலர், சர்வதேச உளவாளிகள் என்பதும், இவை யாவும் பொட்டரையும் மடக்கிய உலகின் மதி நுட்பங்களாகும்.

இதற்குள்..,

• இப்படியானோரே ஒபாமாவைத் தூக்கிப் பிடித்து தமிழரின் நண்பனென புத்தகம் எழுதினர்.

• இப்படியானோரே ஒபாமாவை கடவுளாக்கி இணையத்தளங்கள் நடாத்துகின்றனர்.

• இப்படியானோரே உண்ணாவிரத நாடகமாடினர்.

•  இப்படியானோரே தங்களைச் சிறுத்தைகள் - தம்பிகள் என்றனர்.

• இப்படியானோரே தங்களின் கட்சித் தொண்டரை திட்டம் தீட்டி எரியூட்டிக் கொன்றனர்.

• இப்படியானோரே த.ஈ.வி.புலிகளின் உந்து சக்திகளாக தங்களை வரிந்து கட்டிக்கொண்டனர்.

• இப்படியானோரே வானொலி, வானொளியை நடாத்தி, பிரபாகரனை எல்லாளனாக உயர்த்தி, மறைமுகத்தில் ராஜபக்சவுக்கு சேவகம் செய்தனர்.

• இப்படியானோரே இறுதிப் போரில் புலிகளைக் காப்பாற்றுவதாக, உரிய இடங்களுடன் பேச்சு நடத்துவதாக படங்காட்டி, மக்களையும் புலிகளின் தலைமைப் பீடத்தையும் மிக இலகுவாக மோசடி செய்து கொன்றதில் முன்னணி வகித்தனர்.

• இப்படியானோரே மாபெரும் ஊழல் பெருச்சாளிகளாக தமிழ் சார்ந்த அரசியலில் உள்ளனர்.

• இப்படியானோரின் பின்னணியில், இவர்களின் பினாமிகள் சிலர் 'நந்திக்கடல் அழிவின் சின்னமல்ல"  'முள்ளி வாய்க்கால் ஒரு முடிவல்ல" எனச் சொல்லிக்கொண்டு, அதே குறுந்தேசிய சுத்துமாத்து அரசியலுடன், அனுபவமற்ற போக்குடன் மே 18ஐ நினைவு கூறியவாறு மக்களிடம் மீண்டும் வருகின்றார்கள்.

இவர்களின் அன்பான முகமனை விட்டு, சிலரிடம் இவர்கள் வெருட்டிப் பார்க்கும் போக்கினையும் விட்டு, இவர்கள் மக்களின் உண்மையான விடுதலையின் அறிவைப் பெற்றுத்தான் உங்களிடம் வருகின்றார்களா என்பதைச் சற்று பரிசீலித்துப் பாருங்கள்.

தமிழருக்கான விடுதலை என்பது எதற்காக இதுவரை கிடைக்கவில்லை..? என இவர்களிடம் நீங்கள் கேட்டால், இவர்கள் பல்லாயிரம் பதிலைச் சொல்லலாம். இதைத்தான் நீங்கள் இதுவரையும் நம்பிக் கெட்டீர்கள். இவர்கள் இதுவரை சொல்லாத பதில் அது மே 18. 2009இன் அழிவும், இழப்பும் அதன் பின்னணியுமாகும். காரணம் இவர்களுக்கு மக்கள் போராட்டம் பற்றிய அடிப்படையே தெரியாது. இவர்கள் உங்களிடமிருந்து காசு வாங்குவதற்காக சொல்வதெல்லாம் உண்மையான விடுதலையைப் பெற்றுத் தராது. இப்படியானோரின் அரசியல் - போராட்டம் என்பது பாசிசப் போக்குடன் இனங்களைப் பிரிக்கும். மக்கள் போராட்டங்களை உடைக்கும் - மீண்டும் மீண்டும் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்குத் துணைபோவதே நடக்கும்.

ஆகவே இந்த தமிழ்க் குறுந்தேசிய அரசியலாளரின் போராட்டம் என்பது, மீண்டுமொரு மே16-17-18.2009 போன்ற மாபெரும் இன அழிவையே பெற்றுத் தரும்.

மக்களே..,

சிறிலங்கா பாசிச அரசால் ஒடுக்கி அடக்கப்பட்ட அனைத்து இன மக்களும் இணைந்த, நேர்மையான வர்க்கப் போராட்டத்துக்கு உங்களைத் தயாரிடுங்கள்.

அப்போராட்டமே சிறிலங்கா அரசின் பாசிஸ ஒடுக்குமுறை - அடக்குமுறையைத் தகர்க்கும். பாசிஸத்தை வெல்லும் - ஜனநாயகம் பிறக்கும். அனைவர் வாழ்வும் சிறக்கும்.

மக்களே மீண்டும் மீண்டும் சிந்தியுங்கள்.

--மாணிக்கம். 18/05/2012