Wed09222021

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழர்களின் இன்றைய கையறு நிலைமைக்கு காரணம் சாதி-சாதி மட்டுமே-சாதியைத் தவிர வேறொன்றுமில்லை!

சாதி இப்ப இல்லை. சாதி ஒழிந்துவிட்டது. இப்ப ஆர் சாதி பாக்கினம். சாதியை சொல்லி சொல்லி பிழைக்கினம். அதனைப் பற்றி ஏன் கதைக்கவேணும். பேசாமல் விட்டாலே அது மறைந்துவிடும். இப்படியாக எங்கள் மத்தியில் உரையாடல்கள் இடம்பெற்று வருகிறது. இதனையொட்டி போட்டிக்குப் போட்டி பேட்டிகளும் இதழ்களில், தளங்களில், ஊடகங்களில் ஊற்றெடுத்துப் பாய்கின்றன. அரங்குகளில் கருத்துப் பொறிகள் பறக்கின்றன. சாதி இருக்கு என்போரும், இல்லை என்போரும் வரிந்து கட்டிக்கொண்டு மேடைக்கு மேடை தாவுகிறார்கள். இதுதான் தமிழர்களுக்கு உரித்தான தனிச் சிறப்பு. தமிழர்களின் தனித்துவ அடையாளம்.

சாதி ஒரு மனிதனுக்கு தீமையானது. ஆனால் தமிழர்களுக்கு அது தேவையானது. சாதி மனிதர்களை பிளவுபடுத்தும். ஆனால் தமிழர்களை அது ஒற்றுமைப்படுத்தும். சில இடங்களில் எமக்கு சாதி அவசியம். சில நேரங்களில் சாதி எமக்கு அநாவசியம். சில நேரங்களில் தேவைப்படும் சாதி சில இடங்களில் தேவையற்றது.

பாடசாலைகளில் சம இருக்கை, தேனீர் கடைகளில் உபசரிப்பு, ஆலயப் பிரவேசம், சம பந்திப் போசனம் போன்ற போராட்ட சாதனைகள் சாதியின் தீவிரத்தை குறைத்துள்ளதே யொழிய சாதியின் இருப்பை அசைக்கவேயில்லை.

சாதியினால் பலன் பெறுவோரும் அதனால் பாதிக்கப்படுவோரும் சாதியை தக்க வைப்பதற்கான நடைமுறைகளையே தொடர்ந்தும் பின்பற்றுகின்றனர்.

மனிதர்களாக மாறாத வரை, தமிழர்களாக வாழும் வரை சாதி தொடர்ந்து கொண்டே வரும். சாதி அகல வேண்டுமானால் சமூகக் கட்டுமானம் தகர்க்கப்பட வேண்டும். அதனை நடைமுறைப்படுத்த மனிதர்கள் அரசியலை தங்கள் கையில் ஏந்தவேண்டும். தமிழர்கள் மத்தியில் இருந்து மனிதர்கள் தோன்றாத வரை சாதியற்ற சமூகம் உருவாகவே முடியாது.

தமிழ் (மொழி) அழிகிறது என ஆங்கிலத்தில் படித்துப் பட்டம் பெற்ற தமிழ் கல்விமான்கள் இலங்கையில் இனக்குரோதத்தை வளர்த்ததும் சாதி. விடுதலைப் போராட்டத்தை இனப்போர் ஆக்கியதும் சாதி. அந்தப் போராட்டத்தை வன்னிப் பேரழிவுக்கு வழி நடத்திச் சென்றதும் சாதி.

தமிழர்கள் என்பது சாதி

தனிநாடு என்பது சாதி

இவற்றுக்கான திடமான காரணங்கள், தடயங்கள் நமது இலங்கைத் தமிழரின் வரலாற்றில் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இருந்தும் தமிழராகிய நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.

காரணம் எங்களிடத்தில் உள்ள சுயநலம். பணமென்றால் பிணமும் வாய் திறக்கும் என்று இதனால்தான் நமது முன்னோர் கூறி வைத்துள்ளனர்.

ஊருக்குள் பல சாதி

சாதிக்கு ஒரு ஊர்

சாதிக்கு ஒரு வீதி

சாதிக்கு ஒரு கோயில்

சாதிக்கு ஒரு பாடசாலை

சாதிக்கு ஒரு வாசிகசாலை

சாதிக்கு ஒரு சுடலை

சாதிக்கு ஒரு சவக்காலை

சாதிக்கு ஒரு படகு துறை

சாதிக்கு ஒரு கட்சி

கலப்புத் திருமணம், பொருளாதார வளர்ச்சி, உயர் பதவி, அதிகாரபீடம், இட ஒதுக்கீடு போன்ற திடடங்களால் தமிழர்களின் சாதிப் பொறிமுறை வாழ்வியலை கருவறுத்து விட முடியாது.

சமயங்கள் சாதியின் உற்பத்தி சாதனங்கள். கோயில்கள் சாதியை கட்டிக் காக்கும் கோட்டைகள்.

ஊரில் பிறந்த சாதி உலகம் பூரா பரவிக் கொண்டிருக்கிறது. சமயமும் சாதியும் தமிழர் என்ற நாணயத்தின் இரு முகங்கள் தமிழர் செல்லும் இடமெல்லாம் சாதியும் கூடவே செல்லும். தமிழர் இருக்கும் இடத்தில் சாதியும் குடியிருக்கும். தமிழர் சாதி ஊடாகவே சிந்திக்கிறார்கள். தமிழர் சாதி வழியூடாகவே எதையும் அணுகுகிறார்கள்.

தமிழர் பேச்சிலும், மூச்சிலும, செயலிலும் சாதியே. தமிழர் சமூகத்தில் சாதி பாராட்டாதவன் துரோகி, அதனை வலியுறுத்துபவன் தியாகி.

சாதிப் பிரச்சனை இல்லை என்றால், இலங்கையில் இனப் பிரச்சனையும் இல்லை. மாறாக இனப் பிரச்சனை உண்டு என்றால் தமிழர்கள் மத்தியில் சாதிப் பிரச்சனையும் உண்டு.

வரலாற்றை நடுநிலை நின்று பகுத்தறிவுடன் விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்தால் தமிழ் இனம் என்பதும் தமிழர்கள் என்பதும் ஒரு பெரும் கதையாடல் என்பது புரியும். அதற்கான உறுதியான சான்றாகவே, எமது கடந்தகால தமிழர்களின் அரசியல் வரலாறு அமைந்துள்ளது.

இலங்கையில் தமிழ் என்னும் ஒரு மொழியைப் பேசுகின்ற பல இனக்குழுக்கள் இருந்தன. அவை பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்து- மதித்து, மனிதர்களாக மனித நேயத்துடன் கூட்டுறவு கொண்ட ஒரு மக்கள் தொகுதியாக- பொதுமைப் பண்பு நிறைந்த சமூகமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

அதற்கான வரலாற்றுத் தடயங்கள், திடப்பொருட்கள் வடிவிலும் எழுத்து வடிவிலும் பேச்சு வடிவிலும் தாராளமாக காணப்படுகின்றன.

இலங்கையில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழ்ப் பேசும் பல்லின அதாவது பல சாதி மக்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொரு இனத்து(சாதி)க்கும் தனக்கேயுரிய பாரம்பரிய பிரதேச பண்பாட்டு கலாச்சார இயல்புகள்- மொழி வழக்குகள் (இன்றும்) காணப்படுகின்றன. வரலாற்றுப் போக்கின் ஒரு கால கட்டத்தில் ஆண்ட ஒரு பரம்பரையினர் தமது ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து நிலைநிறுத்த, மக்களை ஏமாற்றி, கட்டுப்படுத்தி, ஆட்சி புரிய கையாளப்பட்ட தந்திரோபாய நடைமுறையின் வெளிப்பாடே தமிழ் இனம் என்ற தமிழர்கள் கதையாடல் ஆகும்.

மேற்குறிப்பிட்ட தந்திரரோபாய நடைமுறையானது ஏற்கனவே இயற்கையின் சக்தியை வழிபட்டு வந்த இனக்குழுக்களை மதம் என்னும் போதையை ஊட்டி சமய சித்து விளையாட்டுக்களைக் காட்டி அவற்றை அடக்குமுறைப் படிநிலை சாதிப் பிரிவுகள் அமைந்த தமிழினம் (தமிழர்கள்) ஆக்கியதாக அமைந்திருந்தது.

இந்தக் கதையாடல் அடிப்படையில் கடந்தகாலத்தில் முப்பது வருடங்களாக நடாத்தப்பட்ட தனித்தமிழ் நாட்டுக்கான இன யுத்தத்தில் இரண்டு லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனுடன் விளைந்த ஏனைய அழிவுகளும் துன்பங்களும் வாழ்வுச் சிக்கல்களும் கணக்கில் அடங்காதவை.

இந்த அனுபவங்களுக்குப் பின்பும் இன்று சாதிவாதம்- சாதிபேதம்- சாதிப்பாகுபாடு என்பவை முன்னரை விட தற்போது எல்லாத் தளங்களிலும் தலைதூக்கி நின்று முனைப்புடன் செயற்படுகின்றன.

தமிழர்களின் தனித்துவத்தை நம்புகிறவர்கள், ஏற்றுக்கொள்பவர்கள், நிலைநிறுத்த செயற்படுகிறவர்கள் அல்லது நிலைநாட்டப் போராடுகிறவர்கள் அனைவருமே சாதிச் சிந்தனை ஊடாகவே அனைத்தையும் அணுகுகிறார்கள்.

தெற்கிலிருந்து வடக்கு நோக்கி இடதுசாரிக் கொள்கைகளை முன்னெடுத்த தமிழர்கள் தங்களுடைய சாதிச் சிந்தனை வழி செய்முறைகள் ஊடாக அவற்றை நடைமுறைப்படுத்த முயன்றதால் சமத்துவ- சமதர்ம- சமூக வாழ்வுமுறையை தாம் சார்ந்த மக்கள் மத்தியில் விருத்தி செய்ய முடியவில்லை.

1920களில் சிங்களத் தலைவர்கள் சுதந்திர இலங்கைக்கு கூட்டாட்சி முறையை வலியுறுத்திய போது அதனை தமிழ்த்தலைவர்கள் நிராகரித்தமைக்கு காரணம் அவர்களது சாதிச் சிந்தனையே.

1930களில் யாழ்ப்பாணத்தில் இலங்கையர் என்ற அடிப்படையில் சுதந்திர இலங்கை கட்டியமைக்கப்படல் வேண்டும் என்று இயங்கிய யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸை இருந்த அடையாளம் தெரியாதபடி தமிழர் தலைமைகள் அழித்துத் துடைத்தெறிந்தமைக்கு காரணம் அவர்களது சாதிச் சிந்தனையே.

1970களிலிருந்து இயங்கியல் ரீதியில் சிங்கள- பௌத்த- பேரினமேலாதிக்கவாத அடக்குமுறைக்கெதிராக தன்னியல்பாக உருவாகி வளர்ந்து வந்த ஆயுதப்போராட்டத்தை (கரையார- வெள்ளாள) முள்ளிவாய்க்கால் வரை நகர்த்திச் சென்றதும் சாதிச் சிந்தனையே.

எமது இந்த சாதிச் சிந்தனைப்போக்கு உலகத்தில் தமிழர்களுக்கெனத் தனித்துவமான ஒரு நீதி-நியாயம்-தர்மம் உண்டு என்பதனை வலியுறுத்தி நிற்கிறது.

ஒருவனுடைய நான் மட்டும், எனக்கு மட்டும் என்ற சிந்தனையே அதாவது சுயநலமே ஒருவர் இன்னொருவரை சுரண்டுவதற்கு மூல காரணமாக அமைந்தது. இதுவே தனது பரிணாம வளர்ச்சியில் சமய தத்துவங்களின் ஊடாக தமிழர்கள் மத்தியில் சாதியத்தை உருவாக்கியதுடன் மட்டுமல்லாது சாதி ஒவ்வொன்றுக்கும் தனித் தனி நீதி- நியாய- தர்ம வரைமுறைகளையும் நடைமுறை வழக்கில் கொண்டு வந்தது.

அது மேலும் ஆழமாகச் சென்று ஒரே சாதிக்கு உள்ளேயும் பிரிவுகளை உருவாக்கி அங்கேயும் தனித் தனி நீதி- நியாய- தர்ம வரைவுகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

மேற்குறிப்பிட்ட விடயங்களை எமது கடந்தகால வரலாற்று, வாழ்வனுபவங்களை ஒரு தடவை இரைமீட்டுப் பார்த்தோமானால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு சாதிக்குள்ளேயே இடம்பெற்ற முரண்பாடுகள், மோதல்களுக்கான தீர்ப்புகள், ஊர் ஊருக்கெதிரான முரண்பாடுகளின் தீர்ப்புகள், சமய முரண்பாடுகளுக்கான தீர்ப்புகள், பிரதேசங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் தீர்ப்புகள், பிராந்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் தீர்ப்புகள் யாவற்றுக்கும் அடிப்படையாக அமைந்த நீதி-நியாய-தர்ம அளவுகோல்கள் வித்தியாசமாக, வேறுபட்டவையாகவே அமைந்திருந்து வருவதைக் காணமுடியும்.

சுதந்திரம் அடைந்த பின் அதன் அரச கட்டமைப்பின் கீழ் அதனுடைய சகல அனுகூலங்களையும் அனுபவித்து வந்த தமிழர் தலைவர்களுக்கு

1. மலையக மக்கள் வாக்குரிமை மறுக்கப்பட்ட கையோடு நாட்டுரிமையும் பறிக்கப்பட்டபோது அது அநீதியாக காணப்படவில்லை

2. கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெற்றபோது அது அநீதியாக தென்படவில்லை.

3. 1971ல் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியின் போது இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் கண்ணில் படவேயில்லை. அவற்றின் மத்தியில் அழகுராணி மன்னம்பெரிய கொடூரமான சித்திரவதைகள்-பாலியல் பலாத்கார வன்முறைகள் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு நிர்வாணமாக வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு பட்டப் பகலில் நட்டநடு வீதியில் வைத்துச் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டது கூட அவர்களது நெஞ்சைத் தொடவில்லை.

4. 1972 முதல் வட-கிழக்கில் பழி தீர்க்கும் கொலைகள் கொள்ளையடிக் கொலைகள் இடம்பெற்றபோது அவைகள் அநியாயமானது, மனித உரிமை மீறல்களுக்கு உட்பட்டது என்றில்லாமல் மறைமுகமாக நியாயமாக்கப்பட்டது.

5. 1978ல் புலிகள் தடைச் சட்டம் அதனைத் தொடர்ந்து வந்த பயங்கரவாத தடைச் சட்டம் முதற் கொண்டு 1983க் கலவரம் வரைக்குமான இடைக்காலத்தில் நடைபெற்ற கொலைகள், கைதுகள், சிறையில் சித்திரவதைகள் முதலியவற்றுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் என்ற அடிப்படையில் செயற்படாமல் அவற்றைத் தங்களின் அரசியல் லாபங்கள் ஆக்கிக்கொண்டிருந்தார்கள்.

6. 1983யூலை இனக் கலவரங்களை அடுத்து கொள்ளை ஆதாரங்களுடனும், கொள்கை அடிப்படையிலும், சாதிப் பார்வைகளுடனும் இயக்கங்கள் கட்டியமைக்கப்பட்டு உள்ளியக்க, பிற இயக்க, பொது மக்கள் கொலைகள் இடம்பெற்றபோது தவிர்க்கமுடியாதவையென நியாயப்படுத்தினோம். உலக பல நாடுகள் சட்டப்படியான கொலைத் தண்டனை முறையை மனித அடிப்படை உரிமைகள் காரணமாக ரத்துச் செய்து கொண்டுவரும் ஒரு கால காலகட்டத்தில் "அவரைப் போடத்தான் வேணும், போட்டாத்தான் திருந்துவினம்" என்ற "தமிழர் நீதியுடன்" கண்டபாட்டில் போட்டுத் தள்ளினோம். போட்டுத் தள்ளுவதற்கான நிதியையும் தாராளமாக வழங்கினோம். இந்த "தமிழர் நீதி" என்பது சாதியின் அடிப்படையிலிருந்தே தோன்றியது.

7. கடந்த மூன்று சகாப்த காலத்தமிழர்களின் தனிநாட்டுக்கான விடுதலைப் போரில் சாதி ஒழிக்கப்பட்டிருந்தது, அடக்கி வைக்கப்பட்டிருந்தது, மறைத்து வைக்கப்பட்டிருந்தது அல்லது தடை செய்யப்பட்டிருந்தது என்றெல்லாம் விளக்கங்கள் தரப்படுகிறது. ஆனால் 1989ல் ரஜனி திரணகம "முறிந்தபனையில்"(பக்.37) கூறியபடிதான, அவ்வாறு சாதிகளை வகைப்படுத்தியோர் மகாபாரதத்தின் புலமை பெற்றிருந்தனர்.

மகாபாரதத்திலே போரில் கொலை செய்யும் மனிதர்கள் "ஷத்திரியர்கள்" என்னும் வர்ணத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர்.

ஆயுதப் போராட்டக்குழுக்கள் பலம் பெற்று வளர்ந்த போதும் அவர்கள் "எங்கட பெடியங்கள்" என அழைக்கப்பட்டாலும், தமிழ்ச் சமுகத்தின் உயர் வர்க்கத்திற்கு அவர்கள் அடிப்படையில் தொடர்ந்தும் ஒரு அந்நியமான சாதிக்குழுவாகவே இருந்தனர்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போராளிகளுக்குப் பொருள் உதவியும் தார்மீக ஆதரவும் அளித்து வந்த உயர்குழாத்தினர் சிலவேளைகளில் மகாபாரதத்தை மேற்கோள் காட்டி "விடுதலை பெற்றுக்கொடுப்பது ஆயுதப்போராளிகளின் விவகாரமாயிருக்கலாமாயினும், ஆளுகின்ற விவகாரம் மூளையும்- கல்வியும் உடையவர்களின் வகையிலேயே இருக்கவேண்டும்" என வெட்கமில்லாமற் கூறுவதை அடிக்கடி கேட்கக்கூடியதாக இருந்தது. மூளையும்- கல்வியும் உடையோர் என்பது வெளிநாட்டிலுள்ள உயர்குழாத்தினரின் பிள்ளைகளையே குறித்தது. ஆயுதப் போராளிகள் இதை அறிந்திருந்தனர். அவர்களுள் அநேகர் பாடசாலைகளில் படித்து வெற்றிகரமாக முன்னேறி பெற்றிருக்க வேண்டிய வாழ்வை தியாகம் செய்தவர்கள். அவர்களால் இதை எவ்விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வன்முறை பற்றிய யாழ்ப்பாணத்தவரின் இரட்டை நிலைப்பாடு ஆயுதப்போராளிகள் பற்றிய இரட்டை நிலைப்பாடாக விரிவடைந்தது.

இதையடுத்து அவர்கள் தம்மைப் பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள் என ஆயுதப்போராளிகள் உணர்ந்தார்கள். அதாவது சாதி நீரோட்டத்துடன்தான் போராட்ட வியூகங்களும், காய் நகர்த்தல்களும், பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டு போரும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதென்பதை ரஜனி போன்ற மனிதர்களால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். ஆனால் "தன் தொழில் விட்டவன் சாதியில் கெட்டவன்" என்று சொல்லி சொல்லி சாதியை தக்க வைத்துக் கொண்டிருக்கும் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

வெளிநாட்டான்- வெள்ளைக்காரன் இலங்கையை ஆக்கிரமித்து நாட்டைக் கட்டி ஆண்ட போதும் சாதியைக் கையாண்டான். அவன் கொடுத்த சுதந்திரத்தையும், சுதந்திர இலங்கையின் அரசியல் கட்டமைப்பையும்; தமிழர்கள் தத்தம் சாதி அளவுகோல்களுடன் வைத்தே ஏற்றுக்கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து மக்களைக் கட்டி ஆள்வதற்கேற்ற அரசியல் செயற்பாடுகளுக்கும் அன்று முதல் இன்று வரை தமிழர்கள் சாதி என்னும் அலகு முறையையே பாவித்துக் கொண்டு வருகிறார்கள்.

யுத்தத்திற்கு முன்பு இருந்த சாதி, யுத்தத்தின் போதும் நின்று பிடித்து யுத்தத்தின் பின்பு இன்றும் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருக்கிறது.

தமிழர்கள் தங்களை மனிதர்களாக, மனிதாபிமானம் உள்ளவர்களாக, மனிதநேயம் பூண்டவர்களாக மாற்றிக் கொள்ளாதவரை சாதி எமது மத்தியில் கொலுவீற்றிருக்கும்.

நீதி- நியாயம்- தர்மம் என்ற விடயம் உலகத்தில் எல்லோருக்கும் ஒரே அளவுகோல் கொண்டது என்பதை தமிழர்கள் உணர்ந்து செயற்படும் வரை சாதி எங்களைப் பிரித்து வைத்து ஆட்சி செய்து கொண்டே இருக்கும்.

தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் சாதியும், சாதி மேலாதிக்க வாதமும், சாதி ஒடுக்குறையும், சாதிப் பாகுபாடும், சாதிக் கண்ணோட்டமும் உள்ளவரை இலங்கையில் இனமேலாதிக்க அரசியலும் இன அடக்குமுறையும் இன அழிப்பும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.