Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கல்வித் தரத்தின் வீழ்ச்சியும் - சமூகத்தின் பொது அறியாமைகளும்

அண்மையில் ஜீ.சி.ஈ (சாதாரண) பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, வடகிழக்கு கல்வித்தரம் குறித்து பலர் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த கல்விப் பெறுபேறுகளை கொண்ட மாவட்டங்களாக, வடகிழக்கு இருப்பதே இதற்கு காரணம். ஓப்பீட்டு அடிப்படையில் காரணங்களை முன்வைப்பதும், தீர்வுகள் முன்வைக்கப்பட்டதையும் காணமுடிகின்றது. ஒட்டுமொத்த கல்வி மற்றும் சமூகம் குறித்த பொது உள்ளடக்கத்தை விட்டுவிட்டு, இவை வெளிப்புறத்தைப் பற்றி பேசுகின்றனவாக இருக்கின்றன.


இப்படி கல்வியின் வீழ்ச்சி குறித்து அடிப்படைக் கண்ணோட்டமே, தவறான புள்ளியில் இருந்து ஆரம்பிக்கின்றது.


1.கல்வியின் வீழ்ச்சிக்கு சமூகத்தின் பங்கு என்ன என்பதை ஆராய்வது பொதுவாக மறுதளிக்கப்படுகின்றது. மாறாக சமூகத்தைச் சுற்றி இயங்கும் உதிரிச் சம்பவங்களை காரணமாகக் காட்ட முனைகின்றனர்.


2.கல்வியை மாவட்டரீதியாக பகுத்தாய்வு செய்வதென்பது, சொந்த இனவாதக் கண்ணோட்டத்தில் இருந்துதான். இது கல்வி வீழ்ச்சி குறித்த புரிதலில், குறைபாட்டைக் கொண்டது. இதன் மூலம் கல்வி சுயநலம் சார்ந்தாக, பணம் சம்பாதிப்பதற்கானதாகிவிட்டதை மூடிமறைக்க முனைகின்றது.


3.மாவட்டரீதியான ஒப்பீடுகள் மூலம் கல்வித்தரத்தை அணுகுவது என்பது, கல்வி குறித்த பொது அடிப்படை நோக்கங்கள் சரியானதாக இருக்கின்றது, சம்பவங்களும், தனி மனிதர்களுமே காரணம் என்று நிறுவ முனைகின்றனர்.


4.ஒருசில துறையில் வெற்றி பெறும் கல்விமுறைமையும் - கற்றல் முறையும், விரல்விட்டு எண்ணக் கூடியவரை உருவாக்குவதை இலக்காகக் கொண்டதே கல்விமுறையாக இருக்கின்றது. இதை அடையும் போட்டிக் கல்வியும் - மனப்பாடமாக்கும் கல்விமுறையையும் அங்கீகரிக்கும் வண்ணமே, ஓப்பீட்டு ரீதியாக அணுகுமுறைகளும் - தீர்வுகளும் முன்வைக்கப்படுகின்றது.


இப்படி இங்கு கல்வி வீழ்ச்சி குறித்து ஆராயும் சிந்தனை முறையே தவறாக இருக்கும் போது, கல்வி பொது வீழ்ச்சியையும், அதன் காரணத்தையும் ஆராய முடியாது. வெறுமனே பிறரைக் குற்றம் சாட்டி, மாணவர்கள் மீதான அதிகாரத்தைக் கோருவதாகவே இருக்கின்றது.


இந்தப் பின்னணியில் இருந்தே அண்மையில் கல்வி வீழ்ச்சி குறித்த காரணங்களாக பலவற்றை முன்வைக்கின்றனர். உதாரணத்துக்கு "போர், கணித விஞ்ஞான ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறை, அர்ப்பணிப்பில்லாத ஆசிரியர் அதிகாரிகளின் பங்களிப்பு, மூளைசாலிகளின் வெளியேற்றம்.. என்பன எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள். இங்கு குறிப்பிட்ட 10ம் முக்கியமானவை. இவற்றிற்கு என்ன தீர்வு என்பதையும் இங்கு குறிப்பிடுங்கள். இந்த 10ல் பல, வேறு மாகாணங்களுக்கும், ஏன் வேறு நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால் இவற்றின் தாக்கத்தை ஓரளவுக்கு அங்கு பெற்றோர், சமூக நிறுவனங்கள், அதிகாரிகள், அரசாங்கம் மூலம் கட்டுப்படுத்துவதால் வெற்றியடைகின்றனர். உங்கள் பரிந்துரைகளையும், ஏற்கனவே சில சமூக நிறுவனங்கள், சமூகசேவையாளர்கள், சமுதாய மருத்துவர்கள் செய்யும் உளவள மேம்பாட்டு திட்டங்களையும் சேர்த்து ஒன்றை வெளியிடலாம் என்று நினைக்கிறோம். தயவுசெய்து உங்கள் பரிந்துரைகளை இலக்கம் போட்டு எழுதுங்கள்.


1.கண்டிப்பு அற்ற பிள்ளை வளர்ப்பு 2.சின்னத் திரைகளுக்கு அடிமையாகிப்போன பெற்றோர். 3.சுதந்திரமான (வடிகட்டல்கள்) இல்லாத இணையப் பாவனை. 4.திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட போதை வியாபாரம். 5.பாடசாலை ஆசிரியர்களை கேலிசெய்யும் தனியார் கல்வி நிறுவனங்கள்.
6.சட்டத்தை மதிக்காத பொலிசார் (லஞ்சம்). 7.சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் வயதுக்கட்டுப்பாட்டில் சட்டரீதியான தளர்வு. 8.இளவயதுத் திருமணங்களின் அதிகரிப்பும் அதன் விளைவாக பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையேயான வயதில் காணப்படும் இடைவெளி குறைதல் 9.பயனற்ற (பார்வையாளர்களை சோம்பேறிகளாக்கும்) துடுப்பாட்டமும் அதன்மீது மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மோகமும். 10.வெளிநாட்டிலிருந்து வருவோரின் பகட்டுவாழ்வுக் காட்சிகள்" இதைவிட வேறு சிலர் "11.கல்வியின் பெறுமானம் குறைவுபடல். 12.பெற்றோர்களின் விழிப்புணர்வு இன்மை. 13.பிள்ளைகள் பயமின்மை." இப்படி பற்பல.


இப்படி முன்வைக்கும் காரணங்கள், கடந்த தலைமுறையில் இல்லாதவொன்று, இந்த தலைமுறையில் இருப்பதால், அதைக் காரணமாகக் காட்ட முற்படுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி தொடங்கி வாழ்க்கையையொட்டிய புதிய மாற்றங்களைக் காரணமாக காண்பதும், அதைத் தடுத்து நிறுத்தினால் மாவட்ட ரீதியாக கல்வி முன்னேற முடியும் என்பதே பொதுவான உள்ளடக்கமாக இருக்கின்றது. இது தவறானது. கல்வி மற்றும் சமூகத்தின் மையமான உள்ளடக்கத்தை மறுதளிக்கின்றது.


இன்று கல்வியும், கற்பித்தலும் வியாபாரமாகிவிட்டது. கற்பித்தல் என்பது கூலிக்கு மாரடிக்கும் தொழிலாகிவிட்டது. கற்றல் வெறும் பெறுபேறுகளாகிவிட்டது. கற்றல் - கற்பித்தல் சுயநலன் சார்ந்ததாகி, கல்விச் சமூகம் பொதுவான வீழ்ச்சியைச் சந்திக்கின்றது. ஏன் கற்க வேண்டும் என்று ஒரு மாணவனின் தெரிவும், பெற்றோரின் நோக்கமும், ஆசிரியர்களின் வழிகாட்டலும் சுயநலமாகக் குறுகி, பணம் சார்ந்ததாகிவிட்டது.


சமூகநோக்கு செயற்பாடுகளால், எனக்கு என்ன கிடைக்கும் என்ற அளவில் சமூகம் குட்டிச்சுவராகி இருக்கின்றது. வடகிழக்கு சமூகமே, மோசமான வகையில் சீரழிந்திருக்கின்றது. சில பாடசாலைகள் வருடாந்தம் ஒரு கோடி வரை பணத்தை கையாளும் நிதிநிறுவனங்களாகி வருகின்றது. பரீட்சைப் பெறுபேறுகள் கூட இந்தப் பணத்தை திரட்டுவதற்கான, முதலீடாக பார்ப்பதும், பெறுபேறைக்கொண்டு உதவுவதுமாக "கல்வி" குறித்த சமூகப் பார்வைகள், கல்வியை மேலும் சீரழிக்கின்றது. பரீட்சைக் கல்வியில் வென்றவரை பணத்தைக் கொண்டு குளிப்பாட்டும் வியாபார உணர்வே "சமூக" உணர்வாகி, பணம் கல்வியாகின்றது. பணத்தைக் கொண்டு "அம்மாவை" வாங்கும் மனநிலை, பணத்தைக் கொடுத்தால் கல்வி செழிக்கும் என்று கருதுமளவுக்கு, சமூகத்தின் கண்ணோட்டம் கல்வி வீழ்ச்சிக்கான பொது அடிப்படையாக மாறி இருக்கின்றது.


கல்வி வீழ்ச்சி என்பது, சமூகத் தன்மையற்றுப் போவதன் விளைவே


கல்வியின் பின்னடைவு என்பது சமூகத்தின் விளைவுகளே ஒழிய, தனித்தனிக் காரணங்களோ, தனிமனிதனின் நடத்தையோவல்ல. தனித் தனிக் காரணங்கள் எப்போதும் தனிப்பட்ட நபர்களை பாதிக்குமே ஒழிய, ஓட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்காது. தனிமனிதனோ, தனித்;தனி காரணங்களோ, சமூகத்தின் பொதுக் கண்ணாடியாக ஒரு நாளும் இருப்பதில்லை.


இங்கு நாம் கல்வி குறித்து பேசுவது, தனிப்பட்ட மாணவன் பற்றியல்ல, ஒட்டுமொத்த கல்வி சமூகத்தின் வளர்ச்சிக்கு எது தடையாக இருக்கின்றது என்பது குறித்துத்தான். இங்கு தடையாக இருப்பது தனித்தனிக் காரணங்கள் அல்ல. ஓட்டுமொத்த சமூகத்தின் பொதுவான மனிதசாரம் முன்னோக்கி நகர்ந்தால், சமூகத்தின் எல்லாத் துறையும் வளர்ச்சிபெறும்.


இங்கு மனிதசாரம் என்பது தனித்தனி மனித வளர்ச்சியல்ல, மனிதனின் கூட்டு வாழ்க்கை முறையின் வளர்ச்சியைக் குறிக்கின்றது. கூட்டு வாழ்க்கை முறையின் வீழ்ச்சி என்பதன் பொருள், சுயநலம் கொண்டதாக மாறுவது தான். இங்கு ஓட்டுமொத்த சமூகத்தின் எல்லாக் கூறுகளும் பின்னடைவைச் சந்திக்கும். இதைத்தான் கல்வி சந்திக்கின்றது.


இதை இலகுவாக விளங்கிக்கொள்ள, புலம்பெயர் சமூகத்துடனான இலங்கை உறவுகள் (தாய் தந்தை முதற் கொண்டு), வெறும் பண உறவுகளாக மட்டும் குறுகி இருப்பதையும், பணம் அல்லாத இரத்த மற்றும் சமூக உறவுகள் சமூகத்தில் அருகி வருகின்றது. இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது, இதுவே அனைவரினதும் பொது அனுபவமும் கூட.


சமூகம் குறித்த பொது அக்கறை கூட, என்ன லாபம் என்பதில் இருந்து ஆரம்பிக்கின்றது. கல்வி கற்கும் குழந்தைக்கும் சமூகத்துக்குமான (தாய் தந்;தை உட்பட) உறவு சுயநலம் சார்ந்ததாகவே மாறி, சமூகப் பொறுப்பற்ற சமூகத்தை தோற்றுவித்து இருக்கின்றது. சமூகப் பொறுப்பற்ற சமூகத்தினதும், குழந்தைகளின் சிந்தனைமுறையின் வீழ்ச்சியுடன் - தனது சக மாணவனுடன் போட்டி போடும் கல்விமுறையால் குழந்தை விரக்தி அடைகின்றது. தனக்கு இந்தக் கல்வியால் என்ன லாபம் என்று சிந்திக்கும் சுயநலம், கற்பதில் ஆர்வத்தை இல்லாதாக்குகின்றது.


இங்கு சமூகம் குறித்த பொது அக்கறையில் ஏற்படும் வீழ்ச்சி, கல்வியில் தோல்வியாக மாறுகின்றது. வாழ்க்கை சுயநலம் கொண்டதாக, பணத்தை குறிக்கோளாகக் கொண்டதாக, சமூக அறங்களற்ற சமூகமாகி, கற்றல் - கற்பித்தல் கூட சுயநலன் சார்ந்ததாக குறுகிவிடுகின்றது.
இது வடகிழக்கில் மிக மோசமான சமூக மனநிலையாக உருவாகி இருக்கின்றது. யுத்தத்தினை காரணமாக காட்டுவதன் மூலம், சமூகம் தப்பிச் செல்லவே முனைகின்றது. யுத்தம் சார்ந்த பொருளாதார இழப்புகள், உளவியல் சிதைவுகள்.. இதை தீர்மானிப்பதை விட, சுயநலமற்ற சமூகத்தின் கூட்டுமனப்பாங்கை அழித்த கடந்தகால அரசியல் போக்குதான், வடகிழக்கின் பொதுவான வீழ்ச்சிக்கு காரணமாகும்.


அதாவது சமூகத்தின் பொதுக் கூறுகளாக இருந்த சுயநலமற்ற கூட்டு வாழ்க்கை முறைமைகள், அது உருவாக்கிய மனித அறங்கள், எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் சமூக அக்கறை .. என்பன அழிந்ததன் மூலம், சமூகத்தின் பொது அறம் அழிந்திருக்கின்றது. தனிநபர்pன் சுயநலமே, சமூக உறவாகி இருக்கின்றது. உழைத்து தன்மானத்துடன் வாழும் சமூகப் பண்பு அழிந்து, உழையாது எப்படி வாழ்வது என்ற சுயநலப் பண்பு, சமூகத்தை குட்டிச்சுவராகி இருக்கின்றது.


இன்று கல்விக்கான சமூக உதவிகள் முதல் கல்வி குறித்து அக்கறைப்படும் சமூக அக்கறையாளர்கள் கூட, சமூக அறமற்ற சுயநல சமூகமாக சமூகம் இருப்பதை கேள்விக்குள்ளாக்குவதில்லை. சுயநலத்திற்கும், தனிமனித முன்னேற்றத்துக்கும் பதில், சமூகத்தின் கூட்டுமனப்பாங்கை உருவாக்கக் கூடிய கல்வித் திட்டங்களை முன்னோக்காகக் கொண்டு, சமூகத்தை மீள கட்டியமைக்கும் முன்னோக்கு திட்டங்களைக் கொண்டு தான், சமூகப்பொறுப்புள்ள புதிய தலைமுறையை உருவாக்க முடியும். சமூகப்பொறுப்பை கல்வி முறையில் கொண்டு வரும் போது தான், கற்றல் என்பது இயல்பாக வளர்ச்சிபெறும்.


அதிபர்கள், ஆசிரியர்கள்.. முன்மாதிரியாக கல்வியை ஒரு சமூகப் பணியாக முன்னிறுத்தி, அதற்காக உழைக்காத வரை, மாணவ சமூகத்திற்கு முன்னோடிகளாக யாரும் இருக்கப் போவதில்லை. சமூக அக்கறையாளர்கள் இதை நோக்கி சிந்திக்காத வரை, மாற்றம் நிகழப்போவதில்லை.