Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தற்போதைய அரசியல் சூழ்நிலையை விளங்கிக் கொள்வதற்காக ஒரடி முன்னால்

தனிநபரொருவரின் ஏக அதிகாரங்கள் அதவாது நிறைவேற்று ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரங்கள் மற்றும் அவரது குடும்ப, உறவினர் நலன்சார்வாதம் என்பவற்றால் கட்டமைக்கப்பட்ட மஹிந்த ஆட்சியின் சர்வாதிகாரத்திலிருந்தும் நாட்டின் மீதான வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்தும் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான கருத்தாடலை நோக்கி இலங்கை மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாமே என பிரகடனப்படுத்திக் கொண்டு, தனிநபர் படுகொலை, சாதாரண மக்களை பலி எடுத்தல் போன்ற தவறாக வழி நடத்தப்பட்ட போராட்ட தந்திரோபாயங்களை முன்னெடுத்தப் போதும் 2009 மே வரை அரசிற்கு எதிராக ஆயுத நடவடிக்கைகளை முன்னெடுத்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை வெளிநாட்டுச் சக்திகளின் கூட்டு ஒத்துழைப்புடன் தோற்கடித்த மஹிந்த அரசாங்கத்தின் இராணுவ வெற்றிவாதத்தினால் மக்களின் கவனத்திற்குரிய விடயம் தொடர்பான விவகாரங்கள் பலவீனமான தன்மை மேலும் மோசமடைந்தது.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கான 18வது திருத்தச் சட்டம், அவ்வரசியலமைப்பின் 13ம் திருத்தத்தினால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை நீர்த்துப்போக செய்வதற்கான சட்டங்கள், மற்றும் கொடூரமான அடக்குமுறைச் சட்டங்களையும் நிறைவேற்றியதன் மூலம் பாராளுமன்ற சட்டவாக்கத்தை துஷ்பிரயோகம் செய்தது மட்டுமன்றி பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை நிறைவேற்றியதன் மூலம் நீதித்துறையை - 'நீதித்துறை இயங்காற்றலியத்தை' தாக்கும் நடவடிக்கைகளையும் மஹிந்த அரசு மேற்கொண்டது.இவை மக்களுக்கு வெளிப்படையாக தெரிந்த உதாரணங்களில் சிலவாகும்.

சிவில் நிருவாகம் என்று சொல்லப்படுகின்றவற்றிலும் இராணுவ மேலாதிக்கம் நிலை நாட்டப்பட்டுள்ளது. இதனை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிகவும் வெளிப்படையாகக் காணலாம்.அதாவது இராணுவப் படை மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் தனது கட்டுப்பாட்டை செலுத்தும் அதேவேளை, தனிப்பட்ட உடைமைகள் (வீடு,காணி) மீது கட்டுப்பாட்டை நிலைநாட்டி அவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அவற்றிலிருந்து வெளியேறாது பலவந்தமாக கையகப்படுத்தி நிலை கொண்டுள்ளது.

மேலும், வடக்கில் இலங்கை அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கிய அதே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சர்வதேசம் யுத்த குற்றத்துக்கான சர்வதேச விசாரணைக்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் புலம்புகிறது. இப்பிரச்சினை தற்போது ஏகாதிபத்திய அடிக்கட்டுமானமானத்திடம் (பொருளாதாரத்தை) ஏகாதிபத்திய நவதாராளவாத்திடம் சரணடைந்துள்ள மஹிந்த ஆட்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குமிடையிலான நேரடியான கயிறிழுப்பாகி இருக்கின்றது. எனினும் அதிகளவில் நவபழைமைவாதத்தை கொண்ட இன்றைய ஆட்சியின் தலைமையிடம் நல்லாட்சி, மனித உரிமை மற்றும் இன்னபிறவற்றில் ஏகாதிபத்திய அடிகட்டுமானத்துடன் - அதாவது நவதாராளவாதத்துடன்; மோதல் நிலவுவதுடன், அதன் போலித்தனமான ஏகாதிபத்திய எதிர்ப்பை கொண்டு உள்ளூரில் துரும்புச்சீட்டாக பயன்படுத்தி அரசியல் நகர்த்தப்படுகிறது.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் அறிமுகம் செய்த நாளில் இருந்து பயங்கரவதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிரான நடவடிக்கைகள் என்ற போர்வையில் அல்லது அதன் பேரால் பல வழிகளிலும் அரச அதிகாரமானது முறையாக மத்தியத்துப்படுத்திள்ளது. இந்த நடவடிக்கைகளை, தமிழ் மிதவாதிகள் உட்பட ஆயுத குழுக்களின் நடைமுறைகள், கோரிக்கைக்கும் போராட்டத்திற்கும் எதிரான கருத்தின் காரணமாக பெரும்பாலும் பெரும்பான்மை சிங்கள மக்கள் பெருமளவில் சகித்து ஜீரனித்து கொண்டுள்ளனர். இதனூடாக சிங்கள பௌத்த அரசும் சக்திகளும் சௌகரியமான முறையில் அக்கருத்து மேலாண்மையை நிலைநிறுத்தியிருப்பதுடன், தமிழ் மிதவாத மற்றும் ஆயுத குழுக்களின் கோரிக்கை மற்றும் போராட்டங்களின் தவறான வழிநடத்தலுடனான பாரிய தவறுகளை அடிப்படையாக கொண்டு அவை சிங்கள தேசிய இனத்தின் இருப்பிற்கும் பாதகமானது என்ற கருத்து மேலாண்மை நிலை நாட்டப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கையர்களின் மீதும் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும் அதனை தக்கவைக்கவும் சிங்கள ஆளும் வர்க்கங்கள் அதன் தொடர்ச்சியான ஜனநாயக விரோத செயற்பாடுகளை நியாயப்படுத்த பயங்கரவாதம் பிரிவினைவாதம் என்பவற்றை தப்பும் வழிகளாக கொண்டன.

இப்பின்புலத்தில், சுதந்திரத்துக்கு முன்னரான காலத்தில் (1948ற்கு முன்) சிங்கள முதலளித்துவ தலைமையினது வகிபங்கானது சுதந்திரத்திர போராட்ட இயக்கங்களில் சமரசத்திற்கும் பிளவுப்படுத்தலுக்கும் இட்டுச் செல்வதாக இருந்தமை விளங்கிக்கொள்ள வேண்டும். எனவேதான் அவர்கள் இலங்கையின் அனைத்து தேசிய இனங்களையும் ஐக்கியப்படுத்த தவறினர். முதலாளித்துவ முறையில் எங்குமே நிலவும் தவிர்க்க முடியாததாக உள்ள தேசிய இனங்களை ஒடுக்கும் காரணியானது இலங்கையில் மிகவும் வெற்றிகரமாக செய்யப்பட்டதுடன், பிரித்தானிய கொலனித்துவவாதிகளிடம் இருந்து உள்நாட்டு (சிங்கள) முதலாளிகளுக்கு அரசியல் அதிகாரம் மாற்றப்பட்ட பின்னரும் பொருளாதார அபிவிருத்தி நெருக்கடிகளும் அதேபோல் சமூக பொருளாதார பாரபட்சங்களும் தொடரலாயின.

இக்காரணிகளினால் அடக்கப்படும் தேசிய இனங்களின் மத்தியிலிருந்து குறிப்பாக இலங்கை தமிழ் தேசிய இனத்தின் மத்தியில் எதிர்வினைகள் தோன்றின. இதன் விளைவுகளின் உச்சத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் தனியான அரசு ஒன்றை அமைக்கும் கோரிக்கையை நோக்கி வளர்ச்சியடைந்தது. இவ்வெதிர்வினை முஸ்லிம் மற்றும் மலையக தமிழர்களிடையே அதேவகையில் எழாத போதும் இன மற்றும் மத தேசியவாத அடிப்படையிலான கட்சிகள் தோன்ற வழிவகுத்ததுடன் அது இலங்கையர்களின் ஐக்கியத்தை மேலும் மோசமாக்கியது.

இலங்கை தமிழர்களின் தனி அரசிற்கான கோரிக்கையின் உச்ச கட்டமாக தமிழ் இளைஞர்களின் ஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது. இதற்கு சிங்கள தேசியஃ பேரினவாத ஆளும் வர்க்கங்கள் அரச பயங்கரவாதம், இராணுவ நடவடிக்கைகள், அல்லது தமிழ் மக்கள் மீதான போரின் மூலம் பதிலளித்தனர். இதன் இறுதி விளைவாக விடுதலைபுலி உறுப்பினர்கள், அந்த அமைப்பின் அனுதாபிகளுடன் தமிழ் மக்களின் கோரிக்கைக்கான நேர்மையான ஆதரவாளர்களும் அரச பயங்கரவாதம் பலி கொண்டதுடன் இறுதியாக பல ஆயிரம் சாதாரண மக்களும் தங்கள் உயிரை இழக்கும் அவலத்திற்கு வழிவகுத்தது.

இந்த பின்னணியில் எல்லா தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினரின் உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதுடன் தேசிய இனங்களுக்கிடையிலான இடைவெளியும் மேலும் அகலமாகியுள்ளது.

இலங்கையின் ஆளும் வர்க்கங்களின் தற்போதைய தலைமைக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான நேரடி முரண்பாடுகள் இலங்கை மக்களின் முக்கிய கரிசனைக்கு உட்படும் மற்றொரு விடயமாகும். இது முடிவில் அனைத்து இலங்கை மக்களையும் ஏகாதிபத்தியத்தின் தாக்கத்திற்கு வழிவகுப்பதுடன் இறுதியில் அனைவரையும் பாதிப்பிற்குள்ளாக்கும்.

இந்த சுருக்கமான விளக்கத்திலிருந்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் பிரச்சினை அல்லது தமிழர் பிரச்சினை இன்று முக்கிய பிரச்சினையாக முன்தள்ளப்பட்டுள்ளதுடன் அரசியல் சுதந்திரத்தை மறுக்கும் பிற்போக்குவாதம், பாசிசம் மற்றும் சர்வாதிகாரம் ஊட்டப்பட்டுள்ளமையை அதனை மையப்படுத்தியதாக இருக்கிறது அல்லது ஊட்டப்பட்டமையை நியாயப்படுத்துவதற்காக முன்தள்ளப்பட்டுள்ளது. எனவே, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் குறிப்பாக இலங்கைத் தமிழருக்கான சுதந்திரம் இன்றி இலங்கையில் அனைவருக்குமான சுதந்திரம் என்பது சக்தியற்றதாகும். தமிழர் போராட்டமானது ஆழ வேர்கொண்டுள்ள கொலனித்துவ ஏகாதிபத்திய எதிர்ப்பு இயல்புடைய ஜனநாயக புரட்சிக்கான அடிப்படைகளில் ஒன்றாக உள்ளது. எனவே அது அனைத்து இலங்கையர்களுக்குமான உடனடி உபாய அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். தேசிய ஜனநாயக கோரிக்கை மற்றும் அடையாள அரசியலுக்கு வரையறுக்கப்பட்டிருப்பதற்கும் அப்பால் தமிழர் தேசிய பிரச்சினையானது இலங்கை அரசாங்கத்தின் புலிகள் இயக்கத்தின் மீதான வெற்றி மற்றும் தமிழ் மக்களின் சமூக கட்டமைப்புகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலமும் அப்பிரச்சினையின் வர்க்க அடிப்படையை இலங்கை அரசாங்கம் மேலும் நிலைநிறுத்தியுள்ளது.

சுதந்திரத்துக்கு முன்னைய காலப் பகுதியிலிருந்து தற்காலம் வரையில் தமிழ் தேசிய பிரச்சினையை அல்லது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் பிரச்சினையை அதன் விருத்தியின் மட்டத்தினை அதே அடிப்படையில் விளங்கிக்கொள்ளாதவிடத்து இலங்கையின் தற்போதைய சூழ்நிலை பற்றி சரியாக விளங்கிக்கொள்ள முடியாத அதேநேரம், தமிழ் தேசிய பிரச்சினையையும் விளங்கிக்கொள்ள முடியாது.

இது தேசிய இனங்களுக்கான பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொள்ளாத இடதுசாரிக் கட்சிகள் எனப்படுபவைகள் மீதான விமர்சனமுமாகும். மறுபுறம் மஹிந்த ஆட்சியில் கூட்டணியாக உள்ள சமூக ஜனநாயக – சீர்த்திருத்த கட்சிகள் தேசிய பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொண்டபோதும் தேசிய பிரச்சினைக்கான தீர்வினை மஹிந்த ஆட்சியில் கண்ணாடியூடாக அதற்கான தீர்வை பார்;க்கும் வகையில் தங்களை வரையறுத்திருக்கின்றனர். இது இவர்களின் சமூக பேரினவாதத்தின் விளைவான தேசிய பிரச்சினை பற்றி கொண்டுள்ள பிழையான நிலைப்பாடாகும். இந்த சமூக பேரினவாதமானது சிங்கள பௌத்த பெரும்பான்மை தேசிய பேரினவாதத்துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவியோ அல்லது வலுப்படுத்தியோ உள்ளது. அத்தோடு சில சமூக பேரினவாதிகள் தேசிய பிரச்சினை இருப்பதை நிராகரிப்பதுடன், மறு புறமாக பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொள்ளுமிடத்து தேசங்கள் மற்றும் தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை மற்றும் தன்னார்வமானதும் சகோதரத்துவானதுமான உடன்பாட்டுடனான பரஸ்பர நம்பக்கையுடன் அனைத்து தேசங்களையும் தேசிய இனங்களையும் ஐக்கியப்படுத்தகூடிய அதன் வளர்ச்சி மிக்க பிரயோகத்தினால் தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை நிராகரிக்கிறனர். நாணயத்தின் இரு பக்கங்கள் போல் பிரிந்து செல்லுவதனையும்; ஐக்கியப்படுத்தலையும் உள்ளடக்கிதாக சுய நிர்ணய உரிமை இருப்பதனை அவர்கள் காண மறுக்கின்றனர்.

அதேவேளை முதலாளித்துவ சக்திகளின் பாசிச சிங்கள பௌத்த நவபழைமைவாத தலைமைக்கு எதிரான தமிழ் முதலாளித்துவ கட்சிகளின் குறுந்தேசிய நிலைப்பாடும் அதேபோல் தனிமைப்படுத்தப்பட்ட சில அதி தீவிர இடதுசாரிகளின் சொல்லுக்கு சொல் பதில்கூறும் தன்மை தனிமைப்படுத்தப்பட்டதாவும் பொருளாற்றவைகளாகவும் இருக்கின்றமையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எவ்வாறாயினும், சோவியத் மற்றும் சீனாவில் புரட்சிக்கு முந்திய காலகட்டங்களில் நிலவியது போலல்லாது, இலங்கையின் தேசியப் பிரச்சினையானது முதலாளித்துவ ஜனநாயக கட்டமைப்பிற்குள் முக்கிய ஜனநாயக பிரச்சினையாக உள்ளது.

சர்வதேச நிலைமை

சர்வதேச நிலைமை பற்றிய எந்த பகுப்பாய்வும், ஒருபுறம் மிகவும் சிறு எண்ணிக்கையினரை பணக்காரர்களாகவும் மறுபுறம் பல நூறு மில்லியன் மக்களை வறுமை நிலைக்கும் ஆக்கியுள்ள முதலாளித்துவத்தின் உச்சகட்டமான ஏகாதிபத்தியம் பற்றிய கருத்தாடலின்றி முழுமை பெறாது. ஏகாதிபத்தியமானது உலகின் ஏக பெரும்பான்மை மக்களுக்கு சமத்துவத்துக்கான உரித்தினை மறுப்பதனூடாக முழு உலகிலும் தொடர்ந்து உற்பத்திச் செயன்முறையின் நன்மைகளை தொழிலாளர்களிடமிருந்து அந்நியமாக்கியுள்ளது.

முதலாளித்துவத்திற்கு முன்னரான கொலனியம், முதலாளித்துவ யுகத்தில் புதிய வடிவத்தை எடுத்துள்ளது. முதலாளித்துவத்தின் விருத்தி ஒரு ஆட்புலத்தில் ஃ பிரதேசத்தில் பலமாக இருந்து தனது ஆட்புலத்திற்கு வெளியே உலகம் தழுவிய ரீதியில் மூலப்பொருட்களையும், வளங்களையும் கொள்ளையிடுவதற்கு உத்தரவாதம் வழங்கியதுடன் பலமிக்க நாடுகள் பலவீனமான நாடுகளை கொலனிகளாக ஆக்கிரமிக்க தள்ளியது. 1930, 40களில் கொலனியவாதத்தின் நெருக்கடிகளின் காரணமாகவும் தேசிய விடுதலை இயக்கங்களின் போராட்டங்களினாலும் இரண்டாம் உலக யுத்த விளைவுகளாலும் கொலனித்துவத்திலிருந்து விடுவித்தல் துரித கதியில் நடைபெற்றதுடன் 1960களில் பெரும்பாலான கொலனிகள் நேரடி கொலனித்துவ பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டன.

1940களின் பின்னர் புதிய வகை கொலனித்துவத்தை எற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை அமெரிக்கா பெற்றுக்கொண்டது. கொலனித்துவவாதிகள் அல்லது ஏகாதிபத்தியவாதிகளுக்கிடையிலான முரண்பாடுகளை கொலனித்துவத்திலிருந்து நாடுகளை விடுவிப்பதன் மூலம் அமெரிக்கா தீர்க்கவும் தேசிய விடுதலை இயக்கங்களினது சவால்களுக்கும் சோவியத் ஒன்றியத்தினால் தலைமை தாங்கப்பட்ட சோசலிச முகாமினது சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி இருந்தது.

புதிய ரக கொலனித்துவத்தை – வேறு நாட்டின் ஆள் புலத்தை நேரடியாக ஆளுகை செய்யாது – தாபிப்பதற்கான முதல்படியாக, ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே 1944ம் ஆண்டு ப்ரெட்டண்வூட் உடன்படிக்கை (Brettenwood agreement) செய்து கொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கையின் விருத்தியோடு உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் தாபிக்கப்பட்டன. இது நிதி மூலதனத்தின் மீது அமெரிக்க கட்டுப்பாட்டைப் பெறவும் உதவிகள் கடன்களை வழங்கி ஏனைய ஏகாதிபத்திய நாடுகளின் மீதும் செந்நெறி பழையபாணி கொலனித்துவத்தின் நேரடியான பிடியிலிருந்து ஏற்கனவே விடுபட்ட நாடுகளின் மீது நிதி மேலாண்மையை நிலைநாட்ட முடியுமானதாக்கியது. தீர்வை மற்றும் வர்த்தகங்கள் என்ற துறைகளை உள்ளடக்கி பல சர்வதேச மற்றும் பிராந்திய உடன்படிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.

பழைய முறையிலான கொலனித்துவ இயங்குமாதிரி நாடு கடந்த கம்பனிகளினூடாகவும் (transnational companies), பின்னர் பல்தேசிய கம்பனிகளினூடாகவும் (Multinational Companies) உலக கட்டுப்பாட்டிற்காக மாற்றீடு செய்யப்பட்டதுடன்; பின்னர் உழைப்பு, இயற்கை வளங்கள், மூலபொருட்கள், விஞ்ஞானம், தொழிநுட்பம், மூலதனம், சந்தை என்பவற்றின் மீது பல்தேசிய கம்பனிகள் உலக கட்டுப்பாடாக மாற்றீடு செய்யப்பட்டன. அமெரிக்கா, நேட்டோ போன்ற இராணுவ உடன்படிக்கைகளையும் செய்துகொண்டு, புதிய ரக கொலனித்துவ கொள்கையின் இடரற்ற இருப்புக்காக ஏனைய நாடுகளை இராணுவ ரீதியாக கட்டுப்படுத்த ஏகாதிபத்திய இராணுவ கூட்டுகளை தாபித்திருககின்றன. இது ஏனைய அரசுகளுக்கு எதிராக அதன் மக்கள் மேற்கொள்ளும் போராட்டங்களில் ஊடுருவி கையாளுவதுடன் எதிர்ப்பு இயக்கங்களில் தலையிட்டு அதன் இலக்குகளை திசை திருப்பிவிடுகிறது.

இந்த புதிய ரக பொருளாதார (தாராள அல்லது திறந்த) கொள்கைகள் இராணுவ ஆளுகை (military stratocracy) என்பன சோசலிச சக்திகளுக்கும் விடுதலை இயக்கங்களுக்கும் நேரடி சவாலாக அமைந்திருக்கின்றன.

இந்த நவகொலனித்துவ செயன்முறை 1960களில் ஸ்திர நிலையைப் பெற்றதுடன் 1980களில் ஏகாதிபத்திய உலகமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுடன் அதனை நிலைப்படுத்தியது. சோவியத் ஒன்றியத்தினால் தலைமைதாங்கப்பட்ட சோசலிச முகாமின் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சோசலிச எதிர்வினையானது, அங்கு 1960களில் நிலைபெற்ற திரிபுவாத கொள்கையிலான உள்நெருக்கடிகளின் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிரான பதிலீட்டு ஏகாதிபத்திய எதிர்வினையாக சுருங்கியதுடன் சோவியத் யூனியனினால் உதவப்பட்ட நாடுகளில் அதன் பொம்மை அரசாங்கங்களையும் தாபித்தது. உள்ளக மற்றும் வெளிப்புற நெருக்கடியின் விளைவாக 1980களில் சோவியத் ஒன்றியம் முழுமையாக உடைவுற்றதுடன் சோவியத்தின் திரிபு வாதம் நோக்கிய திசைமாற்றத்தை முன்னர் எதிர்த்து சோவியத் அரசின் ஏகாதிபத்தியத்தை சமூக ஏகாதிபத்தியம் என அடையாளப்படுத்திய சோசலிச சீனா சந்தை சோசலிசத்தின் நுழைவாயிலில் இருந்ததும் முதலாளித்துவமயமாதலும் இக் காலத்தில் தயாரா இருந்த தொழில்நுட்ப தகவல் புரட்சி மற்றும் நவதாராளவாதத்துடனான மூலதன பூகோளமயமும் உலகம் பூராகவும் முதலாளித்துவ மீள்புரட்சிக்கு வழிவகுத்தன.

1980களில் முதலாளித்துவத்தின் மீள் புரட்சிகள் காரணமாக அநேகமான எல்லா சோசலிச நாடுகளும் வீழ்ந்ததுடன் மிகுதியாக உள்ள கியூபா மற்றும் வடகொரியா தங்களின் சோசலிசக் கட்டுமானத்தை தக்கவைக்கும் (தற்காப்பு) நிலைக்கு தள்ளப்பட்டன. கொலனித்துவத்திலிருந்து விடுபட்ட ஏனைய நாடுகள் நவதாராளவாதத்தின் மூர்க்கத்தனமான தாக்கதல்களுக்கு ஆளாக்கப்பட்டன.

நவதாராளவாதத்தின் கீழ், நவதாராளவாதத்தின் பிரயோகம் அநேகமாய் அனைத்து நாடுகளையும் உள்ளீர்த்துள்ளது. இது உலக அதிகார மையங்களுக்கிடையே அதிகார சமநிலையோ அல்லது பொருளாதார கூட்டுச் சேர்க்கையோ கிடையாது என்பதை வெளிப்படுத்துகிறது. எனினும் நவகாலனித்துவத்தின் அல்லது நவதாராளவாதத்தின் முறைமையில் புதுவகை தெளிவீனம் எதுவும் இல்லை. என்றாலும் அதே இயல்புடைய பூகோளமய மூலதனம் மற்றும் நவதாராளவாதம் அடிக்கட்டுமான, மேற்கட்டுமான முறைமைக்குள் தெளிவீனங்கள், சிக்கல்கள் உண்டு. செந்நெறி கொலனித்துவம் போலல்லாது நவகொலனித்துவ கொள்கையின் கீழ் பொதுவானதோ அல்லது தனித்துவமான பிரயோகங்;களோ இருப்பதில்லை. நவதாராளமயம் அனைத்து நாடுகளினதும் குறிப்பாக உள்ளூர் பண்புகளுக்கு ஏற்ப செயற்படுத்தப்படுவதுடன், செயற்படுத்தவும் முடியும். ஈரானிலும், சீனாவிலும் நவதாராளவாத்தின் பிரயோகமும் ஒரேமாதிரியானவையல்ல. பிரேசில், துருக்கு என்பன நவதாராளவாதம் தமக்கே உரித்தான பண்புகளைக் கொண்டுள்ளது. இது அதிகாரமிக்கதும் பலம்பொருந்திய நாடுகளில் சாத்தியமாக உள்ளபோதும் இலங்கை போன்ற பலவீனமான நாடுகளுக்கு தமது தனித்துவ பண்புகளுடன் நவதாராளவாதத்தை அமுல்படுத்த வல்லமை போதாது. அதனால் அவை அவற்றின் மக்கள் விரோத அரசியல் தலைமைத்துவம் காரணமாக நவதாராளவாதத்தை அவற்றின் பொருளாதார முறையாக ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றன.

நவகொலனித்துவத்தின் கீழ் நாடுகளின் இறைமை, ஒருமைப்பாடு ஆகியனவும் ஆட்டம் கண்டுள்ளன. அமெரிக்க தலைமையிலான நவகொலனித்துவம் அல்லது ஏகாதிபத்தியம், உள்ளூர் வெளிநாட்டுப் போர்கள், சமாதான செயன்முறை மற்றும் ஐ.நா மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை போன்ற முகவராண்மைகள் ஊடாக நாடுகளின் ஆட்சிபீடங்கள் அச்சுறுத்தப்படுகிறன.

கொலனித்துவத்துக்கு முந்திய காலம் போல் தாராளவாத நவகொலனித்துவக் கொள்கைகளுக்கு எதிராக போராடுமளவுக்கு கொலனித்துவத்திலிருந்து விடுபட்ட நாடுகளில் உள்ள தற்போதைய அரசியல் தலைமைத்துவங்கள் முற்போக்கானதாக இல்லை. அரசியலிலும் குறித்த தலைமைத்துவங்கள் பலவீனமாகக் காணப்படுவதனால் நவகொலனித்துவ நிகழ்ச்சி நிரலில் ஆட்சி மாற்றமும் சேர்க்கப்பட்டுள்ளது.

பெரிய பலமான இந்தியா போன்ற நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் இனியும் கொலனித்துவ அல்லது ஏகாதிபத்திய விரோதத்தை கொண்டிருக்கப்போவதில்லை என்பதுடன் அவர்களின் மூலதனம் ஆட்புளத்துக்குள் கட்டுப்பட்டு இருக்கப்போவல்லை. அவர்களின் மூலதனமும் பூகோளமயமாக்கப்பட்டுள்ளதுடன் புறத்தேயுள்ள உலக மூலதனமும் அவர்களின் பொருளாதாரத்தில் நுழைந்துள்ளது. இவற்றில் சில ஏகாதிபத்திய நாடுகளாக உருவெடுத்துள்ளன.

இந்த பின்புலத்தில், இலங்கை போன்ற சிறிய, பலவீனமான நாடுகள் பாரதூரமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பொருளாதாரம் முழுமையாக நாட்டை கடந்த புற நிதி மூலதனம் மற்றும் சந்தையிலேயே தங்கியிருக்கிறது. நவகொலனித்துவ பூகோளமயம் மற்றும் நவதாரளவாத அடிப்படை பொருளாதார கட்டமைப்பின் அமுலாக்கம் காரணமாக ஒரு தனி நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் தன்நிறைவு என்ற கனவு சாத்தியமற்றதாகியுள்ளது.

ஏகாதிபத்திய நாடுகள் அல்லது இந்தியா சீனா போன்ற ஏகாதிபத்திய உலகமயத்தின் பங்காளிகளும் ஒருபுறம் பொது இணக்கப்பாட்டுடன் தங்கள் நாடுகளின் உழைப்பை சுரண்டுவதுடன் சிறிய பலம் குன்றிய ஒடுக்கப்பட்ட தேசங்களையும் நாடுகளின் உழைப்பையும் அதியுயர் சுரண்டலுக்குள்ளாக்குவதுடன் குறித்த தேசங்களினதும் நாடுகளினதும் இறைமையையும் அதன் மக்களையும் தாக்கிவருவதுடன் மறுபுறம் நவதாராள அடிகட்டுமானத்தை வெற்றிக்கொள்ள தங்களுக்கிடையே போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த போட்டியானது மீயுயர் தேசியத்தை (Super Nationalism) அடிப்படையாக கொண்ட உலக மேலாதிக்கத்தை தாபிப்பதற்காகும்.

மூலதன பூகோளமயமாதலானது போதுமான விலைக்கு தங்களின் உழைப்பை விற்பதற்கான சுதந்திரத்தை உழைக்கும் மக்களுக்கு வழங்க மறுக்கிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சி திறன்சார் உழைப்பின் வெளிபாடாக இருந்த போதும் அது உலக மூலதனத்தினால் ஏகபோகமாக்கப்பட்டு கையகப்படுத்தி அதனை முதலாளித்துவத்தின் மீள் புரட்சிக்கு தளமாக்கிக் கொண்டது. தேசிய விடுதலை மற்றும் சோசலிச புரட்சிகளின் விளைவாக முன்னைய கொலனிகளின் பெரும் பகுதி மக்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மட்டங்களில் முன்னேற்றமானது ஏகாதிபத்திய கருவிகளினால் மூலதனத்தை விரிவுப்படுத்தல் அல்லது தகவல் புரட்சியின் அடிப்படையை சாத்தியமாக்கியுள்ளது.

முன்னைய கொலனிகளில் சூறையாடப்பட்ட செல்வத்தின் வெளியீட்டுடன் வர்க்க சுரண்டலுடனான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருக்கின்றமை கவனிக்கத்தக்கதுடன் இந்தியா சீனா மற்றும் ஏனைய முன்னால் கொலனிகளில் உள்ள தொழில் தேர்ச்சி பெற்றவர்களின் திறன்சார் உழைப்பை உயர் சுரண்டலுக்கு உட்படுத்துவதுடன் இது அந்நாடுகளின் தொழில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பாரிய பற்றாக்குறையை ஏற்படுத்தியிருக்கின்றது.

தொழில்நுட்ப புரட்சியானது ஏகாதிபத்தியவாதிகள் உலக உற்பத்தியை ஏகபோகத்திற்கு மீள் ஒருங்கமைப்புச் செய்வதற்கும் உலக உற்பத்தியிலும் சேவைகளிலும் ஈடுப்படும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் ஊதியத்தை குறைப்பதற்கும் வழிவகுத்துள்ளது. அத்தோடு முன்னைய கொலனிகளில் இருந்து ஏகாதிபத்திய நாடுகளுக்கான தொழிலாளர்களின் குடிபெயர்வு உழைப்பு பிரிவினையில் புதிய நிலைமையினை தோற்றுவித்துள்ளதுடன் இந்த ஏகாதிபத்திய நாடுகளில் உழைக்கும் மக்களிடையே போட்டித்தன்மையை தீவிரப்படுத்தி உலகுதளவிய வேலை பிரிவு காரணமாக ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை வீழ்த்துவதற்குஃ குறைப்பதற்கு ஏற்றுமதி மூலதனம் பயன்படுத்தப்படுகிறது. நிதி மூலதனத்தின் விரிவாக்கமானது உற்பத்திக்கான உதவியாளர் என்ற அதன் வகிப்பங்கினை கைவிட்டுள்ளதுடன் இறுதியில் இது ஏகாதிபத்திய நாடுகளில் மட்டுமல்லாது முழு உலகிலும் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. அதன் புதிய வகிப்பங்கானது சமூக முறைமையையும் அதே நேரம் சுற்றுசூழலையும் தாக்குகிறது. அதன் நெருக்கடியானது பாரிய வேலையின்மை சம்பள குறைப்பு மக்களின் கொள்வனவு சக்தியை குறைப்பதுடன்; கல்வி சுகாதாரம் ஒதுக்கீடுகள் குறைப்பு என்பனவற்றை ஏற்படுத்தியுள்ளதுடன் அபிவிருத்தி முன்னேடுப்புக்கள் என்று சொல்லப்படுபவைகள் மக்களை இல்லாமைக்கு உட்படுத்தியுள்ளது. வேறு வகையில் கூறுவதாயின் இது ஒரு புறம் சிறு எண்ணிக்கையிலான புதிய வகை பணக்காரர்களை படைப்பதுடன் மறுபுறம் ஏகாதிபத்திய நாடுகளில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் பெரும் எண்ணிக்கையிலான புதிய வகை ஏழைகளை உருவாக்கி இருக்கிறது.

ஏகாதிபத்திய நாடுகளிலும் அதேபோல் ஏகாதிபத்தியமில்லாத ஒடுக்கப்படும் நாடுகளிலும் தொழில் அற்றவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பைக் காணக்கூடியதாக இருக்கிறது. மிகை உற்பத்தி, உபரி பெறுமதி திரட்சி மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் பங்கீடு என்பன மூலதனத்தின்ஃ முதலாளிகளின் அதிகபட்ச இலாபம் என்ற விடயத்திலேயே தங்கியுள்ளது. எனவே குறைந்த ஊதியம் மற்றும் வேலை இல்லாமையால் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் தவிர்க்கமுடியாதவைகள். எனவே, பூகோளமாதல் நெருக்கடியை இல்லாதொழிக்க முடியாது என்பது வெளிப்படை எனினும் நெருக்கடியின் தோற்றப்பாடுகளை தாமதிக்கலாம்.

நவகொலனித்துவமானது நவதாராளவாத பொருளாதார அடிக்கட்டுமானத்தை மட்டுமல்லாது பல வழிகளில் மேற்கட்டுமானங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

பின்நவீனத்துவம் மற்றும் அதனோடு தொடர்புடைய அரசியல் சிந்தனைகள் கோட்பாடுகள் கருத்தியல்களினால் தேசிய பிரச்சினை, சாதி, பெண்கள் அடக்குமுறை போன்ற விடயங்களில் வர்க்கம் ஊற்றுமூலம் அல்லது அடிப்படை நிராகரிக்கப்பட்டு அடையாள அரசியல் என்பவற்றினூடாக ஏகாதிபத்தியம் ஆதரிக்கப்படுகிறது.

அரசாங்கம் சாரா நிறுவனங்களின் வகிபங்கானது அபிவிருத்தி பணிகள் என்று சொல்லப்படுபவற்றிலும் நாட்டின் கொள்கையாக்கத்திலும் ஏகாதிபத்திய அனுசரணையுடன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய அரசுகள் நவதாராளவாதத்தை அமுல்படுத்தும் வணிக கூட்டு நிறுவனங்களாக (உழசிழசயவந டிழனநைள) நிலைமாற்றம் பெற்றுள்ளன.

ஏகாதிபத்தியத்தின் நலனை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன்முகவராண்மைகள் பலப்படுத்தப்படுகின்றன. 'மனித உரிமை' மற்றும் 'நல்லாட்சியை' கண்காணித்தல் என்ற தேவைப்பாடானது உலக நாடுகள் அனைத்திற்குமான ஏகாதிபத்தியத்தின் நவீன ஒடுக்குமுறை நடவடிக்கைகள் அல்லது பொறிகளாகும். மேலும் ஏகாதிபத்தியமானது அதன் நிகழ்ச்சி நிரலின் முன்னோக்கிச் செல்ல ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகம் உட்பட தொலைத்தொடர்பு வலையமைப்புகள் மீது கட்டுப்பாட்டைக்கொண்டுள்ளது.

ஏகாதிபத்தியமானது உலக மக்களை ஆதிக்கம் செய்ய கலாசாரத்துறையை ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. அது நிலைபெற்றுள்ள கலாசார பெறுமானங்களில் அழித்தலும் அவற்றுக்கு மாற்றீடாக பெறுமானங்களற்ற கலை இலக்கியத்தை முன்வைப்பதனை தனது நிகழ்ச்சி நிரலாக கொண்டுள்ளது. மேலும் கலாசார படைப்புகளை உற்பத்திகளை சந்தை பொருட்களாக்குவதன் மூலமும் அவற்றை கட்டுப்படுத்துவதன் ஊடாகவும் மக்களின் வாழ்வியலாக நுகர்வியலயையும் தனிமனித வாதத்தையும் தாபித்து ஏகாபத்திய நவதாராளவாதிற்கான தனது மேற்கட்டுமானங்களை உருவாக்கியுள்ளது.

இந்த பின்புலத்தில் கீழ்வரும் முரண்பாடுகளை காணக்கூடியதாக உள்ளன.

1. மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான முரண்பாடு

2. ஏகாதிபத்திய சக்திகளுக்கும் சோசலிச சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடு

3.ஏகாதிபத்திய சக்திகளுக்கும் அடக்கப்படும் தேசங்கள் நாடுகள் மற்றும் அதன் மக்களுக்கிடையிலான முரண்பாடு.

4.ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலானதும் ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையிலானதுமான முரண்பாடு.

உள்ளக நிலைமை

ஒப்பீட்டு ரீதியாக பிரித்தானிய காலனித்துவ காலத்தில் செல்வாக்குடையாதாக இருந்த சிங்கள பௌத்த சக்திகளுக்கிடையே இருந்து தோன்றிய ஸ்ரீ லங்கா சுதந்த்திரக் கட்சி (சு.க.) கட்சியின் தலைமையிலான இடதுசாரி கூட்டணி இலங்கையை ஆண்ட காலப்பகுதியான 1956-1965 வரையும், 1970-1977 வரையும் தேசிய மூலதனம் வளர்ச்சியடைந்திருந்ததாக கூறுவதை இடதுசாரி பார்வையுடையவர்கள் என நம்பப்படுகின்ற அரசியல் வரலாற்றியாலாளர்களில் பெரும்பாலோனோர் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தியாவை போலன்றி சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் இங்கு தேசிய முதலாளித்துவ வர்க்கமோ அதற்கான அடிப்டைகளோ தோற்றப்படாடுகளோ இருக்கவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு பிரித்தானியாவிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை கைமாற்றிக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) இலங்கையில் ஆதிக்கம் படைத்த நிலப்பிரபுத்துவ வர்க்கத்திலிருந்து பிரத்தானியர் காலத்தில் தோன்றிய தரகு முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநித்துவப்படுத்தியது. சுதந்திரக் கட்சி அரசாங்கம் பிரித்தானியாரினதும் சில இலங்கையரினதும் வசமிருந்த பெருந்தோட்டங்களை, கைத்தொழில்களை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொண்டது அல்லது தேசியமயமாக்கியது.

சு.கட்சி ஆட்சி கால கட்டங்களில் சில விரல் விட்டு எண்ணக்கூடிய தனிநபர்கள் அவர்களின் மூலதனத்தை திரட்டிக் கொண்டர். அத்துடன் அரசாங்கம் காணி, வீடு உச்ச வரம்பு திட்டங்கள் அல்லது தேசியமயமாக்கலின் மூலம் பிரிட்டிஷ் கம்பனிகளிடம் இருந்த மூலதனத்தை அபகரித்துக் கொண்டதுடன் அரச அல்லது தேசிய மூலதனத்தை ஒதுக்கம் செய்ய முயற்சித்தது. அரச அல்லது தேசிய மூலதனம் 1956-1965 சிறிது வளமானதாக இருந்ததாகவும் கைத்தொழிலுக்கான அதன் அடிப்படைகளை நிறுவிக்ககொண்டதாகவும் பொருளியலாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் 1960களில் அரச மூலதனத்துள் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணகமாக அது மந்தமடைந்ததுடன் 1970களில் பாரிய நெருக்கடிக்க உள்ளானது.

இடதுசாரிக் கட்சிகள் எனப்படுபவையின் (ல.ச.ச.க ஸ்ரீ.கொ.க) செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தபடியினால் விவசாய தன்னிறைவு என்ற நிகழ்ச்சிநிரலை எடுத்திருந்ததுடன் சோசலிச சோவியத் யூனியன், சீனா என்பனவற்றின் உதவிகளுடன் சில கைத்தொழிலகளை தாபித்திருந்ததாலும் சோசலிச நாடுகளுடனான உறவுகள் காரணமாகவும் சு.கட்சி ஒரு தேசியவாத கட்சி எனவும் தேசிய மூலதனம் - தேசிய முதலாளித்துவ வர்க்கத்துக்குரிய கட்சி எனவும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. சுதந்திரமடைந்த நாடுகளில் பின் காலனித்துவ காலத்தில் உலகெங்கும் இவ்வாறான போக்கே பொதுவாக இருந்தது எனலாம். 1977ஆம் ஆண்டு ஐ.தே.கட்சியில் ஆட்சி காலத்திலேயே திறந்த பொருளாதார மறுசீரமைப்புகள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த போதும் திறந்த பொருளாதரக் கொள்கையின் அடிப்படைகள் 1975ஆம் ஆண்டு சுதந்திக் கட்சி நாட்டை ஆண்ட போதே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. 1977-1994வரை ஐ.தே.கட்சி நவதாரளவாதத்தை ஏற்றிருந்ததைப் போன்று 1994ல் சுகந்திரக் கட்சி தலைமை நவதாராளவாத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டது.

ஐ.தே.கட்சியும் சு. கட்சியும் முலாளித்துவ கட்சிகளாவதுடன், அவற்றின் வர்க்க குணாம்சம் முதலாளித்துவமாவதுடன் அவை ஒன்றுக் கொன்று குறைவில்லாத இனவாத கட்சிகளாகும். ஆனால் 1977 வரை சிங்கள் தேசிய அபிலாஷைகளை உயர்த்திப் பிடிப்பதாக சு.கட்சி வேறுபட்ட தோற்றப்பாட்டைக் கொண்டிருந்தது. ஐ.தே.கட்சி ஆரம்பம் தொட்டே ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டிருந்ததுடன், சு.க. சோவியத் யூனியன், சீனா என்பவற்றின் பக்கமான நிலைப்பாட்டை எடுத்திருந்ததுடன் அணிசேரா நாடுகள் அமைப்பில் இருந்து வந்தது. சு.கட்சி அரசாங்கத்தின் காலகட்டத்தில் அரசினால் அபகரிக்கப்பட்ட மூலதனம் அரச மூலதனத்தின் உள்ளக முரண்பாடுகளின் காரணமாக முடிவிற்கு வந்திருந்தது.

எனவே இலங்கையில் வளர்ச்சியடைந்த தேசிய மூலதனம் இருக்கவில்லை என்பதுடன் அது இலகுவாக வெளிநாட்டு நிதி மூலதனத்தினால் உள்வாங்கப்படக்கூடியதாக இருந்தது.

பூகோளமயமாதல் அமுல்படுத்தப்பட்டப் பிறகு பலமான கிராமிய விவசாய பொருளாதாரமோ மீன் பிடித் தொழிலோ இல்லை. பெருந்தோட்ட பொருளாதாரம் சீரழிக்கப்பட்டடுவிட்டது. மொத்த தேசிய உற்பத்தியில் உற்பத்தி துறையின் பங்கு 16 மூ மாக இருப்பதுடன் மிகுதியெல்லாம் சேவை துறையாகவும் வர்த்தகமாகவும் இருக்கிறது. கல்வித் துறையும் சுகாதரத்துறையும் மேலும் மேலும் தனியார்மயப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து முற்றுமுழுதாக தனியாரினாலேயே தீர்மானிக்கப்படுகிறது.

இலங்கை முழுமையாக அமெரிக்கா ஏகாதிபத்தியத்தினதும், ஐரோப்பிய யூனியன் விஷேடமாக பிரிட்டனினதும், ஜப்பான், சீனா, இந்தியா, தென்கொரியா ஆகியவற்றினதும் நிதி மூலதனத்தில் தங்கியிருக்கும் நாடாகிறது. 1980 முதல் முழுமையாக அமுல்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார கொள்கை கைத்தறி மற்றும் பாரம்பரிய அரை கைத்தொழில் உற்பத்திகளையும் அழித்தது. அத்துடன் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமாகவிருந்த சில கைத்தொழில்களையும் முழுமையாக தனியார் துறையினர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இன்னும் சில கைத்தொழிகளும் வர்த்தக நிறுவனங்களும் இலங்கை பிரஜைகளின் வசம் இருந்தாலும் அவை ஒட்டு மொத்தத்தில் மிகவும் சிறிய வீதமே ஆகும்.

மரக்கறி, மீன் போன்ற எஞ்சி இருக்கும் கிராமிய உற்பத்திகளுக்கும் கூட இன்று மத்தியப்படுத்தப்பட்ட சந்தை முறைமை இருக்கிறது. சில சுதேசிகளைத் தவிர வெளிநாட்டுக் கம்பனிகளே கட்டிட, அதிவேக பாதை, புகையிரத பாதை, விமான நிலையம், துறைமுகம் போன்ற நிர்மாணத் துறைகள் உட்பட அனைத்து துறைகளிலும் தலைமை வகிக்கின்றன. பெற்றறோலியத்தில் அரசிற்கு இருந்த ஏகபோகமும் தளர்த்தப்பட்டு அதன் பெரும்பாலான கட்டுப்படுத்தும் பகுதிகள் இந்திய பல்தேசிய கம்பனி (எல்.ஐ.ஒ.சி) யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு வங்கிகள் இலங்கையில் சுதந்திரமாக செயற்படுகின்றன.

1978ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அரசியல் யாப்பு பாராளுமன்ற ஆளுகைக்கு பதிலாக திறந்த பொருளாதாரத்தை அமுல்படுத்துவதை இலகுவாக்குவதையும் நோக்காகக் கொண்டிருந்த சர்வாதிகார ஜனாதிபதி முறையை பதிலீடு செய்தது. ஜனாதிபதியின் அதிகாரங்களின் பிரயோகத்தினூடாகவும் நவகாலனித்துவ, நவதாராள கொள்கைகளின் அமுல்படுத்தலின் அவசியத்தினாலும் நவபாசிச அம்சங்கள் திட்டமிட்ட முறைமையில் வியாபிக்கப்பட்டன.

இவ்வாறிருக்க பயங்கரவாத எதிர்ப்பு, பிரிவினைவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் என்ற சாட்டில் (புகை மறைவில்) இராணுவமயம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது பெரும்பான்மை சிங்கள தேசிய இனத்தினத்தின் மத்தியில் பாரிய செல்வாக்கை செலுத்தியுள்ளது. மக்களின் உரிமைகள் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத் துறை, நீதித்துறை என்பவற்றினூடாக எடுக்கப்படுகின்ற பல நடவடிக்கைகளினால் மறுக்கப்படுகின்றன.

முன்னால் ஐ.தே கட்சியினரே தற்போதைய மஹிந்த அரசின் முக்கிய பங்காளிகளாக இருப்பதுடன் நவகாலனித்துவ, நவபொருளாதார கொள்கைகளின் பொருளாதார அடிக்கட்டுமானத்தை ஏற்று ஒழுகுவதில் இலங்கையின் ஆளும் வர்க்கங்களின் இரண்டு பிரதான கட்சிகளான ஐ.தே.கட்சிக்கும், சு.கட்சிக்கமிடையில் தற்போது எவ்வித வேறுபாடுகளும் இல்லை. ஆனால் நிலப்பிரபுத்துவ பண்பாட்டின் எச்சசொச்சங்களின் விருத்தியான நவபழைமைவாதத்தை கொண்டுள்ள மஹிந்த அரசின் தலைமைத்துவம் நவகாலனித்துவ, நவதாராளவாதத்தின் மேற்கட்டுமானங்களுடன் பூரணமாக இணங்கிப் போவதில் தயக்கம் காட்டுவதாக இருக்கிறது.

நாட்டில் சுதந்திர வர்த்தக வலயங்கள் தாபிக்கப்பட்டுள்ளதுடன் அவ் வலயத்தில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு நாட்டின் சாதாரண சட்டங்களின் ஏற்புடைமையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவ் வலயங்களில் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமை கிடையாது. இலங்கை அரசாங்கம் முதலீட்டு சபையை ஏற்படுத்தியுள்ளதுடன் அதனூடாக வெளிநாட்டு முதலீடுகள் வரவழைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன. முதலீட்டு சபையினால் சுதந்திர வர்த்தக வலய வியாபாரங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளதுடன் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு தீர்வைக் குறைப்பு அல்லது சலுகை வழங்கப்பட்டுள்ளது.

நிலப்பிரபத்துவ பண்பாட்டு மிச்சசொச்சங்கள் முதலாளித்துவ முறையால் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் உற்பத்தி நடபடிமுறையில் அல்லது உற்பத்தி உறவுகளுக்குள் நிலப்பிரபுத்துவ, பழைய காலனித்துவ அம்சங்களோ உறவுகளோ இப்போது இல்லை. அதனால் அரை நிலப் பிரபுத்துவ, அரை காலனித்துவ அம்சங்களைத் தேட வேண்டிய அவசியமும் எழாது. ஒரு காலகட்டத்தில் ஆரம்ப நிலையில் இருந்த தேசிய மூலதனம் அல்லது தேசிய முதலாளிய வர்க்கம் நவகாலனித்துவத்தினால் முடிவுறுத்தப்பட்டுவிட்டது அல்லது உள்வாங்கப்பட்டுவிட்டது.

நவகாலனித்துவ நவதாராளவாத கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டதன் விளைவாக இலங்கை மக்களின் ஆளுகை, சமூக, பொருளாதார, பண்பாட்டு வாழ்வில் வேகமாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பௌத்த சமய பண்பாடு பல மாற்றங்களுக்குள்ளாகியுள்ளது. அரச சார்பற்ற பௌத்த அமைப்புகள், பௌத்த மத அழுத்த குழுக்கள், மத சார் கட்சிகள் என்பவற்றின் தோற்றத்துடன் அம் மாற்றங்கள் நிரூபனமாகின்றன. சிங்கள, பௌத்த மேலாதிக்க தாகம் கொண்ட பாசிச அமைப்புகள் 30க்கு மேல் இயங்குகின்றன. இவ்வமைப்புகள் அமெரிக்க எதிர்ப்பைக் காட்டிக்கொண்டாலும் போலியான ஏகாதிபத்திய எதிர்ப்பை கொண்டிருப்பதுடன் முழுமையாக நவகாலனித்துவத்துக்கு இணங்கிப் போகக் கூடியதுடன் மஹிந்த அரசின் நவபழைமை வாதத்துக்கு இணக்கமான போக்குடன் செயற்படுகின்றன.

மறுபுறத்தில் இஸ்லாமிய, கத்தோலிக்க சமய அமைப்புகள் அவற்றின் குறுங்குழுவாத கொள்கைகள் நடைமுறைகளுடன் அவற்றின் சர்வதேச வலைபின்னல்களுடன் அமைக்கப்பெற்றுள்ளன. இந்து மத அமைப்புகள், இந்தியாவின் 'இந்துத்துவா' இந்து அமைப்புகளுடன் தொடர்புபட்டுள்ளன.

ஆண், பெண் இருபாலாருமான அதிகப் பெரும்பான்மையான இளைஞர்கள் நவகாலனித்துவ வாழ்க்கை முறையான பின் நவீனத்துவ வாழ்க்கை போன்ற அழிவுமிக்க பண்பாட்டுப் பிடியில் இருக்கின்றனர். வர்த்தக நுகர்வுமயப்படுத்தப்பட்ட பண்பாடு, களியாட்டங்கள், மிகையான குடிபோதை, போதைவஸ்து, பாலியல் வக்கிரம் மற்றும் அழிவு நிறைந்த அம்சங்களை கொண்ட நவதாராளவாத மேல் கட்டுமானங்கள் வாழ்ந்த வாழ்க்கைப் பெறுமானங்களைத் தாக்குகின்றன.

இந்த பின்னணியில் இலங்கை முதலாளித்துவ அரசு என்பதுடன் அது நவ காலனித்துவ அம்சங்களைக்கொண்டிருக்கிறது என்பதை எம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. சிங்கள, பௌத்த பேரினவாத பாசிச சிறுகுழுவினரின் நவபழைமைவாத பெரும்பான்மை தேசியவாத மேலாதிக்கம் அதனுடைய விஷேட அம்சமாக அல்லது இயல்பாக இருக்கிறது.

இலங்கையில் ஆளும் வர்க்கங்கள் முதலாளித்துவ வர்க்கமாவதுடன் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைத்துவத்தினால் சிறிய இன ரீதியானதும், பிரதேச ரீதியானதுமான கட்சிகள் மற்றும் நவகாலனித்துவத்தை எதிர்க்காத சமூக ஜனநாயக அல்லது சீர்திருத்தவாத கட்சிகளினது ஆதரவுடன் அவர்களினது அக்கறைகள் பாதுகாக்கப்படுகின்றன. அரசாங்கத்துக்கு வெளியில் இடதுசாரி சக்திகள் முற்போக்கு தேசியவாத ஜனநாயக கட்சிகள் இருக்கின்றபோதும் தாக்கம் செலுத்தக்கூடியதாக இல்லை என்பதுடன் புரட்சிகர வேலைத்திட்டத்துடன் புரட்சிகர கட்சியும் இல்லை.

இலங்கையில் நவதாராளவாத, நவகாலனித்துவ மூலதனத்துக்கும் உழைப்பிற்குமிடையிலான முரண்பாடு அடிப்படையான கூர்மையடைந்திருக்கும் அதேவேளை ஒருபுறம் நவகாலனித்துவ, நவதாராளவாத கொள்கைகளை ஏற்று ஒழுகும் ஏகாதிபத்தியத்துடன் கூட்டிணைந்துள்ள முதலாளிய ஆளும் வர்க்கங்களுக்கும் மறுபுறத்தில் இருக்கும் உழைக்கும் மக்கள், விவசாயிகள், ஏனைய சுரண்டப்படும் வர்க்கங்கள், அடக்கப்படும் தேசிய இனங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் என்போருக்குமிடையிலான முரண்பாடு பிரதானமாக இருக்கிறது.

முதலாளித்துவ புரட்சியின் ஒரு பணியான தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் நிராகரித்து வந்ததால் இன்று அப்பிரச்சினை உடனடியான, பிரதான பிரச்சினையாக மேலெழும்பி இருக்கிறது.

சுதந்திரத்துக்கு பின்னர் ஆளும் வர்க்கங்கள் குறிப்பாக அரசியல், பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் சமூகத்தை ஜனநாயகமயப்படுத்த தவறியதால் மக்களிடையேயான சமத்துவம் இன்மையின் இடைவெளி அதிகரித்துள்ளது.

மனித வரலாற்றில் நிலப்புரபுத்துவத்தின் இடத்தில் முதலாளித்துவம் எழுந்தமை; முற்போக்கானதாகவே இருந்தது. ஆனால் காலப் போக்கில் அதன் வளர்ச்சியுடன் எழுந்த தீர்க்கப்படாத பல பிரச்சினைகளினால் அது மனித சமூகத்தின் சமூக வாழ்கைக்கும், ஜனநாயக பெறுமானங்களுக்கும் எதிரானதுடன் முழு மனித சமூகத்திற்கும் விலங்கிட்டது. இச்சூழ்நிலையை இலங்கையின் தற்போதைய குறிப்பான சூழ்நிலைகளுக்கு பொருத்திப் பார்ப்போமானல்கூட சுரண்டலுக்கும் சமத்துவமின்மைக்கும் சமூக நெருக்கடிகளுக்கும் காரணமான உற்பத்தி சாதனங்கள் தனிநபர்களுக்கும் கம்பனிகளுக்கும் சொந்தமாக இருக்கும் சமூகத்திற்கு மாறான அல்லது சமூக மாற்றத்திற்கான அதாவது சமூகத்தின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்படும் சோஷலிச சமூகத்தின் தேவை அவசியமாகிறது. அதன் நடவடிக்கைளுக்கூடாக வர்க்கமற்ற சமூகத்தினை நோக்கி படை நடப்பு செய்யலாம்.

மேற்படி மாற்றங்களுக்கான முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிச புரட்சியின் நுழைவாயிலில் நாம் இருக்கின்றோம். அது சீனப் புரடச்சியின் இரண்டு காலகட்டத்தைக் கொண்டதாக அதாவது சோசலிசப் புரட்சிக்கு முன்தேவையாக இருந்ததைப் போன்று புதிய ஜனநாயக புரடச்சிக்குரியதாக உழைக்கும் வர்க்கத்துடன் அணித்திரளக்கூடிய முற்போக்கு புரட்சிகர தேசிய முதலாளித்துவ இன்று இலங்கையில் இல்லை.

அத்துடன் இலங்கையின் புரட்சி சோவியத் யூனியனின் ஜனநாயகப் புரட்சியின் பிரதிபன்னலாகவும் இருக்க முடியாது. ஆனால் எஞ்சியுள்ள முதலாளித்துவ புரட்சியின் பணிகளையும் நிறைவேற்றக்கூடியவாறான நிகழ்ச்சிநிரல் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிக்கான வேலைத்திட்டத்துடன் இணைந்து வகுக்கப்பட வேண்டும்

சோசலிசப் புரட்சிக்காக மாக்சிசம் - லெனினியத்தை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர சக்திகளின் தற்போதைய பணியானது இலங்கையின் ஆளும் வர்க்கங்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிவதற்கு தேவையான தொழிலாளர் வர்கத்தினதும் ஏனைய சுரண்டப்படும் வர்க்கங்களினதும் தயார்நிலைப் பற்றி ஆராய்வதாகும்.

புரட்சிக்கான முன்னேற்பாடு

இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் ஏனைய நாடுகளின் ஆளும் வர்க்கங்களைவிட பலவீனமாக இருந்தபோதும் இலங்கையின் உழைக்கும் வர்க்கத்தினரை விட பலமாகவே இருக்கின்றன. அவர்களின் இராணுவ உளவு பலம் உச்சத்தில் இருப்பதுடன் இங்கு முறையான சக்திமிக்க தொழிலாளர் வர்க்க கட்சியோ, பலமான தொழிற்சங்க இயக்கமோ இல்லாததால் ஆளும் வர்க்கங்கள் நாட்டு மக்களின் வாழ்க்கையை துன்பமாக்கியுள்ளன. அதனால் மாற்றம் அவசியமாகிறது. எனினும் மாற்றத்தை ஏற்படுத்தவல்ல சக்திகள் பிளவுபட்டும், பலவினமாகவும் இருக்கின்றன.

ஒருபுறம் உழைக்கும் மக்கள் இன மத ரீதியாக பிளவுபட்டு இருப்பதும் மறுபுறம் முதலாளித்துவ உலகமயமாதல் பண்பாட்டினால் உள்வாங்கப்பட்ட நிலையில் உழைக்கும் மக்களின் சில பிரிவினர் சமூக உழைக்கும் வர்க்கத்திற்கு இணையான நிலைக்கு மாறியுள்ளனர். (அவர்கள் தாம் தொழிலாளர் வர்க்கம் என்பதை ஏற்றுக்கொள்வதும் இல்லை உழைப்பு சுரண்டலுக்குட்படுவதையும் ஏற்றுக்கொள்வதுமில்லை. ஆனால் மனித வள முகாமைத்துவ பகுதியென நம்புகின்றனர்)

இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு மக்களின் சார்பில் முதலாளித்துவ எதிர்ப்பு, சோசலிச புரட்சிக்கான பொருத்தமான வேலைத்திட்டத்துடன் புரட்சிகர கட்சியை கட்டுவது உடனடியானதும் முக்கியமானதுமாகும் என்பதை நாம் புரிந்தகொள்ளுதல் வேண்டும்.

குறித்த இலக்கை அடைவதற்கான முன்னேற்பாடாக எல்லா கோணங்களிலும் தேச, இன, மத தடைகளுக்கப்பால் ஐக்கியப்பட்ட ஜனநாயக வெகுஜன இயக்கங்கள் நேர்மையான ஜனநாயக, இடதுசாரி சக்திகளின் பொது இணக்கப்பாட்டுடன் கட்டியெழுப்பப்பட வேண்டும். இலங்கையின் வரலாற்றில் தேர்தல் அரசியலும், சிங்கள, தமிழ் இளைஞர்களின் ஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளினாலும் மக்களின் எதிரிகளை தோற்கடிக்கமுடியவில்லை. மாறாக மக்களே தோல்வியடைந்துள்ளனர். மக்களை வெற்றியாளர்களாக்குவதற்கு வெகுஜன இயக்கங்களிலும் போராட்டங்களிலும் மக்களின் நேரடி பங்கெடுப்பு அவசியம்.

அதேவேளை தற்போதைய முதலாளித்துவ அமைப்புக்கு ஒரேயொரு மாற்றான சோசலிச சமுதாயத்தை கட்டுவது என்பது ஜனநாயக, இடதுசாரி கட்சிகளின் இலக்காக இல்லாதிருக்கலாம் என்பதால் அச் சக்திகளால் மட்டும் ஆளும் வர்க்கங்களை அவர்களது அரச அதிகாரத்திலிருந்து தூக்கியெறிய முடியாது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால் அச் சக்திககள் முற்போக்கானதாக தெரிவதால் புரட்சிகர சூழலை விருத்தி செய்வதுடன் புரட்சிகர கட்சியை அமைக்கவும் அவற்றுடன் இயங்க வேண்டியுள்ளது.

ஜனநாயக, இடதுசாரிய அரசியல் என்பன தாராள ஜனநாயகத்தின் உற்பத்தி அல்லது விருத்தியாகிறது. எனினும் பெரும்பாலான புரட்சிகர தொழிலாளர் வர்க்க சக்திகளும் பரந்தளவில் இடதுசாரிகள் என்றே அடையாளப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறனதொரு சூழ்நிலையில் புரட்சிகர குழுக்கள் அல்லது கட்சிகள் இணைந்து வேலைசெய்யக்கூடியவாறு நெருக்கமாக இருக்கக்கூடிய ஜனநாயக, இடதுசாரி சக்திகளுடன் செயற்பட வேண்டியிருக்கும்.

இந்த செயற்பாடு இரண்டு தட்டுகளை கொண்டதாகும். அதாவது ஒன்று அச் சக்திகளின் மத்தியில் தத்துவார்த்த போராட்டங்களை முன்னெடுத்தல், இரண்டாவது உபாய ரீதியான பரந்துபட்ட ஜனநாயக வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அச்சக்திகளுடன் சேர்ந்து மக்களின் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்பதுமாகும். இவ்வகையான போராட்டங்கள் அனைத்து மக்களினதும் உடனடியாக பிரச்சினைகளையும் அடக்கப்பட்ட தேசிய இனங்களின் தேசிய ஜனநாயக பிரச்சினைகளையும் மற்றும் நவகாலனித்துவ, நவதாராளவாத கொள்கைகளுக்கு எதிரான விடயங்களையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த நோக்குகளை பெரும்பாலான இடதுசாரி சக்திகள் ஏற்றுக்கொண்டுள்ளபோதும் அவற்றின் குழு மனப்பான்மை, பிளவுபட்டிருக்கும் போக்குகள் என்பன அவற்றின் ஐக்கியத்துக்கு தடையாக இருக்கின்றன.

இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் மத்தியிலான தத்துவார்த்த போராட்டங்களினூடாகவும் தந்திரோபாய வேலைத்திட்டத்தினூடாக அச் சக்திகளுடன் கூட்டிணைக்கப்பட்ட மக்களின் ஜனநாயக போராட்டங்களினூடாகவும் புரட்சிகர கட்சியை கட்டுவதும் உழைக்கும் மக்களையும் ஏனைய சுரண்டப்படுபவர்களையும் இலங்கையின் விஷேட சூழ்நிலைக்கேற்ப பொருத்தமான புதியவகை முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிச புரட்சிக்கு தயார்படுத்துவதும் சமகால இலங்கை சூழ்நிலையில் புரட்சிக்கு முன்னேற்பாடான சாதகமான நகர்வாக இருக்க முடியும்.

எனவே முதலாளித்துவ நவகாலனித்துவ, நவதாராளவாத ஆட்சியை தூக்கி எறியவும் நேரிடையான வெல்லக்கூடிய புரட்சி சூழ்நிலையை ஏற்படுத்தவும், தோற்கடிக்க முடியாத சோசலிச புரட்சியை நிலைநிறுத்தவும், தத்துவார்த்த போராட்டங்களில் ஈடுபடவும், ஐக்கியப்பட்ட ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடவும் வேண்டுமென ஜனநாயக, இடதுசாரி சக்திகளுக்கு இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரமாகிய நாங்கள் அழைப்பு விடுகிறோம்.

சர்வதேச பிராந்திய, அண்டை நாடுகளின் சூழலும் புரட்சிக்கு சாதகமாக இருக்குமானால் மட்டுமே மேற்கூறிய விடயங்கள் சாத்தியமாகும். அதனால் நாட்டுக்கு வெளியிலான பணிகளும் தவிர்க்க முடியாதவாறு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

புரட்சிகர வாழ்த்துக்கள்!

அமைப்பாளர்கள் :

தோழர் இ. தம்பையா

தோழர் டபில்யூ.வீ. சோமரத்ன

முன்னிலை சோசலிசக் கட்சினால் தொடக்கிவைக்கப்பட்ட இடதுசாரி பொது மன்றத்தின் கருத்தாடலுக்காக இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 15.02.2014 திகதியிடப்பட்ட அறிக்கை{jcomments on}