Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கோத்தபாய நல்லவராம்

தற்போது, இலங்கையின் அரசஅதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள கோத்தபாய ராஜபக்ச அவர்களையும், ராஜபக்ச குடும்பத்தையும் எவ்வாறு புரிந்து கொள்வது,- என்பது பற்றி கட்டுரைகளும் கருத்துக்களும் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் எழுதி குவிக்கப்படுகிறது. இக்கட்டுரைகளை - கருத்துக்களை பெரும்பாலும் எழுதுவோர், தற்போது வடக்கு -கிழக்கு தமிழ் சமூகத்தில் கருத்தியல்ரீதியாக சமூகத்தை சென்றடையக்கூடிய எழுத்தாளர்களாகவும், பிரபலமான "அரசியல்" ஆய்வாளராகவும் இருக்கின்றனர்.

இவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் கடந்த காலத்தில் புலிகளுக்கும் பிரச்சார பீரங்கிகளாகவும், அவர்களின் அதிகாரத் துஷ்பிரயோகம், படுகொலைகள், பாசிச நடவடிக்கைகளை நியாயப்படுத்துபவர்களாகவும் ஆகவும் விளங்கியவர்கள்.

இவர்கள் தற்போது வேறு, வேறு கட்சிகளை பின்கதவால் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், தங்களுக்குள் அரசியல்ரீதியான சில முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இருந்தாலும், கோத்தபாய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவரின் அரசியல் போக்குகள் பற்றி மிகவும் நேர்மறையான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். தம்மை அதிகாரத்துக்கு எதிரான சக்திகள் என கூறிக்கொள்வதில் இன்பமடையும் இவர்கள், அடிக்கடி பாவிக்குமோர் சொல் "அரசியல் அறம்". புலிகளுக்கு காவடி தூக்குவதற்கு முன், இவர்கள் உறுப்பினராகவிருந்த இயக்கங்களுக்காகச் செய்த கொலைகள், கொள்ளைகள் தொடக்கம் இன்று அதிகாரத்தில் இருக்கும் மஹிந்த குடும்பத்துக்கு பல்லக்கு தூக்கிக்கொண்டிருப்பது வரையான இந்த காலத்தில் - இவர்களின் "அரசியல் அறம்" எங்கு போனதென்று இவர்களால் பதில் கூற முடியாது. "ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி" என்பது தான் இவர்களில் அரசியல் அறம்.

வன்னியைச் சேர்ந்த பிரபலமான அரசியல் ஆய்வாளரும் கவிஞருமான ஒருவர் கடந்தவாரம்(23.11.2019), "தமிழ்மக்கள் ஒடுக்கப்படுவதற்கு அவர்களே காரணம்" என்ற கருத்தை தனது பத்தியில் முன்வைக்கிறார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் புலி - இன்னாள் "தமிழ் தேசிய அரசியல் "ஆய்வாளர்" எனத் தன்னை முன்னிறுத்துபவர் ஒருவர் :- "ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாம் ராஜதந்திரம் அற்ற முறையில் நடந்து, அதிகாரத்திலுள்ள மஹிந்த ராஜபக்ச-கோத்தபாய ராஜபக்ஷ போன்ற சிங்கள அதிகார வர்க்கத்திற்கு எதிராக செயற்படுவதன் மூலம், நமக்கான தீர்வை பெற முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறோம், என்று கூறுகிறார்.

இந்த இரு அடிவருடிப் பிரச்சாரகர்களின் கருத்துப்படி: அரச நிறுவனங்களைக் கைப்பற்றுவதன் மூலம், தமிழ்மக்கள் மீது இனரீதியான ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் பேரினவாத சக்திகளுக்கு எதிராகத் தேர்தலில் வாக்களிப்பதும், அரசியற் செயற்பாடுகளை முன்னெடுப்பதும், முற்றிலும் தவறான நிலைப்பாடாகும். ஒடுக்குமுறையாளர்களுக்கு வாக்களித்து, அவர்களை மதித்துக் -கொண்டாடி- இன்புற வைப்பதன் மூலம் மட்டுமே ஒடுக்கப்பட்ட தமிழ்தேசம் தனக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒடுக்குமுறை புரியும் சிங்கள தேசமும், அதன் தலைவர்களும், அரசியற் கட்டுமானங்களும் எந்த விதத்திலும் தங்களைத் திருத்திக் கொள்ளத் - மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. ஒடுக்குமுறைக்குட்;பட்ட மக்களாகிய நாம் மட்டுமே திருந்த வேண்டும். ஒடுக்குமுறையின் முன் கூனிக் குறுக வேண்டும். அடிபணியவேண்டும் என்பதே இவர்கள் கருத்து. தமிழர்களாய் இருப்பதனால் தான் இனவொடுக்குமுறை நடக்கிறது. எல்லோரும் சிங்களவர்களாய் மாறுங்கோ, என்று இவர்கள் இன்னும் சில மாதங்களில் மக்களுக்கு ஆலோசனை சொன்னாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவ்வகை கருத்துக்களை இவர்கள் மட்டும் வெளிப்படுத்தவில்லை. இவர்களைப் போன்று இலக்கியம், தலித்தியம், மனித உரிமை மீறல் செயற்பாட்டாளர்கள் என சமூக ஊடகத்தளங்களில் கூறிக்கொள்ளுபவர்கள், புதிதாக யாழ்ப்பாணத்தில் முளைத்துள்ள NGO -மாக்சிஸ்டுக்கள், பென்ஷன் எடுத்த சீனா மார்க்சிஸ்டுகள் எனப் பலரின் கருத்தாகும்.

இதே நபர்களும், தங்களைப் "புத்திஜீவிகளாக" காட்டிக்கொள்ள முனையும் சிலரும், ஜனாதிபதி கோத்தபாய அவர்களை, எந்தவித குற்றமும் அற்றவராக நிறுவ முனைகின்றனர். 2009- இறுதிப் போரின் போது நடைபெற்ற கொடூரங்களுக்கும் கொலைகளுக்கும் அவரை பொறுப்பாளியாக்க முடியாது. அதற்கான முழு காரணங்களும், பொறுப்புகளும் சிங்களப் பேரினவாத அரசுக் கட்டமைப்பையே சார்ந்தது. இதனடிப்படையில், பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு, சிங்கள -பேரினவாத கட்டமைப்புகளையே சாரும் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர்.

மேலும், தமிழ்மக்கள் தம் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராட வேண்டுமெனில், சிங்கள மேலாதிக்க கட்டமைப்புக்கு எதிராகத்தான் போராட வேண்டுமே ஒழிய, தனிநபர்களான கோத்தபாய ராஜபக்ச அல்லது அவரின் சகோதரர்களுக்கு எதிராகப் போராடுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை. எந்தவித கொடுமைகளுக்கும் அவர்கள் நேரடியான காரணம் இல்லை. இன்று அவர்கள் அதிகாரத்தில் இருக்கின்றபடியால், அவர்களுடன் தான் தமிழ்தலைமைகள் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வேண்டும், எனவும் வாதிடுகின்றனர்.

இதே நபர்கள், இறுதிப்போர் காலத்தில் நடைபெற்ற கொடுமைகளுக்கும், துன்பங்களுக்கும், அழிவுகளுக்கும், புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் காரணம் என்று அடிக்கடி கூறிக் கொள்வதிலிருந்து இன்று வரை மாறியதில்லை. பிரபாகரன் என்ற தனிமனிதமே தமிழ்தேசிய விடுதலையின் போக்கை அழிவுப்பாதையில் நடத்திச் சென்று, இல்லாதொழித்தார் என்ற கருத்தில் இருந்தும் இவர்களுக்கு மாற்றுக்கருத்தில்லை.

அதேவேளை, நான் மேற்கூறியது போன்று, போரின் மறுமுனையில், சிங்கள பேரினவாத அரசு சார்ந்து யுத்தத்துக்கு தலைமை தாங்கிய மஹிந்தவும், இன்றைய அரசுத்தலைவர் கோத்தபாயவும், தமிழின படுகொலைகளுக்கு காரணம் இல்லை. அதனால் குற்றமற்றவர்கள் என்று இவர்கள் அதே வாயால் கூறுவது, எந்த வகையில் நியாயமானது. பவுத்த சிங்கள பேரினவாதம், தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு காரணமென்றால்- அந்த ஒடுக்குமுறையின் வெளிப்பாடு தான் புலிகள் இயக்கமும். பிரபாகரன் என்ற தனிமனிதனின் அரசியல் -ஆயுத நடவடிக்கைகளும்! இந்நிலையில், கோத்தாவும் -மஹிந்தவும் புனிதர்களென்றால், பிரபாகரனும் புனிதன் தானே !!!!!!

"நக்கின நாய்க்கு, செக்கென்ன சிவலிங்கமென்ன" என்ற பழமொழிக்கு இணங்க மேற்படி "புத்திஜீவிகளும்", "கவிஞர்களும்", "அரசியல் ஆய்வாளர்களும்" தலித்திய போராளிகளும், தமது எஜமானர்களின் இருப்பை முன்னிறுத்தி அரசியல் செய்கின்றனர். இவர்கள், மக்களின் பிரதிநிதிகளாக தங்களை காட்டிக்கொள்ள நடத்தும் பொய்ப் பிரச்சார நாடகங்களை மக்கள் நலனில் அக்கறை கொண்ட- தேச விடுதலையில் அக்கறை கொண்ட சக்திகள் அம்பலப்படுத்தி, தமிழ் தேசத்தின் எதிர்காலத்திற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த,- மாற்று அரசியல் கருத்தை-கலாச்சாரத்தை முன்னிறுத்த உழைக்கவேண்டும்.