Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனங்களும்…. ஒருமைப்பாடும்…..

70க்கு பிறகு பேரினவாதம் இலங்கை அரசியலினை ஆக்கிரமித்துக் கொள்ள இனவாதமும் மக்களை பற்றிக் கொண்டது. அது நாளுக்கு நாள் மக்கள் பேச்சிலும் மனதிலும் வளர்ந்து வந்து இன்று பல தமிழ்மக்கள் மத்தியில் சிங்கள, முஸ்லீம் மக்களை எதிரிகளாகப் பார்க்கும் மனநிலை கூடுதலாக காணப்படுகிறது. சிங்கள மக்களோடு நாங்கள் சேர்ந்து வாழ முடியாது என்ற கருத்தியலை இன்றைய தமிழ் அரசியல்வாதிகளாலும், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளாலும் பரவலாக சாதாரண தமிழ் மக்களின் சிந்தனையில் பரப்பப்பட்டு வருகிறது. இது அரசியல்வாதிகளின் இனங்களை கூறு போடும் அரசியல் நடவடிக்கையாகும். இந்த அரசியல்வாதிகளின் சுயநல அர சியற் போக்கும், தவறான அரசியற் பார்வையுமே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

 

சிங்கள முஸ்லீம் மக்களோடு நாம் சேர்ந்து வாழ முடியாதா…? ஆரம்பகாலத்திலிருந்தே தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் சேர்ந்து சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும், வாழ்ந்துள்ளார்கள். கல்வி அடிப்படையில், தொழில் ரீதியாக, குடும்ப ரீதியாக பல வழிகளில் இணைந்தே செயற்பட்டு வந்த இந்த மக்களுக்கிடையில் நல்ல நட்பும், புரிந்துணர்வும் இருந்து வந்துள்ளது. ஒருவரை ஒருவர் எதிரியாகப் பார்க்கும் மனப்போக்கோ, இனபேதமோ இவர்களிடம் இருந்ததில்லை. காலப்போக்கில் இனவாதம் பேசி வந்த தமிழ் சிங்கள அரசியல்வாதிகள், தங்கள் அரசியலினை நகர்த்துவதற்கான அவர்களின் சுயநலப் போக்கே இனங்களுக்கிடையில் விரோத உணர்வையும், முரண்பாட்டினையும் ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது. அரசியல்வாதிகளின் இந்த நடவடிக்கை மக்களுக்கிடையில் இடைவெளியினை உருவாக்கியதுடன் மதவாதிகள் போன்ற ஏனைய தவறான சக்திகளுக்கும் இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.

 

குறிப்பாக சிங்கள அரசியல்வாதிகள் தாங்கள் ஆட்சியினை தக்கவைத்துக் கொள்வதற்காக அப்பாவி சிங்கள மக்களின் மனதில் பேரினவாத கருத்துக்களை ஏற்படுத்தி வந்தனர். சிங்கள அரசியல்வாதிகளினதும், மதவாதிகளினதும் இந்த செயற்பாடுகள் பல இனக் கலவரங்களை உருவாக்கியது. இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி காடையர்கள் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்காகவும், பழைய விரோதங்களைப் பழி தீர்த்துக் கொள்வதற்காகவும் வன்முறையிலே இறங்கினார்கள். இந்த வெறித்தனமான செயலால் பல அப்பாவி உயிர்கள்தான் பலியாக்கப்பட்டது. இதனால் பெரியளவில் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழ்மக்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் ஆத்திரமடைந்த தமிழ் மக்களின் உணர்வினை குறிப்பாக இளைஞர்களின் எழுச்சியினை தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல்வாதிகள் சரியான அரசியல் நிலைப்பாட்டினை எடுத்திருந்தால் இத்தனை அழிவுகளும் ஏற்பட்டிருக்காது. மாறாக அவர்கள் சிங்கள பேரினவாத அரசிற்கு எதிரான போராடத்தினைச் சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமாகவே மாற்றியமைத்தார்கள். இனியும் சிங்களவனோடு இணைந்து வாழமுடியாது.

 

தமிழீழமே முடிந்த முடிவென்றார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் இந்த தவறான அரசியல் நடவடிக்கை தமிழ்மக்கள் மனதிலே குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சிங்கள மக்களை எதிரியாகப் பார்க்கும் மனநிலையினை ஏற்படுத்தியது. மக்களினுடைய உணர்வினை அவர்கள் தங்கள் அரசியல் துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொண்டார்கள். இவர்களின் வழிவந்த ஆயுதப் போராட்டத்தினை கையிலெடுத்த புலிகளும் சிங்கள முஸ்லீம் மக்களை எதிரியாகவே பார்த்தார்கள். தங்கள் போராட்டத்தில் இருந்து அந்த மக்களை அந்நியப்படுத்திக் கொண்டார்கள். அதுமட்டுமின்றி அப்பாவி சிங்கள முஸ்லீம் மக்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். சிங்கள மக்களைப் போன்று முஸ்லீம் மக்களும் தமிழ்மக்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தினை புலிகள் தங்கள் ஆதரவாளர்கள் மனதில் வளர்த்து வந்துள்ளார்கள். இன்றும் புலிகள் இதனையே செய்துவருகின்றார்கள். இனவாதத்தினை விட்டு வேறு எந்த அரசியலினையும் முன்னெடுக்க முடியாத இவர்களின் குறுகிய அரசியற் சிந்தனையும், அரசியல் வறுமையும் தான் இன்றும் பல தமிழ்மக்களை இனவாதத்தினுள் குறுக்கி வைத்துள்ளது.

 

இயல்பாக எந்த மக்களும், எந்த மக்களுக்கும் எதிரானவர்களாக இருப்பதில்லை. அரசியல்வாதிகள் தங்கள் நலனுக்காக மக்களை மோதவிட்டுக் கொள்கிறார்கள். இங்கு எதிரி அரசே ஒழிய மக்கள் அல்ல. எங்கள் போராட்டமும் அரசிற்கு எதிரானதாக இருக்க வேண்டுமேயொழிய எந்த மக்களுக்கும் எதிரானதாக இருக்கக் கூடாது. எங்கள் எதிரிதான் பலவழிகளில் அனைத்து இனமக்களுக்கும் எதிரியாக இருக்கின்றான்.

 

சிங்கள மக்கள் யாரும் முள்ளிவாய்க்காலில் நடந்த இத்தனை ஆயிரம் தமிழ்மக்களின் அழிவுக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை என்பது பல தமிழ்மக்களின் மனதில் பதிந்துள்ளதொரு சிந்தனையாகும். தாங்கள் செய்யும் கொலைகளை அரசு ஒருபோதும் உலகநாடுகளுக்கோ, எந்த மக்களுக்கோ அம்பலப்படுத்தாது. இந்தவகையில் தான் கொலைகார மகிந்த பேரினவாத கும்பல்களும் தங்கள் கொலைகளை மறைத்தார்கள். புலிப் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள், நாடு பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டுவிட்டது என்ற செய்தியினையே இலங்கை மக்களுக்கு மட்டுமில்லாது உலகிற்கே பறைசாற்றிக் கொண்டார்கள். ஆனால் புலி அழிப்பு என்ற பெயரில் பல ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததை புத்திசாலித்தனமாக திட்டமிட்டு மறைத்துக் கொண்டது சிங்கள பேரினவாத இனவெறி அரசு. இந்தியா, சீனா, அமெரிக்கா… போன்று பல நாடுகளும் மகிந்தாவின் இந்த செயற்பாட்டிற்கு உடந்தையாக இருந்து வந்துள்ளன.

 

இதே போன்று தான் அன்று ஜே.வி.பிக்கு எதிரான போரிலே பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்களை இலங்கை அரசு இந்தியாவின் உதவியோடு கொன்று குவித்தது. அப்போது நாங்கள் யாருமே அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. பெரும்பான்மையான தமிழர்கள் இப்படியொரு சம்பவம் நடந்ததினை அறிந்தது கூட இல்லை. திட்டமிட்டு திரைமறைவில் செய்யப்பட்ட கொலைகள் இவை. அன்று எங்களால் எப்படி குரல் கொடுக்க முடியாது போனதோ அதோ போன்று தான் இன்று சிங்கள மக்களுடைய நிலைமையும்.

 

அண்மையில் காலியில் யுத்தம் பற்றி சிங்கள மக்களின் சாட்சியங்களை பதிவு செய்து வரும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சிங்கள அரச ஊழியர்களும் மக்களும் கடந்தகால சிங்கள அரசின் தவறினை சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்கள். 1981இல் யாழ்ப்பாணத்தில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய சிங்கள அதிகாரி யாழ் நூலக எரிப்பினை நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கண்டித்துப் பேசியுள்ளார்.

 

ஒரு போதும் மக்கள் எங்களுக்கு எதிரியாக மாட்டார்கள். தழிழ் சிங்கள அரசியல் வாதிகள்தான் எதிரியாக்க முனைகிறார்கள். வயிற்றுப் பிழைப்பிற்காக தங்கள் பிள்ளைகளையும், கணவன்மாரையும் இராணுவத்திற்கு அனுப்பிவிட்டு அவர்கள் எங்கேயிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாத நிலமைதான் அந்த அப்பாவி சிங்கள மக்களுடைய நிலமை. இந்தப் பேரினவாத அரசு போராட்டம் என்ற பெயரிலே எத்தனை ஆயிரம் சிங்கள இளைஞர்களை சாகடித்துள்ளது? இது சிங்கள மக்களுக்குத் தெரிந்தால் மக்கள் கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என்று, இராணுவத்தின் இழப்பினைக்கூட சாதுரியமாக மறைத்து வந்துள்ளது. எங்களைப் போலவே சிங்கள மக்களும் இந்த அரசினால் பலவழிகளில் ஏமாற்றப்பட்டு, ஒடுக்கப்பட்டு வருகின்றார்கள்.

 

தமிழ் மக்களாகிய எங்களுடைய பிரச்சனைகளுக்கு இந்த மக்கள் காரணமில்லை. தமிழ் சிங்கள அரசியல்வாதிகளும் அவர்களுடைய தவறான வழி நடத்தலும் தான் காரணம். இதனை நாங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் போராட வேண்டியது இவர்களுக்கு எதிராகத் தான். எங்கள் போராட்டத்தில் ஒடுக்கப்படும் சகல இன மக்களையும், அவர்களோடுள்ள முற்போக்கு சக்திகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் எங்களுடைய அரசியல், சமூக பொருளாதார விடுதலையினை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், எங்கள் சுயநிர்ணய உரிமையினை வென்றடுக்க வேண்டுமாயின் ஒன்றிணைந்த மக்கள் போராட்டம் ஒன்றுதான் சாத்தியமாகும். இதை விட்டு ஏனைய நாடுகளை, அரசுகளைக் காரணம் காட்டி எங்களை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பினை மக்களுக்கு ஏற்படுத்தி அரசியற் பிழைப்பு நடாத்துவது ஏமாற்று நடவடிக்கையே தவிர எந்தவித பயனுமற்ற செயலாகும்.

 

முன்னணி (இதழ் -1)

தேவன்