Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கொல்ல வருகிறது கொக்கோ கோலா

கொக்கோ கோலா நிறுவனத்தின் குளிர்பானங்களை ஆசிய நாடுகள் முழுவதற்கும் விநியோகம் செய்யக் கூடிய அளவிற்கு உற்பத்தி செய்யக்கூடிய பெரும் தொழிற்சாலை ஒன்றை இலங்கையில் நிறுவதற்கான முயற்சிகளில் கொக்கோ கோலா நிறுவனம் இறங்கியுள்ளது. அது தொடர்பாக கொக்கோ கோலா நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்கள் என்று இலங்கை அரசின் நிதி அமைச்சு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள கொக்கோ கோலா நிறுவனத்தின் மிகப் பெரிய சந்தையான இந்தியாவிற்கு இலங்கையில் இருந்து கொக்கோ கோலாவின் குளிர்பானங்களை ஏற்றுமதி செய்யக் கூடிய அளவிற்கு அமையவிருக்கும் தொழிற்சாலை இருக்கும் எனவும் இலங்கையின் நீர்வளம் அப்பாரிய தொழிற்சாலையின் தேவைக்கேற்ற அளவிற்கு இருக்கிறது என்றும் கொக்கோ கோலா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஆம், தவித்த வாய்க்கு குடி நீராகவும் , பசித்த வயிற்றிற்கு போகும் உணவுப் பயிர்களின் ஆதாரமாகவும் இருக்கும் தண்ணீரை நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்யும் கொக்கோ கோலாவிற்கு விற்கப் போகிறார்கள். "நீரின்றி அமையாது உலகு" என்றான் அய்யன் வள்ளுவன். இலங்கை அரசுக் கொள்ளையர்கள் கொக்கோ கோலா என்னும் சர்வதேசக் கொள்ளையர்களிற்கு நீரை விற்பதன் மூலம் நீரின்றி அழியப் போகிறது இலங்கை.

இலங்கையில் கடந்த நாற்பது வருடங்களின் மிகப் பெரும் வரட்சி இந்த வருடம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசின் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ள அதே வாரத்தில் கொகோ கோலாவிற்கு நீரை விற்கப் போவதான நிதி அமைச்சின் அறிவித்தலும் வந்திருக்கிறது. யாழ்ப்பாணம், மன்னார், அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் மட்டும் அல்லாமல் மழைவளம் கூடிய கண்டி, கொழும்பு , கம்பகா போன்ற மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்து நீர்மட்டம் மிகமும் குறைந்து காணப்படுகிறதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் மிகப் பெரிய நீர்த்தேக்கமான அம்பாறை மாவட்டத்தின் சேனாநாயக்க சமுத்திரம், நுவரெலியா மாவட்டத்தின் லக்சபான போன்றவற்றின் நீர்மட்டங்களே மிக வேகமாகக் குறைந்து வருகின்றன. இலங்கையின் சில மாவட்டங்களில் உள்ள நீர் இரண்டு மாதங்களிற்கே குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்கு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வரட்சியின் மற்றொரு விளைவாக மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. வரட்சியும், மழை இன்மையும் தொடருமாயின் குடி நீருக்கும், மின்சாரப் பாவனைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை அரசின் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது.

வரட்சியினால் நெல், தானியங்கள், மரக்கறிகள் என்பன கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. உழவர்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். உணவுப் பயிர்களின் உற்பத்தி குறைவடையப் போவதால்  உணவுப் பொருட்களின் விலைகள் ஏறக்கூடிய அபாயநிலை தோன்றியுள்ளது. ஏற்கனவே வறுமையில் வாழும் ஏழை மக்கள் இன்னும் மிக மோசமாக பசியிலும், பட்டினியிலும் வாடப் போகிறார்கள். ஆனால் வரட்சியும் அதனால் மக்கள் படும் துன்பங்களும் இலங்கை அரசு என்னும் கொள்ளையர்களிற்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

இந்தியாவில் கேரள மாநிலத்தின் பாலக்காட்டுப் பகுதியில் உள்ள பிளாச்சிமாடாவில் உறிஞ்சி எடுத்த  கொக்கோ கோலாவின் தொழிற்சாலையை எதிர்த்து பிளாச்சிமாடா மக்கள் தொடர்ந்து போராடி மூட வைத்தார்கள். இடதுசாரிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பழங்குடியினரும் தீரமுடன் போராடி சர்வதேசக் கொள்ளையர்களை முறியடித்தனர். கேரளத்தின் இரவாளர் பழங்குடியைச் சேர்ந்த மயிலம்மா என்னும் சமுகப் போராளி இப் போராட்டங்களை முன்னெடுத்தவர்களில் குறிப்பிடத் தக்கவர். தனது வீட்டுக் கிணற்றுத் தண்ணீர் கொக்கோ கோலாவின் தொழிற்சாலையினால் மாசடைந்து குடிக்க முடியாமல் போனதை அடுத்து கொக்கோகோலாவிற்கு எதிரான போராட்டக் குழுவுடன் இணைந்து மயிலம்மா மிகத் தீவிரமாக முன்னின்று போராடினார். அவர்களின் போராட்டத்தினால் 2002 சித்திரை மாதம் கொகோ கோலாவின் தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டது.

கேரளத்தில் துரத்தப்பட்ட கொக்கோகோலாவை தமிழ்நாட்டு மொள்ளமாரி அரசக் கொள்ளையர்கள் பெருந்துறையிலும், மற்றொரு கொள்ளைக் கூட்டமான பெப்சியை திருநெல்வேலியின் கங்கை கொண்டானிலும் ஊழல் பணத்திற்காக மாலை மரியாதை போட்டு அழைத்து வந்தனர். பெருந்துறையில் ஆறுகள், குளங்கள், ஏரிகள் வற்றிப் போயின. எஞ்சிய நீரும் நஞ்சாகிப் போனது. தாமிரபரணி என்னும் வற்றாத நதி வற்றிக் கொண்டே போகிறது. பெருந்துறையிலும், கங்கை கொண்டானிலும் தம் வாழ்வை அழிக்கும் கொள்ளையர்களிற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடுகின்றனர்.

இப்போராட்டங்களின் விளைவாகவும், இலங்கையில் இருக்கும் நீர்வளங்களையும் உறிஞ்சி எடுக்கும் பேராசையினாலும் கொக்கோ கோலா இலங்கையில் கால் வைக்க இருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி என்று தமக்குள் அதிகாரத்திற்காக போட்டி போடும் இரு கட்சிகளும் ஏகாதிபத்தியக் கொள்ளையர்களிற்கு நாட்டை விற்பதில் மட்டும் என்றும் ஒத்த கொள்கை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அதுவும் தற்போது "நல்லாட்சி" என்னும் பெயரில் இரு கட்சிகளுமே சேர்ந்து இருக்கும் போது ஏகாதிபத்தியங்களிற்கும், சர்வதேச நிறுவனங்கள் என்னும் கொள்ளையர்களிற்கும்  சிவப்புக் கம்பளம் விரிப்பதில் வியப்படைய என்ன இருக்கிறது? 

"குடிக்கின்ற நீருள்ள குளத்தை தூர்த்தேனோ" என்று வள்ளலார் தம் மனம் வருந்திப் பாடுவார். இலங்கை அரசுக் கொள்ளையர்கள் நம் நாட்டின் நீர்வள ஆதாரங்கள் முழுவதையும் தம் தரகுப் பணத்திற்காக மன மகிழ்வோடு விற்கப் போகிறார்கள். வாழ்வின் ஆதாரமான நீரை கொள்ளையடிக்கும் கும்பலை எதிர்த்துப் போராடுவோம். வாரும் எம்மக்களே!!