Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கொடிமரமே மாயமாய் மறைந்த மர்மம் என்ன மருதடி பிள்ளையானே!!!

கொடிமரம் என்ன உயரம் இருக்கும்?. கோயில் கொடிமரத்தின் உயரத்தைக் கேட்கிறேன். குறைந்தது இருபது அடி இருக்கும். யாழ்ப்பாணத்து மானிப்பாய் மருதடிப்பதியில் இரு மரபும் துய்ய வந்த சைவ வேளாள பெருங்குடிகளின் கண் கண்ட தெய்வமான பிள்ளையாரின் கொடிமரம் காணாமல் போய்விட்டது. மருதடி பிள்ளையார் கோயிலில் சித்திரை மாதம் கொடியேறி சித்திரை புதுவருட தினத்தன்று தேர்த்திருவிழா நடக்கும். மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோயிலில் பல வருடங்களாக கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. இந்த வருடம் கட்டிட வேலை முடிந்து திருவிழாக்கள் தொடங்க இருந்த நேரத்தில் வேலைகளிற்காக கழட்டி வைக்கப்பட்ட இருபது அடி உயர கொடிமரம் காணாமல் போய் விட்டது.

கொடியேற்றத் திருவிழாவிற்கு சலவைத் தொழிலாளிகளான வண்ணார் சமுகத்தவர்கள் கொடிச்சீலை கொடுக்கும் மரபு இருந்து வந்திருக்கிறது. இப்போது கோயில் திருத்திய பிறகு கும்பாபிசேகம் செய்த பிறகு வண்ணார்களிடமிருந்து ஏன் சீலை வாங்கி கொடியேற்றம் செய்ய வேண்டும் என்ற வேள்ளாள வெறியில் கொடிமரத்தையே கொண்டு போய் ஒளித்திருக்கிறார்கள் சாதி வெறியர்கள். போராட்ட காலங்களில் ஒழித்திருந்த சாதி வெறி பிடித்த காடையர்கள் இப்போது மறுபடியும் வெளி வந்து நஞ்சைக் கக்குகிறார்கள். புலம்பெயர் நாடுகளில் இருந்து செல்லும் பணபலமும் சேர்ந்து கொள்ள வெள்ளாளத் திமிர் ஒடுக்கப்பட்ட மக்களை முன்பு போல தமது அடிமைகளாக வைத்திருக்க பார்க்கிறது. வண்ணார் சமுகத்தவர்கள் காவல்துறைக்கும், நீதிமன்றத்துக்கும் போய் போராடிய பின்பு கொடிமரம் மறுபடியும் கோயிலிற்கு வந்து சேர்ந்திருக்கிறது.

மருதடிப் பிள்ளையார் இப்படியான விளையாட்டுகளில் விண்ணன். அவர் இந்த மாதிரியான கண்கட்டு வித்தைகளை முன்பும் செய்திருக்கிறார். எல்லா சைவக் கோயில்களிலும் ஆதிமுலம் கிழக்கைப் பார்த்தபடி இருக்கும்; பிரதான வாசல் கிழக்கு வாசலாக இருக்கும். மாறாக மருதடிப் பிள்ளையார் மேற்கு நோக்கி பார்த்தபடி இருக்கிறார். பிரதான வாசல் மேற்கு வாசலாக இருக்கிறது. மருதடிப் பிள்ளையாருக்கு வந்த சோதனை என்ன? அவர் ஏன் கிழக்கு பக்கமாக பார்க்காமல் அந்தப் பெரிய உடம்பை கஸ்டப்பட்டு மேற்குப் பக்கமாக திருப்பினார்?. ஏனென்றால் கோயிலிற்கு முன்பாக இலங்கையின் முதலாவது நவீன மருத்துவக் கல்லூரியுடன் சேர்ந்த மருத்துவமனை "மானிப்பாய் மருத்துவமனை" என்ற பெயரில் அமெரிக்க புரட்டஸ்தாந்து மிசனை சேர்ந்த வைத்தியக் கலாநிதி சாமுவேல் கிறீன் அவர்களால் 1848 இல் தொடங்கப்பட்ட மருத்துவமனை இருக்கிறது. அங்கு வரும் நோயாளிகளையும் அங்கு மரணித்த மனிதர்களையும் காணப் பிடிக்காமல் தான் பிள்ளையார் சிலை மேற்குப் பக்கமாக திரும்பி விட்டதாம் என்று பக்தகோடிகள் பஜனை பாடுகிறார்கள்.

போர்த்துகீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என்று வரிசையாக வந்த ஆக்கிரமிப்பாளர்கள் எமது மக்களைக் கொன்றார்கள். நாட்டைக் கொள்ளையடித்தார்கள். விக்கினங்களை தீர்க்கும் விக்கினேஸ்வரன் என்று சொல்லப்படுபவர் அதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாராம். மருத்துவமனையிலிருந்து வரும் நோயாளிகளின் வலி மிகுந்த முனகல்களும், மரணித்தவர்களின் அன்புக்குரியவர்கள் கதறி அழும் வேதனைக் குரல்களும் தான் அவருக்கு பிரச்சனையாக இருந்திருக்கிறது. தமது பருத்த பின்பக்கத்தை திருப்பி காட்டி மருத்துவமனைக்கு தமது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.

சரத் பொன்சேகாவையும், மைத்திரி சிறிசேனாவையும் ஆதரித்துக் கொண்டு போர்க்குற்ற விசாரணை வேண்டும், தமிழ் மக்களின் நிலங்களை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும் என்று தீர்மானம் போடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மருதடிப்பிள்ளையாரின் இந்த பின்னோக்கிய எதிர்ப்பு தான் முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டும்.

சைவ சமயத்திற்கு ஏழைகளையும், நோயாளிகளையும், ஒடுக்கப்பட்டவர்களையும் என்றைக்குமே பிடிப்பதில்லை என்பதைத் தான் மானிப்பாய் வெள்ளாள பெருங்குடிகளின் இந்த கட்டுக்கதை மறுபடியும் எடுத்துச் சொல்கிறது. இந்திய ஆக்கிரமிப்பு படைகளின் கொலைகளிற்கும், கொடூரங்களிற்கும் பயந்து கோயில்களிலும், கிறீஸ்தவ தேவாலயங்களிலும் மக்கள் தஞ்சம் அடைந்திருந்த அந்த அச்சமூட்டும் தருணங்களிலும் யாழ் சைவ வேளாளவெறி தனது மூடத்தனங்களை, மக்கள் விரோத பயங்கரவாதத்தை மறந்து விடவில்லை. கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் கோவிலில் தஞ்சமடைந்திருந்த தாழ்த்தப்பட்ட மக்களை மழை ஒழுகும் பகுதியில் இருக்குமாறு ஒதுக்கி வைத்த மனிதாபிமானம் என்ற ஒன்றே இல்லாத கொக்குவில் சாதி வெறியர்களை தோழர் ஒருவர் எதிர்த்து போராடினார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அசைவம் உணவு உண்டு விட்டு கோவிலிற்குள் வருகிறார்கள் என்று மரணம் சூழ்ந்த அந்த வேளையிலும் கொக்குவில் வெள்ளாள சாதி வெறியர்கள் தூய்மை பேசினார்கள். இது கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் கோவிலில் மட்டும் நடந்த விதிவிலக்கான ஒற்றை நிகழ்வு அல்ல. தமிழ் மண் எங்கும் பொதுப்படையாக நடந்த துயர நிகழ்வுகள். போரினால் இடம்பெயர்ந்து பசியிலும், தாகத்திலும் தவித்த வாய்க்கு ஒரு சிறு துளி நீர் அருந்தப் போனவர்களை சாதி பார்த்து கிணற்றில் தண்ணீர் அள்ள விடாமல் தடுத்த பேய்கள் உலாவும் தேசம் இது.

காஞ்சி சங்கராச்சாரி சேரி மக்கள் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும் என்று தனது ஊத்தை வாயால் சொன்ன பிராமண வெறி தான் இங்கு யாழ்ப்பாண வேளாள வெறியாக வெளி வந்தது. தூய ஆரிய இனம் தான் வாழத் தகுந்தது என்று கிட்லரும், நாசிகளும் இலட்சக்கணக்கணக்கான யூத மக்களையும், ரோமானிய ஜிப்சி மக்களையும் நச்சுவாயு மூலம் கொன்றதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல ஒரே மொழி பேசும், ஒரே இன மக்களை சாதி கொண்டு பிரிக்கும் சைவ வேளாள வெறி.

இது தான் சைவ சமயம் என்னும் பொய்யும், புளுகும் நிறைந்த குப்பை. மனிதர்களை மனிதர்களாக மதிக்காமல் சாதி என்னும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத கீழ்த்தரமான மனிதகுல விரோத பயங்கரவாதிகளின் சமயம். பன்றிக்கு பன்றிக்குட்டி பிறக்கும். கழுதைக்கு கழுதை பிறக்கும். ஆனால் சைவசமயிகள் என்னும் ஆறறிவு படைத்த அறிவுக்கொழுந்துகளைப் பொறுத்தவரை மனிதருக்கு மனிதக் குழந்தைகள் பிறப்பதில்லை. பிராமணக் குழந்தைகள், வெள்ளாள குழந்தைகள் என்னும் மேற்சாதிக் குழந்தைகளும்; கரையார் குழந்தைகள், பள்ளர் குழந்தைகள், பறையர்கள் குழந்தைகள் என்னும் கீழ் சாதி, தீண்டப்பட தகுதியற்ற குழந்தைகளுமே இவர்களைப் பொறுத்தவரை சைவ சமயத்தில் பிறப்பதாக இந்த மண்டை கழண்ட சாதிவெறி முட்டாள்கள் கதை சொல்கிறார்கள்.

எல்லாப் பிள்ளைகளும் ஒரே மாதிரியே பிறக்கின்றன. பிராமணருக்கு பிறக்கும் குழந்தைகள் பூணூலுடன் பிறப்பதில்லை. எல்லாக் குழந்தைகளும் பிறந்தவுடன் அம்மா என்றே அழுகின்றன. பிராமணக் குழந்தைகள் மாதா என்று சமஸ்கிருதத்தில் அழுவதில்லை. இந்த அடிமுட்டாள்களிற்கு, மெத்தப் படிச்ச மேதாவிகள் என்று பீற்றிக் கொள்ளுபவர்களிற்கு இந்த சின்ன உண்மை கூடத் தெரியாது போல உயர்வு தாழ்வு பேசுகிறார்கள்.

இருபத்தொராம் நூற்றாண்டிலும் இப்படியான மூடத்தனங்களை காவித் திரியும் சைவசமய பயங்கரவாதிகளை செருப்பால் அடித்து துரத்தாமல் சமயம், பண்பாடு, மரபு என்ற பெயரில் தமிழ் மக்கள் சேர்ந்து போகிறார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மனிதம் இல்லாத சமுதாயம் என்றைக்குமே முன்னோக்கி பயணிக்கப் போவதில்லை. எவ்வளவோ தூரத்திலிருந்து வந்த சிறு அய்ரோப்பியர் கூட்டம் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளை; பெரும் மக்கள் கூட்டத்தை எப்படி வெல்ல முடிந்தது?.

ஏனெனில் மக்கள் ஒரு சமுதாயமாக இருக்கவில்லை. சைவ சமயத்தின் சாதி என்னும் முள் வேலி அவர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து வைத்திருந்தது. அதனால் ஒன்றிணைந்து ஒரு சமுதாயமாக அவர்களால் போராட முடியவில்லை. இதுவே சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான போரிலும் நடந்தது. அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ளாத சமுதாயம் அடிமைத் தளைகளில் இருந்து விடுபடப் போவதில்லை என்பதை வரலாறு மீண்டும், மீண்டும் எழுதிச் செல்கிறது.