Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதே முன்னுள்ள ஒரே வழி.

தமிழ்மக்கள் மீதான சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் ஊடகவியலாளர்களாலும், மனித உரிமைச்செயற்பாட்டார்களாலும் தொடர்ந்து வெளிக்கொணரப்படுகின்றன. இலங்கை அரசின் போர்க்குற்றங்களை சர்வதேசமன்றத்தில் வைத்து விசாரிக்க வேண்டிய கடைமைப்பாடு கொண்டது என்று சொல்லிக் கொள்ளும் அய்க்கிய நாடுகள் சபை வன்னியில் போர்க்குற்றங்களை முன்னின்று நடத்திய சவேந்திர சில்வாவை இலங்கையின் பிரதிநிதியாக அங்கிகரித்துள்ளது. இனப்படுகொலையின் பின் வன்னி சென்று வந்த பான் கி மூன் இலங்கை அரசின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என்று நற்சான்றிதழ் கொடுக்கிறார்.

இப்போது பொதுநலவாய நாடுகளின் முறை. எவரும் சந்தேகம் கொள்ளத்தேவை இல்லை. நடந்த தவறுகள் குறித்தும் நடக்க வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பேசுவதற்காகவே டேவிட் கமரோன் அங்கு செல்கிறாராம். வன்னிப்போருக்கு முன்பு இலங்கை அரசு போரை எப்படி நடத்த போகிறோம் என்று விளக்கமளித்த பத்திற்கு மேற்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. இலங்கைக்கு ஆயுதங்களை விற்ற நாடுகளில் ஒன்று பிரித்தானியா. மகிந்த ராஜபக்ச நாட்டின் ரெளடி என்றால் இவர்கள் உலகத்தின் ரெளடிகள். தங்களது கட்டுப்பாட்டில் உலகம் இருக்க வேண்டும் என்பது தான் இவர்களது ஒரே நோக்கம். அதற்காக எவருடனும் கூட்டுச் சேர்ந்து கொள்வார்கள். சிலியில் பல்லாயிரம் பேரைக் கொன்ற பினாச்செட், மத்திய கிழக்கின் சர்வாதிகாரிகள், பாகிஸ்தானின் இராணுவ கொடுங்கோலர்கள் என்று அத்தனை அயோக்கியர்களும் இவர்களது நண்பர்கள்.

இவர்கள் தங்களிற்கு சாதகமானவர்களை ஆட்சியில் அமர்த்தப் பார்ப்பார்கள். இல்லையென்றால் ஆட்சியில் இருப்பவர்களின் குற்றங்களை வைத்து மிரட்டி தமக்கு சாதகமானவர்களாக்கிக் கொள்வார்கள். ரணில் விக்கிரமசிங்கா, சரத் பொன்சேகா என்று தமது நண்பர்களை ஆட்சிக்கு கொண்டு வரப்பார்த்தார்கள். தமிழ் பயங்கரவாதிகளை அழித்து விட்டேன் என்று சிங்கள மக்களிடம் இனவாதம் பேசி தேர்தல்களில் வெற்றி பெற்றும், அடக்குமுறையை காட்டி எதிர்ப்புகளை ஒடுக்கியும் மகிந்தா சர்வாதிகாரத்துடன் இருப்பதால் சீனாவின் கூட்டாளியான மகிந்த ராஜபக்சவை இனப்படுகொலை சாட்சியங்களை வைத்து மிரட்டி தமது வழிக்கு கொண்டு வருகிறார்கள்.

 பொருளாதாரத்தில் சீனாவின் முதலீடுகளை வேறு வழியின்றி தமது நாடுகளிலேயே அனுமதிக்கும் மேற்குநாடுகள் தமது இராணுவ மேலாதிக்கம் குறைந்து விடக்கூடாது என்பதிலேயே கவனமாக இருக்கின்றன. சீனாவின் முத்துமாலைத் திட்டம் போன்ற பாதுகாப்பு திட்டங்கள் மீதே அவர்களின் கவனங்கள் குவிந்திருக்கின்றன. அதனால் அவர்களிற்கு இலங்கை அரசு தேவையாக இருக்கிறது. அவர்கள் யாரையும் விசாரிக்கப் போவதில்லை. எவருக்கும் தண்டனை கொடுக்கபோவதில்லை.

மக்கள் விடுதலை முன்னணியின் எழுபத்தொராம் ஆண்டு புரட்சியின் போது இலங்கையில் சுதந்திரக்கட்சி, லங்காசமசமாஜக்கட்சி, கம்யுனிஸ்கட்சி என்பவற்றின் சந்தர்ப்பவாத கூட்டு முன்னணி ஆட்சியில் இருந்தது. இது பெயரளவில் வலதுசாரி பிரித்தானியாவிற்கு எதிர்நிலையில் நின்றது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியாளர்களை கொல்வதற்கு அவர்கள் ஒன்று சேர தயங்கவில்லை. லண்டனில் உள்ள ஆவணக்காப்பகத்தில் இருந்து தகவல்களை அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொண்ட ஆவணங்கள் பிரித்தானிய அரசு இலங்கை அரசிற்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்கியதை அம்பலப்படுத்துகின்றன.

பொதுநலவாய மாநாட்டிற்கு அவர்கள் சுற்றுலாவாக வரவில்லை. பலகோடி மதிப்புள்ள வர்த்தக ஒப்பந்தங்களை செய்வதற்கே அவர்கள் வருகிறார்கள். சுதந்திர வர்த்தக வலயம் என்ற பெயரில் தொழிலாளிகளின் உரிமைகளை நசுக்கியது போல் இப்போது சுதந்திர கல்வி வலயம் என்ற பெயரில் கல்வியை வியாபாரப்பொருளாக்கப் போகிறார்கள். ஏழை மாணவர்களிற்கு பல்கலைக்கழககல்வி என்பது இனி எட்டாக்கனியாகப் போகிறது. இலங்கையில் கல்வி அடிப்படை உரிமை என்பது பழங்கதை ஆகப் போகிறது.

மக்களின் எதிரிகள் மக்களை ஒடுக்குவதற்காக ஒன்று சேர்கிறார்கள். கறுப்பு முதலாளிகளும், வெள்ளை முதலாளிகளும் கட்டிப் பிடித்துக் கொண்டு ஏழைகளை சுரண்டுகிறார்கள். பெளத்த சிங்களம் பேசுபவர்கள் எந்த மதத்தவனுடன் சேர்ந்தும் எழைச்சிங்களவனை ஒடுக்க தயங்குவதில்லை. தமிழர்கள் என்பதற்காக கருணாநிதியும், ஜெயலலிதாவும் காங்கிரசுடன் சேர்ந்து தமிழரை கொல்ல கணமும் தயங்கவில்லை. எதிரிகள் ஒன்று சேரும் போது ஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதே முன்னுள்ள ஒரே வழி.