Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

21-ம் நூற்றாணடின் “நவீன கிருஸ்ண பரமார்தமா மகிந்தா உபதேசம்”

நான் உயிரோடு உள்ளவரை இனியொரு கிளர்ச்சி ஏற்பட விடமாட்டேன்!  கே.பி. பேட்டி

21-ம் நூற்றாணடின் “நவீன கிருஸ்ன பரமார்தமா மகிந்தா உபதேசம்” செய்கின்றார்!
கிளர்ச்சிகள்-புரட்சிகள் தனிமனித விருப்பு-வெறுப்புகளின் பாற்பட்டதல்ல!.
“தான் உயிருடன் உள்ள வரை அதாவது தன்னைக் கொன்றுவிட்ட பின்னர் தான் இலங்கையில் இனியொரு கிளர்ச்சியை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என்று உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதத் தரகரும் பின்னர் தன்னைத் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவருமான குமரன் பத்மநாதன்”.

ஐ.நா.அறிக்கை……

“இந்த அறிக்கையுடன் வன்னிக்குப் போனால் ஆயிரம் அல்லது லட்சம் மக்கள் இதனால் பயனடைவார்களாக இருந்தால்… அப்போது அது வேறு கதையாக இருக்கும். ஆனால் இந்த அறிக்கையால் எவருமே நன்மையடையப் போவதில்லை என்பதுதான் உண்மை. முழு நாடும் இந்த அறிக்கைக்கு எதிராக இருக்கிறது. கள யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள  வேண்டும். முடிந்தது முடிந்தது தான். போரின் முதல் அர்த்தமே சாவு தான். போரில் எது முதலில் சாகிறது? உண்மைதான். எல்லா இடத்திலுமே போருக்கு ஒரே பொருள் தான். நல்ல போர் கெட்ட போர் என்று ஒன்றுமில்லை. போர் எப்போதும் எங்கேயும் போர் தான். இங்கே வெற்றி பெறுவதற்காக இரு தரப்புகளும் முடிந்தளவுக்கு முயற்சித்தன. நடக்கிற எல்லாப் போர்கள் தொடர்பிலும் ஐ.நா. அறிக்கை வேண்டும் என்றால் எங்கு போய் முடியும்?”

“போர் முடிந்து விட்டதாகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் உணர்கிறேன். இது தான் மிக முக்கியமான புள்ளி. இந்தப் போரில் அரசு தான் வெற்றியாளர்,  புலிகள் தோல்வியாளர்கள். ஆனால் தோற்றவர்களின் பக்கம் இன்னும் கொஞ்சம் பேர் மிச்சம் இருக்கிறார்கள். இப்போதும் அவர்கள் இங்கே தான் வாழ்கிறார்கள், நான் உட்பட. எந்தவொரு போரிலோ தாக்குதலிலோ பங்கெடுக்கவில்லை என்றாலும் நானும் கூட ஒரு விடுதலைப் புலி உறுப்பினன் தான். இந்தப் போரால் யாருக்கு என்ன பயன்? ஒருத்தருக்கும் கிடையாது. மக்களுக்கு வேண்டியதெல்லாம் உணவும் உடுப்புகளும் தான். தங்கள் வாழ்வை அவர்கள் மீளக்கடியெழுப்பியாக வேண்டும். ஐ.நா. அறிக்கை ஒரு தகவல் அறியும் நடவடிக்கை, அது ஒரு அறிக்கை. ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? ” இப்படி கே.பி. ஒரு பேட்டி.

மகாபாரதத்தின் அரசியல் மதி உரைஞர், பாரதப்போரின் சூத்திரதாரி கிருஸ்ணன் என்பர். இது போன்று புலிகளின் சிலவற்றுக்கானவைகளுக்கு கே.பி.யையும் சேர்த்துக் கொள்ளலாம். பாரதத்தின் 17-போரின்போது, கிருஸ்ணர் அர்ச்சுனனுக்கு கீதா உபதேசம் செய்தார். அதுபோன்று முள்ளியவாய்க்காலின் 17-வது நாள்பற்றி கே.பி. “மகிந்தா உபதேசம்” செய்கின்றார்.

“போரின் முதல் அர்த்தமே சாவு தான். போரில் எது முதலில் சாகிறது? உண்மை தான்.” என்கின்றார். போரின் “முதல் அர்த்தமான மக்களின் சாவிற்கு” கப்பல் கப்பலாக நவீன ஆயுதங்களை அனுப்பி பிரபாகரனுக்கு “கொலை உபதேசம்” செய்தவர் தான், இவ்வாயுதத் தரகர்.  சரி அதை அரசியல் முதிர்ச்சியின்மை எனக் கணித்தாலும், இப்போ முதிர்ச்சியில் உள்ள இவர் “போரில் சாவது முதலில் உண்மை தான்” என்ற யதார்த்தத்தை மனச்சாட்சியுடன் தான் பகிர்கின்றாரா?


“தமிழ் மக்களுக்கு வேண்டியதெல்லாம் உணவும் உடுப்புகளும் தான். தங்கள் வாழ்வை அவர்கள் மீளக்கடியெழுப்பியாக வேண்டும். ஐ.நா. அறிக்கை ஒரு தகவல் அறியும் நடவடிக்கை, அது ஒரு அறிக்கை. ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? இந்த அறிக்கையுடன் வன்னிக்குப் போனால் ஆயிரம் அல்லது லட்சம் மக்கள் இதனால் பயனடைவார்களாக இருந்தால்… அப்போது அது வேறு கதையாக இருக்கும். ஆனால் இந்த அறிக்கையால் எவருமே நன்மையடையப் போவதில்லை என்பது தான் உண்மை.”

இப்பேர்ப்பட்ட “நவீன சமூக-விஞ்ஞானக் கருத்துருவாக்கங்களை”  கே.பி. போன்ற மகிந்தத் தரகர்கள் மட்டுமல்ல, மகிந்தாவின் பற்பல-தேசிய-சர்வதேச் “சிந்தனையாளர்களும்” உருவாக்குகின்றார்கள். இதை பிரதான காரணியாகக் காட்டி, போர்க் குற்றத்தில் இருந்து மகிந்த-அரச-குடும்பத்தை காப்பாற்றுவதே இவர்களின் பிரதான நோக்கம்.

இதனாலேயே “நாம் புதிய சகாப்தம் ஒன்றின் ஆரம்பத்தில் இருக்கிறோம். நடந்ததெல்லாம் நடந்தது தான். ஐ.நா. அறிக்கையின் படி இரு தரப்புகளுமே தவறிழைத்துள்ளன. இந்த அறிக்கை எந்தவொரு நல்லிணக்கத்துக்கும் உதவப் போவதில்லை. இது ஒரு இடைஞ்சல் தான். யாருக்கும் இந்த அறிக்கையால் பயனில்லை. அது ஒரு தகவல் அறியும் நடவடிக்கை, ஒரு அறிக்கை, அவ்வளவு தான்.”  எனவே இதை மறப்போம் மன்னிப்போம் என்கின்றனர்.

முள்ளியவாய்க்காலின் மாபெரும் மனிதப் படுகொலையின் மகிந்தப் பாசிஸ அரச அரங்கேற்றத்தை, நடந்ததெல்லாம் நடந்ததுதான், நாம் இப்போ புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தில் உள்ளோம் எனபதன் உள்ளார்ந்த யதார்த்தம் தான் என்ன? போர் என்றால் போர் தான். கெட்டபோர்-நல்லபோர் என்ற ஒன்றே இல்லை. போர் என்பது அழிவிற்கானது. எனவே அதை தான் உயிருள்ள வரை ஏற்பட விடமாட்டேன் என்ற கே.பி.யின் அரசியல் கண்ணோட்டம் கோமாளித்தனம் கொண்டது. நக்கிற நாய்க்கு செக்கும் சிவலிங்கமும் ஒன்றே என்பது போன்றதுகளின் போர்கணிப்பு இப்படித்தான் இருக்கும்.

ஏகாதிபத்திய-முதலாளித்துவ-பாஸிச-சர்வாதிகாரத்தை, அதை பிரதிபலிக்கும் அரசுகள்-அதன்,அரச-இயந்திரம்-ஆகியவற்றின்,அடக்குமுறைப் போராட்டங்களையும், அதற்கு எதிரான நியாயமான சுதந்திர-தேசிய-ஐனநாயக-விடுதலைப் போராட்டங்களையும் எப்படி வகைப்படுத்துவது?. கே.பி. போன்றவர்களின் வெற்றி-தோல்வி என்பதற்குள் சாவென்பதற்குள் முடக்கி விடுவதா? இதில் அடக்கி-ஒடுக்கலில் சரி-பிழை, நீதி-அநியாயம், என்பவைகளிற் கூடாகப் பார்ப்பதா?

அதிகாரப் பித்திலான பேரினவாதப் பேயரசின் வெற்றியை நிரந்தனமானதககக் கருதி, அவ்வினவெறியில் மூழுகியுள்ளவர்களுக்கு மனிதகுல வரலாறும் அது தந்த பாடங்களும் தெரியாததில் வியப்பில்லை. தாங்கள் நினைப்து போல், கணிப்பது போல் உங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது தான், கிளர்ச்சிகளும், புரட்சிகளும். இது மக்களின் போராட்ட வரலாறு. இதைத் தீர்மானிப்பவர்கள் மக்களே! இதை அம்மக்கள் கையிலெடுக்கும் போதொரு புதிய சகாப்தம் ஏற்படும். அப்போது நீங்களும்-உங்கள் எஐமானர்களும் அரசியல் அரங்கில் இல்லாதாகுவீர்கள். இது வரலாற்று நியதி.

அகிலன்

24/05/2011