Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதியமும்-தமிழ் தேசியமும்…..பகுதி-11

ஒடுக்கபட்ட மக்களின் 66- அக்டோபர் 21 எழுச்சி…..
 
தமிழ் மக்களின் ஆண்டாண்டுகால சமூக வாழ்வியலில் "இரண்டு விதமான தமிழர்கள்" வாழ்ந்து வந்தார்கள் என்பதே வரலாறு. இதை ஒடுக்கும் தமிழ் சமூகமாகவும், ஒடுக்கப்படும் தமிழ் சமூகமாகவும் வகுக்கமுடியும்.  இதை வர்க்கத்திற்கு ஊடாகவும், சாதியத்திற்கு ஊடாகவும் காணமுடியும். தமிழ் மக்கள் மத்தியிலான அடக்குமுறை கொண்ட சாதியத்தின் வீரியத்தை ஆண்ட பரம்பரையின் பிதாமகன் நாவலருக்கு ஊடாக காணமுடியும்.

ஆண்ட பரம்பரைகளின் சாதிய அடக்குமுறைக்கு எதிரான ஒடுக்கபட்ட மக்களின் போராட்டம், அம்மக்கள் மத்தியில் உதித்த போராட்ட முன்னோடிகளுக்கு ஊடாக ஆரம்பிக்கபட்டு, வாலிபர் காங்கிரஸ் முதல் சிறுபான்மைத்தமிழர் மகாசபை வரை வந்த வரலாற்றை கடந்த பத்துப்பகுதிகளில் கண்டு கொண்டோம். இப்போராட்டங்களின் வளர்ச்சியின் அடிப்படை சாராம்சத்தில் சமாதான-சாத்வீகத்தின் உள்ளடக்கம் கொண்ட பரிமாணத்திற்கு ஊடாகவே வளர்ந்து வந்தது. வரலாற்றில் இதன் அடுத்தகட்டம் புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களாக பர்ணமிக்கின்றன.
 
சாதியத்திற்கெதிரான அக்டோபர் எழுச்சியின் காரணிகள்!
 
இவ்வெழுச்சிக்கான உத்வேகத்திற்கு அன்றைய தேசிய-சர்வதேச நிகழ்வுகளும் பெரும் துணையாயின. தேசிய ரீதியில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவானது, இருவித மார்க்கங்களை கொண்டதானதாக இருந்தது. ஒன்று பாராளுமன்ற சமாதான சகஜீவனப் பாதைமூலம், சமூதாய மாற்றம் முதலான சகலதையும் அடையலாம் என்பதும், இன்னொன்று புரட்சிகர வெகுஜனப் போராட்ட மார்க்கம் மட்டுமே சமுதாய மாற்றத்திற்கும், விடிவிற்கானதுமாகும் எனும் மார்க்கங்கள் ஆகும். இதில் சாதியப்போராட்டத்தை புரட்சிகர வெகுஜனப்போராட்ட மார்க்கமாக முன்னெடுத்த சண்முகதாசன் தலைமையிலான கட்சியின் போராட்ட எழுச்சிக்கு அன்றைய சர்வதேச நிகழ்வுகளும் பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது.
 
அறுபதாம் ஆண்டுக்காலகட்டம் மூன்றாம் உலக நாடுகளான ஆசிய-ஆபிரிக்க-லத்தீன் அமெரிக்காவில் கிளர்ச்சிகளும், போராட்டங்களும் உத்வேகததுடன் நடைபெற்ற காலப்பகுதியாகும். வியட்னாம், லாவோஸ், கம்போடிய மக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடினார்கள். லத்தீன் அமெரிக்க நாட்டு மக்கள் தத்தம் விடுதலைக்காகப் போராடினார்கள். ஆபிரிக்க மக்கள் காலனித்துவத்திற்கும், நிறவெறிக்கும் எதிராகப் போராடினார்கள். அமெரிக்காவின் கறுப்பின நீக்ரோ மக்கள் அமெரிக்க வெள்ளை இனவெறிக்கு எதிராகப் போராடினார்கள். இத்தோடு சீனாவில் கலாச்சாரப் புரட்சியும், இந்தியாவில் நக்சல்பாரிப் போராட்டங்களும் உச்சகட்த்தில் இருந்தன. இப்போராட்ட வடிவங்களை  அடிநாதமாகக் கொண்டே, மாவோ அவர்கள் "தேசங்கள் சுதந்திரத்தை விரும்புகின்றன, நாடுகள் விடுதலையை விரும்புகின்றன, மக்கள் புரட்சியை விரும்புகின்றார்கள்" எனும் கோட்பாட்டு உருவாக்கத்தை உருவமைத்தார்.
 
இப்போராட்ட எழுச்சிகளின் தாக்கம் இலங்கையிலும் எதிரொலித்தது. தென்னிலங்கையில் பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டங்களாகவும், மலையகத்திலும், சிங்ஙகள மக்கள் மத்தியில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களாகவும் நடைபெற்றன. இப்பேர்ப்பட்டதொரு போராட்டக் கொந்தளிப்புக்கள் கொண்டதொரு தேச-கால-வர்த்தமானம்தான், சாதியத்திற்கெதிரான அக்டோபர் எழுச்சியையும் முன்னெடுக்கத் (கம்யூனிஸ்ட் கட்சியை) தூண்டிற்று.

சமத்துவ நீதிக்கான சுன்னாக சட்டவிரோத ஊர்வலம்!

1966-ம் ஆண்டின்  நடுப்பகுதியில் கூடிய, கம்யூனிஸ்ட் கட்சியின் (சண் தலைமை) பல மத்தியகமிட்டிக் கூட்டங்களில், அன்றைய வடபகுதியில் உள்ள ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட ஓடுக்கப்பட்ட மக்களின் சாதிய நிலைமைகள் பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டன. இதில் சாதியத்தை தகர்க்கும் நோக்கில், முதற்கட்டமாக சமத்துவத்திற்கான போராட்டங்களை முன்னனெடுக்க வேண்டும் எனும் முடிவிற்கு வந்தது. இதற்கான வேலைமுறை கட்சியின் வடபிரதேச கமிட்டியிடம் ஓப்படைக்கப்பட்டது.

வடபிரதேசக் கமிட்டி, 1966-அக்டோபர் 21-ந் திகதிஇ சுன்னாகம் சந்தை மைதானத்தில் இருந்து, சாதியத்திற்கு எதிரான ஊhவலத்தை ஆரம்பித்து, யாழ்ப்பாணம் முற்றவெளிவரை நடாத்தி, அங்கேயே பொதுக்கூட்டத்தை நடாத்துவது எனவும் தீர்மானித்தது. இதற்கான சட்டரீதியான அனுமதி போலீசாரிடம் கோரப்பட்டது. ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தும் சட்டவிரோதமாகவே இவ்வூர்வலத்தை நடாத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. தீர்மானத்தினதும், தயாரிப்புகளினதும் அடிப்படையில், கட்சியினதும், அதன் வெகுஜன அமைப்புகளினதும் பிரதிநிதிகள், வெகுஜனங்கள் உள்ளிட்டோர் சுன்னாகம் சந்தை மைதானத்தில் கூடினர்.

மாலை 5-மணியளவில் சந்தை மைதானத்தில் இருந்து "சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்" எனும் பதாகைகள் கொண்டு, ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தின் முன்னணியில் கே.ஏ. சுப்பிரமணியம், டாக்டர் சீனிவாசகம், வீ.ஏ.கந்தசாமி, டி.டி. பெரேரா, இ.கா. சூடாமணி, எஸ். ரி. என். நாகரத்தினம், கே.டானியல் ஆகியோர் அணிவகுத்துச் சென்றனர்;. இதற்கடுத்ததாக சி.கா.செந்திவேல், எம்.ஏ.சி. இக்பால், சி.நவரட்ணம், கு. சிவராசா, கி.சிவஞானம், பி.பசுபதி, ப.கிருஸ்ணன், த.தருமலிங்கம், நா. யோகேந்திரநாதன், த. குணரடணம் ஆகியோர் சென்றனர்.

சட்டவிரோத ஊர்வலம் சுன்னாகம் பொலிஸ்நிலைய முன்றலை அண்மித்ததும், வீதிக்கு குறுக்கே நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். அதை மீறி ஊர்வலத் தலைமை முன்னேற முயன்றுபோது, முன்ணணித் தலைவர்கள் தாக்கப்பட்டனர். பலரின் மேற்சட்டைகள் கிழித்தெறியப்பட்டன. இதன்பொருட்டு கால்மணி நேரத்திற்கு மேல் பொலிஸ்நிலைய முன்றல் போராட்டக்களமாவே காட்சியளித்தது. இதற்கிடையில் போலீசாருக்கு எதிராக கல்லெறித் தாக்குதல்களும் நடைபெற்றன. இதன்பால் கோபமடைந்த பொலீசாரால் கே.ஏ.சுப்பிரமணியம், வீ.ஏ.கந்தசாமி, இ.கா.சூடாமணி ஆகியோர் மோசமாக தாக்கப்பட்டு, போலீஸ் நிலையத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு, அடைக்கப்பட்டனர்.

இதற்குப் பின்பும் இச்சட்டவிரோத ஊர்வலம், போலீசாரின் அச்சுறுத்தலையும் மீறி, யாழ் முற்வெளி மைதானம் வரை சென்று, திட்டமிட்டபடி பொதுக்கூட்டத்தையும் நடாத்திற்று. கூட்டத்திற்கு டாக்கடர் சீனிவாசகம் அவர்கள் தலைமை தாங்கினார்;. கட்சியின் பொதுச்செயலாளர் நா.சண்முகதாசன், கே.டானியல், சி.கா. செந்திவேல் ஆகியோர் உரையாற்றினர். சண்முகதாசன் அவர்கள் தமது உரையில்…

"ஆண்டாண்டு காலமாக சாதி அடக்குமறையின் கீழ் அடிமை-குடிமைகளாகவும், தீண்டத்தகாதவர்களாகவும், வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், தமது உரிமைகளை வென்றெடுக்க புரட்சிகரப் போராட்ட மார்க்கத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் கொடுக்கும் நிலையை மாற்றி, அடித்தால் திருப்பி அடிக்கும் நிலையை ஒடுக்கப்பட்ட மக்கள் எடுக்க வேண்டும். இம்முறை கொண்டுதான் சாதியத்தை எதிர்த்து, தீண்டாமையை ஒழிக்க முடியும். இதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு, எமது கட்சி வழிகாட்டித் தலைமை தாங்கும் எனவும் அறைகூவல் விடுத்தார்". இக்கூட்டம் முடிந்த பின்னாதான் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அடைக்கப்பட்ட போராளிகள் மூவரும் விடுதலை செய்யப்பட்னர்.
 
போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான கண்டனக்கூட்டம்!
 
அக்டோபர் எழுச்சிக்கு பின்பான, ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் அனைத்தும், அம்மக்களினதும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த--உயர்சாதி நல்லெண்ணம் கொண்ட மக்களின் ஆதரவு கொண்டும், சட்டவிரோதமாகவே வடபகுதி எங்கும் நடாத்தப்பட்டன. இதற்கு முன்னோடியாக, 66-அக்டோபர் 21-ல் நடைபெற்ற ஊர்வலத்தில் போலீசாரின் அடக்குமுறை கொண்ட அராஜக வன்முறையைக் கண்டித்து, சட்டவிரோத ஊர்வலம் ஆரம்பித்த இடமான சுன்னாகம் சந்தை வளாகத்தில் (26-11-66-ல்) கண்டனக் கூட்டத்தை நடாத்தியது. கே.ஏ.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகதாசன் உட்பட அன்றைய கம்பகா எம்.பி. எஸ்.டி. பண்டாரநாயக்க, வீ.ஏ. கந்தசாமி, கே. டானியல், சுபையர் இளங்கீரன், சி.கா. செந்திவேல், நீர்வை பொன்னையன் ஆகியோர் உரையாற்றினர்.

(தொடரும்)

 27/10/2012

 

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-1)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-2)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-3)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-4)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-5)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-6)