Wed10162019

Last updateSat, 29 Jun 2019 5am

புதுமுகம் வந்தது, புதுயுகம் பிறக்குமா?

ஜனாதிபதித் தேர்தல் முடிந்துவிட்டது. மைத்திரிபால சிறிசேன இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் எப்படியான கொள்கைகளை முன்வைத்து தேர்தலில் இறங்கினார்கள்? இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவர்கள் கையாண்ட உபாயங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பது குறித்து ஒரு சிறிய ஆய்வு மாத்திரமே இது.

நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவிலிருந்து ஆரம்பிப்போம். இவருடைய தேர்தல் பிரச்சாரங்களை நோக்கும்போது அவை கொள்கை விளக்க பிரச்சாரங்களாக இருந்ததாகத் தெரியவில்லை.

மைத்திரிபால சிறிசேனவை விமர்சிப்பதற்கே முக்கியத்துவமளிக்கப்பட்டது. அந்த விமர்சனங்கள் கூட கொள்கை சம்பந்தமான விமர்சனங்களாக இருக்கவில்லை. மைத்திரிபால பலவீனமானவர், பொம்மை, ஆடைகளை தெரிவு செய்வதில் நரேந்திர மோடியையே மாதிரியாக எடுத்துக் கொண்டார் போன்றவையே பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டன.

அடுத்தது, மைத்திரி அமைச்சராக இருந்தபோது மஹிந்தவை உயர்வாக பேசிய சந்தர்ப்பங்கள் இந்த பிரச்சாரத்தின்போது பயன்படுத்தப்பட்டன. அவை பெரும்பாலும் தனிப்பட்ட அவதூறுகளாகவும், சேறு பூசும் நடவடிக்கைகளாகவுமே இருந்தன. மஹிந்த ராஜபக்ஷ தனது கொள்கைகள் குறித்து அதிகம் பேசவில்லை. தனது இரண்டு முக்கிய கொள்கைகள் குறித்து வெளிப்படையாகவே பேசினார்.

1. தந்திரோபாயமாக இனவாதத்தை பயன்படுத்தி தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தார்.

2.அபிவிருத்தி என்ற பெயர்ப்பலகையின் கீழ் நவதாராளமய முதலாளித்துவத்தை தான் ஏற்றுக் கொள்வதாக நேரடியாகவே கூறினார்.

மஹிந்தவின் பிரச்சாரங்களின்போது அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்களைக் காட்டவும், இனவாத ரீதியில் எதிர்க்கட்சியை தாக்கிப் பேசவுமே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார். மைத்திரிபால புலிகளின் கைப்பொம்மை, ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அவரது பேச்சில் காணப்பட்டன. இதன் மூலம் மக்கள் மத்தியில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதே அவரது நோக்கமாக இருந்தது.

எவ்வாறாயினும், வடக்கில் தமிழ், முஸ்லிம் மக்களோடு கருத்தொற்றுமைக்கு வரவேண்டிய தேவை அவருக்கு எப்போதுமே இருந்ததில்லை. கிராமப்புற சிங்கள
மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்தி, அதன் பலத்தினால் வடக்கை அடக்கி வைத்துக் கொள்வதே அவரது தந்திரமாக இருந்தது. வடக்கு சம்பந்தமாக அவரிடமிருந்தது யுத்தரீதியான திட்டம். மலையகம் உள்ளிட்ட பெருந்தோட்டத்துறையை சார்ந்த தமிழ் மக்களுக்கு கடுகளவாவது எதையும் பெற்றுக் கொடுக்காது அவர்களது தலைவர்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதன் ஊடாக அவர்களின் வாக்குகளை கொள்ளையடிக்க முயன்றார்.

இம்முறை தேர்தலில் மஹிந்தருக்கு எதிராக அசுரவேகத்தில் செயற்பட்டவர்கள் மலையகத்தை சேர்ந்த தமிழ் மக்கள் மற்றும் வடக்கு கிழக்கு தமிழ்- முஸ்லிம் மக்களாகும்.

வடக்கு - கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும், நூரளை, பதுளை ஆகிய மாவட்டங்களிலும் மஹிந்த தோற்றது அதனால்தான். பேருவளை, காலி, மாவனல்லை, அக்குறனை போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலும் மஹிந்த தோற்றார். ஆனால் கிராமப்புற சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டதை காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மொணராகலை, குருநாகல் போன்ற மாவட்டங்களை பார்க்கும்போது தெரிகிறது.

தவிரவும், நகர்ப்புற பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் தாம் வசித்த வீடுகளிலிருந்து விரட்டப்பட்டமையால் மஹிந்தவின் மீதிருந்த கோபத்தின் காரணமாக அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது மாத்திரமல்ல, ஜனநாயகம் சம்பந்தமான சுலோகத்தினால் கவரப்பட்ட நடுத்தர வர்க்க மக்களும் அவருக்கு எதிராகவே செயற்பட்டுள்ளனர். கொழும்பு நகர், மொரட்டுவை, இரத்மலானை, தெஹிவலை மற்றும் ஐதேக சார்பு கரையோரப் பிரதேசங்களும் நகர்புற பிரதேசங்களும் இதற்கான எடுத்துக்காட்டுகளாகும். ஜாதிக ஹெல உறுமய, மக்கள் விடுதலை முன்னணி, சரத் பொன்சேகா உட்பட அனைவரும் ஒன்றிணைந்த போதிலும் கிராமப்புற பிரதேசங்களில் இடைவெளியை குறைக்க முடிந்ததேயன்றி மஹிந்தவை தோற்கடிக்க அவர்களால் முடியவில்லை.

பொலன்னறுவையில் பெரியளவில் வாக்குகள் கிடைத்திருக்கவில்லை. சந்திரிகாவால் அத்தனகலவை தக்கவைக்க முடியவில்லை. மஹிந்தவின் வாக்கு வங்கி தெளிவாக இருப்பதை போன்றே மைத்திரியின் வாக்கு வங்கியும் தெளிவாகவே உள்ளது. தமிழ் முஸ்லிம் மக்களின் பெரும்பாலான வாக்குகள் மைத்திரிக்கு கிடைத்துள்ளன.

கரையோர பிரதேசங்களில் கத்தோலிக்க மக்கள் மத்தியிலும், நகர்புற வறிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மத்தியிலும் மஹிந்தவிற்கு சார்பான நிலையொன்று இருந்தது. இவர்கள் மீது பாரியளவில் ஆதிக்கம் செலுத்த மைத்திரியால் முடியாது போனது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் வேறு திட்டத்தின் பிரிவுகளாக ஆகியுள்ளனர்.

அவர்களை மைத்திரியால் நேரடியாக ஒழுங்குபடுத்த முடியாது. உதாரணமாக, திகாம்பரம் போன்றவர்களின் எழுச்சி பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் மீது தாக்கத்தை செலுத்தக் கூடும், அதேபோல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் நாளைய நாளில் வெளியிடப்படும் சிறு அறிக்கையினால் கூட அந்த சிறுபான்மை வாக்குகளை மைத்திரிபால இழக்க நேரிடும். அதனை அவரால் ஒழுங்குபடுத்த முடியாது. அதேபோன்று, அதற்கான பொறிமுறையொன்றையும் அவரால் அமைத்துக் கொள்ள முடியாது. அந்த வாக்குகளுக்கும் கிராமிய மக்களுக்குமிடையில் உறவுகளை பேணும் திட்டத்தை செயற்படுத்துவதும் எளிதாக இருக்காது. ஆகவே, தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது ஒரு சிறு அசைவினால் கூட மறுபக்கம் திரும்பக்கூடிய ஆபத்தைமைத்திரிபால எதிர்நோக்கியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் பிரச்சார நடவடிக்கைகளில் கொள்கையை மிதித்துக் கொண்டு அவதூறுகளும், சேறுபூசுதலும் மற்றும் இனவாதமும் மேலெழுந்தன. அதேபோன்று மைத்திரியின் பிரச்சார நடவடிக்கைகளின்போதும் கொள்கை சம்பந்தமான பேச்சுக்கள் மறைக்கப்பட்டன. அதற்கு பதிலாக 'மஹிந்தவை விரட்டுவோம்" என்ற சுலோகம் மாத்திரமே மேடைக்கு வந்தது. இறுதியாக பலதரப்பட்ட கொள்கைகள் பின்தள்ளப்பட்டு பல்வேறு விதமான பேச்சுக்கள் மேடைக்கு வந்தமை, தேர்தலுக்கு வந்தமை மைத்திரிக்கு வாய்ப்பாக இருந்தாலும் தேர்தலுக்கு பின்பு அவருக்கு அது வாய்ப்பாக இருக்காது.

"மஹிந்தவிற்கு மூன்று முறை முடியாது" என்ற சுலோகத்திலிருந்து 'மோசடியான குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டுவோம்" என்ற கட்டம் வரை பிரச்சாரத்தை முன்னெடுத்த மக்கள் விடுதலை முன்னணி கொள்கை சம்பந்தமான பேச்சுக்களை மறைக்க ஒத்துழைத்தது. தவிரவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையோ அல்லது அரசியலமைப்பையோ பற்றி பேசுவதற்கு எதுவுமே இல்லாததால் இறுதியாக இந்த நிலைமைக்கு ம.வி.மு தள்ளப்பட்டது. இந்த தேர்தல் நடவடிக்கைகளில் தனது கொள்கைகளை விளக்கி ஏனைய வேட்பாளர்கள் சம்பந்தமான விமர்சனங்களை முன்வைத்தது இடதுசாரிய முன்னணி மாத்திரமே.

குறிப்பாக மஹிந்த மற்றும் மைத்திரியின் கொள்கைகள் சம்பந்தமாக தரமான விமர்சனத்தை துமிந்த நாகமுவ முன்வைத்தார். இருபக்கத்தாலும் அவர் தாக்கப்பட்டது அதனால்தான். எவ்வாறாயினும், கொள்கை சம்பந்தமான பேச்சுக்களை தவிர்த்து ஜனாதிபதித் தேர்தல் முடிந்திருப்பதோடு, விதைத்தவற்றின் விளைச்சலை எதிர்காலத்தில் அறுவடை செய்ய முடியும்.

எது எப்படியிருந்தாலும், இந்த தேர்தலில் நாம் கவனிக்க வேண்டி முக்கிய அம்சம் என்னவெனில், வெற்றி பெற்றிருக்கும் சிங்கள பௌத்த மைத்திரிபால சிரிசேன தமிழ் - முஸ்லிம் மக்கள் மீதான இன ஒடுக்குமுறை குறித்து வாய் திறந்திராத ஒருவர். தேர்தல் காலத்தில் மஹிந்தவை போன்றே அவரது சிங்களவாத பிரச்சார நடவடிக்கைகளும் இருந்தன. போர் வீரர்களை சர்வதேசத்திற்கு காட்டிக் கொடுக்கப் போவதில்லை என சபதம் செய்தமை, நாட்டின் ஒருமைப்பாட்டை உயிர்த்தியாகத்துடன் பாதுகாப்பதாக வழங்கிய உறுதிமொழி போன்றவை அவரது சிங்களவாத சிந்தனைக்கு எடுத்துக்காட்டுகளாகும். அவரது தேர்தல் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டிருந்த லிபரல் புத்திஜீவிகள் ஜனநாயக உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டிய தேவை குறித்து பேசினாலும், தேசியப் பிரச்சினை சம்பந்தமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக ஊமைகளாகவே செயற்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் பேராசிரியர் சுமனசிறி கமகே அவர்களின் கருத்தையும் பதிய வேண்டியுள்ளது.

கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர் "புதிய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காதவாறு பார்த்துக் கொள்ள சிங்கள பௌத்த இனவாதத்திற்கு எண்ணெய் ஊற்றும் கைங்கரியத்தில் மஹிந்த ஈடுபடப்போகிறார். கிடைக்கும் தகவல்களின்படி சுதந்திரக் கட்சியின் இன்றைய தலைமையில் பொதுத் தேர்தலை சந்திக்க ஜாதிக ஹெல உறுமய விருப்பமாக உள்ளது.

இதனால், இனவாத கருத்துக்கள் நாட்டில் மீண்டும் ஊசலாடுவதை தவிர்க்க முடியாது. இதற்கு எதிரான மாற்று அமைப்பை பலப்படுத்துவதன் ஊடாகவே இதனை தோற்கடிக்க முடியும். அதற்காக இடதுசாரியத்தை பலப்படுத்த வேண்டும்.

மைத்திரியாலோ, மஹிந்தவாலோ இதனைச் செய்ய முடியாது. அவர்களால் இனவாதத்தை ஊக்குவிக்க மட்டுமே முடியும். சிங்கள பௌத்த சக்திகளை வழிநடத்துவது மஹிந்த தான் எனவும், மைத்திரிபால அப்படிப்பட்டவர் அல்லவெனவும் சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே வெளிப்பட்ட கருத்து என்னவெனில், முரண்டுபிடிக்கும் சிங்கள பௌத்தரா, சாந்தமே உருவானசிங்கள பௌத்தரா என்பதாகும்.

இதன்போதுதான் ஹெல உறுமயவும் மற்றும் சில இடதுசாரி கட்சிகளும் மைத்திரியுடன் இணைந்தன. இந்த இரண்டிலுமே சிங்கள பௌத்த சாயம் பூசப்பட்டுள்ளது. மைத்திரியின் 100நாள் திட்டத்தை எடுத்துக் கொண்டால், அதில் அதிகமானவை ஹெல உறுமயவின் திட்டங்களாகும்.

இச்சந்தர்ப்பத்தில் நவதாராளமயம் கூட சிக்கலில் மாட்டியுள்ளது. இந்தச் சிக்கலிலிருந்து விடுபட நவதாராளமயத்தையும், சிங்கள பௌத்த கோட்பாட்டையும் பாதுகாக்க 2005ல் கொண்டுவந்த முரண்டுபிடிக்கும் சிங்கள பௌத்தருக்கு பதிலாக சாந்தமே உருவான சிங்கள பௌத்தர் கொண்டுவரப்பட்டார். சில இடதுசாரி நபர்கள் இதிலிருந்து தப்பிக்கவே இது சிங்கள பௌத்தத்திற்கு சார்பானதல்ல எனக் கூறுகிறார்கள். இதனூடாக தமது அரசியல் பக்கச்சார்பை நியாயப்படுத்துகிறார்கள்" என கூறியிருந்தார். இதுதான் உண்மை.

இச்சந்தர்ப்பத்தில் இன ஒடுக்குமுறைக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக போராடும் வரலாற்று பாரம்பரியத்தை முன்னெடுக்கும் சவால், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் சவால் இடதுசாரிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. தேசியப் பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக் கொடுப்பதில் மேட்டுக்குடி அரசியல் தோல்வியடைந்துள்ளது. இந்தப் பின்னணியில் அந்தப் பாரிய கடமைக்கு தலைமை தாங்கும் பொறுப்பை இடதுசாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.