Wed01222020

Last updateTue, 10 Dec 2019 10am

வடக்கில் இடதுசாரி இயக்கம் ஆரம்பம்

பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கை இருந்தபோது 1927 ம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி நாட்டிலிலுள்ள 21 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் வாக்குரிமை உண்டு என பிரகடனப்படுத்தப்பட்டு முதலாவது சட்டசபைத் தேர்தலை பிரித்தானிய அரசு இலங்கையில் நடத்தியது. இலங்கைக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்று கூறி சிங்கள தமிழ் தலைவர்கள் அத்தேர்தலை பகிஸ்கரிப்பது என்று முடிவு செய்தார்கள்.

ஆனால் தேர்தலின் போது சிங்கள தலைவர்கள் பகிஸ்கரிப்பில் கலந்துகொள்ளாது தேர்தலில் கலந்துகொண்டு சட்டசபைக்கான அங்கத்தவர்களை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் தமிழர்களோ சிங்கள, தமிழ் தலைவர்களின் கூட்டு முடிவின்படி வடக்கில் தேர்தலை பகிஸ்கரித்தார்கள். இதனால் தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாலு ஆசனங்களுக்கான சட்டசபைக்கான அங்கத்துவத்தை இழந்தார்கள். இந்த பகிஸ்கரிப்பானது தமிழர்களின் முற்போக்கு நடவடிக்கை என்று அன்று கருதப்பட்டது. இரண்டாவது சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.

அவ்வேளையில் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று இலங்கை திரும்பிய எஸ்.ஏ.விக்கிரமசிங்கா, ஆர்.டி.சில்வா, என்.எம்.பெரேரா, பிலிப் குணவர்த்தனா, ரொபேட் குணவர்த்தனா, லெஸ்லி குணவர்த்தனா போன்ற முற்போக்காளர்கள் இரண்டாவது சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் என்.எம்.பெரேராவும் பிலிப் குணவர்த்தனாவும் வெற்றி பெற்றனர்.

1935 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேலே கூறப்பட்ட அனைவரும் அத்துடன் வேறு சிலரும் இணைந்து லங்கா சமசமாஜக்கட்சியை ஆரம்பித்தனர். அதனது அரசியல் தாக்கம் வடபகுதியிலும் வெளிப்பட்டது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் பருத்தித்துறையைச் சேர்ந்த எஸ். தர்மகுலசிங்கமாகும். இவர் ஒரு சட்டத்தரணி. எனவே இவர் துணிச்சலுடன் வேறும் சிலருடனும் சேர்ந்து வடமராட்சியில் லங்கா சமசமாஜக் கட்சியை நிறுவினார். அக் கட்சியின் தலைமையில் பஸ் தொழிலாளர் சங்கம், சுருட்டுத் தொழிலாளர் சங்கம், சாதி அடக்குமுறைகளை எதிர்க்கும் சங்கம் போன்ற சங்கங்களை நிறுவி அந்த மக்களுக்காக வாதாடி சில வெற்றிகளை வென்றெடுத்துக் கொடுத்து வந்தார்.

இதனால் சமசமாஜச் கட்சியின் செல்வாக்கு வட மாகாணத்தில் பல பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. பருத்தித்துறை, வலவெட்டித்துறை, கரவெட்டி, யாழ்ப்பாணம், சுன்னாகம் போன்ற இடங்களில் அக்கட்சியின் செயற்பாடுகள் இடம்பெற்று வந்தது.

இவ்வாறு வளர்ச்சி பெற்று வருகின்றபோது 1939 ம் ஆண்டு இரண்டாவது உலகயுத்தம் ஆரம்பமாகும் உச்சக்கட்டம். அந்த நேரம் சோவியத் ரஷ்யா தன்னை நாஜி ஹிட்லரிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக போலந்தின் ஒரு பகுதியைத் தரும்படியும் அதற்குப் பதிலாக ரஷ்யாவின் பகுதியில் 3 மடங்கு நிலத்தை தருவதாகவும் யுத்தம் முடிய நிலத்தை நிலத்தை மாற்றிக் கொள்வோம் எனக் கேட்டது. அதற்கு போலந்து அரசு மறுத்தது மட்டுமல்ல, ஹிட்லருடன் ஒப்பந்தம் செய்து போலந்து அரசு சரணடைந்தது. எனவே சோவியத் ரஷ்சியா தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தான் கேட்ட பகுதியைக் கைப்பற்றியது.

மேற்படி நிகழ்ச்சி ஐரோப்பாவில் ஏற்பட, லங்கா சமசமாஜக் கட்சிக்குள் பெரிய வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டது. சோவியத் ரஷ்சியா செய்தது சரி என்றும், ஸ்டாலின் செய்தது பிழை என்றும் விவாதம் நடந்தது. விவாத முடிவில் எஸ்.ஏ.விக்கிரமசிங்கா, பீற்றர் கெனமன், எம்.ஜி.மென்டிஸ், ஆரியவன்ஸ குணசேகரா, ய.ஆரியரட்ணா, சரணங்க தேரர் போன்றோர் லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

என்.எம்.பெரேரா, பிலிப் குணவர்த்தனா, ரொபேட் குணவர்த்தனா, லெஸ்லி குணவர்த்தனா, கொல்வின். ஆர்.டி.சில்வா போன்றோர் ஸ்டாலின் ஆக்கிரமிப்பாளனும் ரஷ்சிய ஏகாதிபத்திய சர்வாதிகாரி என்றும் கூறி ரொக்ஸி தான் மார்க்சிய- லெனினியவாதி என்றும் கூறி ரொக்ஸியை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டனர். அன்றிலிருந்து இன்றுவரை முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் பாதுகாவலராகவே ரொக்ஸிஸ்டுகள் செயற்படுகிறார்கள். இலங்கையில் மட்டுமல்ல உலகம் பூராவும் அவர்களது செயற்பாடுகள் அவ்வாறே நடைபெறுகிறது.

வெளியேற்றப்பட்ட எஸ்.ஏ.விககிரமசிங்கா, பீட்டர் கெனமன், எம்.ஜி.மென்டிஸ், ஆரியவன்ஸ குணசேகராவும் ஏனைய வெளியேற்றப்பட்ட மேலும் பலரும் சேர்ந்து 1940 ம் ஆண்டு ஐக்கிய சோஷலிசக் கட்சியை உருவாக்கி செயற்பட்டு வந்தனர். பின்னர் 1943 ம் ஆண்டு சோஷலிசக் கட்சியை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.

இக்காலகட்டத்தில் வடக்கிலிருந்து இங்கிலாந்து சென்று பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இங்கு வந்த பொன். கந்தையா, அ.வைத்திலிங்கம் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற என்.சண்முகதாசன், மு.கார்த்திகேசன் போன்றோரும் இன்னும் சிலரும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து முழுநேர கட்சி ஊழியர்களாயினர்.

என்.சண்முகதாசன் தொழிற்சங்க இயக்க வேலையை பொறுப்பேற்று செயல்பட்டார். இவர்கள் நால்வரும் வடக்குக்கு வந்து தமக்கு ஏற்கனவே அறிந்தவர்களாக இருந்த மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்டுக்களை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்து இயங்கத் தொடங்கினார்கள்.

ஏற்கனவே வடபகுதியில் லங்கா சமசமாஜக் கட்சியினரால் அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்ஸிச லெனினியத்தை ஏற்றுக்கொண்ட மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்டுக்கள் தற்பொழுது லங்கா சமசமாஜக் கட்சியின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு அதிலிருந்து விலகி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்கள்.

வடமராட்சிப் பிரதேசத்தில் பொன் கந்தையாவும் வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் அ.வைத்திலிங்கமும் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மு.கார்த்திகேசனும், கே.கே.எஸ் பிரதேசத்தில் சு.வே.சீனிவாசகர், வ.பொன்னம்பலம் போன்றோர் வேலை செய்தனர். இதனால் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வேகமாக வளரத் தொடங்கியது.

மு.கார்த்திகேசன் அவர்களின் முயற்சியின் காரணமாக யாழ்நகரில் எம்.சி.சுப்பிரமணியம், கே.டானியல், டொமினிக் ஜீவா, ராமசாமி ஐயர், வீ.ஏ.கந்தசாமி போன்றோர் வென்றெடுக்கப்பட்டனர்.

சிறுபான்மை மகாசபையில் இவர்கள் அங்கத்தவர்களாகவும், பிரதான ஊழியர்களாகவும், இருந்தனர். அதனால் நகரப் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு வளரத் தொடங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி சிறுபான்மை தமிழருக்கு பல வழிகளில் உதவி செய்தது. அதே போன்று பஸ் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், சலூன் தொழிலாளர்கள், சுருட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் போர்க்குணத்துடன் வேலை செய்தது. இத் தொழிலாளர்களை, தாழ்த்தப்பட்ட மக்களை, யார் யார் அடக்குகிறார்களோ அவர்களுக்கு எதிராக அவர்களது தாக்குதல்களை தாங்கிக் கொள்ளவும், திருப்பித் தாக்குதல் தொடுப்பதுமான செயற்பாடுகள் மூலம் செயற்பட்டது.

1952 ம் ஆண்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி முதலாவது வடபிரதேச வாலிபர் சம்மேளன மாநாட்டை கே.டானியல், வி.ஏ.கந்தசாமி, மேன் முத்தையா போன்றோர் முன்னின்று நடத்தினர். அதில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களான எஸ்.ஏ.விக்கிரமசிங்கா, பீற்றர் கெனமன் ஆகியோர் பங்குபற்றி கம்யூனிஸ்ட் வாலிபர் சங்க உறுப்பினர்களை உற்சாகப்படுத்தினர்.

1947 இல் பொன் கந்தையா இலங்கையின் பாராளுமன்ற தேர்தலில் பருத்தித்துறை தொகுதியின் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். அதில் அவர் தோல்வியடைந்தாலும் நிறைய கம்யூனிஸ்ட் வாலிபர்களையும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களையும் திரட்டினார். அதனூடாக கட்சிக்குப் பலம் கூடியது.

1952 பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு சிறியளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். என்றாலும் கட்சி மேலும் பலமடைந்தது. வடமராட்சிப் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் செல்வாக்கு வளர்ந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியிலும் கட்சிக்கு கிளைகள் உருவாகியது. இன்றும் நினைவுகூரப்படும் 1947 பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஜி.சி.எஸ்.யு சங்க அரசாங்க எழுதுவினைஞர் வி.கந்தசாமி யாழ் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். அவரும் வடக்கில் எழுந்த முற்போக்கு கருத்துக்களால் கவரப்பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.

1953 இல் நடைபெற்ற தேசிய ஹர்த்தாலின் போது வடபகுதியிலும் பஸ் தொழிலாளர்கள், சுருட்டுத் தொழிலாளர்கள், சலூன், சலவைத் தொழிலாளர்கள், கள் இறக்கும் தொழிலாளர்கள் என பல தரப்பட்ட தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் ஆசிரியர்களும், மாணவர்களும் பெருமளவில் பங்குபற்றினர். இந்த ஹர்த்தாலில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும், தமிழரசுக் கட்சியும், அதன் தொழிற்சங்கங்களும், அதன் ஆதரவாளர்களும் பொதுமக்களும் பெருமளவு கலந்துகொண்டு வடபகுதி மக்களின் ஆதரவை தென்னிலங்கை தொழிலாள வர்க்கத்துக்கு வழங்கினர்.

இதன் மூலம் அடங்கிக் கிடந்த தமிழ் மக்கள் மத்தியில் போர்க்குணம் வளர ஆரம்பித்தது. 1956 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளில் தேர்தலில் நின்றது. யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, காங்கேசன்துறை, பருத்தித்துறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. முறையே மு.கார்த்திகேசன், அ.வைத்திலிங்கம், வி.பொன்னம்பலம், பொன்.கந்தையா ஆகியோர் போட்டியிட்டனர். அதில் பருத்தித்துறை தொகுதியில் பொன்.கந்தையா அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். ஏனைய மூவரும் கணிசமான வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தனர். ஆனால் அம் மூன்று தொகுதிகளிலும் பல வாலிப சங்கக் கிளைகளை உருவாக்க முடிந்தது.

அதேபோல் சமசமாஜக் கட்சியினரும் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். ஆனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சம் வாக்குகளைப் பெற்றனர். தோழர் பொன்.கந்தையா எம்.பி ஆனதும் நிலமற்ற விவசாயிகளுக்கு அரசாங்கக் காணிகளை பெற்றுக்கொடுத்தும், கல்வி கற்கும் உரிமை அற்றிருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பள்ளிக்கூடங்களை அமைத்துக் கொடுத்தும் பல உதவிகளைச் செய்து கொடுத்தார். 1947 ம் ஆண்டுகளின் பின்பு பாராளுமன்றத்திலும், மாநகர சபைகளிலும், பட்டின சபைகளிலும், கிராம சபைகளிலும்,போட்டிபோட்டு அதனூடாக தேர்தலில் வெற்றி பெற்று அவைகளில் அங்கத்துவம் பெற்று பொதுமக்களுக்கு சேவை செய்வதை கட்சியின் வளர்ச்சிக்கு பிரதான வழியாக கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக்க கட்சியும் கருதி செயற்பட்டது. அந்த முயற்சியின் பலனாக 1947 இலிருந்து கிராமசபை உறுப்பினராக சி.வே.சீனிவாசகம் தெரிவானார். கணபதிப்பிள்ளை காங்கேசன்துறை பட்டினசபையில் உறுப்பினரானார். சங்கானை பட்டினசபையைக் கைப்பற்றி மான் எம். முத்தையா தலைவரானார். வைரமுத்து, பசுபதி போன்றோர் அங்கத்தவர்களாயினர்.

வல்வெட்டித்துறையின் திருப்பதி தலைவராக இருந்தார். கரவெட்டி கட்டவேலியில் ஜெயசிங்கம் போன்றோர் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருந்து பொது மக்களுக்கு சேவையாற்றினர். இவற்றில் மிகவும் குறிப்பிடக்கூடியது மு.கார்த்திகேசன் கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேச செயலாளராக இருந்து யாழ்.மாநகர சபை தேர்தலில் 1954 ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்நிகழ்ச்சியானது கம்யூனிஸ்ட்டுகள் வட பகுதியில் பலப்பட்டு வருகிறார்கள் என்பதை பறைசாற்றியது.

அதேபோல் சமசமாஜக் கட்சியின் சார்பில் யாழ்-மாநகர சபையில் அ.விசுவநாதன், எஸ்.துரைராஜசிங்கம் உடுப்பிட்டி கிராமசபை தலைவராக ஆர்.ஆர்.தர்மரட்ணம் சுன்னாகம் பட்டினசபை தலைவராக பி.நாகலிங்கம் ஆகியோர் அங்கத்தவர்களாகி பொது மக்களுக்கு சேவை செய்தனர்.

1957 ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமூக குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்தும்படி சிறுபான்மை தமிழர் மகாசபை 1958 டிசம்பர் இல் நடைபெற்ற சிறுபான்மை தமிழர் மகாசபையில் கோரிக்கை முன்வைத்து டிசம்பர் 13 க்குள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவமாக தேனீர் கடைகள், உணவகங்கள், கோவில்கள் திறந்துவிடப்பட வேண்டும் இல்லையேல் அவைகளுக்கு முன் சத்தியாக்கிரகம் நடத்தப்படும் எச்சரிக்கை விடப்பட்டது.

இது வடபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சியும் சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் அதற்கான தயாரிப்புக்களை நகரத்திலும் கிராமங்களிலும் செய்யத் தொடங்கியது. சாதிவெறியர்களும் பிற்போக்குவாதிகளும் கோவில் திறப்பு, கடைகள் திறப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த திரைமறைவில் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டாலும் அவர்களால் எதுவும் செய்யமுடியாத நிலைமை. முதலாவதாக அரசாங்கத்தின் சட்டத்தை அமுல்படுத்தும்படி கேட்டே இப் போராட்டம் நடத்தப்படவுள்ளதும் மேலும் யாழ் நகரப்பகுதிகளில் கூடுதலாக தாழ்த்தப்பட்ட மக்கள் செறிந்து வாழுவதும், கம்யூனிஸ்ட் கட்சியும் முற்போக்காளர்களும் இதற்கு ஆதரவு கொடுப்பதும் இப்போராட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. எனவே டிசம்பர் 13இல் யாழ் நகரில் உள்ள சுபாஸ் கபே, வை.சி.கு தேனீர்க்கடை, கோவிந்தபிள்ளை தேனீர்க்கடை போன்ற முக்கிய கடைகள் மற்றும் சிறிய உணவகங்கள், தேனீர்கடைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவமாக திறந்துவிடப்பட்டது.

அதேபோல் நல்லூர் கந்தசாமி கோவில், வண்ணார்பண்ணை சிவன் கோவிலும் சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. ஆனால் யாழ் நகரத்தை அண்டிய பிரதேசங்களிலும், கிராமப் பிரதேசங்களிலும் சாதிவெறியர்களினதும் பிற்போக்காளர்களினதும் ஆதிக்கம் மிகக்கூடுதலாக இருந்தபடியால் அங்குள்ள தேனீர்கடைகள், உணவகங்கள், கோவில்கள், குளங்கள் எதுவுமே 1970 வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறந்து விடப்படவில்லை.

1950 கள் வரை வடபகுதி தமிழ் பிற்போக்கு எழுத்தாளர்கள் சாதி அமைப்பை பாதுகாத்து எழுதி வந்தார்கள். அதுதான் தமிழ் இலக்கியமாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி பலமடையத் துவங்கியதும் முற்போக்கு எழுத்தாளர்கள் தோன்றத் தொடங்கினர். கே.டானியல், டொமினிக் ஜீவா, கவிஞர் பசுபதி, இளங்கீரன், நீர்வை பொன்னையன், முருகையன், சில்லையூர் செல்வராஜன், அ.ந.கந்தசாமி, பிரேம்ஜி, தெணியான், செ.கணேசலிங்கம், தங்கவடிவேல், ரகுநாதன் போன்றோர் தொழிலாளர், விவசாயிகள், ஏழை எளிய மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தமது படைப்புக்களை எழுதத் தொடங்கினர். பிற்போக்குவாதிகள் இவ் ஆக்கங்களை இலக்கியங்கள் அல்ல என்று நிராகரித்தாலும் இவைகள் தான் மக்கள் இலக்கியங்கள் என்பதை அவர்கள் நிரூபித்தார்கள்.

அன்று தமிழ் காங்கிரஸ், தமிழ் அரசுக்கட்சிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த தமிழ் மக்கள் அவர்களின் பிற்போக்குக் கொள்கைகளை எதிர்ப்பதிலும் அக்கட்சியின் ஆதரவு பெற்ற முதலாளிகள் நிலவுடைமையாளர்களை எதிர்த்து வாய்திறக்க முடியாத நிலையில் இருந்த நேரத்தில் தான் லங்கா சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் வடபகுதியில் உருவாகி சாதாரண ஏழை எளிய தமிழ் மக்கள், தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் தொழிலாளர்கள், விவசாயிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பிரச்சனைகளுக்கு தோள் கொடுத்து உதவி வந்தது.

அக்கட்சிகள் நடாத்தும் மேதின ஊர்வலங்கள் கூட்டங்களில் மக்கள் கலந்து கொண்டு வாய்திறந்து சகல பிற்போக்குகளுக்குகெதிராக கோஷமிட்டு தம்மை புரட்சிவாதிகளாக்கிக் கொண்டார்கள். இவ் இரு கட்சிகளில் 60 களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறி தொழிலாளர் விவசாயிகளின் கூடுதல் ஆதரவை தேடிக் கொண்டது. 1963 காலகட்டத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட தத்துவார்த்த போராட்டத்தில் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. என்.சண்முகதாசன் தலைமையில் புரட்சிவாதிகள் ஒன்றுதிரண்டு புரட்சிகர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தனர்.

......தொடரும்