Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பார்ப்பனியப் பாசிசமும் - சீமானின் இனவாதப் பாசிசமும்

இனவாதமென்பது இனவொடுக்குமுறையின் விளைவல்ல. மாறாக சுரண்டும் வர்க்கத்தின் நிகழ்ச்சிநிரல். இனவாதம் கொப்பளிக்கும் உணர்ச்சிகளும், கருத்துக்களும், நலன்களும்.., மனிதத் தன்மைக்கு முரணானது. மனித வளர்ச்சியை சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுகின்றது.


இந்த வகையில் பார்ப்பனியம், இனவாதம், மதவாதம், நிறவாதம், ஆண்வாதம்.. என இவை அனைத்தும் ஒடுக்கும் சிந்தனைமுறையே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களின் சிந்தனைமுறையல்ல. பார்ப்பனியப் பாசிசமும், சீமானின் இனவாதப் பாசிசமும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். ஒன்றுக்கொன்று எதிராக தோன்றினாலும், ஒன்றாகவே இருக்கின்றது. மறுபக்கத்தில் கார்ப்பரேட் மயமான உலகத்தின் அச்சாணிகளாக இயங்குகின்றது.


உலகமயமாதல், நவதாராளவாதம்… என்ற உலகம் தளுவிய கார்ப்பரேட்டின் மூலதனக் கொள்கைக்கு வெளியில், எந்த சிந்தனைமுறையும் சுயாதீனமானதல்ல. கட்சிகள் முதல் சிந்தனைமுறைகள் வரையான அனைத்தும், உலகமயமாதல், நவதாராளவாதம்… கடந்து சுயாதீனமானதாக இருப்பதில்லை.


நவதாராளவாதம் என்பது நாட்டின் செல்வத்தை, கார்ப்பரேட்டுக்கு கொடுக்கும் மூலதனக் கொள்கை. செல்வம் சிலரிடம் குவிவதை உறுதி செய்வதும், குவிந்த செல்வத்தை பாதுகாப்பதுமே அரசுகளின் கடமை. அரசு என்பது செல்வத்தை மீள மக்களுக்கு பகிர்தல் அல்ல, மாறாக பறித்தல் தான். இதை மூடிமறைக்கவே இனம், மதம், சாதி, நிறம்.. போன்ற ஒடுக்குமுறைகளை தூண்டி விடுவதன் மூலம்தான், மக்களிடமிருந்து அரசைப் பாதுகாக்கும் கொள்கையே இன்றைய தேர்தல் ஜனநாயகமாக இருக்கின்றது.

தேர்தல் மூலம் நடக்கும் ஆட்சிமாற்றமானது, செல்வத்தை மீளப் பகிர்ந்தளிக்கும் என்ற நம்பிக்கையை தேர்தல் கட்சிகளால் நடைமுறையில் கொடுக்க முடிவதில்லை. கடவுளைக் கும்பிட்டால் தனக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவது போல், தேர்தலில் வாக்கு போட்டு மாற்றத்தை எதிர்பார்ப்பது கூட, இன்று அவநம்பிக்கைக்குரியதாகி வருகின்றது. கடவுள் என்று ஒன்றில்லை, அதனால் எதையும் பெறப்போவதில்லை என்ற உண்மையைப்போல், வாக்குப்போடுவதால் வாழ்க்கை மாறப்போவதில்லை என்கின்ற எதார்த்தம் புதிய வழியைக் கோருகின்றது.


இன்று தேர்தல் கட்சிக்கு, கட்சிக் கொள்கைகள் கிடையாது. கொள்கை அடிப்படையில், கட்சி செயல்வீரர்கள் கிடையாது. இன்றைய தேர்தல் கட்சிகளின் கட்சித் தொண்டர்களாக இருப்பவர்கள், கூலிக்கு செயற்படுபவர்கள்தான். பணம் படைத்தவன் ஆட்சியைக் கைப்பற்றும் தேர்தல் கட்சியாகவும், கட்சி வேட்பாளர்கள் கோடீஸ்வரராகவும் இருக்க வேண்டும். கட்சித் தொண்டனுக்கு கூலி கொடுத்தும், மக்களுக்கு லஞ்சம் கொடுத்தும் வாக்குப் பெறுவதும் தேர்தலாகி விட்டது. செலவு செய்த பணத்தை அறுவடை செய்வதும், பலமடங்காக பணத்தை பெருக்க, பொதுச் சொத்தை கொள்ளை அடிப்பதுமே ஆட்சி அதிகாரமாகிவிட்டது.


இதை மூடிமறைக்கவே இனம், மதம், சாதி, நிறம், பால் சார்ந்து குறுகிய மக்கள்விரோத ஆட்சியாக, இது அனைவருக்குமான சட்ட ஆட்சிமுறைமையை இல்லாதாக்கி, பாசிசமாக பரிணமிக்கின்றது.


இதனால் பணம், இனம், சாதி, மதம், பால் .. சார்ந்து, சட்ட அமைப்புமுறைமை வெம்பிவிடுவதுடன், சமூகத்தை அரசுக்கு வெளியில் கட்டுப்படுத்தும் கும்பல்களின் ஒடுக்குமுறையாக மாறுகின்றது. நீதி என்பது பணம், இனம், சாதி, பால், மதம் சார்ந்ததாக குறுகி விடுகின்றது. இதை இன்று இந்தியாவில் காணமுடியும். கார்ப்பரேட் காவி பாசிசமாக அம்மணமாகி நிற்கின்றது.


தேர்தலை நடத்தும் அதிகார மையங்கள் தொடங்கி சமூகத்தின் அனைத்து அரசு அதிகார மையங்கள் வரை, காவி கார்ப்பரேட் பாசிசத்தையே தனது சிந்தனைமுறையாக்கிக் கொண்டுவிட்டது. அதை முன்னின்று முன்னெடுக்கும் நபர்களை கொண்ட அரச கட்டமைப்பாக, அரசு மாறிவிட்டது.


இந்த நிலையில் இந்தியாவின் தேர்தல் ஜனநாயக சமூகக் கட்டமைப்பு மீதான, சமூகத்தின் பொது நம்பிக்கைகள், தினம் தினம் நொருங்கிச் சிதைந்து கொண்டு இருக்கின்றது. சட்டம், நீதி குறித்த பொது மாயைகள் தகர்ந்து கொண்டிருக்கின்றது. தேர்தலில் தாங்கள் போடும் வாக்குகளைக் கூட, தொழில்நுட்பத்தைக் கொண்டு மாற்றிவிடுவார்கள் என்று நம்பும் அளவுக்கு, வாக்குரிமை மூலம் மாற்றம் என்ற நம்பிக்கைகள் தகர்ந்திருக்கின்றது.


இப்படி இந்திய நவதாராளவாத அமைப்புமுறை, பொதுப் பயத்தை விதைத்திருக்கின்றது. தேர்தல் மூலம் மாற்றங்கள் கொண்டு வரமுடியும் என்ற கடந்தகால நம்பிக்கைகள், கனவாக மாறியிருக்கின்றது.


கார்ப்பரேட் மயமாதல் காவிப் பாசிசமாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு, எல்லா ஜனநாயகக் கூறுகளையும் அழித்து வருகின்றது. சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்பட்ட சாதிகள், ஒடுக்கப்பட்ட இனங்கள், முதலாளித்துவ ஜனநாயகத்தை வாழ்வாகக் கொண்ட பெண்கள்.. மீதான பாசிச ஒடுக்குமுறை என்பது, சமூகத்தினை உறைநிலைக்கு கொண்டு வருகின்றது. ஜனநாயகத்தை மறுத்து, பாசிசமே சமூகத்தின் சிந்தனைமுறையாக மாற்றி வருகின்றது.

 

இந்தப் பாசிச மயமாதலுக்கு எதிரான போராட்டத்தில், தமிழக மக்கள் முன்னணியில் நிற்கின்றனர். இதனால் தமிழகத்தில் காவி காப்பரேட் பாசிட்டுகள், தங்களை முன்னிறுத்த முடிவதில்லை. தமிழக மக்களின் போராட்டங்கள் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு வெளியில், மக்கள் திரள் பின்னால் நடப்பதும், மக்கள் அவர்களை நம்புவதும் சமூக இயக்கமாகி வருகின்றது. மதவாதம் மூலம் மக்களை திசைதிருப்பவும், அணிதிரட்டவும் முடிவதில்லை. இருக்கும் சாதி ஒடுக்குமுறைகள் மூலம் மக்களை பிரித்தாள முடிவதில்லை.


இதனால் தமிழக மக்கள் புரட்சிகரமான மக்கள் திரள் பாதையில் செல்வது அதிகரித்து வருகின்றது. இதைத் தடுக்கவே இனவொடுக்குமுறையை தூண்டி, இனவாதத்தை ஆளும் கார்ப்பரேட் வர்க்கம் வளர்த்து விடுகின்றது. அதாவது காவி கார்ப்பரெட் பாசிசம் மூலம் தமிழகத்தை தனிமைப்படுத்தி ஒடுக்குவதன் மூலம், இனவாத பாசிசத்தை வளர்த்தெடுப்பதே தமிழகத்திற்கான இந்திய கார்ப்பரேட்டுகளின் கொள்கையாகும்.


இதன் மூலம் காவி காப்பரேட் பாசிசத்தை எதிர்த்து மக்கள் திரள் பாதைக்கு பதில் இனவாத கார்ப்பரேட் பாசிசத்தை தேர்ந்தெடுக்குமாறு கோருகின்றது. இந்த இனவாத கார்ப்பரேட் பாசிசத்தை தமிழகத்தில் முன்னெடுக்கும் அரசியல் எடுபிடி தான் சீமானும், சீமானின் "நாம் தமிழர் கட்சி" யுமாகும். இந்தக் கட்சியை உருவாக்கி வளர்த்தவர்கள், மேற்கு ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளான தமிழீழ புலித் தரகர்களே.


இலங்கைத் தமிழ் மக்கள் மேலான ஒடுக்குமுறைகளுக்கு, எந்த ஏகாதிபத்தியங்கள் தீர்வைத் தரும் என்று எந்தப் புலம்பெயர் புலிகள் கூறுகின்றனரோ, அவர்கள் தான் சீமானை உருவாக்கி வளர்த்தவர்கள்.


புலம்பெயர் புலி சீமானிட்டுகளுக்கு மேற்கு ஏகாதிபத்தியங்கள் கொடுத்த வழிகாட்டல்களுக்கு அமைவாக, புலிப் பணத்தைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டதே "நாம் தமிழர் கட்சி". 2009 புலிகளின் அழிவின் பின்னால் யார் செயற்பட்டனரோ, அவர்கள் தான் சீமானின் தலைமையிலான "நாம் தமிழர் கட்சி" யைத் தோற்றுவித்தனர்.


2009 முன் புலிகளின் அழிவை ஏற்படுத்தும் வண்ணம் பாரிய நிதிகளையும், யுத்த தந்திரங்களையும் புலிக்கு வழங்கியவர்கள் மேற்கு ஏகாதிபத்தியமும் அதற்கு ஆதரவாக இருந்த தமிழ் எடுபிடிகளே. அவர்கள் தான் இன்று சீமானின் பின்னால் இருப்பதுடன், தமிழகத்தில் மக்கள் திரள் புரட்சிகர கூறுகள் வளர்வதைத் தடுக்கும் வண்ணம், இனவாத பாசிச இயக்கத்தை தோற்றுவித்துள்ளனர்.


புலிகள் கூட மேற்கு ஏகாதிபத்திய கார்ப்பரேட் இனவாத பாசிசத்தை தங்கள் கொள்கையாக பிரகடனப்படுத்தியே இருந்தனர். இதுதான் புலம்பெயர் புலிகளின் இன்றைய கொள்கையும் கூட. இந்தப் புலிகளிடம் பணத்தைப் பெற்ற சீமானும், அதையே முன்வைக்கின்றார்.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட தேசங்களின் ஜனநாயக கூறுகளையும், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலான சுயநிர்ணய அடிப்படைகளை மறுதளிக்கும் வண்ணம், இனவாத பாசிசம் சீமான் மூலம் முன்னிறுத்தப்படுகின்றது. தேர்தல் மூலம் புரட்சி என்ற புரட்டை உணர்ச்சிகரமாக்குகின்றனர். தேர்தல் முறைமை மூலம் இனவாத பாசிசத்துக்கு தேவையான களப்பணி என்னும் கலப்பு ரகத்தையும் இணைத்துக் கொண்டுள்ளனர்.


மக்கள் திரள் புரட்சிகர பாதையில் நம்பிக்கையற்ற உதிரி வர்க்க குணாம்சம் கொண்ட லும்பன்களைச்; சார்ந்து, தன்னை அமைப்பாக்கி கொள்கின்றது. கிட்லரின் இனவாத பாசிசக் கொள்கையையும், நடைமுறைகளுமே சீமானின் அமைப்பாக்கல் முறைமையாகும். கிட்லர் போல் இனவாத உணர்ச்சி உரைகள் மூலம், பகுத்தறிவற்ற சமூகமாக அணிதிரட்டுவது. கிட்லர் தன் கட்சிக்கு தொழிலாளர் கட்சி என்று பெயர் வைத்ததுடன், "சோசலிசத்தை" முழக்கமாக முன்வைத்து இனவாதம் பேசி மக்களை அணிதிரட்டியது போல், புலிகளும் சோசலிசத்தை முன்வைத்தனர். இதேபோல் தான் சீமானின் பாசிசமும். சமூகத்தின் உதிரியாக செயற்படும் சமூக முன்னோடிகளை, தன் தேவைக்கேற்ற படிக்கல்லாக்கி பயன்படுத்திக் கொள்வது பாசிசத்தின் பொதுத் தன்மையாகும்.


புலிகள் கூட சண்முகதாசனின் கட்சியில் இருந்த இடதுசாரிகளைக் கூட, தன் பாசிசத்தை பலப்படுத்த இணைத்துக் கொண்டனர். பாலசிங்கம், நித்தியானந்தன், சிவத்தம்பி என்று, அறிவுத்துறை முதல் இடதுசாரியம் வரை விட்டுவைக்காத இந்தப் பட்டியல் மீக நீண்டது. இதுபோல சீமானும் திடீரென கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ள பெண்கள் பட்டியல். சமூக பணிகளில் இருந்த பெண்களை உள்வாங்கியுள்ள இனவாதப் பாசிசம், இனவாத வோட்டுக்காக பெண்களை தேர்தலில் நிறுத்தியுள்ளது.


இதன் மூலம் மக்களை இனவாத பாசிசமாக்க சிந்திக்க, செயற்படத் தூண்டுகின்றது. இந்தியாவில் கார்ப்பரேட் பார்ப்பனிய பாசிசத்தை பாதுகாக்க, சீமானின் இனவாத கார்ப்பரேட் பாசிசம் தோற்றுவிக்கப்பட்டது. புரட்சிகர மக்கள் திரள் பாதைக்கு மாற்று, இனவாத பாசிச கார்ப்பரேட் கொள்கையே என்கின்றது. புரட்சிகர மக்கள் திரள் பாதைக்கு மாற்று, தேர்தலே என்கின்றது.


ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய ஒடுக்குமுறைக்கு தீர்வு இனவாத தமிழ் கார்ப்பரேட் பாசிசமுமல்ல, இனவாதத் தேர்தல் மூலமான வெற்றியுமல்ல. மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலான மக்கள் திரள் போராட்டப் பாதை தான் தீர்வாகும். இது இலங்கைக்கும், இந்தியாவுக்கும் கூட பொதுவானது.