Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையின் 65வது சுதந்திர தினம்- கண்டுபிடித்துத் தாருங்களேன்!

ஆசியா கண்டத்தையே ஒரு காலத்தில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தின் காவலர்கள் 1945 உலக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தங்கள் கட்டுப்பாட்டில் அடிமை ராஜ்ஜியங்களாக வைத்திருந்து சுரண்டிக் கொண்டிருந்த தெற்காசிய நாடுகள் சிலவற்றிற்கு சுதந்திரம் வழங்க ஆரம்பித்தனர்.

நீண்டகால விடுதலைப் போராட்டத்திற்குப் பின்னர் 1947 ல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கியதோடு, 1948ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி சுதந்திரம் என்ற பெயரில் தனது நம்பிக்கைக்குறிய முதலாளிய அடியாட்களிடம் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தனர். கத்தியின்றி இரத்தமின்றி ஏகாதிபத்திவாதிகளிடமிருந்து பெறப்பட்ட இந்த சுதந்திரத்தை அன்று நாட்டு மக்கள் அனைவருமே ஜாதி மத பேதமின்றி ஒட்டு மொத்தமாகக் கொண்டாடினார்கள். அதன் பின்னர் இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள் இனவாதத்தை தமது அரசியல் ஆயுதமாகக் கொண்டு இன்று வரை ஆட்சிக் கட்டில் அமர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த 65 வருட ஆட்சியில் இந்த நாடு பல கொடூரமான நிகழ்வுகளை சந்தித்துள்ளது. உலக மட்டத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் முப்பது வருட யுத்ததையும், ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான இரண்டு கிளர்ச்சிகளையும் நாடு சந்தித்துள்ளது. என்றாலும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காத முதலாளித்துவ வர்க்கம் தான்தோன்றித்தனமாக முதலாளித்துவ சர்வாதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக காலத்துக்குக் காலம் ஒவ்வொரு ஆயுதத்தை கையிலெடுத்துக் கொள்கின்றது. இந்த நிலையில் பௌத்த கடும் போக்காளர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரங்களை அரசாங்கத்தின் ஆசீர்வாதத்தோடு அரங்கேற்றி வருகின்றனர். இந்த அச்சம் நிறைந்த சூழ்நிலையில்தான் 65வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த 65வது சுதந்திர தினம் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் சுதந்திரம் குறித்து புதியதொரு சிந்தனையோட்டத்தை முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வாழும் நாட்டை நேசிப்பது அவர்களது மார்க்கக் கடமைகளில் ஒன்றாகவே இருக்கின்றது. தாய்நாட்டுக்கு எதிராக ஒரு நாடு யுத்தப் பிரகடணம் செய்து விட்டால் அதற்கெதிராக அந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் எதிரி நாட்டுக்கு எதிராக போராட வேண்டியது கட்டாயமாகும் அது முஸ்லிம் நாடாக இருந்தாலும் சரியே.

தாய்நாட்டுக்காக உயிரைக்கூட தியாகம் செய்ய முஸ்லிம்கள் தயங்கக் கூடாது. அதுதான் இஸ்லாமிய கோட்பாடு. ஏகத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் முஸ்லிம்கள் தேசியக் கொடிக்கோ, தேசியக் கீதத்திற்கோ தலைசாய்க்க மாட்டார்கள். அவற்றுக்கு மதிப்பளிப்பார்கள். கண்ணியப்படுத்துவார்கள். முஸ்லிம்கள் எந்த நாட்டில் குடிமக்களாக இருந்தாலும் அந்த நாட்டை உயிரினும் மேலாக நேசிப்பார்கள். தாய்நாட்டை அந்நியர்களுக்கு காட்டிக் கொடுத்ததாக எந்த வரலாறும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் கிடையாது. இலங்கையில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் சகோதர சிங்கள மக்களோடு மட்டுமல்ல, சகோதர தமிழ் மக்களோடும் நட்புறவோடும் சகோதரப் பாங்கோடுமே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த ஒற்றுமையை சீர்குலைத்து மக்கள் மத்தியில் குரோதத்தை வளர்க்க முயற்சித்து வரும் சில விஷமிகள் செய்யும் அடாவடித்தனமான செயல்களால் இந்த 65 வது சுதந்திர வருடம் இலங்கை வாழ் முஸ்லிம்களின் சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நாட்டில் எந்தவொரு தேசிய இனத்திற்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் தமது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடு பட்டுவரும் முஸ்லிம்களிலிருந்து, அன்றாடம் மூட்டை சுமந்து தமது குடும்பத்தை பராமரித்து வரும் ஒடுக்கப்பட்ட முஸ்லிம் வரை சுதந்திரமாக தமது அன்றாட தொழில்துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் சமீபகாலமாக முஸ்லிம்களின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது தெரிகிறது. முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாமென்கிறார்கள். முஸ்லிம்களுக்கு வேலை வழங்க வேண்டாமென்கிறார்கள். பள்ளிவாசல்களை கட்ட வேண்டாமெனகிறார்கள். இந்த இடத்தில் தொழக் கூடாதென்கிறார்கள். இது பௌத்தர்களுடைய நாடு, பௌத்தரல்லாதவர்கள் இங்கே அடிமைகளாகத்தான் இருக்கவேண்டுமென்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எங்கிருந்து சுதந்திரம் கிடைக்கும்? எல்லாக் குழந்தைகளும் எனது குழந்தைகளே, எல்லா மக்களும் எனது மக்களே. பேதங்கள் கிடையாது என்று பெருமைக்குறிய தந்தை கூறினாலும் சிங்களப் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களை சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள். அப்படியே ஒரு சிலரை சேர்த்துக் கொண்டாலும் இஸ்லாமிய கலாச்சார உடையை அணிந்துக் கொண்டு பாடசாலைக்கு வரக்கூடாது என்கிறார்கள் குறிப்பாக மாணவிகளுக்கு.

பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் அவரவர்கள் தமது கலாச்சாரத்திற்கு ஏற்பவே தமது வாழ்க்கை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒவ்வொரு இனக்குழுமத்தினதும் கலாச்சார தனித்துவம். என்றாலும் இன்று முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகள் கேளிக்குறியாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடை என்பது மனித நாகரிகத்தின் மறுக்க முடியாத அடையாளம். அவரவரது கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு உடையணிவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. சுதந்திரம் இருக்கின்றது. முஸ்லிகளின் கலாச்சார உடை இன்று கேள்விக்குறியதக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் இந்த சுதந்திரம் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாகி வருகிறது. முஸ்லிம் பெண்கள் இன்று தங்களது கலாச்சார உடையோடு வெளியே நடமாட பயப்படுகிறார்கள். அவர்களுடைய சுதந்திரம் எங்கே? முஸ்லிம் மக்களுக்கு காணிகளை விற்க வேண்டாம் என்று உரத்துக் கூறுகிறார்கள். பணம் கொடுத்தாவது காணி வாங்கும் உரிமை பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதே. சுதந்திரம் எங்கே? ஒரே இறை, ஒரே மறை, ஒரே முறை என்று வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இனவாதத்திற்கு அடிமையாகிவிடுவோமா என்ற அச்சத்துடன் வாழந்துக் கொண்டிருக்கிறார்களே! எங்கே சுதந்திரம்?

இஸ்லாமிய பள்ளிவாசல்களில் எந்தக் கொடியையும் பறக்கவிடக் கூடாது என்ற நிலை மாறி இன்று சுதந்திரக் கொடியை ஏற்றுமாறு மறைமுகமாக வற்புறுத்தப்படும் நிலை உருவாகியிருக்கின்றதே. எங்கெ சுதந்திரம்? இன்று தேசியக் கொடியை ஏற்றுமாறு கூறுபவர்கள் நாளை பௌத்த கொடியை ஏற்றுங்கள் என்று சொன்னால் என்ன செய்வது? திகைத்துப் போயிருக்கிறார்களே முஸ்லிம்கள். எங்கே சுதந்திரம்?

1948 பெப்ரவரி 4ம் திகதி இங்கிலாந்தில் பிறந்து இலங்கை முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட 'சுதந்திரம்" என்ற குழந்தைக்கு இந்த ஆண்டு 65 வயதாகிறது. இப்போது சுதந்திரத்திற்கு வயதாகிவிட்டது. அது எங்கோ திக்குத் தெரியாத இடத்தில் தடுமாறிக் கொண்டிருப்பதைப்போல் தெரிகிறது. இந்த 65வது சுதந்திர தினத்திலாவது அந்த 'சுதந்திர'த்தை யாராவது கண்டுபிடித்து சொல்லுங்களேன்.

-----பாரூக்--