Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நான்கு சுவர்களுக்குள் மனித வதை - பாகம் - 02

 

அந்த வாளாகத்தினுள் ஒரு சிறிய ஷெல்லும் ஒரு பெரிய ஷெல்லுமாக இரண்டு ஷெல்கள் இருந்தன. இரண்டுக்கும் பொதுவாக ஒரு தண்ணித்தொட்டியும் இரண்டு மலசல கூடமும் காணப்பட்டது. இரண்டு ஷெல்லையும் பிரிக்குமாற்போல் கழிவுநீர்கால்வாய் போய்க் கொண்டிருந்தது. இங்கே எப்போதும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும். கிறவல் நிலத்தில் ஆங்காங்கே கல்லுக்குவியல்களாகவும் காணப்பட்டது.

நான்கு ஐந்து பேராய் கூட்டம் கூட்டமாய் ஆங்காங்கே நின்று கதைத்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் கல்லுக்குவியலுக்குமேல் குந்தியிருந்தனர்.

தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் தண்ணீர் முடிவதற்கிடையில் மேலைக் கழுவி விடவேணும் என்ற அவசரத்தில் சிலர் முண்டியடித்து தகரப்பேணியை தண்ணீர் தொட்டிக்குள் போட்டுக்கொண்டிருந்தனர் ஒருவருடைய பேணியுடன் மற்றவருடைய பேணி மோதியடித்து அரைகுறைபேணி தன்ணீரையே வெளியே கொண்டுவந்தது. ஒரு சிலர் பிளாஸ்டிக் வாளிகளையும் வைத்திருந்தனர்.

'போளின் வரப்போகுதுடா சீக்கிரம் வெளிய வாங்கடா' என்று கத்திக்கொண்டு கிழிந்த தகரக் கதவைக் கொண்ட கறைபடிந்திருந்த மலசலகூடத்துக்கு முன்னால் இன்னும் சிலர் காத்திருந்தனர். உள்ளுக்குள் இருப்பவர் வெளியில் தெரியக்கூடியளவுக்குத்தான் கதவிருந்தது.

இன்னும் ஒரு சிலர் சாப்பாட்டுத்தட்டுக்களை கையில் ஏந்தியபடி சாப்பிட்டுக்கொண்டு அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தனர்.

சிறைக்காவலாளி அந்த ஷெல் வளாகத்துக்குள் என்னை கொண்டு வந்து விட்டுச் சென்று வெகு நேரமாகியும் யாரும் என்னுடன் கதைக்கவில்லை. என்னாலும் யாருடனும் இலகுவாக போய் கதைக்க முடியாமலிருந்தது. எல்லோருமே என்னுடன் கதைக்க மனமில்லாதர்களாளாய் கடைக்கண் பார்வையுடன் நின்று கொண்டனர்.

பொலீஸ் விசாரணையில் இருந்து சிறைக்கு வருபவர்களை பொலீஸாருக்கு தகவல் சொல்லும் ஆட்களாக மாத்தித்தான் அனுப்புவார்கள் என்ற சந்தேகத்தில், பொலீஸில் இருந்து வருபவர்களை சிறையில் இருப்பவர்கள் இலகுவில் கிட்டவும் எடுக்கமாட்டார்கள் என்று நான் சிறைக்கு வரும் போது என்னுடன் பொலீஸ் காவலில் இருந்தவர்கள் சொல்லித்தான் அனுப்பினார்கள். இருந்தாலும் இந்தளவுக்கு விறைப்பாக இருப்பார்களென்று நான் எதிர்பார்க்கவில்லை.

சுவரில் சாய்ந்து கொண்டு நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தோள்வரைக்கும் முடிவளர்த்த ஒருவர் எனக்கு முன்னால் வந்து காலை இடந்து வைத்துக் கொண்டு, கைகளையும் குறுக்காக கட்டிக் கொண்டு 'அண்ணை எங்கிருந்து வாறியள்' என்று கேட்டார்.

அவர் கேட்ட தொனியும் ஆளின் உருவமும் என்னை ஒரு கணம் பயப்பிடத்தான் வைத்துவிட்டது. சுதாகரித்துக் கொண்டு 'பொலீஸில இருந்து வாறன்' என்று பதில் கூறினேன்.

'அது தெரியும் எங்களுக்கு. எந்தப் பொலீஸில இருந்து வாறியள்'? 'TID யிலா, CCDயிலா அல்லது CIDயிலா' என படபடவென கேட்டுக்கொண்டே சென்றார். இதற்கிடையில் இன்னும் ஓரிருவர் அவ்விடத்திற்கு வந்துவிட்டனர். என்னுடைய பதிலை வந்தவர்களும் ஆர்வமாக கேட்பதுபோல் காதைக் கூர்மைப் படுத்திக் கொண்டனர். நான் மெதுவாக 'TID'யில் என்று பதில் கூறுமுன்னே பக்கத்திலிருந்தவர்,

'எவ்வளவுகாலம் விசாரணையில் இருந்தனீங்கள்'

'ஆறு மாதம்'

'என்னெண்டண்ணை உங்களை ஐந்து மாதத்தில விசாரணைப் பிரிவிலிருந்து சிறைக்கு மாத்தினாங்கள்'

'அவங்களிட்டதான் அதுபற்றி கேட்கவேணும்"

'என்னண்ணே வந்த உடனேயே சூடாய் இருக்கிறயள்'

'அப்படியெல்லாம் ஒண்டுலில்லையே, நானும் உங்களப்போலதான் இருக்கன்'

'அது சரி அண்ணைக்கு எந்த இடம்'

'கொழும்பு"

'அது சரி இப்ப விளங்குது, ஏன் அண்ண சூடகிறாரெண்டு'

காலையிலிருந்து சாப்பாடு தண்ணி இல்லாமல் இருந்த எனக்கு, சக கைதிகளின் விசாரணைப் போக்கான கேள்விகள் கோபத்தைத்தான் ஏற்படுத்தியது.

கதைத்துக் கொண்டிருக்கும்போதே கதவு திறபடும் சத்தம் கேட்டது. 'மாத்தையா வாறார். போளின் போளின் என ஆளையாள் சொல்லிக் கொண்டு இரண்டிரண்டு போராக ஷெல் வாசலில் போய் நின்று கொண்டனர். நானும் வரிசையின் கடைசியில் சோடியில்லாமல் நின்றுகொண்டேன். சிறையதிகாரி ஒருவரும் இரண்டு சிறைக் காவலர்களுமாக மூன்று பேர் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தனர்.

முதலாவதாக சின்ன ஷெல்லுக்குள் மூன்று பேருமாக உள்ளே சென்று சுற்றி பார்த்துவிட்டு வெளியேவந்து இரண்டிரண்டு ஆட்களாக எண்ணி உள்ளே அனுப்பி அந்த ஷெல்லைப் பூட்டிக் கொண்டனர். அதன் பிற்பாடு பெரிய ஷெல்லுக்குள் போனார்கள். தங்களின் அடிப்படை சோதனையான யன்னல்கள், கதவுகள் சரியாக பூட்டப்பட்டிருக்கின்றதா? சுவரில் ஏதாவது துவாரங்கள் இருக்கின்றதா என்பதையெல்லாம் சோதனை செய்து முடித்த பின்னர் இரண்டிரண்டுபேராக ஷெல்லுக்குள் செல்ல அனுமதித்தனர். ஒவ்வொரு சோடியும் உட்செல்லும் போது சிறைக்காவலாளி கணக்கெடுத்துக் கொண்டார்.

கடைசியாக நின்ற நான் உள்ளுக்குள் சென்றவுடன் ஷெல்லின் பெரிய கதவு பூட்டப்பட்டு தாழ் போடப்பட்டது. சிறைக் காவலர்கள் கதவை மூடியவுடன் 'இங்க எல்லோரும் ஒருக்கா கவனியுங்க, எங்கட செல்லுக்கு ஒரு அண்ணை புதுசா வந்திருக்கார். உங்கட ஷெல்லுகளுக்குள் இடமிருக்கிறாக்கள் எடுத்துப் போடுங்க' என்று செல்லுக்கு பொறுப்பான காம்பிரப்பாட்டி குரல் கொடுத்தான். எல்லோரும் ஆளையாள் மாறி மாறி முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள்.

கடைசி ஷெல்லிலிருந்து "அண்ணைய எங்கட ஷெல்லுக்குள் எடுக்கிறம்" என்றார்கள்.

நானும் கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிடக்கூடது என நினத்துக்கொண்டு அவர்கள் கூப்பிடுவதற்கிடையில் கைப் பையையும் எடுத்துக் கொண்டு கடைசி ஷெல்லுக்குள் போய்விட்டேன்.

'இதுக்குள்ள நாங்க ஆறுபேர் இருக்கிறமண்ண. உங்களையும் சேர்த்தா ஏழுபேர். படுக்கத்தான் இடமில்ல. இருந்தாலும் பார்த்து சமாளிப்பம்' என்று அவர்கள் சொல்லிக் கொண்டனர்.

இரவுச் சாப்பாட்டை அவர்கள் ஆறுபேருக்குமாக ஒரு பெரிய தட்டத்தில் எடுத்து வத்திருந்தார்கள். 'அண்ண சாப்பிடுவம் பிந்தினா சோறு மணத்துப்போகும்' என ஒருவன் சொல்ல, எல்லோரும் ஆளுக்கொரு தட்டை எடுத்துக் கொண்டார்கள். "அண்ணைக்கும் ஒரு தட்டிருந்தா கொடுங்கடா" என்றான் ஒருவன். எனக்கும் ஒரு பிளாஸ்டிக் கோப்பை தரப்பட்டது. இருந்த சோத்தையும் கறியையும் ஏழுபேருக்கும் பிரித்துப் போட்டான் ஒருவன்.

'கறியைப் பார்த்துச் சாப்பிடுங்கண்ண. இறாலுகள் கிடக்கும். தட்டுப்பட்டா கரையா தள்ளி வச்சிட்டு சாப்பிடுங்க, சோற்றுக்குள்ளையும் கல்லுகள் கிடக்குதண்ண. இதுக்குள்ள இருந்து போறத்துக்கிடையில இந்த நிலத்தின்ர ஓட்டைகளை அடைச்சுப் போடுவமெண்டு பார்க்கிறம். அதால் சாப்பிட்டுகீப்பிட்டு போடாம பக்கத்தில பொறுக்கி வையுங்கோ' என ஜெயில் சாப்பாட்டின் நிலைமையை ஒருவன் சொன்னான்.

என்னால் அந்த சாப்பாடு முழுவதையும் சாப்பிட முடியவில்லை. முக்கி முனகி அரைவாசியை சாப்பிட்டுவிட்டு மிச்ச சாப்பிட்டை மூலையில் இருந்த பழைய சாப்பாடுபோட வைத்திருக்கும் வாளியில் கொட்டிவிட்டு, கையை கழுவிவிட்டு, திரும்பவும் செல்லுக்குள் வந்திருந்தன். மற்றவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் திடிரென்று அடி அடி என்றார். பக்கத்தில் ஒன்றையும் காணவில்லை. ஏனடா திடிரென்று அப்படி சத்தம் போடுகிறார் என்றிருக்கவே மல நாற்றம் வீசுவதை உணர்ந்தேன். எங்களது செல்லுக்கு முன்னால்தான் அந்த மலம் கழிக்கும் வேசன் இருந்தது. அங்கே ஒருவர் குந்திக் கொண்டிருந்தார். எனக்கு அடி அடி என்று சொன்னதன் அர்த்தம் அப்போதுதான் விளங்கியது.

'அண்ண பெயரென்ன, எந்த இடம், ஏன் பிடிச்சாங்கள்...' திரும்பவும் அதே கேள்விகள். கேட்கும் ஆட்களும், முறையும்தான் வேறு. அவர்களும் தங்களுடைய பெயர்களையும் சொல்லிக் கொண்டார்கள்.

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த போது முதன் முதலாக நான் அவர்களிடம் 'காம்பிராப் பாட்டி என்றால் யார்?" என்று கேட்டேன்.

'அவர் எங்களுக்கு ஒரு மொனிற்றர் மாதிரி. இங்க ஒரு பிரச்சினை எண்டா நாங்க எல்லாரும் மாத்தையாமாரோட போய் கதைக்கேலாது. அது மாதிரி மாத்தையாமார் ஏதும் சொல்லி விடுகிறதெண்டாலும் இவரிட்டதான் சொல்லி அனுப்புவினம். நாங்களா நேரடியா ஒண்டுக்கும் போக இயலாது' என்று எனக்கு ஒரு வகுப்பே எடுத்து விட்டார்கள். காம்பிராப்பாட்டி என்று கதை கேட்டவுடன் அவரும் அவ்விடத்துக்கு வந்து விட்டார்.

என்னவாம் அண்ணை கேக்கிறார் என்று காம்பிராப்பாட்டி கேட்க ' உன்ர அருமை பெருமைகளைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறம்' என்று ஒருவன் சொல்ல, அவரும் சிரித்துகொண்டு 'அண்ண நீங்க ஒண்டுக்கும் இங்க பயப்பிடத் தேவையில்லை' என்று ஒரு அதிகார தோரணையில் சொல்லிவிட்டு சென்றார்.

கதைத்துக் கொண்டே ஆளையாள் சாப்பாடுத் தட்டுக்களை துப்பரவு செய்து கொண்டிருந்தனர். பிளாஸ்டிக் வாளிகளில் எடுத்துவைத்திருந்த தண்ணீரில் சாப்பாட்டுத் தட்டுக்களை கழுவி மலம் கழிக்கும் வேசனில் ஊற்றிக்கொண்டனர். அங்கிருக்கும் ஐந்து ஷெல்களிலிருந்தவர்களும் அப்படித்தான் நடந்து கொண்டார்கள்.

முன் கதவில் தட்டும் சத்தம் கேட்டது. 'மாத்தையா எட்டு மணி போலினுக்கு வந்திட்டார். எல்லாரும் போலின்' என்று காம்பிராப்பாட்டி கத்தினான். எல்லோரும் ஷெல் வராந்தாவில் ஒருவருக்கு பின் ஒருவராக எழுந்து நின்று கொண்டோம். சிறைக் காவலாளி கத்வைத்திறந்துகொண்டு உள்ளே வந்தார். ஒவ்வொருத்தருடைய முகத்தையும் ரோச் வெளிச்சத்தை செலுத்தி பார்த்துகொண்டு செல்ல, மற்றொரு காவலாளி கணக்கெடுத்துக் கொண்டு சென்றான்.

கணக்கெடுத்து முடிந்தவுடன் எல்லோரையும் அவரவர் செல்லுக்குள் விட்டு கதவை பூட்டி விட்டார்கள். அந்த பெரிய ஷெல்லுக்குள் ஐந்து சின்ன ஷெல்கள். நடுப்பகுதியில் ஐந்தடி அகலமான ஒரு வராண்டா. ஒவ்வொரு ஷெல்லுக்குள்ளும் குறந்தது எட்டுப்பேர் படுக்கவேண்டும். எட்டுக்கு ஐந்து கொண்ட அந்த ஷெல்களில் எட்டுப்பேர் படுப்பதென்பது சாத்தியமாகத ஒன்று. இருப்பினும் கதைகள் சாத்தியமாக்கின.

இரண்டு ஷெல் சுவர் கம்பிகளில் குறுக்காக பிடித்துக் கட்டப்பட்ட துணிகளில் இரவிரவாக தூங்குவதும், ஒருவரின் காலின் இடைவெளிக்குள் மற்றவரின் காலை வைத்து எதிரெதிர் திசைகளில் தலையை வைத்து நெருக்கி தூங்கி எழும்புகின்றனர். சிறையில் இருக்கின்ற ஒவ்வொருத்தரும் தன்னுடயை காலை தன்னுடைய விருப்பத்துக்கு வைத்துப் படுக்க முடியாது.

இப்படித்தான் என்னுடைய சிறைவாழ்க்கையின் முதலாம் நாள் தூக்கத்தை அந்த ஷெல்லில் கழித்தேன். யாரும் முழு இரவும் நிம்மதியாக தூங்கியிருக்கமாட்டம். சிறைக் காவலாளியின் பட்டன்பொல்லால் சுவரில் தட்டும் சத்தம் ஒருபக்கம். ஒருவருடைய கால் மற்றவனுடய காலில் பட்டு திடுக்கிட்டு எழும்பியிருந்து திட்டி தீர்ப்பதும், எழும்பினதுதான் எழும்பியாச்சு என்று விடிய விடிய தங்களின் சொந்தக் கதைகளையும், சோகக் கதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அன்றும் அவர்களிடைய கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கவே காலைப் போளினுக்காக சிறைக்காவலாளி கதவைத் தட்டி கத்திக் கொண்டிருந்தான்.

படுத்திருந்தவர்களும், கதைத்துக் கொண்டிருந்தவர்களும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து போளினுக்காக இரண்டு இரண்டுபேராக கையில் தட்டுடன் வரிசையாக வந்துநின்றோம். ஷெல் கதவை திறந்த சிறைக் காவலாளிகள் இவ்விருவராக வெளியே விட்டு கணக்கெடுத்துக் கொண்டார்கள். நாங்கள் எல்லோரும் வெளியே வந்தவுடன் அவர்கள் உள்ளே சென்று தங்களுடைய சோதனையை முடித்துக் கொண்டு திரும்புவதற்கிடையில் எங்களுக்கான காலைச் சாப்பாடாக வெள்ளைச் சோறும், சம்பலும் தரப்பட்டது.

வெளியில் விடப்பட்டிருந்த அந்த ஒரு ஐந்து பத்துநிமிடத்துக்குள் காலைச் சாப்பாட்டை தட்டில் வேண்டிக்கொண்டு, ஆளையாள் முண்டியடித்து மூத்திரம் போக சலகூடத்துகுப் போனவர்கள் போக மற்றையவர்கள் கருங்கல்லு மதிலுக்கு தண்ணீர் வார்த்துக் கொண்டிருந்தோம். உள்ளே சென்று தங்களுடைய சோதனையை முடித்துக் கொண்டு திரும்பிய சிறைக்காவலர்கள் திரும்பவும் இரண்டிரண்டிரண்டு பேராக உள்ளே அனுப்பி கணக்கெடுத்துக் கொண்டார்கள்.

தொடரும்............

நான்கு சுவர்களுக்குள் மனித வதை - பாகம் - 01