Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

துவேஷம் தனது முகத்தைக்காட்டி பல்லிளித்ததில்லை

பிரேமினி அமீரசிங்க எழுதிய ஒரு சிங்களக் கவிதையின் தமிழாக்கம் இது

பாடசாலை நாட்கள் இரட்டைச்சடைகள் பறக்க
நான் மலைகளின்மேல் ஷாரினா, நெலியா, லட்சுமியுடன் மிதந்தேன்
பள்ளியின் பின்னால் நீளும் இந்நெடும்பாதை
எப்போதும் விரைவில் முடிந்துவிடுகின்றது

ஷாரினா இவ்வுலகில் எதற்கும் கவலைப்பட்டதில்லை
அவளது தந்தைக்கொரு சொந்தக்கடையிருந்தது
திருமணஞ்செய்வதே அவளது ஒரேயொரு விருப்பாயிருந்தது
அதைவிட வேறொன்றுமில்லை

நெலியா அவளது ஐரிஷ் தந்தையை அறிந்தவளில்லை
அடர்த்தியான கறுப்புக்கற்றைகள், மாதுளம்பழமான கன்னங்கள்
எல்லாப் பெடியங்களும் விரும்பக்கூடிய அழகானவளாயிருந்தாள்

லட்சுமி நானிதுவரை பார்த்திராத தடித்த கண்ணாடிகளை அணிந்திருந்தாள்
அவளது வீடு, அடிப்படை வசதிகளற்றது
போத்தல் விளக்கிலிருந்து வரும் தெளிவற்ற கதிரே
அவளது ஒளியாகவிருந்தது

அவள் ஒரு வைத்தியராகவோ வழக்கறிஞராகவோ
என்றேனும் ஒருநாள் ஆவாளென
அவளது தந்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்
அல்லது ஆகக்குறைந்தது
பல்கலைக்கழகத்திற்குச் செல்வாளென

நான் ஒரு கணமும் இன்னொரு இனத்திற்குரியவளென
(இவர்களோடு) இருந்தபொழுதில் உணர்ந்ததில்லை
நாங்கள் இளமையாக இருந்தபோது வாழ்வு இனிமையாக இருந்தது
துவேஷம் தனது முகத்தைக்காட்டி பல்லிளித்ததும் இல்லை

இப்போது உரத்துக்கதைத்தபடி
எனது மகள் பாடசாலையிலிருந்து நடந்துவருகின்றாள்
ஐந்துபேராய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி
இன்றைய நாளின் விசயத்தை அலசுகின்றார்கள்

‘ஒரு தமிழ் கடை இன்று எரிக்கப்பட்டது’ ஒருத்தி சொன்னாள்.
‘கொளுத்தியது சரிதான்’ என்றாள் இன்னொருத்தி.
அவர்களுக்கு ஷாரினா, நெலியா, லட்சுமியின் அருகாமை
ஒருபோதும் கிடைத்ததேயில்லை.

-பிரேமினி அமீரசிங்க

குறிப்பு: இக்கவிதையினை தமிழாக்கம் செய்தவர் பற்றிய தகவல் ஏதும் எம்மால் அறிய முடியாதுள்ளது. அவருக்கு எமது நன்றிகள்.