Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"வெல்வோம்-அதற்காக": மரணத்தின் வெளிகளில் வாழ்ந்த ஒரு போராளியின் பதிவுகள்!!

எண்பத்துமூன்று (1983) ஆடி இனக்கலவரம். இனவெறி அரசின் காடைத்தனம் கண்டு பொங்கி எழுகிறார்கள். இனி இது பொறுப்பதில்லை என்று ஆண்களும், பெண்களும் வீடுகளை விட்டு வீதிக்கு வருகிறார்கள். மக்களிற்காக, மண்ணிற்காக மரணத்தையும் எதிர்கொள்வோம் என்று அலை அலையாக எழுந்தார்கள். பெற்ற தாய், தந்தையரை விட்டு, காதலுக்குரியவர்களை விட்டு, கைக்குழந்தைகளைக் கூட விட்டு விட்டு இனி ஒரு விதி செய்வோம் என்று விண்ணதிர வந்தார்கள். பாசம் அறுத்து, நேசம் மறந்து, ஆசை துறந்து நம்தேசம் மீட்போம் என்று வெஞ்சமர் புரிய வந்தார்கள்.

சிங்கள பெருந்தேசியவாதிகளின் கொலைகளையும், சித்திரவதைகளையும் எதிர்த்து இயக்கங்களில் சேர்ந்தவர்களை அந்த இயக்கத்தலைவர்களே மரணத்தின் இருள்வெளிகளிற்கு மறுபடி தள்ளினார்கள். இயக்கத்தலைமைகளின் அராஜகத்தை, ஜனநாயக மறுப்பை எதிர்த்தவர்கள் கொல்லப்பட்டனர். மக்கள் போராட்டத்தை நம்பாமல் ஆயுதங்களையும், அந்நிய சக்திகளையும் சார்ந்திருப்பதை கேள்வி கேட்டவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இன்னொரு தமிழ் இயக்கத்தின் ஆதரவாளனாக, உளவாளியாக இருக்கலாம் என்ற ஒரு சிறு சந்தேகமே பல அப்பாவிகளின் உயிரைப் பறித்தது. எந்த உயிரினதும் ஆதார உணர்ச்சியான காதல் மனதில் மலர்ந்தது என்ற காரணத்திற்காகவே மண்ணிற்குள்ளே பலர் புதைக்கப்பட்டார்கள்

மனதில் தமிழ்மக்களின் விடுதலைக்கனல் கொழுந்து விட்டெரிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் சேரும் சீலன் ஆயுதப்பயிற்சிக்காக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார். பயிற்சி முகாமில் சித்திரவதைகளை கண்முன்னே காண்கிறார். பயிற்சிக்கு வந்த ஒருவரை உளவாளி என்று சந்தேகப்பட்டு சித்திரவதை செய்கிறார்கள். அவரது கையைக் கீறி அந்த வெட்டுக்காயத்திற்குள் வெடிமருந்தை நிரப்பி தீ வைக்கிறார்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் உமாமகேஸ்வரனுடன் சேர்ந்து லெபனானில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பயிற்சி எடுத்த விச்சு என்பவர் உமாமகேஸ்வரனுடன் முரண்பட்டதால் சீலன் இருந்த முகாமில் சிறை வைக்கப்படுகிறார். சிறையில் இருந்து தப்பி பட்டுக்கோட்டையில் ஒருபண்ணையார் வீட்டில் அடைக்கலம் புகுகிறார். விச்சுவை பிடிக்கப்போன உமாமகேஸ்வரனின் அடியாட்களை தடுத்த பண்ணையாரை சுட்டுக் கொல்கிறார்கள். தமக்கு தளமாக இருந்த தமிழ் நாட்டில் வைத்து தமிழ்நாட்டு குடிமகனையே சுட்டுக் கொல்லுமளவிற்கு அராஜகம் செய்கிறார்கள்.

அவரது இயல்பான நேர்மையும், தோழர் தங்கராசா போன்ற தோழர்கள் மூலம் கற்றுக் கொண்ட விடுதலை அரசியலான பொதுவுடமை தத்துவமும் அவரை சித்திரவதைகள், ஜனநாயக மறுப்பு போன்றவைகளிற்கு எதிராக போரிட வைக்கிறது. அவரும் அவரை ஒத்த கருத்து கொண்டவர்களும் சேர்ந்து அறிக்கை ஒன்றை தலைமைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அமைப்பிற்குள் ஜனநாயகம் வேண்டும். போராளிகளிற்கு அரசியல் கல்வி அளிக்கப்பட வேண்டும். அமைப்பின் தலைமை நீண்டகாலமாக தமிழ்நாட்டில் இருப்பதால் போராட்டத்திலிருந்தும், மக்களிடமிருந்தும் அன்னியப்பட்டிருப்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஒரு போராட்ட அமைப்பின் இராணுவப்பிரிவு அரசியல்மயப்படுத்தப்பட்டதாகவே இருக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அந்த அறிக்கையில் வைக்கிறார்கள்.

"சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிவொம்" என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் கொள்கையாக சொல்லித் திரிந்த உமாமகேஸ்வரனும், அவரது அடியாட்களும் போராட்டத்தை அரசியல்மயப்படுத்த வேண்டும் என்றும், அமைபினுள் இருக்கும் அடக்குமுறைகளிற்கு தீர்வு காணப்பட வேண்டும் எழுந்த குரல்களை வன்முறை மூலம் அடக்க முற்பட்டார்கள். தம்முடன் முரண்பட்டவர்களை கொலை செய்வதை தான் போராட்டம் என்று சொல்லி வந்த கொலைகாரர்களாகத் தான் எல்லா இயக்கங்களும் இருந்தன. "மக்களிற்கு அரசியல், பேச்சுரிமைகளைக் கொடுத்தால் நாம் அரசியல் அநாதைகளாகி விடுவோம்" என்று அறிக்கை விடுமளவிற்கு "அரசியல் அறிவு" உள்ளவர்களாகவே இயக்கங்கள் இருந்தன.

ஆனால் அவர்கள் எதிர் கொண்ட வன்முறைகள் அவர்களை மேலும் மேலும் உறுதி கொண்டவர்களாக வளர்த்து விடுகிறது. மிக இளம் வயதில் சிறு அளவில் கற்றுக் கொண்ட அரசியல் கல்வியுடன் அவர்கள் போராடும் போது நீண்ட கால போராட்ட அனுபவமும் அரசியல் முதிர்ச்சியும் கொண்ட சில தோழர்கள் இயக்கத் தலைமைகளுடன் சேர்ந்து நின்றார்கள். சிலர் எந்தவித எதிர்ப்பையும் காட்டாது தாம் மட்டும் தப்பி போனார்கள் என்கின்ற விமர்சனத்தை சீலன் முன் வைக்கின்றார். அவர் சொல்வது போல சிலர் இருந்தார்கள். சில தோழர்கள் தம் உயிரிலும் மேலாக நேசித்த மக்களின் விடுதலையையும், தாம் கட்டி வளர்த்த போராட்ட அமைப்புகளையும் உடைவுகள் பலவீனப்படுத்தி விடும் என்று பயந்து எதிர்க்காமல் இருந்தனர். ஆனால் அவ்வாறு இருந்த மக்களிற்காகவே வாழ்ந்த பல போராளிகளும் கூட இந்த கொலைகாரர்களால் கொல்லப்பட்டனர்.

மக்களை நம்பாமல், சக தோழர்களை நம்பாமல், விடுதலையின் அரசியல் கல்வியான பொதுவுடமை தத்துவங்களை நம்பாமல் ஆயுதங்களையும், வெளிநாட்டு கொள்ளையர்களையும் நம்பியவர்கள் இறுதியில் தாங்களும் அழிந்து மக்களையும் பலி கொடுத்தார்கள். இவ்வளவு அழிவின் பின்பு கூட மறுபடியும் மற்றவர்கள் வந்து மக்களை மீட்பார்கள் என்று ஏமாற்றுகிறார்கள். இந்த நேரத்தில் சீலன் போன்றவர்களின் போராட்ட அனுபவங்கள் எமது போராட்டங்கள் எந்தப் பாதையில் போக வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவி செய்கின்றன. அவரது இந்த பதிவுகளில் முரண்பாடுகள் இருக்கலாம். சில நகர்வுகளை வேறு விதமாக எடுத்திருக்கலாம் என்று தோன்றலாம். சில தோழர்களைப் பற்றிய விமர்சனங்களிற்கு வேறு பக்கங்களும் இருக்கக்கூடும். ஆனால் அவரது பதிவுகளும், அவர் போன்ற மக்களை நேசித்த தோழர்களின் பதிவுகளும் தமிழ்மக்களின் வருங்காலம் செல்ல வேண்டிய திசையை காட்டி நிற்கின்றன.

இயக்கங்களால் செய்யப்பட்ட கொலைகளும், சித்திரவதைகளும் தமிழ்மக்களின் வரலாற்றில் வெட்கித் தலை குனிய வைக்கும் பக்கங்கள். ஆனால் இந்த கொலையாளிகளிற்கு அஞ்சாமல் சீலன் போன்ற போராளிகள் எல்லா இயக்கங்களிலும் இருந்தார்கள். அராஜகங்களை எதிர்த்து குரல் கொடுத்தார்கள். மரணம் வரும் என்று தெரிந்தும் போராட்டத்தில் உறுதியோடு நின்றார்கள். அந்தக் குரல்களின், போராட்டங்களின் தொடர்ச்சியாகத் தான் இலங்கையின் இன்றைய இருள்வெளிகளிற்குள்ளும் மின்மினியின் மினுங்கலாய் என்றாலும் விளக்குகள் எரிகின்றன. கல் நிறைந்த பாதையில் கால்கள் களைத்தாலும் காற்றில் அசைந்தாடும் செங்கொடிகளை கைகள் ஏந்தியிருக்கின்றன. குரல்வளைகளை நெரிக்கும் கரங்களை மீறி நட்சத்திரங்களை வாரி இறைக்கும் வானம் எங்கும் எழுகிறது விடுதலையின் பாடல்.