Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இருள் சூழ்ந்த வானத்தில், ஒருநாள் விடிவெள்ளி நிச்சயம் முளைக்கும்!!!

சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள், சிங்கள மக்களை ஏமாற்றுவதற்கு வைத்திருக்கும் நீண்டகால மயக்க மருந்து இனவாதம். தேர்தல் வரப் போகின்றதென்றால் அந்த இனவாத மயக்க மருந்தை இரட்டிப்பாக அள்ளி வழங்குவார்கள். இனவாதச் சேற்றில் கால் புதைத்து நிற்பவர்களின் தோள்களின் மேல் பொய்மூடைகள் ஏற்றப்படுகின்றன. அளுத்கம முஸ்லீம் மக்களின் மீதான கலவரங்கள், காணாமல் போன தம் அன்புக்குரியவர்களை தேடும் தமிழ்மக்களின் கூட்டத்தை பொதுபல சேனாவின் பிக்குகள் என்னும் குண்டர்களைக் கொண்டு குழப்புதல், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் யோகராஜா நிரோசன் என்னும் தமிழ் மாணவனை பயங்கரவாதி என்று கைது செய்தல் என்று பலவழிகளில் இலங்கை அரசு இனவாத நஞ்சை கக்குகிறது.

தமிழ்மக்களைக் கொன்று குவித்து சிங்களத் தேசிய வீரனாக தன்னைக் காட்டிக் கொண்ட மகிந்தாவின் வாக்குவங்கி கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியிருக்கிறது. இன்னும் ஒரு லட்சம் சிங்கள மக்களின் வாக்குகள் ஜக்கிய தேசியக்கட்சிக்கு செல்லுமாயின் அடுத்த தேர்தலில் தோல்வி தான் என்று அமைச்சர் ஒருவர் பேசியதாக சொல்லுகிறார்கள். அதற்காகத் தான் இந்த அவசரத் தயாரிப்புகள். கணக்கற்ற பிணங்களில் மேல் ஏறி உட்கார்ந்த சிம்மாசனம் ஆடத் தொடங்கியுள்ளதால் அடுத்த பலிக்கு ஆயத்தம் ஆகிறார்கள்.

இசைப்பிரியா, கிருசாந்தி, கோணேஸ்வரி, கதிர்காமத்து மன்னம்பெரி என்று எண்ணற்ற பெண்களை எந்த விதமான இரக்கமும் இல்லாது கடித்துக் குதறிய இலங்கை அரசின் காவல்நாய்கள்; பொதுபல சேனை காடையர்களின் முன் கூனிக் குறுகி கும்பிடு போடுகின்றன. காணாமல் போன உறவுகளை தேடி கதறி அழுபவர்கள் பயங்கரவாதிகளாம், அவர்களை எப்படியாவது, யாராவது கண்டு பிடித்து தாருங்கள் என்று கூடுவது பயங்கரவாதத்தை தூண்டும் செயலாம், பெளத்த பிக்குகள் என்று சொல்லிக் கொள்ளும் காவி போர்த்த பயங்கரவாதிகள் சொல்கிறார்கள். வெளிநாட்டவருக்கு முன்னிற்கு, பத்திரிகையாளரிற்கு முன்னிற்கு பொதுபல சேனை வெறியாட்டம் போடுகின்றதென்றால் பின்னிற்கு அரச ஆசிர்வாதம் இருக்கின்றது என்ற துணிவு தான் அதற்கு காரணம் என்பதை எடுத்து சொல்லத் தேவையில்லை.

கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்கும் திட்டத்துடன் சிலர் இருக்கிறார்கள் என்று இலங்கையின் காவல்துறை அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்தார். ஆனால் இது குறித்து எவரும் கைதாகவில்லை. புலிகளின் உறுப்பினர்களை மலேசியாவில் வைத்து கைது செய்யும் அளவிற்கு திறமை கொண்ட இந்த புலனாய்வு புலிகள் இந்த தேவாலயங்களை உடைக்க திட்டம் தீட்டியவர்களை கைது செய்ய முடியாமல் இருக்கிறார்கள். பொதுபல சேனை, இராவண சேனை என்பவைதான் இந்த திட்டத்தை தீட்டியவர்களாக இருக்கும். தேவாலயங்களை உடைக்கும் திட்டம் இந்த பயங்கரவாத கும்பல்களுடன் மட்டும் நின்று விடாது, நாடு முழுவதும் பரவ வேண்டும் என்ற "பரந்த" நோக்கத்துடன் காவல்துறை அதிகாரி அதை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ் மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற வேண்டும். தமிழ் மாணவிகள் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறாவிட்டால் அவர்கள் மேல் பாலியல் வன்முறை பிரயோகிக்கப்படும் என்ற சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் இன்று வரை கைது செய்யப்படவில்லை. அந்த பல்கலைக்கழகத்தில் வைத்து தமிழ் மாணவர் ஒருவரை இரவு நேரம் கயிற்றால் கட்டி அடித்து கொலை செய்ய முயற்சித்தவர்களை இன்றுவரை கைது செய்யவில்லை. ஆனால் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் ஒரு "தமிழ்ப் பயங்கரவாதியை" கண்டு பிடித்து கைது செய்திருக்கிறார்கள். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்த மக்கள் விரோத அரசிற்கெதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை இனவாதத்தைக் கொண்டு சிதைப்பதற்காகவே யோகராஜா நிரோசனை கைது செய்திருக்கிறார்கள்.

ஆனால் மாணவர்கள் இனவாதத்திற்கு பலியாகவில்லை. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் "யோகராஜா நிரோசனை விடுதலை செய்" என்று பெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தது. மாணவர்களின் உறுதி கண்டு பணிந்தது இலங்கை அரசு. ஆறாம் திகதி கைது செய்த "தமிழ்ப் பயங்கரவாதியை" ஒன்பதாம் திகதி விடுதலை செய்த அதிசயம் நடந்தது. துளித்துளியாக பெய்யும் மழையே ஒன்று சேர்ந்து பொங்கி வரும் பெருவெள்ளமாக மாறும் என்பதை மாணவர்கள் போராட்டம் எடுத்து காட்டுகிறது.

மகிந்த ராஜபக்சவை தேர்தலில் தோற்கடிக்க எல்லா கட்சிகளும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் போன்ற கோசத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து வந்த எந்த அரசு மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தது?. மகிந்தா போனால் மகிந்த போன்ற மற்றொரு மக்கள் விரோதி தான் வருவார். தேர்தல்கள் மக்களின் பிரச்சனைகளை ஒருபோதும் தீர்த்து வைக்கப் போவதில்லை. "முதலாளித்துவத்தின் இறுக்கமான பிடியில் இருந்து விடுபட வேண்டுமாயின் அதன் மென்மையான பகுதிகளை வெட்ட வேண்டும்" என்றான் கார்ல் மார்க்ஸ். இலங்கை அரசின் இனவாத அரசை தோற்கடிக்க வேண்டுமாயின் இனவாதத்திற்கெதிராக ஒடுக்கப்படும் எல்லா மக்களும் இணைந்து போராட வேண்டும். உழைக்கும் மக்களின் போராட்டம் ஒன்றே வறுமையை ஒழிக்கும், இனவாதத்தை தோற்கடிக்கும் ஒரு மக்கள் அரசை மலரச் செய்யும். இருள் சூழ்ந்த வானத்தில் ஒருநாள் விடிவெள்ளி நிச்சயம் முளைக்கும்.