Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ராமராசன் பசுநேசன், மகிந்து வெறிநாய்நேசன்

சர்வாதிகாரிகள் கொலைகாரர்களாகவும், கொடுங்கோலர்களாகவும் இருக்கும் அதேவேளையில் கோமாளிகளாகவும் இருக்கிறார்கள். மக்களைக் கொன்று குவித்து, நாட்டை கொள்ளையடித்து, தனதும் தன் குடும்பத்தினதும் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்போரை காணாமல் போகச்செய்யும் மகிந்துவிற்கு வெறிநாய்களின் மேல் பொங்கும் பாசம் அப்படியான கோமாளித்தனத்திற்கு ஒரு சிறு உதாரணம். மகிந்து சிந்தனை என்னும் ஒப்பற்ற சிந்தனைக்கடலில் விளைந்த முத்துக்களில் ஒன்று வெறிநாய்களைக் கொல்லக்கூடாது என்பதாகும்.

வெறிநாய்களைக் கொல்லக்கூடாது என்றவுடன் உங்களிற்கு கோத்தபாய, மெர்வின் சில்வா, விமல்வீரவன்ச, கெகலிய, கருணா போன்றவர்களின் ஞாபகம் வரக்கூடும். தனது வளர்ப்புப்பிராணிகளான அவர்களை பாதுகாக்கக் தான் அதிஉத்தம, அகிம்சாமூர்த்தி மகிந்து இப்படியான தத்துவமுத்துக்களை அள்ளி வழங்கியிருக்கிறார் என்று நினைக்கக்கூடும். அவர்களை பாதுகாக்க ஆட்சி அதிகாரம், இராணுவம் என்று அத்தனையையும் வைத்திருக்கும் மகிந்து இங்கு பரிதாபப்படுவது நாலுகால் வெறிநாய்களிற்காக.

எவ்வளவு கெட்டவர்களாக, யமனை பச்சடி போட்டவர்களாக அரசியல்வாதிகள் இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே! அவர்களிற்கும் ஒன்றிரண்டு நல்ல குணங்கள் இருக்கக்கூடும். கழுத்தை பிடித்து தள்ளினாலும், காலால் அடித்து துரத்தினாலும், ரொம்ப கெட்டவங்க என்று சொன்னாலும் ஆத்திரம் கொள்ளோம், அமைதி காத்திடுவோம், பதவியில் பசை போல் ஒட்டிக் கொள்வோம் என்று வாழும் பண்பாளர் நிதிமந்திரி ரவூப் கக்கீம் போன்றோரும் இந்த மொள்ளமாரி அரசியல்வாதிகளிடையே தானே இருக்கிறார்கள். மகிந்து மனிதர்களைத் தான் கொல்லும். மிருகங்களை பாதுகாக்கும். ராமராசன் பசுநேசன் என்பது போல மகிந்து வெறிநாய்நேசன். மகிந்துவிற்கு வெறிநாய்களின் மேல் இருக்கும் பாசமும் அப்படியான ஒன்று நீங்கள் நினைக்கக் கூடும். வன்னியில் கொல்லப்பட்ட மிருகங்களையும், நாடு முழுக்க அழிக்கப்படும் காடுகளையும் மட்டும் மறந்து விடுவோம்.

மகிந்துவின் இந்த நாய்ப்பாசத்தால் நகராட்சிகள் இப்போது வெறிநாய்களைப் பிடிப்பதில்லை. நாடு முழுவதும் வெறிநாய்களினால் கடிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. குறிப்பாக வடமாகாணத்திலே போரினாலே இறந்த குடும்பங்களின் வளர்ப்புநாய்கள், சிறுமுகாம்களில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர் வளர்த்த நாய்கள் என்று பெருந்தொகையான நாய்கள் கட்டாக்காலிகளாக தெருக்கள் முழுக்க பசியுடன் அலைகின்றன. ஆதரவற்ற, அகதிகளான மனிதர்களிற்கே உணவு கொடுக்காத அரசு விலங்குகளிற்கு எதைக்கொடுக்கும். பசியுடன் உணவுக்காக ஒன்றை ஒன்று கடித்து அவை வெறி பிடித்து அலைகின்றன.

இந்த பிரச்சனைக்கு பரமார்த்தகுருவும், மட்டி மடையன் போன்ற அவரது சீடர்களும் கண்டு பிடிக்கும் தீர்வுகள் போன்ற தீர்வொன்றை இலங்கை அரசு கண்டு பிடித்திருக்கிறது. அதாவது 2020ஆம் ஆண்டிற்குள் எல்லா வெறிநாய்களிற்கும் கருத்தடை ஊசி போட்டு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துமாம். சூழலியலாளர் தியடோர் பாஸ்கரன் எழுதிய கட்டுரை ஒன்றில் இதே போன்றதொரு நிகழ்வை குறிப்பிடுகிறார். அவுஸ்திரேலியாவில் வளர்ப்பு நாய்களாக இருந்து பின்பு கைவிடப்பட்ட நாய்களால் (feral dogs) தமது ஆடுகள் கொல்லப்படுவதை அவுஸ்திரேலிய விவசாயிகள் அரச அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தபோது அந்த அதிகாரிகள் அந்த நாய்களிற்கு கருத்தடை செய்து விடுவோம் என்று கூறினார்களாம்.

ஆத்திரமடைந்த ஒரு விவசாயி கூறினாராம். "sir they don't f**k the sheeps, they killed the sheeps". இலங்கையில் வெறிநாயினால் பாதிப்படைந்த யாராவது ஒருவர் இதே போல நாய் தனக்கு கடிக்க மட்டுமே செய்தது என்பதை மகிந்துவிற்கு விளக்கி கூறி கருத்தடை ஆலோசனையை மறுபரிசீலனை செய்ய முன் வரவேண்டும்.