Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழீழம் என் தலைமையில் தான், இல்லையென்றால் எல்லாத்தையும் அழிப்பேன்!

இந்தக் கதை கதையல்ல. இந்தக் கதை மனிதர்களும் கற்பனை மனிதர்கள் அல்ல. அவர்கள் யாரென்று நான் சொல்லப் போவதில்லை. அவர்களின் பெயரைக் கூட நான் சொல்லப்போவதில்லை. ஆனால் நான் சொல்லாமலே உங்களிற்கு அவர்களை தெரியும். அவர்கள் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வோடு பிணைந்தவர்கள். சமுதாயத்தின் போக்குகளே நிகழ்வுகளை, வரலாறுகளை போராட்டங்களை, போராட்டங்களின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கிறதென்றாலும் தனிமனிதர்களுக்கும் அவற்றில் ஒரு குறிப்பிட்டளவு பங்குண்டு என்பது விவாதத்திற்கு இடமில்லாத விடயம். உலகைக் குலுக்கிய ரஸ்சிய புரட்சிக்கு பிறகு லெனின் நான்கு வருடங்களே உயிர் வாழ்ந்தார். இன்னும் சில காலம் இருந்திருந்தால் என்ற நினைப்பு அடிக்கடி எழும். பொலிவிய காடுகளிற்குள் தோழன் சே குவெரா கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால், ஈழவிடுதலையை நெஞ்சில் ஏந்திய எண்ணற்ற ஆண்களும், பெண்களும் அரசினாலும், இயக்கங்களினாலும் கொல்லப்படாமல் இருந்திருந்தால் வரலாறு சில வேளைகளில் வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும்.

இந்தக்கதை தமிழ்மக்களின் கண்ணீரும் செந்நீரும் காட்டாற்று வெள்ளமாய் கரைகளை உடைத்துக் கொண்டு கட்டற்று ஓடியதன் கதை. காலகாலமாய் களிப்புடன் வாழ்ந்த வீட்டை விட்டு, ஊரை விட்டு, நாட்டை விட்டு ஒரு தலைமுறையே அகதிகளாக, அனாதைகளாக அலைந்த வரலாற்றிற்கு இந்த ஒற்றைச்சொல்லும் ஒரு காரணம். ஒரு மரணத்திற்கு ஒரு மாதம் கூடி அழும் சமுதாயத்தில் ஓராயிரம் மனிதர்களை பிணமாக விழுந்த இடத்திலேயே விட்டு விட்டு ஓடிய அவலங்களிற்கு இந்த ஒற்றை வசனமும் ஒரு காரணம். பலாலியிலும், ஆனையிறவிலும் மட்டும் இருந்த இராணுவத்தினரை ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும், வளவிலும் வரப் பண்ணியதிற்கு இந்த வரிகளின் வன்மமும் ஒரு காரணம். இது கதையாகவே இருந்திருக்கக்கூடாதா என்று மனதின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஏக்கம் எதிரொலிக்கிறது. ஒரு கனவு போல கண் விழித்தவுடன் மறைந்து விடக் கூடாதா என்று நெஞ்சம் துடிக்கிறது.

நாங்கள் இருந்த இயக்கத்தின் மக்கள் விரோதப்போக்குகளை எதிர்த்து தலைமையுடன் முரண்பட்டோம். இயக்கம் உடைந்தது. தமிழ்நாட்டில் இருந்து நாட்டிற்கு திரும்பி செல்ல முடிவெடுத்து வேதாரணியம் போனோம். தோணி எப்போது வரும் என்று தெரியாது. கடற்கரைக்கு போவதும், தெருக்களில் சுற்றுவதுமாக பொழுது போனது. மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்த ஒரு காலையில் கடற்கரையில் அந்த இயக்கத்தவர்கள் ஜம்பது பேரிற்கு மேலே நின்றிருந்தார்கள். தோணி ஒன்று கரைக்கு வந்தது. பெண் ஒருவர் காற்று கலைத்த தலைமுடியை ஒதுக்கிக் கொண்டு இறங்கினார். மட்டக்களப்பு சிறைச்சாலை உடைப்பின் போது கணவர் தப்பி விட மனைவி தப்ப முடியாமல் போய் விட்டது. மறுபடியும் சிறை உடைத்து அவரை கூட்டிக் கொண்டு வருகிறார்கள் என்று தோழன் ஒருத்தன் சொன்னான். அவர்கள் போன பின்பு அந்த இயக்கத்தவர்கள் கொஞ்ச கொஞ்சப்பேராக முகாமிற்கு திரும்பி கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் எங்களை நோக்கி வந்தார். அவர் யாழ்பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்தவர். சிலகாலங்களின் பின்பு இறக்கப் போகிறார். அவரிற்கு பேசி வைத்திருந்த பெண்ணை அவரின் இறப்பிற்கு பிறகு அந்த இயக்கத்தின் இரண்டாம் இடத்தில் இருந்தவர் மணம் செய்யபோகிறார். பின்பு அந்த தலைவரையும் துரோகி என்று சொல்லி கொலை செய்ய போகிறார்கள்.

அவர், எங்களின் மையமாகவும் ஆசானுமாக இருந்த தோழரோடு படித்தவர். அந்த நட்பிலே தோழரை கண்டதும் வந்து சுகம் விசாரித்து கொண்டிருந்தார். இங்கை என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று இடி போல குரல் ஒன்று கேட்டது. மாணவர் தலைவர் திடுக்கிட்டு திரும்பி பார்த்தார். தேவையில்லாதவங்களோடை ஏன் கதைக்கிறாய், முகாமிற்கு போ என்று மறுபடி இடி இடித்தது. மாணவர் தலைவர் மறுபேச்சில்லாமல் விடுவிடென்று நடந்து போனார். நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன், வீட்டை போ என்ற தந்தையின் குரல் கேட்டதும் பயந்து பதறி ஓடிப் போவது போல அவர் ஓடிப் போனார். வாட்டசாட்டமான, சற்றே உயரம் குறைந்த அந்த மனிதர் எங்களை நோக்கி வந்தார். தத்தி வரும் கடல் அலைகளை கண்டு வரும் காலை நேரத்து காற்றிலும் அவரது முகம் கோபத்தால் சிவந்து வியர்த்திருந்தது. ஆவேசமாக எங்கள் தோழரை நோக்கி, ஒரு காலத்தில் ஒரே இயக்கத்தில் போராடியவரை நோக்கி, தலைமறைவு காலங்களில் தோழரின் வீட்டில் உண்டு, உறங்கி வாழ்ந்த அந்த மனிதர் கோபத்துடன் கத்தினார் "தமிழீழம் என் தலைமையில் தான், இல்லையென்றால் எல்லாத்தையும் அழிப்பேன்".

வேதாரணியத்து வெள்ளை மணல் காற்றிற்கு சுழன்று, சுழன்று முகங்களில் வாரியடித்தது. ஈழப்போராட்டம் புனிதமானது, போராளிகள் இலட்சியத்திற்காக உயிரை துச்சமாக தூக்கி எறியும் கொள்கை வீரர்கள் என்ற மாயைகள் இயக்கங்களில் சேர்ந்த பிறகு கொஞ்சம், கொஞ்சமாக உடையத் தொடங்கியிருந்தாலும் அவரின் கோபம், எல்லாத்தையும் அழிப்பேன் என்ற ஆவேசம் எங்களிற்கு நம்ப முடியாமல் இருந்தது. "அவரை நீங்கள் சரியாக விளங்க வேண்டும் அவரிற்கு தமிழீழம் தான் எல்லாம், வேறு வாழ்க்கை கிடையாது. அதை தன்னால் தான் செய்ய முடியும், மற்றவர்கள் குழப்பி விடுவார்கள் என்பதை அவர் உறுதியாக நம்புகிறார். அதனால் தன்னுடன் இல்லாதவர்கள் எல்லாம் துரோகிகள் என்று நினைக்கிறார்" என்று எங்கள் தோழர் நிதானமாக சொன்னார்.

ஆயிரம் மின்னல்கள் மின்னின. ஒரு கோடி இடிகள் இடித்தன. குண்டுகள் மழை போல பெய்தன. எமதருமை தேசம் சுடுகாடானது, எம்முயிர் மக்கள் மரணித்து போயினர், எஞ்சியோர் மரணத்துள் வாழ்ந்தனர். ஆம் அவர் சொன்னது நடந்தது!.