Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கள்ளர்களும், வேட்டைக்காரர்களும்

வெக்கை தாங்காமல் நாய்கள் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு திரிகிற மத்தியான நேரத்திலே மாணிக்கம் அப்புவின் கடை தாழ்வாரத்திலே செல்வராசா வாத்தியாரும் கூட்டாளிகளும் ஆடு-புலி ஆட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். செல்வராசா வாத்தியார் எப்பவும் ஆடு-புலி ஆட்டத்தில் ஆட்டிற்கு தான் காய் வைப்பார். பெரும்பாலும் புலியை ஆடுகளைக் கொண்டு நகர முடியாமல் செய்து விடுவார். விளையாட்டிலே புலியை அடக்கும் அவரால் அவரது துவக்கை வைத்து ஒரு புறாவைக் கூட சுட முடியவில்லை. இயக்கங்களும், இராணுவமும் ஊர்களிற்குள்ளே திரிய முதல் துவக்கு வைத்திருந்த ஒரு சிலரில் அவரும் ஒருவர். எப்பிடியோ அனுமதிப்பத்திரம் எடுத்து ஆசை, ஆசையாக ஒரு shotgun வாங்கினார். முதன்முதலில் வைத்திலிங்கத்தாரின் வெறிநாயை சுட கூப்பிட்டார்கள். ஊரே கூடி நின்று வேடிக்கை பார்க்க வாத்தியார் ஒரு வேட்டைக்காரனின் மிடுக்குடன் கம்பீரமாக வந்து பூவரசு மரத்திலே கட்டி நின்ற நாய்க்கு குறி வைத்து சுட்டார். நாலைந்து தோட்டாக்கள் வீணாய்ப் போனது தான் மிச்சம், கட்டி நின்ற நாயிலே ஒரு குண்டு கூடப்படவில்லை. பார்த்துக் கொண்டு நின்ற வைத்திலிங்கத்தாரிற்கு கொதி தலைக்கேறி உலக்கையாலே நாய்க்கு ஒரு அடி போட்டார்.

ஊரின் எல்லையில் தோட்டங்கள், அடுத்து வயல்கள் பிறகு பனங்கூடல்கள் முடிவாக கடல். மழைக்காலங்களில் வெள்ளம் வயல்களை மூடி நிற்கும். கடலில் இருந்து மீன்கள், இறால்கள் வயல்கள் வாய்க்கால்களில் எல்லாம் ஓடித் திரியும். ஆயிரக்கணக்கில் வெளிநாட்டுப்பறவைகள் வலசை வரும். அவைகள் ஒரு வகை கொக்குகள் அல்லது நாரைகள் என்று ஊர்ப்பெரிசுகள் சொல்லுவார்கள். அது கொக்குமில்லை, நாரையுமில்லை அதற்கு பெயர் கூழைக்கடா என்று வாத்தியார் ஒருநாள் சொன்னார். படிச்சமனிசன் என்று இதுக்கு தான் ஒரு ஆள் வேணுமென்று பெரிசுகள் பேசிக் கொண்டார்கள். பிறகு தான் தெரிந்தது வாத்தியார் அதை செங்கை ஆழியானின் வாடைக்காற்று கதையிலே இருந்து சுட்டு தான் சொன்னார் என்று. இந்த கூழைக்கடாக்கள் நல்ல உயரமாகவும், உருப்படியுமாக இருக்கும். ஓடித் திரிந்து மீன்களை பிடித்து தின்பதால் கொழுப்பில்லாத இறைச்சியாக இருக்க்கும் என்று இறைச்சிப்பிரியர்கள் நாக்கில் எச்சில் ஊறச்சொல்வார்கள்.

வாத்தியார் ஒரு நாள் கூழைக்கடா வேட்டைக்கென்று நாலைந்து பேருடன் வெளிக்கிட்டார். போகும் போது சின்னச்சத்தமும் போடக்கூடாது, சொல்லுற இடத்திலேயே இருக்க வேணும், தான் கூப்பிடும் வரை அந்த இடத்தை விட்டு அசையக்கூடாது என்று வேதக்காரர்களின் பத்துக்கட்டளைகளைப் போல பல கட்டளைகளை போட்டுக் கொண்டு போனார். ஊர்வயல்களின் நடு நடுவே சின்னச்சின்ன மணல் மேடுகள் இருந்தன. வாத்தியார் மணல்மேட்டின் ஒரு பக்கத்திலே மற்றவர்களை விட்டுவிட்டு வாயிலே விரலை வைத்து மூச்சு விடக்கூடாது என்பது போல சைகை செய்து விட்டு மேட்டின் மற்றப்பக்கத்திற்கு புலிவேட்டைக்கு போறவனைப் போல மிக்க அவதானமாக அசைந்து கொண்டு போனார். கொஞ்ச நேரத்திலே குண்டு வெடித்த சத்தமும் வயலிலே தேங்கி நின்ற தண்ணிக்குள்ளே படாரென்று எதோ விழுந்த சத்தமும் கேட்டது. ஆகா, வாத்தியார் பெரிய ஒரு கூழைக்கடாவை சுட்டு விட்டார் என்று அவர்கள் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்த நேரத்திலே தூக்குங்கடா, தூக்குங்கடா என்ற வாத்தியாரின் சத்தமும் கேட்டது. மணல்மேட்டின் மற்றப்பக்கத்திற்கு ஓடிப்போய் பார்த்தால் வாத்தியார் தண்ணிக்குள்ளை கிடந்து கொண்டு தன்னை தூக்கச் சொல்லி கத்திக் கொண்டு இருந்தார். வெடி வைத்த போது துவக்கு அதிர்ந்த அதிர்விலே வாத்தியார் தான் தண்ணிக்குள்ளே விழுந்து விட்டார். ஆயிரக்கணக்கிலே நின்ற பறவைகளிலே ஒன்றிலே கூட குறி படவில்லை.

ஆடிக்கலவரத்திற்கு பிறகு வாழ்க்கை தலைகீழானது. அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் நிரந்தர வேலை இல்லாத ஏழைகளின் வாழ்க்கையை பசியும், பட்டினியும் பிடுங்கித் தின்றன. ஊர்கள் முழுக்க களவுகள் நடந்தன. அப்படிக் களவெடுத்து பிடிபட்டவர்களை இயக்கங்கள் மின்கம்பங்களில் கட்டி வைத்து மரண தண்டனை வழங்கினார்கள். அன்றைக்கு வாத்தியார் படிப்பிக்கும் மகாவித்தியாலத்திற்கு பக்கத்திலே களவெடுத்த சமுகவிரோதிகளிற்கு மரண தண்டனை என்று மின்கம்பத்திலே கட்டி வைத்து ஒரு இயக்கம் இரண்டு பேரை கொலை செய்திருந்தது. நாக்குகள் வெளியே துருத்திக் கொண்டு வர, கண்கள் பிதுங்கிய படி உடல்கள் முழுவதும் இரத்தம் வழிந்தபடி உயிர் போயிருந்தது. பள்ளிக்கூடம் விட்டு வந்த பிள்ளைகள் பயத்திலே கத்திக் கொண்டு ஓடிப்போனார்கள். பள்ளிக்கூடத்திற்கு பக்கத்திலே, சின்னப்பிள்ளைகள் பார்க்கக் கூடிய மாதிரி கொலை செய்திருக்கிறார்களே என்று ஆசிரியர்கள் வெளியே குரல் வராமல் தங்களிற்குள்ளே பேசிக்கொண்டார்கள்.

பின்னேரங்களில் வாத்தியார் கள்ளுக்குடிக்க தன்னுடன் சின்ன வயதில் படித்த சண்முகத்தின் வீட்டிற்கு போவர். சண்முகம் சாதி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர். அதன் மூலம் சமதர்ம கொள்கைகளை அறிந்து ஏற்றுக்கொண்டவர். சண்முகம் வாத்தியாரிற்கென்று ஒருபனைக்கள்ளு தனியே எடுத்து வைத்திருப்பார். வீட்டிற்கு முன்னே இருந்த பந்தலில் நிலவின் ஒளியிலே இருந்து குடித்துக் கொண்டிருந்த போது

அன்றைக்கு காலையிலே நடந்த கொலைகளை பற்றிய பேச்சு வந்தது. இப்படி செய்தால் தான் ஒருத்தனும் களவெடுக்க மாட்டான் என்று மூர்த்தி மீசையில் படிந்த கள்ளைத் துடைத்தபடி சொன்னார். களவெடுக்கிறது பிழை தான் ஆனால் அதுக்காக உயிரை எடுக்கிறது சரியோ என்று வாத்தியார் கேட்டார். ஒருத்தனும் விரும்பி களவெடுக்கிறதில்லை. வேலை இல்லாத்தாலே, வயித்துபசிக்காக தான் களவெடுக்கிறாங்கள், பிடிபட்டால் மரியாதை போயிடும். சிறையிலே போடுவான்கள். இப்ப இயக்கங்கள் உயிரையே எடுத்து விடும் எண்டு தெரிந்தும் ஒருத்தன் களவெடுக்கிறான் என்றால் அவனின்ரை குடும்பத்தின்ரை பசிக்கொடுமையை அவனாலே தாங்கிக்கொள்ள முடியாததாலே தான் என்றார் சண்முகம். களவெடுத்து பிடிபடுகிறதிலே கன பேர் உங்கடை ஆட்கள் எண்டுறதாலே தான் நீ இப்பிடிக் கதைக்கிறாய் என்ற கண்ணனின் குரலில் கள்ளின் வெறியிலும் மாறாத சாதிவெறி வந்து ஒலித்தது.

சிங்களவன் அடிக்கிறான், உரிமைகளை தரவில்லை எண்டு போராட்டம் நடக்கிறது ஆனால் சாதி பாத்து ஆட்களை மதிக்கிறதை நீங்கள் ஒருநாளும் விடமாட்டியள். நான் களவெடுக்கிறது சரியென்று சொல்ல வரவில்லை, ஆனால் எல்லாத்திற்கும் ஒரு மறுபக்கம் இருக்குது. சூழ்நிலைகள் தான் எல்லாத்திற்கும் காரணம் என்று உறுதியான குரலில் சண்முகம் சொன்னார். ஆண்டாண்டு காலமாக வீண்பழி கேட்கும் சமுகத்தின் கோபம் அதிலே இருந்தது.

இப்போதும் வீடுகளில் களவுகள் நடந்தன. ஆனால் செம்படை என்ற இயக்கம் அதற்கு உரிமை கோரியிருந்தது. தமிழீழத்திற்காகவே அக்கொள்ளைகள் நடத்தப்பட்டதாகவும், பணக்காரர்களிடம் மட்டுமே தாங்கள் இப்படிச் செய்வதாகவும் அதில் சொல்லப்பட்டிருந்தது. வாத்தியாரிற்கு இதில் எதோ உறுத்தியது. அதை சண்முகத்திடம் சொன்னார். சண்முகம் சிரித்தபடி சொன்னார், எங்கடை ஊரிலே ஒரு இயக்கத்தின் முகாம் மட்டுமே இருக்குது. ஊர் அவையின்ரை கட்டுப்பாட்டிற்குள்ளே இருக்குது. எப்பிடி வேறை இயக்கம் இங்கே வந்து களவெடுக்க முடியும். அதை விட இந்த செம்படை எண்ட இயக்கம் களவு மட்டுமே செய்யுது. வேறை எதுவும் செய்ததில்லை. களவு எடுப்பதற்கும். கொம்யுனிஸ்ட்டுக்களை கொச்சைப்படுத்திறதிற்கும் தான் இந்த செம்படை எண்ட முகமூடியை போடுகினம். வாத்தியாருக்கு மெல்ல விசயம் விளங்கியது. ஆனால் ஒரு இயக்கம் இப்படி செய்யுமா என்ற சந்தேகமும் கூடவே வந்தது. கொஞ்சநாளிற்கு பிறகு ஒரு நாள் முகாமை குறி வைத்து விமானப்படை குண்டு வீசியது. இலங்கை விமானப்படை வழக்கம் போலே குறி தவறாமல் பக்கத்து கொய்யாபற்றைகளின் மீது குண்டு போட்டது. முகாமிற்கு ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் இடம் தெரிந்து விட்டதால் முகாமை விட்டு இயக்கம் உடனேயே அவசரம், அவசரமாக வெளியேறியது.

இயக்கம் போன அடுத்த நிமிசம் வாத்தியார் முகாமிற்கு போய்ப்பார்த்தார். தாங்கள் கொண்டு போகாத பொருட்களிற்கு இயக்கம் தீ வைத்து விட்டு போயிருந்தது. அதிலே பாதி கருகியபடி செம்படை பெயர் பொறித்த முத்திரைகளும், கடிதத்தலைப்புகளும் எரிந்து கொண்டிருந்தன. வாத்தியாரிற்கு பூவரசு மரத்திலே கட்டியிருந்த நாயும், களவெடுத்ததற்காக மின்கம்பத்திலே கொலை செய்யப்பட்டவர்களும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.