Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசியல் கோமாளிகளின் கூடாரமாகியுள்ளது!

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்  19-07-2010

போராட்டங்கள் கூடாததல்ல! அதை கூத்தாட்டம் ஆக்கக்கூடாது!

போராட்டங்கள் சிறைகளை நிரப்புவதற்கல்ல,

மக்கள் விடிவிற்கானதாக்கப்படல் வேண்டும்!

சமகால இலங்கை-இந்திய அரசியல் களம் வேடிக்கைத்தனமானதாகி விட்டது. அர்த்தமற்ற கோஷங்களால்-போராட்டங்களால், கோமாளித்தனம் கொண்டதாகி விட்டது. கடந்த வாரம் இலங்கையில் விமல் வீரவன்ச ஐ.நா.கிளைக் காரியாலயத்தை முற்றுகையிட வேண்டும், அங்குள்ள ஊழியர்களை சிறைக் கைதிகள் ஆக்கவேண்டுமென ஓர் நகைச்சுவைப் போரை ஆரம்பித்து, அதை வேடிக்கையானதாகவும், கோமாளித்தனம் கொண்டதாகவும் முடித்து வைத்தார்.

இதைப் பார்த்த தமிழக இன உணர்வாளர்களான-நெடுமாறன் வை.கோ. வகையறாக்கள் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகக் கிளையை மூடுவோம் என ஓர் நூதனப் போரை ஆரம்பித்து “போர் ஆடி, போர் ஆட்டத்” தழும்புகளுடன் சிறைக்கைதிகளாகி சிறையை அலங்கரித்து வெளியேறியுள்ளனர். இதற்கு முன்னதாக சீறும் புலியென்ற (ஆனால் பாயாது) சீமானும் சிறையில்! . இவர்கள் எல்லோரதும் போராட்டம் ‘தொப்புள் கொடி’ உறவுக்களுக்கானதே!.  ஆனால் வைக்கப்படும் கோஷங்கள் வெறும் வெங்காயக் கோஷங்களே!

ஒரு நாட்டிலுள்ள தூதரகத்தை, அந்நாட்டு அரசின் ஒப்புதலின்றி இல்லாதாக்க முடியுமா?. இன்றைய இலங்கை-இந்திய உறவில், அதன்  ‘அன்புப்’ பாலமாகவுள்ள தூதரகத்தை, இந்த வேடிக்கை அரசியலாளர்களால் அப்புறப்படுத்த முடியுமா?  இதில் திருமாவளவன் வேறு.

இலங்கைத் தூதரகத்தை உடைக்க முற்படும் திருமாவளவன்—

சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்குவாசல் சுவரை இடிக்கலாமே?

 

திருமாவளவனும் இந்த வேடிக்கை அரசியலாளர்களுக்கு சளைத்தவர் அல்லர் என்பதை நிரூபிக்கும் வகையில், நானும் தூதரகத்தை உடைக்கின்றேன், தரைமட்டம் ஆக்குகின்றேன் என்ற கோஷத்தோடு, அவரும் ஓர் ‘தனிப்போராட்டம்’. அவர் பா. உறுப்பினராகிய பின் ‘பிரபாகரன் ஜீவிக்கின்றார், புலிகளின் தாகம், தொப்புள்கொடி உறவுகள’, போன்றவற்றைச் சற்று சிலேடை கலந்து மென்மையாக அடக்கி வாசிக்கின்றார். இடைக்கிடை  இவ் வேடிக்கை அரசியலும் செய்கினறார்.

தூதரகத்தை மட்டுமல்ல, சட்டசபை, ஏன் பாராளுமன்றததைக் கூட இல்லாதாக்கலாம். மத்திய—மாநிலஅரசுகளையும் ஸ்தம்பிதம் அடையச் செய்யலாம். அதற்கான மக்கள் சக்தி, ஸ்தாபனப் பலம், புரட்சிகர வெகுஜனப் போராட்ட மார்க்கம் இருக்கவேண்டும்.  தற்போது இது எந்த ‘வேடிக்கைப் போர்     ஆட்டக்’ காரர்களிடம் உள்ளது. இது நிற்க இப்போ ‘பரியாரியார்’ ராமதாஸ்–திருமாவளவன் போன்றவர்கள் ‘தொப்புள்கொடி உறவுகளின் போரிலோர் தனிவழி’ சீமான் வை.கோ. வகையறாக்களோடு கூட்டு இல்லை. காரணம் கூடினால் கலைஞரைக் கண்டிக்கவேண்டும்! பரியாரியாருக்கும்–சிறுத்தையாருக்கம் இப்போ கலைஞர் உறவு அத்தியாவசியத் தேவை.

தூதரகத்தை உடைக்கப் புறப்படும் ‘சிறுத்தையார்’ தனது தொகுதியில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவலில் (நந்தன் சென்றதாக கூறப்படும் பாதையை) தெற்குவாசல் சிவரை அகற்றக்கோரி, தலித் மக்கள் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மூலமாக போராட்டம் நடாத்துகின்றார்கள். தாங்கள் முன்னின்று ‘சிறுத்தைப் போர்’ மூலம் இச் சிவரை இடிக்கலாமே? சரி இடிக்கத்தான் வேண்டாம், தங்களைத் தெரிவு செய்த அந்த மக்களின் வெகுஜனப் போராட்டங்களில் கலந்துகொண்டு ஒத்துழைப்பையாவது கொடுக்கலாமே?

தாங்களும் தங்கள் உணர்வாளர்களும் தங்கள் நாட்டுப் பிரச்சினைகள் பற்றி- அதுவும் தலித்-தமிழ்மக்களின் அடக்கி-ஒடுக்கல்கள் பற்றிக் கண்டு கொள்ள மாட்டீர்கள். கடந்த வாரம் மதுரை உத்தரபுரம் கிராமத்தில், சாதி-தீண்டாமைக்கெதிராக, போராடிய தலித் மக்கள் மீது, தமிழினக் காவலரின் காவல் நாய்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். இதனால் பெண்கள்-வாலிபர்கள் உட்பட்ட ஏராளமான தலித்மக்கள் நையப்புடைக்கப்பட்டு, மருத்துவமனைகளில் கூட அனுமதிக்கப்பட்டனர். இப்போராட்டம் பற்றி–சாதித் திமிர் கொண்ட எப்பத்திரிகையும் இவ்வடக்கு முறைத்-தாக்குதல்கள் பற்றி எச்செய்திகளையும் வெளியிடவில்லை!

அவர்களுக்குத்தான் சாதித்திமிர்! அடக்குமுறைக்கு எதிராக போராடுவதாக சொல்லும் தங்களுக்கு குறுந்- சாதித்திமிரோ!? தங்களுக்கு கலைஞர் கடாட்சம் தேவை! அவர் தயவில் பட்டம் பதவி தேவை. இதனால் நீங்கள் வாய் திறக்கவே மாட்டீர்கள். சில பத்திரிகைகள் இது பற்றிக் கேள்விகள் எழுப்ப ‘செம்மொழித் தமிழ்க் காவலனன்’ ஆகியுள்ள கலைஞர்  சில தீயசக்திகள் தன்னாட்சிக்கு களங்கம் விளைவிக்க செய்த செயலென செம்பவள வாய்திறந்து செப்பியுள்ளார். இது போன்ற தமிழ்த்-தலித்மக்கள்-மீனவர்கள் பிரச்சினைகளையெல்லாம், இந்தத் தமிழ் உணர்வாளர்கள், ‘உயர்வர்க்கச் சாதித்’ சிந்தனை கொண்ட ‘சிறுத்தை’யாரெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள்.  அவர்கள் கண்டுகொள்வது, ‘பிரபாகரன் ஜீவிக்கின்றார்! அவருக்கு பிரபாகர ஜெபம் செய்வதே!

நடிகர், நடிகைகள்  இலங்கை செல்வது குறித்து ஆலோசனை  : சரத்குமார்

தென்னிந்திய நடிகர், நடிகைகள் இலங்கை செல்வது பற்றி செயற்குழுவில் ஆலோசிப்போம் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளளார்.

இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்த போது நடிகர் சங்கம் கண்டித்தது. அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டியும் அனுப்பி வைத்தது. இலங்கை அரசைக் கண்டித்து படப்பிடிப்புக்காக, அந்நாட்டுக்கு செல்லக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. தற்போது அங்கு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமது உடைமைகளை இழந்து முகாம்களுக்குள்ளே முடங்கியுள்ளனர். போரில் பெற்றோரை இழந்த தமிழ்க் குழந்தைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் ‘ரெடி’ படப்பிடிப்புக்குச் சென்ற அசின் இரு தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை நேரில் சந்தித்தார்.

இலங்கை சென்ற அசின் மீது, நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் நடிகர், நடிகைகள் அனைவரும் இலங்கை செல்வது பற்றி நடிகர் சங்க செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஈழத் தமிழர்களுக்கு நேரில் வந்து உதவிகள் செய்யும் படி எனக்கு நிறைய கடிதங்கள் வந்துள்ளன. அவற்றை நடிகர் சங்க செயற்குழுவில் சமர்ப்பிப்பேன்.

தமிழ் நடிகர், நடிகைகளுக்கு உலகளாவிய அளவில் அங்கீகாரம் உள்ளது. இலங்கையில் நடந்த சர்வதேச படவிழாவுக்கு செல்லக்கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டது.

அசின் தொழில் ரீதியாகத்தான் இலங்கை போயிருக்கிறார். எனவே நடவடிக்கை எடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம் “என்று கூறினார்.

டிகர் சங்கக்காரர்களுக்கு அசின்ல அப்படியென்ன பாசம்?  அவர்தானே புலிப் பாணியிலான உங்கள் கட்டப் பஞ்சாயத்துத் தீர்மானங்களை-தீர்ப்புக்களை தூக்கியெறிந்தவராச்சே! இலங்கை சென்றார், படம் நடித்தார், அதற்கப்பால் மேலொருபடி சென்று மகிந்த-மனைவியாருடன் யாழ் சென்று, சொந்தச் செலவில்  ‘தொண்டுழீயங்கள்’ செய்துள்ளார். இதையொட்டி எழுந்த கேள்விகளுக்கு சினிமாவை அரசியலாக்காதீர்கள், படம் நடிக்க வந்தேன், தமிழ் மக்கள் துயர் அறிந்தேன், சென்றேன், பார்த்தேன் கவலையடைந்தேன், உதவி செய்தேன் என்கின்றார்.  இவையனைத்தும் தாங்கள் கொண்டுள்ள கொள்கை கோட்பாட்டு லட்சியங்களுக்கு, கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டிற்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் ஆச்சே! இந்நிலையில் தங்கள் குற்றவாளிக்கு, ‘தொப்புள்கொடி’ உறவுகளின் துரோகிக்கு—ஏன் இந்த செம்கம்பள வரவேற்பு, அவர் யாழ் சென்ற போது, யாரோ ஒரு சிலர், சில நடிகர்களை பார்க்க விரும்புகின்றோம் என, இதை அசினார் பேட்டியில் அசத்த, இதைக் கேள்வியுற்ற இந்த நடிகர் குழாமும், தங்களுக்கும் கடிதங்கள் வந்து குவிந்துள்ளன, என அசின் பாதையில் இலங்கை சென்றிட, அவர் பாணியில் துயர் அறிந்திட, உதவி புரிந்திட பெருமொரு பேராசை வந்திடிச்சு! ஆகா இவாகளுக்கு வந்த இவ்வாசையால், இவர்களின் கொண்ட கொள்கையும், கடமை கண்ணியமும் போயாச்சு! இவர்களின் தலைவர் கலைஞரே வேடீக்கையானவர்! அவன் உயிரின் மேலான உடன்பிறப்புக்கள் எப்படி வேடிக்கையாக நடிப்பர். ஏனெனில் இது இவர்கள் தம் தொழில் ஆச்சே!

ஜெனீவா நகரிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிடும் பொறுப்பு  நாமல் ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டுள்ளது

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் நியமித்துள்ள நிபுணர்கள் குழுவுக்கு எதிராக சுவிஸர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகத்திற்கு எதிரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஏற்படும் செய்யும் பொறுப்பு ஜனாதிபதினால் வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வையாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஸவிடம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் தலைமை தாங்கிய தால்தானோ இவ்வளவு ஜனசமுத்திரம்?  மகிந்தா ராஜகுமாரனுக்கு ஆர்ப்பாட்டம்-போராட்டம் உட்பட சகலதும் (தரை-கடல்-ஆகாயம்) பழக்குகின்றார். பழகினால் தானே அடுத்த ராஜகுமாரன் ஆகலாம்.

பான் கீ மூனுக்கு நாம்  பயம் இல்லை – மேர்வின் சில்வா

30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ராஜபக்ஸவினர், நாட்டின் தலைவர் நேர்மையானவராகவும் தைரியமானராக இருந்தால் எந்த விடயத்திற்கும் அச்சமடையத் தேவையில்லை எனவும் நாட்டின் வரலாற்றை பான்-கீ-மூனுக்கு கற்றுக் கொடுத்தால், அவர் மண்டியிட்டு சிரமப்பட்டு இலங்கைக்கு வருவார் என பெருந் தெருக்கள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றை அறிந்துள்ள தமக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை பாரதூரமான பிரச்சினையல்ல எனவும், வெள்ளையர்களை ஓடும் வரை விரட்டித் தாக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் சிங்களவர்கள் எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

இலங்கையர்கள் ஆடை உடுத்திய காலத்தில் வெள்ளையர்கள் ஆடையின்றி இருந்தனர். வெள்ளையர்களின் வரலாறு குறுகிய நூற்றாண்டுகளை கொண்ட போதிலும் இலங்கையர் 2 ஆயிரத்து 500 வருட வரலாற்றை கொண்டவர்கள். உலகில் முதலாவது விமான நிலையம் வடமேல் மாகாணத்தின் வாரியபொல பகுதியில் இருந்தது. பான்-கீ-மூன் என்பவர் ஒரு திணைக்களத்தின் தலைவர் மாத்திரமே.

மற்றுமொரு நாட்டின் உள்விவகாரம் தொடர்பாக குழுவை நியமிக்க அவருக்கு உரிமையில்லை. இலங்கையில் இருந்த சகல தலைவர்களும் வெள்ளையர்களுக்கு தலைவணங்கினர். எனினும் தேசம் செய்த புண்ணியம் உருவாக்கிய தலைவர் மகிந்த ராஜபக்ஸ மாத்திரமே வெள்ளையர்களிடம் தலை வணங்கவில்லை. இதனால் ஜனாதிபதி இருக்கும் வரை பான்-கீ-மூனுக்கு பயப்படபோவதில்லை எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

குட்டிக் கழுதை:-  என்னம்மா இந்த மந்திரி இப்படி சம்பந்த சம்பந்தமில்லாமல் ஏதேதோ கத்துகின்றார்.

தாய்க் கழுதை:-  அவர் படித்ததும் பட்டம் வாங்கியதும் உன் அப்பா படித்த பாடசாலையில் தானே! அதனால் வந்த வினையிது. இதை வெளியில் சொல்லாதே, பிறகு எங்களையும் நையப்பு புடைத்துப் போடுவார்.

வீரவங்சவின் உண்ணாநிலைப் போராட்டத்தினால்  ஹெட்டிக்கான காவல்துறையினரை ஐ.நா  நிராகரிப்பு

அமைச்சர் விமல் வீரவன்ஸ ஐக்கிய நாடுகள் கொழும்பு அலுவலகத்திற்கு அருகில் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக ஹெய்டியில் ஐக்கிய நாடுகள் சமாதானப் படையில் பணியாற்றுவதற்காக அங்கு செல்விருந்த 52 இலங்கை காவற்துறையிரை ஐக்கிய நாடுகள் அமைப்பு நிராகரித்துள்ளது.

ஹெய்டி செல்வதற்கான ஆவணங்களை காவற்துறை அதிகாரிகள் கடந்த 9 ஆம் திகதி கையளிக்க வேண்டியிருந்தது. இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட காவற்துறை அதிகாரிகள் தமது ஆவணங்கள், வீசா அனுமதி போன்றவற்றை ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைக்கு பொறுப்பான அதிகாரியிடம் கையளித்துள்ளனர். இதன் போது கருத்து வெளியிட்டுள்ள குறித்த அதிகாரி சமாதானத்தை பாதுகாக்கும், ஏனைய அமைப்புகளுக்கு கௌரவமளிக்கும் நபர்கள் வாழும் நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு பிரிவினரை மாத்திரமே தாம் அமைதிப்படையில் இணைப்பதாக தெரிவித்துள்ளார். எனினும் இலங்கையில் உள்ள வெளிநாட்டு பிரஜைகளை வீட்டுக்காவலில் வைத்து, அவர்களின் நிறுவனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ள நிலையில்,  இலங்கையின் பாதுகாப்பு பிரிவினரை ஹெய்டிக்கு அனுப்புவது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

விரும்பினால் அனுப்பு, விரும்பாவிட்டால் திருப்பியனுப்பு!  ஜ.நா.க்கு எங்கள் வரலாறு தெரியாது. தெரிந்தால் படையை கெய்டிக்கு அனுப்புவர். உங்களுக்கு ஆடை உடுத்த கற்றுக் கொடுத்தவர்கள் நாங்கள். உலகின் எல்லலாக் கண்டு பிடிப்புக்களின் மூலத்திற்கான காரணகர்த்தாக்களும் நாங்களே! நீங்கள் எங்கள் படைக்கு பயிற்சி அளித்தீர்களா? சுடப் பழக்கினீர்களா? உடுப்பு வாங்கிக் கொடுத்தீர்களா? அல்லது அவர் தம் குடும்பங்களை-பணிவிடை செய்ய, உல்லாசமாய் இருக்க உங்கு குடியேற விட்டீர்களா? மானம் கெட்டவர்களே! எம்படை தம் வீரம் தெரியாதவர்கள் நீங்கள். தெரிந்தால் நிபுணர் குழு அமைப்பீர்களா? கெய்டிக்கு போகாமல் தடுப்பீர்களா? நாம் கட்டுண்டோம்., பொறுத்திருக்கின்றோம், காலம் மாறும் என ‘விமல் வீரன்’ ஓர் அறிக்கை விட்டாலும் விடுவார்.

வறுமை -இந்தியா முதலிடம்

ஆப்பிரிக்காவில் உள்ள 26 மிக வறிய நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு கூறயுள்ளது.

பிகார், சத்தீஸ்கர், ஜார்காண்ட், மத்தியபிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்திய மாநிலங்களில் 42 கோடியே பத்து லட்சம் பேர் வறிய நிலையில் இருப்பதாக ஐ நாவின் ஆதரவுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வருமானத்தை மட்டுமல்லாது, கல்வி சுகாதார வசதிகள் போன்றவை எந்த அளவுக்கு கிடைக்கின்றன என்பது போன்ற விடயங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரந்து பட்ட வறுமைக் குறியீடு என்பதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு வறியவர்களின் நிலையை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளதாக இந்த ஆய்வின் இயக்குனர் டாக்டர் சபினா அல்கிரி கூறியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும் நாட்டில் வறுமை பெருமளவில் இருக்கிறது என்று பலரும் கருதிவந்ததை இந்த ஆய்வு உறுதிசெய்துள்ளது.

இவர்களின் புதிய அட்டவணையின் படி உலகில் மொத்தம் 170 கோடி பேர் வறியவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிபேர் தெற்காசியாவில்தான் வாழ்கின்றனர். ஆப்ரிக்காவில் கால்வாசிபேர் வாழ்கின்றனர்.

காந்தி கிராமங்களை இந்தியாவின் இதயம் எனறார், இந்தியா ஓர் விவசாய நாடு இதைக் கணக்கில் கொண்டே இப்படிச் சொன்னார். 10-ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய விவசாயத்தின் ஊடான உணவு உற்பத்தி 50-வீதமாக இருந்தது. இன்று 16-வீதமாகியுள்ளது. இவ்வீழ்சியால் 2-லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பாருக்குள்ளே நல்ல நாடெனப் பாடிய பாரதி இன்றிருந்தால், பசி பட்டினியில், ஊழலில் பாதகம் செயவதில், பாருக்குள்ளே நல்ல நாடு பாரதநாடென பாடியிருப்பான். ஆக்கிரமிப்பில் அகண்ட பாரதம் என்றிருப்பான். இந் நோகக்கிலேயே கடந்தவாரம் பாகிஸ்தான் சென்ற கிருஸ்னாவும் அவமானப்பட்டார். பாகிஸ்தான் இப்பவும் இந்திய மாநிலமென்பதே இந்தியக் கணிப்பு. இந்தியா சொல்வதை நாம் கைகட்டி வாய் பொத்தி கேட்க  வேண்டும், நாங்கள் சொல்லதை இந்தியா ஒரு பொருட்டாகவே கருதாது என பாகிஸ்தானிய வெளிநாட்டமைச்சர் சொல்லியுள்ளார்.

படைவீரர்கள் இராணுவச் சட்டங்களை அறிந்திருக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்படும் ‐ கோதபாய ராஜபக்ஷ

யுத்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக மறைக்க எதுவும் இல்லை ஒரு கையில் ஆயுதமும் மறுகையில் மனித உரிமை சாசனமும் கொண்டே எமது படையினர் வன்னியில் போரிட்டனர்.

ண்ணர் சொல்கிறார் எமது படைகள் ஒருகையில் ஆயுதமும் மறுகையில் மனித உரிமை சாசனமும் கொண்டு போராடினர் என. தம்பி சொல்கிறார் படைவீரர்கள் இராணுவ சட்டதிட்டங்களை அறிந்திருக்க வேண்டியது அவசியமென. ஆகா ராணுவச் சட்டதிட்டங்களை அறியாத—கோத்தபாய—மகிந்தப் படைக்கு மனித உரிமைச் சாசனம் பற்றி என்னே விளங்கும்? இரண்டுமே தெரியாததுகளை போராட வைத்ததன் விளைவே நம்நாடு கண்ட மனித உரிமைகள் மீறிய மனிதப் படுகொலைகள்.! இதற்கு நிபுணர் குழு என்றவுடன் சண்டித்தனம், வெள்வெருட்டுப் போராட்டங்கள்! இவ்வுலகை எத்தனை காலம்தான் ஏமாற்ற உத்தேசம்!

மெச்சிக்கோ வளைகுடாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு செப்டெம்பர் 11-ன் தாக்குதலுக்க சமமமானது!

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தற்போது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள பிரச்னை, அந்நாட்டு பொருளாதார நிலை, ஆப்கனிலிருந்து படை வாபஸ் அல்லது ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு என்று கூறினால் அது நிச்சயமாக இல்லை.

அமெரிக்காவுக்கு மிகப் பெரும் சூழல் சீர்கேடாக, ஆபத்தாக உருவாகியிருக்கும் மெக்ஸிகோ வளைகுடா பகுதி எண்ணெய்க் கசிவுதான் ஒபாமா நிர்வாகத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ள பிரச்னையாகும்.

பதவி விலகக் கூறி பிரச்னை எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள் ஒருபுறம் என்றால், இவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் பிரிட்டன் நிறுவனத்தை அனுமதித்தது ஏன்? என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்விக் கணைகளால் ஒபாமாவைத் துளைத்து வருகின்றனர்.

மெக்ஸிகோ வளைகுடாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு, செப்டம்பர் 11-ல் அமெரிக்கா மீது அல் காய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைப் போன்று அபாயகரமானது என்று ஒபாமாவே ஒப்புக்கொண்டுள்ளார். இதிலிருந்தே எண்ணெய்க் கசிவால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தீவிரத்தை உணர முடியும்.

இந்த எண்ணெய்க் கசிவால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து அமெரிக்கா மீளவும், இனி பாதிப்பு ஏற்படவுள்ள நாடுகள் பாதிப்பிலிருந்து மீளவும் பல ஆண்டுகளாகும் என்பதும் உறுதி.

அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடாவில் கடந்த 3 மாதங்களாக ஏற்பட்டு வரும் எண்ணெய்க் கசிவு உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் சுமார் 60 ஆயிரம் பேரல்கள் வரை எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு வருகிறது என்பதை அமெரிக்காவே இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. கசிவைத் தடுக்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகள் ஒன்றும் பலனளிக்கவில்லை.

தொடர்ந்து கடலில் கலந்து வரும் எண்ணெய், கடலின் மேற்பரப்பில் பல கி.மீ. சுற்றளவுக்குத் திட்டுகளாகப் படிந்து சிறுசிறு தீவுக் கூட்டமாக கடல் வழியாக உலகமெங்கும் பயணம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா, லூஸியானா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் எண்ணெய்த் திட்டுகளால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளன. நாவேரி பீச், கிரேஸ்டன், பென்சகோலா, போர்ட் வால்ட்டன், டெஸ்டின் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி கடல் முழுவதும் கருமையாகக் காட்சியளிக்கிறது. கடல் வாழ் உயிரினங்கள் பல இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. எண்ணெய்க் கசிவைத்  தடுத்து நிறுத்தாதவரை இந்தப் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறையாது.

மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்துதான் இந்த பெரும் விபரீதத்துக்குக் காரணம். பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் டீப் வாட்டர் ஹாரிஸப்ன் என்ற பெயரிலான கடலுக்கு அடியில் துளையிட்டு எண்ணெய் எடுக்கும் இயந்திரம் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

ஏப்ரல் 20-ல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மீத்தேன் வாயுக் கசிவால் கடல் மட்டத்துக்கு மேல் இருந்த இயந்திரத்தின் மேடைப்பகுதி தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 11 பணியாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களும் மற்றவர்களும் உயிர்காக்கும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இயந்திரத்தில் பற்றிய தீ சுமார் 2 நாள்களுக்குப் பின் அணைந்தது. விபத்தால் டீப் வாட்டர் ஹாரிஸப்ன் இயந்திரமும் அப்பகுதியில் மூழ்கியது.

அப்போது ஏற்பட்ட விபரீதத்தை எவரும் உணரவில்லை. அடுத்த சில மணிநேரத்தில் கடலின் மேல்மட்டத்தில்  அடர்ந்த நிலையில் எண்ணெய் மிதக்கத் தொடங்கியது. சில நாள்களில் அப்பகுதி முழுவதுமே கருமையான நிறத்தில் எண்ணெய்க் கடலாக மாறியது. எண்ணெய்க் கிணற்றின் ஊற்றுக்கண்ணில் இருந்து எண்ணெய் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியது. அப்போதுதான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கசிவைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம். கசிவு ஏற்பட்டு வரும் இடத்தை அடைக்க பலவகையில் முயற்சி மேற்கொண்டும் கடலுக்கு அடியில் இருந்து பொங்கி வரும் எண்ணெய்க்குத் தடை போட முடியவில்லை.

இந்தப் பிரச்னை தொடர்பாக அமெரிக்க – பிரிட்டன் அதிகாரிகள் நடத்திய ஆலோசனையின்போது அணுகுண்டை வீசி எண்ணெய்க் கசிவைத் தடுத்து விடலாமா! என்று “புத்திசாலித்தனமான’ யோசனையைக் கூறி பிரிட்டன் அதிகாரிகளை அதிரவைத்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.

கசிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு அருகே மற்றொரு கிணற்றைத் தோண்டி எண்ணெயை எடுப்பதுதான் பிரச்னைக்கு ஒரே தீர்வு என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால் இப்பணியை மேற்கொண்டு அதன் மூலம் எண்ணெய்க் கசிவு நிற்க மேலும் ஒரு சில மாதங்கள் பிடிக்கும். அதற்குள் எண்ணெய்க் கசிவால் மேலும் பல நாடுகளின் கடல்வளமும்இ கடல்வாழ் உயிரினங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

இப்போதைக்கு அமெரிக்காவின் கடற்கரைப் பகுதியை பாதித்துள்ள இந்த எண்ணெய்ப்  படலம், பல கி.மீ. சுற்றளவுள்ள சிறு சிறு தீவுக் கூட்டமாகப் பிரிந்து தீவுகளாக பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இன்னும் சிலநாள்களில் இதன் பாதிப்பை பிற நாடுகளும் உணரத் தொடங்கும். இதே நிலை சில மாதம் நீடித்தால் தமிழகக் கடற்கரைப் பகுதிகளிலும் கூட எண்ணெய்த் திட்டு தட்டுப்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மொத்தத்தில் உலகின் பாதுகாவலன் என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ள மற்றொரு பேரழிவு இது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.