Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதியை அரசியலாக்கியது உள்ளூராட்சித் தேர்தல்

நடந்த உள்ளூராட்சியில் பங்குகொண்ட தேர்தல் கட்சிகள் அனைத்தும், வடக்கில் தேர்தலை வெல்வதற்கு சாதியையே முதன்மைப்படுத்தினர். வடக்கில் கிராமங்கள் - வட்டாரங்கள் அனைத்தையும் சாதிரீதியாக பிரித்து, அந்தந்த சாதிய வாக்குகளைப் பெறுவதற்கு அந்தந்த சாதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தியது. இதன் மூலம் சாதி அடிப்படையில் வாக்குகளை, ஓவ்வொரு தேர்தல் கட்சியும் பெற்;றது. இதுதான் வடக்கின் தேர்தல் முடிவுகளை தீர்மானித்தது.

உள்ளூராட்சி தேர்தலானது, வடக்கு சமூகத்தை சாதியாக அணிதிரட்டியுள்ளது. "தமிழன்" என்ற இனவாத "தேசிய" அடையாளமானது, வெள்ளாளியச் சாதியக் சமூகக் கட்டமைப்பு என்ற அடிப்படை உண்மையை, இந்தத் தேர்தல் வெளிப்படையான சாதி மூலம் தன்னை தகவமைத்திருக்கின்றது. ஒவ்வொரு சாதிக்கும் அதிகாரத்தில் பங்குகொடுத்ததன் மூலம், வெள்ளாளிய சாதிய சமூக ஓடுக்குமுறையிலான சமூக அமைப்பை, தேர்தல் ஜனநாயக வடிவம் மூலம் பலப்படுத்தி இருக்கின்றது. இதன் மூலம் "தேசம் - தேசியம் - தன்னாட்சி" என்று கூறி வந்த "தமிழனின்" இனவாத அரசியலானது, நடந்த உள்ளூராட்சி தேர்தல் மூலம் வெளிப்படையான வெள்ளாளிய சாதிய அரசியலாகியது.

 

குறிப்பாக வடக்கில் சாதி என்பது, சாதியக் கிராமங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றதே ஒழிய தமிழனையல்ல. இந்த வகையில் தேர்தல் கட்சிகள் அனைத்தும் சாதி வேட்பாளார்களை இத் தேர்தலில் நிறுத்தியதுடன் – தேர்தலின் பின் சாதியடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளது. இதற்குள் மதரீதியான முரண்பாட்டுக்கு மத அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை வழங்கியதன் மூலம், சாதி-மத சமூகமாக தமிழ்ச் சமூகத்தை பிளந்தனர்.

வடக்கில் சாதி அடிப்படையில் சமூக அபிவிருத்தி என்ற நவதாராளவாத முதலாளித்துவ தேர்தல் அரசியலானது, வடக்கை சாதி அரசியலாக்கியுள்ளது. தமிழர்கள் தம்மை சாதி கடந்த தேசமாக முன்னிறுத்துவதற்கு பதில், சாதியாக குறுக்கி இருக்கின்றது. தமிழ் தேசமானது தன் அக முரண்பாடுகளை கடந்து தேசமாக அணிதிரள முடியாத வண்ணம், இத் தேர்தல் சமூகத்தை சாதியடிப்படையில் பிளந்து விட்டு இருக்கின்றது. தமிழ் தேசத்துக்கு பதில் தமிழ் இனவாதமானது, சாதிய அடிப்படையைக் கொண்ட ஜனநாயக விரோத சமூகத்தை  தேர்தல் மூலம் தக்க வைத்து இருக்கின்றது.

சாதிய ஓடுக்குமுறைக்கு எதிராக ஓடுக்கப்பட்ட சாதிகளின் போராட்டத்தை முன்னிறுத்தாத தேர்தல் கட்சிகள், ஓடுக்குமுறைக்கு எதிராக சாதி கடந்து மக்கள் அணிதிரள்வதை மழுங்கடிக்கும் வண்ணம் சாதி வேட்பாளர்களையே முன் நிறுத்தியது. சாதி அரசியல் மூலம் அதிகாரம் மற்றும் சுகபோகங்களை அனுபவிக்கும் புதிய வாய்ப்பை சாதியப் பிரநிதிகளுக்கு வழங்கியதன் மூலம், வெள்ளாளிய சாதிய அரசியலை ஓடுக்கப்பட்ட சாதிகளுக்கு பரவலாக்கி இருக்கின்றது. சாதிய பிரதிநிதித்துவதைக் கோரும் தேர்தல் அரசியலாக,  உள்ளூராட்சி தேர்தலை அரங்கேற்றியது.

முன்பு ஓடுக்கப்பட்ட சாதிகள் தங்கள் பிரதேச பிரச்சனைகளை ஓடுக்கும் சாதிகளின் தயவில் பெற வேண்டி இருந்த கடந்தகால சூழலுக்குப் பதில், அந்தந்த சாதியப் பிரதிநிதிகள் மூலம் அணுகுமாறு, நவீன நவதாராளவாத சாதிய அரசியல் கோருகின்றது. யுத்தத்தின் பின்பாக வடக்கில் சாதியத்தின் மீள் கட்டுமானமானது, இந்த சாதியத் தேர்தல் மூலம் புதிய வடிவத்தை அடைந்து இருக்கின்றது.

புதிய சாதியப் பிரதிநிதித்துமானது, வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பின் நவதாராளவாத வடிவமாகும். வெள்ளாளியச் சாதியமானது நவதாராளவாத வடிவத்தை பெற்றதன் வெளிப்பாடு தான், சாதியப் பிரதிநிதித்துவத்தையும். சாதிய ஓடுக்குமுறைகளையும் வெள்ளாளியச் சமூக ஆதிக்கத்தை மாற்றாது, சாதியப் பிரதிநிதித்துவத்தை வழங்கியது. நிலவும்  வெள்ளாளிய சாதிய சமூக அதிகாரத்தில், தன்தன் சாதி மக்களை அடக்கியாளும் அதிகாரத்தை வழங்கியதன் மூலம், வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பை பலப்படுத்துவது நடந்தேறி இருக்கின்றது

நவதாராளவாதமானது ஓடுக்குமுறைகளை ஓழிப்பதற்கு பதில், ஓடுக்கப்பட்ட தரப்பிற்கு அதிகாரத்தில் பிரதிநிதித்துவத்தை வழங்குவதன் மூலம், முதலாளித்துவத்தை தொடர்வது நவீன நவதாராளவாத தேர்தல் அரசியல் வடிவம்;. உழைக்கும் மக்களை சுரண்டும் நவதாராளவாத முதலாளித்துவத்துக்கு உதவும் ஓடுக்குமுறைகளை தொடர்ந்து தக்கவைக்கும், நவதாராளவாதக் கோட்பாடு தான் இது.

அதாவது முரணற்ற முதலாளித்துவ ஜனநாயக சமூக அமைப்பு மூலம் தீர்க்க வேண்டிய நிலப்பிரபுத்துவ முரண்பாடுகளை, நவதாராளவாத முதலாளித்துவ சமூக அமைப்பு மறுக்கின்றது. அதாவது ஜனநாயகத்தை மறுக்கின்றது.  நவதாராளவாத முதலாளித்துவ சமூகப் பொருளாதார அமைப்பானது, முரணற்ற ஜனநாயகத்துக்கு முரண்பாடாக இருப்பதால், சமூக ஓடுக்குமுறைகளை தக்கவைக்கும் வண்ணம் தன்னை மீள் தகவமைக்கின்றது.

இந்த வகையில் சமூக முரண்பாடுகளை களைவதற்குப் பதில், முரண்பட்ட சமூக பிரிவுகளுக்கு அதிகார பிரதிநிதித்துவத்தை வழங்குகின்றது. இதுதான் நவதாராளவாத தேர்தல் அரசியலின்; உள்ளடக்கமாகும். இதை நவதாராளவாத தேர்தல் வடிவம் மூலம், "ஜனநாயகமாகக்" காட்டி சாதிய சமூகத்தை "ஜனநாயக' வடிவமாக்கி விடுகின்றது.              

மக்களை கூறு போட்டு பிரித்தாளும் சுரண்டல் வடிவங்களை, தேர்தல் "ஜனநாயகம்" மூலம் "ஜனநாயக" வடிவங்களாக மாற்றி இருக்கின்றது. இன்று இலங்கையை இனம், மதம், சாதி, பிரதேசம்.. என மக்களைக் கூறுபோடும் தேர்தல் மூலம், மக்களை ஒடுக்கி அடிமைப்படுத்துவதன் மூலம் நவதாராளவாத முதலாளித்துவமான சுரண்டுகின்றது.