Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

நடைமுறையிலான எதார்த்தத்தைக் கடந்த "சுயநிர்ணயங்கள்" குறித்து!?

எதற்காக சுயநிர்ணயம்! என்பது அடிப்படையான கேள்வி. மார்க்சிய லெனினிய அடிப்படையிலான சுயநிர்ணயம் என்ன என்று தெரிந்தால் மட்டும்தான், பலதரப்பட்டவர்கள் முன்வைக்கும் "சுயநிர்ணயங்களையும்", அதன் அரசியல் உள்ளடக்கங்களையும் புரிந்துகொள்ள முடியும். ஆட்டு மந்தைகள் போல் தெரிந்ததைக் கொண்டு அரைக்கிறதல்ல அரசியல். சுயநிர்ணயத்தை விளங்கிக் கொள்வது என்பது, சமூகத்தில் நடக்கும் அன்றாட மாற்றத்தை விளங்கிக் கொள்வதாகும்.       

ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலமே, இனவொடுக்குமுறைக்குத் தீர்வு கிடைக்கும் என்பது அடிப்படை அரசியலாகும்;. இதை மறுக்கும் அரசியலானது, ஒடுக்குபவன் தீர்வைத் தருவான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், ஒடுக்கப்பட்டவனின் ஒன்றுபட்ட அரசியலுக்கு எதிரான அரசியலாக முன்வைக்கப்படுகின்றது. இதன் மூலம் ஒடுக்குபவன் "தரக் கூடியதாக" கருதும் ஒரு தீர்வை, ஒடுக்கப்பட்ட மக்கள் ஏற்றுக் கொண்டு, அதற்காக போராடுமாறு கோருகின்றது. இதே அரசியல் அடிப்படையிலேயே, "சுயநிர்ணயங்கள்" குறித்துப் பேசுகின்றனர். 

இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக இயக்கங்களை இழுத்து வீழ்த்தவும், கட்சி முரண்பாடுகளை தூக்கி நிறுத்தும் பொதுப்பின்னணியில் "சுயநிர்ணயம்" குறித்து பேசுகின்றனர்.  நடைமுறையிலான  எதார்த்தத்தைக் கடந்த மண்டை கனத்த "அறிவுத் துறையினர்" தங்கள் இருப்புகளை தக்கவைக்க இதை விவாதப் பொருளாக்குகின்றனர்.

இனவொடுக்குமுறைக்குள் வாழ்கின்ற ஒரு சமூகத்தில், "சுயநிர்ணயம்" குறித்து வெவ்வேறு விதமான அரசியல் வியாக்கியானங்களும், அரசியல் உள்ளடக்கமும் காணப்படுகின்ற அதேநேரம், மார்க்சிய லெனினிய அடிப்படையிலான அரசியல் வியாக்கியானத்தை இவர்களின் “சுயநிர்ணயம்” கொண்டு இருக்கவில்லை. இவ்வாறான "சுயநிர்ணயத்தைக்" கோருகின்றவர்களும், முன்வைக்கின்றவர்களும் மார்க்சிய லெனினிய அடிப்படையில் முன்வைத்து, அதை நடைமுறைப்படுத்துவதில்லை. 

வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான நடைமுறையுடன் கூடிய மார்க்சிய லெனினிய தத்துவமே சுயநிர்ணயமாகும். இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றுபடுத்தி அணிதிரட்டும் முரணற்ற ஜனநாயகக் கோட்பாடாகவே மார்க்சியம் சுயநிர்ணயம் என்பதை முன்வைக்கின்றது.   

மக்களை இனரீதியாகப் பிரித்து ஒடுக்குகின்றதன் மூலம், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஜக்கியத்தைச் சிதைக்கின்ற சுரண்டும் வர்க்கத்தின் செயல்தந்திரத்தை முடக்கவே, தேசங்களுக்கு சுயநிர்ணயம் என்ற நடைமுறைக் கோட்பாட்டை லெனின் முன்வைத்தார். இதைக் கடந்து சுயநிர்ணயத்தை வேறுவிதமாக விளக்கவோ விளங்கிக் கொள்ளவோ  முடியாது. 

இனவாதத்துக்கு எதிரான செயலூக்கமுள்ள நடைமுறையே சுயநிர்ணயக் கோட்பாடு. இது மார்க்சிய லெனினியக் கட்சிகளின் செயல்தந்;திரமாகும். இனவாதத்துக்கு எதிரான நடைமுறையற்ற, வெற்றுக் கோட்பாடல்ல. தீர்வு காண்பதற்கான கோட்பாடல்ல. மாறாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்வதற்கும், அவர்கள் இனமுரண்களைக் கடந்து தீர்வு காணவும், வழிகாட்டுகின்ற நடைமுறைக் கோட்பாடாகும்.     

ஒரு கட்சி தனது திட்டத்தில் வெறும் வாயளவிலான சுலோகமாக சுயநிர்ணயத்தை கொண்டு இருப்பதால், சரியான கட்சியாக இருக்கவோ, இனவாதத்துக்கு எதிரான கட்சியாகவோ மாறிவிட முடியாது. இனவாதத்துக்கு எதிரான நடைமுறையே, சுயநிர்ணயத்தின் சாரம். 

இப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றுபட்ட நடைமுறைக்கான அரசியல் கோட்பாடாக சுயநிர்ணயம் இருக்க, சுயநிர்ணயம் குறித்து பல்வேறு திரிபுகளும், எதிர்ப்புரட்சி அரசியலும் முன்வைக்கப்படுகின்றது. அவற்றைப் பார்ப்போம்.       

1. இலங்கையில் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்ட கட்சிகளை எடுத்தால், இனவாதத்துக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றுபடுத்தும் வர்க்க நடைமுறையைக் கொண்டு இக் கட்சிகள் இருப்பதில்லை. சுயநிர்ணயத்தை நடைமுறையற்ற கோட்பாடாக மாற்றி, அதை கட்சி திட்டத்தில் ஒரு வரியாக மட்டும் இணைத்;து கொள்கின்றனர். (நடைமுறையில் இல்லாத இவர்கள்) இதன் மூலம் சுயநிர்ணயம் குறித்து தவறானதும், செயலூக்கமுள்ள பிரிவினைவாதத்துக்கும் உதவி விடுகின்றனர்.  

2. சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்ட கட்சிகள் சில, சுயநிர்ணயத்தை தேசிய பிரச்சனைக்கான தீர்வாக முன்வைக்கின்றனர். அதையும் தாண்டி செல்லும் மார்க்சிய லெனினிய வர்க்க நடைமுறையை மறுதலித்து, சுயநிர்ணயக் கோட்பாட்டை தீர்வுக் கோட்பாடாக (இதற்கும் அப்பால் செல்லாதவாறு) குறுக்கி விடுகின்றனர். இதன் மூலம்;, இனவாதத்துக்கு எதிரான செயலற்ற "தீர்வு" அரசியல் மூலம், இனவாதத்துக்கு உதவி விடுகின்றனர்.            

3. மார்க்சிய லெனினியம் முன்வைத்த சுயநிர்ணயமானது தேசங்களுக்கே ஒழிய, தேசிய இனங்களுக்கு அல்ல. இதற்கு மாறாக சுயநிர்ணயத்தை தேசிய இனங்களுக்கு முன்வைப்பதும், கோருவதும் சமூக பொருளாதார வர்க்க நடைமுறைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக அரசியலைக் குறுக்கி விடுவதேயாகும். இது சாராம்சத்தில் பிரிவினைவாதமாக இருக்கின்றது.  

தேசிய இனங்களுக்கான "சுயநிர்ணயம்" குறித்து, நான் (இரயாகரன்) முன்பு முன்வைத்த சில கருத்துகள் தவறானது. அவை அன்றைய பாசிசச் சூழலை கடந்து செல்ல, தர்க்கரீதியாக  முன்வைக்கப்பட்டது. குறிப்பாக முஸ்லீம் மக்களுக்கு எதிராக தமிழ் இனவாதிகளின் கோரமான ஈவிரக்கமற்ற வன்முறையை எதிர்கொள்ளும் தர்க்கவாதத்தில், தேசிய இனங்களுக்கு "சுயநிர்ணயம்" என்று என்னால் (இரயாகரன்) முன்வைக்கப்பட்டது. இந்த தர்க்க வாதமானது,  சமூகப் பொருளாதார உள்ளடக்கத்துடன் கூடிய நடைமுறை அரசியலுக்கு முரணானது. இந்த வகையில், தேசிய இனங்களுக்கு சுயநிர்ணயம் என்ற எனது கருத்துகளை, விமர்சன ரீதியாக அணுகுவது அவசியமானது.          

4. பிரிவினையை இனவொடுக்குமுறைக்குத் தீர்வாக முன்வைக்கும் இனவாதிகள், சுயநிர்ணயத்தை (அதற்குச் சாதகமாக) முன்வைக்குமாறு வர்க்கரீதியான சர்வதேசிய கட்சிகளை நோக்கி கோருவதுடன், குற்றமும் சாட்டுகின்றனர். தங்கள் பிரிவினைவாதமே "சுயநிர்ணயம்" என்ற, பொதுக்கருத்தின் அடிப்படையில் இவ்வாறு கோரப்படுகின்றது. "சுயநிர்ணய" அடிப்படையில் வர்க்கரீதியான செயலற்ற பொதுத் தன்மையைப் பயன்படுத்திக் கொள்ளுகின்றதன், பொது பிரிவினைவாத அரசியலின் வெளிப்பாடு இதுவாகும்.

5. சுயநிர்ணயத்தை தலை கனத்த "அறிவாளிகளும்;", அரைவேட்காட்டு "கம்யூனிஸ்டுகளும்", தங்கள் தனிப்பட்ட சமூக இருப்பு சார்ந்து இதை பேசும் பொருளாக்கி, நடைமுறையில் போராடுகின்றவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். இதன் பின் வெற்று வாய் வீச்சும், பொழுது போக்காக வீண் சந்தடி செய்வதும், நடைமுறைப் போராட்டத்தை கவிழ்க்க சச்சரசு செய்வதும், வெட்டி அரட்டைகளை முன்வைப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுபட்டு போராடுவதை இழுத்து வீழ்த்த முனைகின்றனர். 

சுயநிர்ணயத்தை முன்வைத்து எதையும் தங்கள் சொந்த நடைமுறையில் செய்ய வக்கற்றுப் போன, இந்த தலை கனத்த படித்த "அறிவாளிகள்", மற்றவர்களைப் பார்த்து சுயநிர்ணயத்தை முன்வைக்கக் கோருகின்றனர். தங்கள், தங்கள் "சுயநிர்ணயத்தை" முன்வைத்து, மக்களை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்ட வேண்டிய பணியை செய்யாது, மற்றவர்களை பார்த்துக் கோருகின்ற அலுக்கோசுகளாக இயங்குகின்றனர்.   

6. நவதாராளவாத முதலாளித்துவத்தை தங்கள் அரசியலாக கொண்டுள்ள மார்க்சிய விரோதிகள், மார்க்சிய லெனினிய  கட்சிகளிடம் "சுயநிர்ணயத்தை" முன்வைக்குமாறு கோருகின்றனர் அல்லது வைக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் வர்க்க ரீதியாக ஐக்கியப்பட்டு போராடுவதைத் தடுக்கவும், மக்களை இனரீதியாக பிளக்கவுமே இவாகள் சுயநிர்ணயத்தைப் பற்றி பேசுகின்றனர். 

இப்படி பல்வேறுபட்ட "சுயநிர்ணய" அரசியல் போக்குகளை இரண்டாக வகைப்படுத்த முடியும்.  

1. சுயநிர்ணயத்தை தங்கள் கட்சித் திட்டத்தில் கொண்டுள்ள கட்சிகள், வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றுபடுத்தும் இனவாதத்துக்கு எதிரான நடைமுறைப் போராட்டத்தை  முன்னெடுப்பதில்லை. இன்னொரு பக்கத்தில் “சுயநிர்ணயத்தை” தீர்வாக குறுக்கிவிடுகின்றனர். 

2. சுயநிர்ணயத்தை கோருகின்றவர்கள் இனவாதத்துக்கு எதிரான வர்க்க நடைமுறையில் செயல்பட வக்கற்றவர்களும், இனவாதிகளும், நவதாராளவாத முதலாளித்துவவாதிகளுமாவர். ஒடுக்கப்பட்ட மக்கள் வர்க்க ரீதியாக ஜக்கியப்பட்டு, வர்க்கப் போராட்டத்தை நடத்துவதை தடுத்து நிறுத்துவதற்காகவே முன்மொழிகின்றனர். மார்க்சிய லெனினிய அடிப்படையில் சுயநிர்ணயத்தை இலங்கையில் புரிந்து கொள்ளாது, பிரிவினைவாதமாக புரிந்து கொண்ட பொது அடிப்படையில் நின்று முன்வைக்கின்றனர். 

மார்க்சிய லெனினிய வர்க்கக் கட்சிகள், மேற்கூறிய அடிப்படையில் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது. மாறாக சுயநிர்ணயம் முன்வைக்கும் நடைமுறைகள் மூலம், இனவாதத்துக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டங்களைக்; கட்டியெழுப்புவதன் மூலமே, மார்க்சிய லெனினிய சுயநிர்ணயத்தை (வர்க்கப் போராட்டத்தினை நோக்கிய) நடைமுறை ரீதியான உண்மையாக்க முடியும்;. 

இந்த அடிப்படையில் தான் சுயநிர்ணயத்தை தன் திட்டத்தில் கொண்டுள்ள புதிய ஜனநாயக மக்கள் முன்னணியும், கட்சித் திட்டத்தில் சுயநிர்ணயத்தை கொண்டிருக்காத முன்னிலை சோசலிசக் கட்சியும், சுயநிர்ணயத்தை திட்டத்தில் கொண்டு இருப்பது தொடர்பான செயல் தந்திர ரீதியாக மட்டும் தான் வேறுபடுகின்றது. அதேநேரம் சுயநிர்ணய உள்ளடக்கத்தை நடைமுறையில் முன்னெடுப்பதில் ஒன்றுபட்டு செயற்படும் அதேநேரம், வர்க்க ஆட்சியில் தேசிய முரண்பாடுகளுக்கான நடைமுறைத் தீர்வுகளைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு அணியில் அணிதிரட்டுகின்றது.