Tue03022021

Last updateSun, 19 Apr 2020 8am

அமெரிக்கக் கொடியில் தான் சாதித் "தமிழன்" கோவணம் கட்டுவானாம்!

கூட்டமைப்பு தொடங்கி எல்லா தமிழ் தேசியக் கழிசடைகளும், ஒற்றுமையாக முத்தி பெறும் இடம் தான் அமெரிக்கக் காலடி. அமெரிக்க சார்பு நல்லாட்சியில் தீர்வு என்று கூறி வந்த கூட்டமைப்பின் இணக்க அரசியல், அமெரிக்காவே எமக்கு தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று கூறி சரணடைந்து இருக்கின்றனர்.

கடந்த காலத்தில் போராட்டம், தியாகம் என்று போராடி தங்கள் வாழ்வை இழந்தவர்கள் முதல் மரணித்தவர்களை, அமெரிக்காவுக்கான தங்கள் கைக்கூலித்தனத்தின் மூலம் அவற்றையெல்லாம் துரோகத்தனமானவையாகக் காட்டி இருக்கின்றனர். அன்றைக்கே அமெரிக்காவே சரணம் என்று கூறி, அன்னக்காவடி, தூக்குக் காவடி, பால் காவடி.. என்று எடுத்திருந்தால் என்றைக்கோ எமக்கு தீர்வு வந்திருக்கும் என்பதனை "தமிழ் தலைமைகள்" இன்றைய தங்கள் நடத்தை மூலம் உலகறிய பறைசாற்றி இருக்கின்றனர்.

அமெரிக்க சார்பு “நல்லாட்சி” சிங்கள இனவாத ஆட்சியாளர்களை நம்பலாம், சாதாரண சிங்கள மக்களை நம்பக் கூடாது என்பதே, கூட்டமைப்பின் அரசியல் கொள்கை. தமிழ் மக்களை அமைப்பாக அணிதிரட்டி போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பதிலாக, அமெரிக்காவின் விசுவாசியாக தமிழன் இருப்பதை உறுதி செய்தால் போதும், அமெரிக்கா தீர்வை பெற்றுத் தரும் என்கின்றனர். யாழ் மேலாதிக்க இந்துத்துவ சாதி வெள்ளாளர்களால் தலைமை தாங்கப்படும் தமிழ் தேசிய அரசியல் இதுதான்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா மீட்பு நடவடிக்கைக்காக இலங்கையில் தரை இறங்குவது பற்றி தென்னாசிய பிராந்திய அமெரிக்க பிரதிநிதிகளின் அறிவிப்பு வெளிவந்;திருந்தது. அமெரிக்காவின் தரையிறக்கத்துக்காக புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்ததுடன், இறுதியில் பலி கொடுத்தனர். அமெரிக்கா காப்பாற்ற வரும் என்ற நம்பிக்கைக்கு புலம்பெயர் புலிகள் வழிகாட்ட, "இலவு காத்த கிளியாக" காத்திருந்து இறுதியில் சரணடைந்து பலியானார்கள் என்பது உண்மை. அன்று பொய்யானது இன்று நனவாகி இருக்கின்றது.

சாதி இந்துத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்யும் விக்கினேஸ்வரன் முன்னின்று வரவேற்க, எல்லா தமிழ் இனவாதிகளும் காவடியெடுக்க, கொட்டு மேளதாளங்களுடன் அமெரிக்கா தரையிறங்கியது. அமெரிக்க போர் வெறிக் கப்பல் "தமிழனுக்கு" மருத்துவம் செய்ய, தமிழனின் அமெரிக்கக் கனவும் நனவானது. ஐ.நாவுக்கு வருடம் தோறும் நேர்த்திக் கடனாக செல்லும் தமிழ் அடிமைகளின் மகிமையைக் கண்டு, அமெரிக்கா தரையிறங்கியதன் மூலம் இறந்து போன புலிகளுக்கு சாதி இந்துத்துவம் காட்டும் மோட்சத்தை வழங்கியது.

அமெரிக்காவின் மருத்துவமனை "உணவில் நஞ்சு உணவை தந்து அதையே தாம் உண்டதாக கூறும் போராளிகளையும், சீனா விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறும் போராளிகளையும்" மருத்துவ பரிசோதனை செய்து, அதை மெய்ப்பிக்க போவதான பிரமை விதைக்கப்பட்டு இருக்கின்றது. வடக்கு மாகாணசபை "மருத்துவ பரிசோதனை" தீர்மானம் இதன் பாலானது.

"சீன ஊசி" ஏற்றியதாக கூறுகின்ற பொதுப் பின்னணியில், அமெரிக்கா மருத்துவ பரிசோதனையை யாழப்;பாணத்தில் அரங்கேற்றுகின்ற கூத்திற்கும் தொடர்பு இருப்பது போல் தெரிகின்றது. மனிதனைக் கொல்லும் ஊசி, அதுவும் அது "சீன" ஊசி என்று கூறுகின்ற பின்னணியில், அமெரிக்க சார்பு அடிமைகளின் அபத்தங்களைத் தாண்டி இதைப் புரிந்து கொள்ள முடியாது.

சித்திரவதைகள் முதல் கொல்லுதல் வரை, பலவிதமான வழிமுறைகள் கையாளப்பட்டது என்பது பொது உண்மை. அது "சீன" வழிமுறை மட்டுமல்ல, அமெரிக்க இந்திய வழிமுறை வரை அடங்கும். அவற்றை விடவும் தமக்கான சொந்த வழிமுறையையும் கொண்டே தான், புலிகள் முதல் அரசு வரை விதிவிலக்கின்றி அரங்கேற்றினர் என்பது உண்மை. புளட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலொ, ஈ.பி.டி.பி, ஈரோஸ்.. என்று யாரும் விதிவிலக்கு கிடையாது. கடத்தல், சித்திரவதை, காணாமல் போக வைத்தல், கொலைகள்… அரசு மட்டும் செய்யவில்லை என்பதே பொது உண்மை.

அமெரிக்க சார்பு இந்துத்துவ சாதிய சிந்தனை இராணுவத்திடம் பிடிபட்ட பெண்கள் எல்லாம் பாலியல் ரீதியாக வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறி பெண்களை இழிவு செய்து, பெண்களின் வாழ்க்கையையும் பொது உண்மைகளையும் அழிப்பது போல் தான் "சீன ஊசிக்" கதையும்.

பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது என்பது எல்லாப் பெண்களையுமல்ல, அது போல் தான் சித்திரவதைகளும் ஊசிகளும். எல்லாம் ஊசிகளும் சீன ஊசிகளும் அல்ல.

உலகில் அதிக விச ஊசிகளை உற்பத்தி செய்து பயன்படுத்தும் நாடு அமெரிக்காதான். நஞ்சுக் குண்டுகளை அதிகளவில் உற்பத்தி செய்து, நாடுகள் மீது போட்டதும் அமெரிக்கா தான். நவீன சித்திரவதைகளைச் செய்யும் நாடும் அமெரிக்கா தான்;. உலகில் அதிக ஆக்கிரமிப்புகளையும், யுத்தங்களையும் நடத்தி, அதிகளவு மக்களைக் கொன்று குவித்து, மக்களை ஊனமாக்கிய நாடும் அமெரிக்கா தான். இப்படி அமெரிக்காவின் மனிதவிரோத பட்டியல் நீண்டது, நெடியது.

இந்த அமெரிக்காவைத் தான் யாழ் சாதி இந்துத்துவ வெள்ளாள ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதற்கு உதவுவார்கள் என்ற தங்கள் சாதிய நம்பிக்கையை, தமிழருக்கான தீர்வாக காட்டுகின்றனர். இந்த சாதி இந்துத்துவ வெள்ளாள அமெரிக்க சார்புத் தலைமையை தூக்கி எறிவதன் மூலம் தான், இனவொடுக்கு முறையில் இருந்து விடுபடுவதற்கான சொந்த தீர்வை கண்டு அடைய முடியும்.