Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

உதவிகளும் சமூக விளைவுகளும்

சக மனிதனுக்கு உதவுவது ஒரு சமூக உணர்வு. சுய(தன்)நலத்தை முதன்மையாகக் கொண்ட தனிவுடமை அமைப்பில், மனித உணர்வுகள் காணாமல் போகின்றது. இந்தச் சூழலில் சமூக சார்ந்து உதவும் மனப்பான்மை அருகிவரும் அதேநேரம், உதவிகள் கூட சமூகம் சாராது தனிமனிதம் சார்ந்ததாகி வருகின்றது. இதனால் சமூகம் பயன் பெறுவதில்லை. மனித சிந்தனைகள், நடைமுறைகள், உதவிகள் அனைத்தும், சமூகம் சார்ந்ததாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து, சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவையாகும்.

கடந்தகால வரலாற்றுத் தவறை மீண்டும் மீண்டும் செய்ய முடியாது. உதாரணமாக கடந்த கால தமிழ் தேசியப் போராட்டம் ஆயிரம் ஆயிரம் ஆண்களையும் பெண்களையும் பொது சமூக நோக்கில் அணிதிரள வைத்தது. போராட்டமானது அர்ப்பணிப்புகளையும் தியாகங்களையும் புரியவைத்தது. அதேநேரம் போராட்டமானது மக்கள் மேலான பிற ஒடுக்குமுறைகளை அங்கீகரித்து அதைப் பாதுகாத்ததன் மூலம் மக்களுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியது. இதனால் போராட்டம் தோல்வி பெற்றது.

இது தான் போhராட்டம், இது தான் விடுதலை என்று நம்பியவர்கள், தங்கள் உயிர்களைக் கூட தியாகம் செய்யுமளவுக்கு சென்றார்கள், செய்தார்கள். அவர்களின் தன்னலமற்ற உணர்வுகளை யாரும் மறுதளிக்கவும் கொச்சைப்படுத்தவும் முடியாது. ஆனால் இவ்வளவு இழப்புக்களால் சமூகம் கண்ட பலன் அர்த்தமற்ற ஒன்றாகவும், அதேநேரம் எதிர்மறையான விளைவுகளையுமே சந்தித்;தது. தியாகங்கள் அர்ப்பணிப்புகள் சமூகம் சாராத போது, அது சமூகத்துக்கு கேடு விளைவித்ததைக் காண்கின்றோம்.

யுத்தத்தின் பின்பாக பிறருக்கு உதவுகின்ற மனப்பாங்காகவே, பல பொது செயற்பாடுகள் குறுகி குவியம் பெற்று வருகின்றது. அதேநேரம் தன்னலமற்ற மனித நேயம் முதன்மையானதாக இருக்கின்;றது என்பதே, இதன் பின்னான பொது உண்மையுமாகும். தன்னலமின்றி சமூக உணர்வு சார்ந்து உதவுகின்ற உதவிகள், தன்னலமற்ற மனித நேயம் கொண்ட சமூகத்தை உருவாக்குகின்றதா? உதவுகின்றவர்கள் சமூகம் சார்ந்து சிந்திக்கவும் செயற்படவும் முனையும் அதே மனிதநேய உணர்வை, உதவியை பெறுகின்றவர்கள் பெறுகின்றனரா? இதைப் பெறாத வரை, இதன் விளைவு என்பது கடந்தகால போராட்டம் போல் சமூக சார்ந்ததாக இருக்கப் போவதில்லை.

உண்மையில் உதவியைச் செய்பவர்கள் உதவியை மட்டுமல்ல, சமூக உணர்வை ஊட்டும் வண்ணம் உதவிகளை வடிவமைப்பதும், சமூகம் சார்ந்த செயற்பாட்டுக்கு உதவுவதுமே சமூக ரீதியான பயனைக் கொடுக்கும். இதை நோக்கிய சிந்தனைகள், உதவிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்;

தனிமனித முன்னேற்றத்துக்கான உதவிகளின் விளைவுகள் குறித்து!

இலங்கையை விட்டு புலம்பெயர்ந்தவர்களில் 99 சதவீதமானவர்கள், தங்கள் குடும்பத்துக்கு உதவியவர்கள் தான். தங்கள் குடும்பத்துக்கு உதவிய சுய அனுபவங்கள் முதல் பொது நோக்கில் உதவியது வரையிலான கடந்த அனுபவங்கள் என்ன?

1. உதவி பெற்ற குடும்பங்கள், எத்தனை சதவீதம் தொடர்ந்து மற்றவரைச் சாராது சொந்தக் காலில் நிற்க முடிந்திருக்கின்றது?

2. உதவியை பெற்றவர்களில் எத்தனை சதவீதம் பேர், உதவியவரைப் போல் சமூக உணர்வு பெற்று பிறருக்கு தொடர்ந்து உதவுகின்றார்?

3. உதவியைப் பெற்றவர்களில் எத்தனை சதவீதம் பேர், சமூக உணர்வுடன் உதவியவர்களை நேசிக்கின்றனர்?

உதவியதால் ஏற்பட்ட கடந்தகால சொந்த அனுபவங்கள் முதல் சமூகத்தின் பொது அனுபவம் வரை, பொதுவாக எதிர்மறையான விளைவுகளைக் கொண்டிருப்பதைக் காண முடியும். இத்தகைய கடந்த அனுபவங்களை கேள்வியாக்குவதன் மூலம் பொது நோக்கத்தையும் அதன் விளைவுகளையும் சுய பரிசோதனைக்கு உள்ளாக்குவதன் மூலம், சமூகம் குறித்து பொது சிந்தனையை பெற்றுக்கொள்ள முடியும். உதவிகளை எப்படி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வழிகாட்டும்.

பெரும்பாலானவர்கள் உதவுகின்ற, கல்விக்கான உதவிகளை எடுப்போம்;. இவை பெரும்பாலும் தனிநபருக்கு உதவுவது முதல் பாடசாலைக்கு உதவுவது வரை பொதுவில் காணப்படுகின்றது.

குறிப்பாகக் கல்வி முறைமையானது வாழ்க்கை சார்ந்ததாக அல்லாமல், ஏட்டுக் கல்வியாக இருக்கின்றது. இதன் பொது சாரமானது போட்டிக் கல்வியாக, மற்றவனை (பெரும்பான்மை) விட தனிநபரை (சிலரை) முன்னேற்றும் கல்விமுறையாக இருக்கின்றது. இந்தக் கல்வியானது ஒரு சிலரை எஞ்சினியர், டொக்டராக்கும் கல்வி முறையாகவும், 99 சதவீதமான மாணவர்களின் நடைமுறை வாழ்க்கைக்கு உதவாததாகவும் இருக்கின்றது.

இந்த பின்னணியில்,

1. சில தனிமனிதர்களை முன்னேற்றவும், பலரை படுகுழியில் தள்ளும் கல்விக்கு சமூக ரீதியான உணர்வு சார்ந்த உதவிகளைச் செய்வது சரியானதா?

2. இந்த கல்விக் கொள்கையின் பின்னணியில் கட்டமைக்கப்படுகின்ற, மக்கள் விரோத போக்குகளை பலப்படுத்துவதற்கு ஏற்ப உதவுவது சரியானதா? அதாவது

1. கல்வி ரீயுசன் (தனியார் கல்வி) கல்வி முறையாக மாறியிருக்கின்றது. அதற்கு உதவுகின்ற கொள்கையானது, பாடசாலைகளில் கற்பிக்கும் முறையை மறுதளிக்க உதவுகின்றது.

2. அரசு பாடசாலைகள் கட்டணங்கள் அறவீடும் நிதி அமைப்பாக மாறி வருகின்ற பின்னணியில் அதை ஊக்குவிக்கும் வண்ணம் கட்டணங்களைச் செலுத்தும் உதவிகள் எந்தவகையில் கல்வியைப் பாதுகாக்கும்?

3. உலகமயமாக்க கொள்கைக்கு அமைவாக, அரசுக் கொள்கையானது தனியார் கல்விமுறையாக பாடசாலைகளை மாற்றுகின்ற இன்றைய பின்னணியில் இதன் விளைவுகளை சமாளிக்க வழங்கும் உதவிகள் அரசின் தனியார்கல்விக் கொள்கைக்கு ஊக்கத்தைக் கொடுப்பதாக இருக்கின்றது.

தனியார் கல்விமுறை சார்ந்து மூன்று முக்கிய அடிப்படையில் பாதிக்கப்படும் மக்கள், இலவசக் கல்விக்காகவும் தரமான கல்வியை வழங்கக் கோரியும் போராடவும், தங்கள் அடிப்படை வாழ்வுரிமைகளை நிலைநாட்டுவதற்கு ஏற்ப இந்த உதவிகள் வழிகாட்டவில்லை. அதைச் சிந்திக்கவிடாது தடுக்கின்ற வகையில், சமூக நோக்கற்ற உதவிகளாக காணப்படுகின்றது.

தங்கள் அடிப்படைக் கல்வி உரிமைகளை பாதுகாக்கும வண்ணம் உதவிகள் வழங்கப்படாத வரை, கல்வியை மறுதளிக்கின்ற செயற்பாட்டுக்கு உதவுவதே இதன் நீண்டகால விளைவாகும்.

கல்விக் கொள்கையை மாற்ற உதவாது, அரசு கல்விக்கொள்கையின் பொது விளைவின் சமூக துயரங்களை மூடிமறைக்க உதவுவது, சமூகத்துக்கு செய்யும் பொதுத் தீங்காகும். உதவி என்பது தனிமனித ஆற்றலையல்ல, சமூகத்தின் பொது ஆற்றலை வளர்த்தெடுக்கும் வகையில் அமைய வேண்டும்;. ஏட்டுக் கல்விக்கு பதில், மனித ஆளுமையை வளர்த்தெடுக்கும் வண்ணம், பிறரை நேசிக்கும் மனப்பாங்கை உருவாக்கும் வண்ணம், உதவிகளை பொதுமைப்படுத்தி நெறிப்படுத்தப்பட வேண்டும்.

உதவிகள் மூலம் ஏழ்மையைப் போக்க முடியுமா?

ஏழ்மைக்கு உதவுவதன் மூலம், ஏழ்மையை ஒழித்து விட முடியுமா? ஏழ்மையானது சமூகத்தில் நிலவுவதற்கான காரணத்தை ஒழிக்காது, ஏழ்மையையும் இதன் விளைவுகளையும் ஒழிக்க முடியாது. சமூகத்தை நேசிக்கின்றவர்கள், தனிமனிதனுக்கு உதவுவதன் மூலம் சமூகத்தை முன்னேற்றிவிட முடியாது. உதவுவது தவறானது என்ற அர்த்தமல்ல, மாறாக உதவுவதன் மூலம் சமூகத்தை சொந்தக்காலில் சுயமாக நிற்கும் வண்ணம் உதவவேண்டும்.

தனிமனிதனுக்கு அவசியமான அடிப்படையான உதவிகள் தேவைப்படுகின்ற போது, அதை சமூகம் சார்ந்த பொது செயல்தளத்தின் ஊடானதாக அமையவேண்டும்.

இதற்கு மாறாக

1. தனிமனிதனை முன்னேற்றுகின்றதன் மூலம் மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று நம்புவது பொது அறியாமையின் விளைவாகும்

2. தனிமனித ஆத்மா திருப்திக்காகவும், மனச்சாட்சிக்காகவும் உதவுவதன் மூலம் திருப்திப்பட்டுக் கொள்வது, பொது அக்கறையீனத்தின் பொது விளைவாகும்.

3. மதம் சார்ந்த அமைப்புகள், பாராளுமன்ற அரசியல் (கட்சிகள்) வாதிகள் மூலம் உதவுவது என்பது, தன்னலமற்ற தியாக மனப்பாங்குடன் சமூகத்தில் இயங்காத அவர்களின் சுயநல தேவை மற்றும் உணர்வு சார்ந்த குறுகிய நோக்கத்துக்கு மேலும் தீனி போடுவதாகவே அமையும். இது சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கின்றது. இவர்கள் மூலம் உதவியைப் பெறுகின்றவர்கள், சமூக உணர்வைப் பெறுவதற்கு முடியாது.

சமூக உணர்வை ஊட்டக் கூடியதாக, உதவிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்;. வெறும் உதவியைத் தாண்டி, உதவி மனித வாழ்வின் ஒரு அங்கமாக மாற வேண்டும். இந்த வகையில் இன்று சமூகத்துக்காக தன்னலமற்ற தியாக மனப்பாங்குடன் சமூகத்துக்காக தங்களை அர்ப்பணித்து சேவை செய்கின்ற பொது அமைப்புகள் மூலம், உதவிகள் மக்களைச் சென்று அடைய வேண்டும்.

முடிவாக

1. உதவியை வழங்குகின்றவர்கள், சமூக உணர்வுடன் தங்கள் உதவியை வழிநடத்தும் அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் உதவிகள் நெறிப்படுத்தப்பட வேண்டும்;.

2. உதவியை பெறுகின்றவர்கள் சமூக உணர்வுடன் பெறும் வண்ணம், உதவியானது சமூகத் தன்மை பெறும் வண்ணம், உதவி முறைப்படுத்தப்பட வேண்டும்;.

இது இன்றைய காலத்தில் அவசரமான அவசியமான சிந்தனையாகவும், செயலாகவும் முன்னெடுக்க்கப்பட வேண்டியது அனைவரினதும் சமூகக் கடமையாகும்.