Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஐரோப்பாவில் போர்க்குணமிக்க தொழிலாளி வர்க்கம்

பிரஞ்சு விமான சேவைத்துறையில் இருந்து 2900 மேற்பட்ட தொழிலாளிகளை வேலையில் இருந்து நீக்கும் அதன் அறிவிப்பை அடுத்து, அதற்கு எதிரான போராட்டங்களும் தொடங்கியது. பல்வேறு வடிவங்களில் தொடங்கிய போராட்டமும் - பேச்சுவார்த்தை என்ற பெயரில் "ஜனநாயக ரீதியானதாக" பதிலளிக்காத அதிகார முடிவுகளை திணிக்கின்ற சர்வாதிகாரத்தை முன்வைத்தது.

உதாரணமாக சாதாரண பெண் ஊழியர் தன் அதிகாரிகளை நோக்கி உணர்வுபூர்வமாக எழுப்பிய எந்த கேள்விக்கும் ஜனநாயகரீதியாக பதிலளிக்காது அலட்சியமாக்கி விடுகின்ற பின்னணியில் (பார்க்க இரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ https://www.youtube.com/watch?v=fcbY5uOUBNA) - அதிகாரிகளுக்கு எதிரான கோபங்கள் நிறைந்த இழுபறிகளும் - அவர்கள் சட்டைகள் கிழித்தெறியப்பட்டுதப்பியோடும் காட்சிகளும் உலகுக்கு முன்னால் அரங்கேறியது. https://www.youtube.com/watch?v=3TpGT-3Wz6U

உழைத்து வாழும் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம் எப்படி போர்க்குணமிக்கதாக - வன்முறை கொண்ட ஒன்றாக மாற்றம் பெறும் என்பதும் - நாடு தளுவியதாக போராட்டங்கள் மாறும் போது அரசு அதிகாரத்தை கைப்பற்றும் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டமாக - இறுதியில் அதுவே பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியாக மாறும் என்பதை விளங்கிக் கொள்ளக் கூடிய உதாரணமாக இந்தப் போராட்டம் அமைகின்றது.

பிராஞ்சு விமான சேவைத்துறை சார்ந்த தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும் அதன் போர்க்குணாம்சமும் - உலகின் முக்கியமான முதன்மைச் செய்தியாக மாறியது. தனியார் மற்றும் அரசுதுறை தலைமை நிர்வாக அதிகாரிகள் தொடக்கம் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்தைக் கண்டு அதிர்ந்து போயுள்ளன. தங்கள் முதலாளித்துவ ஜனநாயக கட்டமைப்பு மூலம் இதை அமைதிப்படுத்த முடியாத - போராட்டம் போர்க்குணமிக்கதாக வளர்ச்சி பெறுவதைக் கண்டு - வன்முறை பற்றி கூச்சல் இட்டதுடன் - போராடியவர்களை குற்றவாளியாக்கி சிறையில் தள்ளுவதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தை அடக்கி ஆண்டுவிட முடியும் என்று அது நம்புகின்றது.     

இன்று மூலதனங்கள் கொழுத்து பன்நாட்டு நிறுவனங்களாக மாறிவிட்ட நிலையில் - மூலதனங்கள் தனது போட்டி மூலதனங்களை முடக்க தமக்குள் ஒன்றிணைவதும் - லாபத்தை பெருக்கி மூலதனத்தைக் குவிக்க, பாரியளவில் தொழிலாளி வர்க்கத்தை வேலையை விட்டு நீக்குவது என்பதும் உலகளவில் அன்றாடம் நடந்து வருகின்றது.

ஒரேநாளில் ஆயிரக்கணக்கில் வேலையை விட்டு துரத்தியடிக்கும் முதலாளித்துவ அராஜகம் தான்- மூலதனத்தின் வெற்றியாக மாறியிருக்கின்றது. இதை அவர்கள் முன்னெடுக்க அமைப்பு ரீதியாக - கொள்கை ரீதியாகவும் தொழிலாளி வர்க்கம் அணிதிரள்வதை தடுக்கும் - ஊடக அராஜகத்தைக் கொண்டு உதிரியான தொழிலாளியாக மாற்றி விடுகின்றதன் மூலமே - தன்னை தற்காத்துக் கொள்ள முனைகின்றது.

தன்னலம் சார்ந்த தனிவுடைமை உணர்வு கொண்ட தொழிலாளிகளை உற்பத்தி செய்து - அதன் மூலம் தங்கள் மூலதனத்தை பெருக்கிக் கொள்ளவும் - தேவை இல்லாத போது தூக்கி எறியவும் - சட்டரீதியான ஏற்பாடுகளுடன் தான் உலகமயமாதல் உலக மக்களையே  இன்று சூறையாடுகின்றது.

தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான மூலதனத்தின் திமிருக்கும் அதன் அராஜகத்துக்கு எதிராக - ஐரோப்பிய தொழிலாளி வர்க்கம் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை - பிரஞ்சு விமானத்துறையைச் சார்ந்த சேவைத்துறை தொழிலாளர்கள் தங்கள் போர்க்குணமிக்க போராட்டத்தின் மூலம் முன்னுதாரணமிக்க ஒன்றாக மாற்றி இருக்கின்றனர். மூலதனம் குவிவதால் தொழிலாளி வர்க்கம் போராடுவதன் மூலம் தங்கள் கையில் அரசு அதிகாரத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர - வேறு வழியில் முதலாளித்துவத்துக்குள் சமரசமாக சமாதானமாக வாழ முடியாது என்பதே உண்மை. இதைத்தான் பிரஞ்சு போராட்டம் அழகாக எடுத்துக்காட்டி இருக்கின்றது.