Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தோட்ட தொழிலாளர்களின் கூலிமுறையும் - சந்தா தொழிற்சங்கங்களும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள்கூலி தொடர்பான கூட்டு ஒப்பந்தம் மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த நி;லையில், தொழிற்சங்கங்கள் 1000 ரூபா நாள்கூலியை முன்வைத்துப் போலித்தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். நீண்டகாலமாக முதலாளிமார் இதனை நிராகரித்தவர்கள் - இன்று கூட்டு மோசடியை முன்வைத்திருக்கின்றனர்.

இந்த பின்னணியில் முதலாளிமாரையும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் தொழிற்சங்க விவகார அமைச்சர் டப்ளியு.டி.ஜே.செனவிரட்ன அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியதும் - இரண்டு தரப்பு கோரிக்கைகளின் அடிப்படையில் நாளாந்தம் 770 ரூபா கூலியை வழங்க இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும் என்கின்றார்.

இலங்கையில் ஒரு பகுதி மக்களுக்கு மாதச் சம்பளத்துக்கு பதில் நாள்கூலி என்பது - உழைக்கும் மக்களை முதலாளிகளின் அடிமையாக வைத்திருக்கின்ற கூட்டுச் சதிதான்.

நாள்கூலியாக தோட்டத் தொழிலாளர்களைச் சுரண்டும் அவர்களின் வாழ்க்கைக்குள், வறுமை மட்டும் தான் தலைவிரித்தாடுகின்றது. நிரந்தமற்ற வருமானம் - உரிமைகளற்ற வேலைமுறைமை, மொத்தத்தில் வாழ்வு மீது நம்பிக்கைக்கு இடமற்ற நிலைமைகள். வாழும் மண் சொந்தமில்லை. அதாவது நில உரிமை கிடையாது. நிரந்தமற்ற வருமானம். இப்படிப்பட்ட மக்களின் வாழ்க்கையைச் சுரண்டித் தான் - இலங்கை சுரண்டும் வர்க்கம் கொழுக்;கின்றது. நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கின்ற இலங்கையில் - நாடளகூலி என்பது அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கட்டுப்படுத்துகின்ற முறைமையானது - தொழிலாளர்கள் போராடும் உரிமைகளை கட்டுப்படுத்துகின்ற முறையாக மாறிவிட்டது.

முதலாளிமாரும் - அரசியல்வாதிகளின் தொங்குதசையாக உள்ள தொழிற்சங்கங்களும் கூட்டாக நடத்துகின்ற சுரண்டல்முறை தான், தோட்ட தொழிலாளர்களை சந்தா முறை மூலம் கட்டுப்படுத்தும் சுரண்டல் முறையாக இன்று பரிணமித்து இருக்கின்றது.

இனரீதியாக தோட்டத் தொழிலாளரை பிரித்து அணிதிரட்டும் அரசியல்வாதிகள் - தங்கள் தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர் உரிமைகளை நசுக்கி விடுகின்றனர். இது தொழிற்சங்க சந்தாவை அவர்களின் கூலியில் இருந்து முதலாளிகள் ஊடாக தொழிற்சங்கங்கள் அறவிடும் முறையில் இருந்து தொடங்குகின்றது, முதலாளிகள் - தொழிற்சங்க இடையிலான கள்ளக் கூட்டும் - தொழிலாளார் விரோத உணர்வும்.

இதேபோன்று தான் தொழிலாளர்களின் அவசர தேவைக்காக அவர்களின் கூலியில் இருந்து அறவிடும் தொகையை கையாளும் முதலாளிகளும் தொழிற்சங்கங்களும் - தொழிலாளர்கள் மீது அதிகாரத்தை செலுத்தும் சங்கமாக மாறி இருக்கின்றது. தொழிலாளர்களிடம் தொழிற்சங்கங்கள் சென்று சந்தாவை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. தொழிலாளர்களுடன் தொடர்பற்றதும் - முதலாளிகளால் சந்தாவை அறவிட்டு கொடுக்கும் நிலையில் -முதலாளிகளுக்கு சேவை செய்யும் தொழிற்சங்கங்கள் தான் மலையகத்தில் இயங்குகின்றது. அதாவது முதலாளிகளின் நோக்கத்தை பூர்த்தி செய்யும், தொழிற்சங்கங்கள் தான் காணப்படுகின்றன.

இந்தப் பின்னணியில் இன்று தொழிற்சங்க சந்தாப் பணத்துக்கு என்ன நடக்கின்றது என்று தொழிலாளர்கள் கோர முடியாது என்பதும் - தொழிலாளர் உழைப்பை சந்தாவாகச் சுரண்டிக் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதி தொழற்சங்கத்தின் பெயரில் அவர்களை கட்டுப்படுத்தும் அதிகார வர்க்கத்தையே உருவாக்குகின்றது.

அதேநேரம் மலையகத்தில் நடக்கின்ற அரசின் பொதுவான திட்டங்களைக் காட்டி - இது தொழிலாளர்களின் சந்தாப் பணத்தில் இருந்து தாங்கள் செய்வதாக கூறுகின்ற பித்தலாட்ட பின்னணியில் - அரசியல்வாதிகள் சந்தாவை சுருட்டுவதுமே நடந்தேறுகின்றது.

மிக மோசமான, அடிப்படை வசதிகளற்ற மலையகம் என்பது, பொதுப் போக்குவரத்து - மருத்துவம் - பாடசாலைகள் என்று அடிப்படை வசதிகளற்ற பிரதேசமாக மலையகம் தொடர்ந்து இருக்கின்றது. . கடுமையான உடல் உழைப்பை வழங்கி வாழ வேண்டிய பிரதேசத்தில் - மலைகளை ஏறிக் கடக்க வேண்டிய பாரிய வாழ்க்கைச் சுமைகளுடன் அல்லாடும் மக்களின் நிலைமை என்பது - வெள்ளைக்காரன் காலம் முதல் எதுவும் மாறிவிடவில்லை.

அவர்கள் தம் காலைச் சுற்றிய பாம்புகளிடம் இருந்து விடுபடுவதும் - இலங்கை மக்களின் பொது உரிமைகளை தமக்கு வழங்கக் கோரி போராடுவதில் இருந்து தான் - தங்களுக்கான மானிட விடுதலையைப் பெறமுடியும்;. அதேநேரம் அவர்களுக்கு வழங்க மறுக்கின்ற பொது உரி;மையை வழங்கக் கோரி போராடுவது இலங்கையில் வாழும் பிற உழைக்கும் மக்களின் அடிப்படைக் கடமையாகும்.